Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
Logo
இனிய உதயம்
காலை நிலாவும் மாலைச் சூரியனும்...
 ................................................................
காதல் அடைவது உயிரியற்கை!
 ................................................................
போட்டியில் வென்ற மாணவர் வைரமுத்து!
 ................................................................
பெரியாரும் பெண் விடுதலையும்
 ................................................................
சொல்ல மறக்காத கதை
 ................................................................
கவிக்கோ வீட்டில் புதையல்!
 ................................................................
கிராமத்துக் கவிதைக்காரர்...
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வேடிக்கை பார்க்கிறோம்!
 ................................................................
01-09-2017புரட்சிக் கவிஞருக்குப்பின் தேங்கிக்கிடந்த கவிதையை மடைமாற்றம் செய்வித்து மக்கள் மனங்களில் பெருகி ஓடச்செய்த பெருமை வானம்பாடிக் கவிஞர்களுக்கே உரியது. என்னதான் கோஷங்கள், கூப்பாடுகள் என்று ஒருசாரார் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும் அழுது வடிந்து கிடந்த தமிழ்க்கவிதையை அறச்சீற்ற கவிதைகளாக்கியவர்கள் அவர்கள்தான். நரம்பறிந்து அவர்கள் கற்ற தமிழ் அவர்களுக்குக் கைகொடுத்தது. உலக இலக்கியப் போக்குகளை உற்றுக் கவனித்துத் தொடர்ந்ததும் சமூக அவலங்களோடு சமரசம் செய்துகொள்ளாத போர்க்குணமும் அவர்களின் கவிதைகளை மக்கள் மன்றங்களில் மணக்கச் செய்தன. அந்தக் கவிஞர்களில் உச்சிக் கொண்டையோடு ஒய்யாரக் கிராமத்துப் பேரழகியாகக் கவிதைகளில் காட்சி தந்தவர் தேனரசன்.

திருவையாற்றுத் தமிழ்க்கல்லூரியில் 1959-ல் புலவராக வெளிவந்த தேனரசன் 60-களில் தன் கவிதைச் சிறகசைத்துப் பறக்கத் தொடங்கினார். ஆனைமலை அடிவாரத்தில் காந்தி கலாநிலையம் என்ற பள்ளியில் தமிழாசிரியப் பணியில் தலைநிமிர்ந்து நின்றார்.

என்றாலும் கவிதைவெளியில் கிராமத்துச் சதங்கைகட்டி ஆடினார். மரபுக் கவிதையில் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் வானம்பாடியாக வலம்வந்தபோது தனக் கென்று தனியொரு மொழியைக் கவிதைக்கென்று தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அந்த மொழி கொங்குத்தமிழென்னும் கொஞ்சுதமிழ். இதயத்தை வருடும் எதார்த்தத் தமிழ். புரட்சிக்கவிஞரின் "குயில்', கண்ணதாசனின் "தென்றல்', பொன்னடியாரின் "முல்லைச்சரம்', தெசிணியின் "கவிதை' என்று எத்தனையோ இதழ்களில் கவிஞரின் மரபுக் கவிதைகள் வெளிவந்தபோதிலும் ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக வெளிவந்த கவிதைவகுப்பு வெளியீடான புலவர் சி.கமாலுதீன் அவர்களின் "கவிதை வகுப்பு' இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகள், மரபுக் கவிதைகளில் அவர் காட்டிய மயக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது.

அறிஞர் அண்ணாவின் மறைவு தமிழினத்தையே தத்தளித்து அழச்செய்தது என்பது மாறாத வரலாற்றுண்மை. எதிரிகளும் மாரடித்து அழுதார்கள். சந்தனத் தமிழ் பேசிய சரித்திரத் தலைவன் சந்தனப் பேழைக்குள் கண்மூடிக்கிடக்கும் காட்சியைக் கண்டு கதறியவர்களை உலகம் வியப்போடும் வேதனையோடும் பார்த்துப் பரிதவித்தது. அந்தத் துயரத்தை 1-5-1969-ல் வெளிவந்த கவிதைவகுப்பு இதழில் கவிஞர்

கடற்கரை மண்ணில் உறக்கமடா-அந்தக்
காவிய மேனி அடக்கமடா..
முடக்கிய நோயே வென்றதடா-எங்கள்
முத்தமிழ் வாழ்வே சென்றதடா..
என்று தொடங்கி
சிந்திய பால்தான் கலம்வருமோ?-அந்தத்
திருமகன் கால்கள் வலம்வருமோ?
செந்தமிழ்த் தாயின் துயரறுமோ?- அண்ணன்
திரும்பவும் எழுந்திட உயிர்வருமோ?

என்று உருகித் தவிப்பதைப் படிக்கும் எவரும் உருகாமல் இருக்கமுடியாது.  மரத்துப்போன மனதையும் உரசி உருகச்செய்யும் வரிகளை எழுதிய விரல்கள்தான்

தத்துவ மென்பது சொற்குழப்பம்-அதைத்
தந்தவன் கொண்ட மனக்குழப்பம்
பைத்தியத் துக்கிட்ட கற்பனைப்பேர்-சிலர்
பச்சையே மாற்றுக்கு விற்பனைவேர்
என்று தத்துவம் என்பதற்குப் புதுவிளக்கத்தைச் சொல்லி
அவனவன் வழிகள் வேறுபடும்- பல
ஆயிரங் கொள்கைகள் தூறுவிடும்
எவனெவன் சொல்லிக் கேட்டுவிட்டான்?-அட
இருந்தும் நானும் சொல்லிவைத்தேன்

என்று தத்துவவெளியை எழுதிச் சென்றன. பொதுவாக இயற்கை, சமுதாயம், தமிழின் மேன்மை என்று எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட சிந்தனைத் தெறிப்பு புதுமையானதுதான். எண்சீர் விருத்தத்திலேயே சிறைப்பட்டுக்கிடந்த கவிதையைக் காலாறச் சந்த வெளிகளில் சலங்கைகட்டி நடந்துவர வைக்கிறார் கவிஞர்.

தென்னை மரத்தோப்பில் அன்றொருநாள்-இளஞ்
சிட்டுக்கள் போல்ஒன்று சேர்ந்திருந்து
சொன்ன மொழிகளைக் கூறிவரச் -சொல்லித்
தூமணத் தென்றலைத் தூதுவிட்டேன்
என்று காதலைத் தூதுவிடுகிற கவிஞர்
ஆசை பெருகிவர, அடிமனத்தில் தேனூற
நீச வுலகத்தின் நிட்டூரங் கள்மறந்து
பேசி யிருந்தோமே.. பித்தேறிக் கிடந்தோமே
நேசக் குயிலிலேஅதை நீமறந்து விட்டாயா?
நெஞ்சைக் கருவறுக்க நேராக வந்தாயா?

என்றெல்லாம் கேட்டுக்கொண்டே போகிறார். மரபுச் சந்தங்களைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்திய கவிஞர்

பூமெத்தை வண்டுக்கு மெத்தை மெச்சும்
புகழ்மெத்தை தொண்டுக்கு மெத்தை. இன்பப்
பாமெத்தை நயத்துக்கு மெத்தை காலைப்
பனிமெத்தை குளிருக்கு மெத்தை..
என்று மரபுத் தடத்தில் பயணப்பட்டு
"இறை! வா!' என்ற கவிதையில்
கல்லில் எனக்கொரு மனம்வேண்டும்
கருணையில் லாத குணம்வேண்டும்
சொல்லில் பசப்புத் தனம்வேண்டும்
சொன்னதை மாற்றும் திறன்வேண்டும்
அறிவோ அன்போ இனிவேண்டா
ஆணவ முண்டா? அதுதேவை
சரியோ தவறோ சாதிக்கச்
சாக்குக் கணக்கில் பணம்தேவை!

என்று வேண்டுகிறார். கவிஞர் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வேண்டிய வேண்டல் இன்று சிலபேருக்கு அருளப்பட்டிருப்பதை அன்றாட அரசியலில் பார்க்கிறோம். மேடைக் கவிதைகளிலும் இவர் சோடைபோனதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது 15-4-1969-ல் வெளிவந்த கவிதைவகுப்பு இதழில் வெளிவந்த பிணி என்கிற கவியரங்கக் கவிதை. அந்தக் கவிதையில் பிணியை மரண அடையாளம், போர்மறவன், ஞானத்தொகுப்பேடு, கொடும்பாவி, தலைவாயில், புல்லுருவி, உயிர்த்தோழி, ஆசைமகள் நத்தைமகள் மனமருந்து என்று பலபட உருவகித்துக்கொண்டே போகிறார். கவிஞருக்குள் ஓயாத தத்துவச்சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கிறது என்பதற்கோர் அடையாளம்தான் "எங்கே அருகதை' என்கிற கவிதைஏழு நிறத்துத் தோரண வில்லில்இழுத்துக் கட்டிய நாணில்லை!

வாழை கொடுத்த பழத்துள் ளேஇன
வளர்ச்சிக் காமொரு விதையில்லை.
இதயம் என்ப தேதுக் கென்றே
என்குலத் தொருவன் கிளம்பியபின்
இதிலே அதிலே குற்ற முரைக்க
எங்கே அருகதை யிருக்கிறது?

இக்கவிதைக்குள் பயணிக்கையில் ஒரு சிறு தத்துவ தரிசனத்தைக் காணமுடியும். இப்படி மரபுக் கவிதையில் மலர்ப்பந்தல் விரித்தவர் வானம்பாடியாக வலம்வந்தபோது அவருடைய சிந்தனைப்போக்கிலும் கவிதைப்போக்கிலும் பேரளவில் மாற்றங்கள் ஏற்பட்டன.

கவிதைவெளியில் பெரும்பாய்ச்சல் நிகழ்த்திய வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து சற்றே மாறுபட்டுக் கிராமத்து மணம்கமழ டிசம்பர் 1978-ல் மலர்ந்த தொகுப்புதான் வெள்ளைரோஜா. தன் நிரந்தரத் தோழனாகத் தன் பேனாவை முன்னிறுத்தி,

என் கனவுகளின் கர்ப்பம்
வலிகாணும் போதெல்லாம்
பிரசவம் பார்க்கும்
மருத்துவச்சி
என்கிறார்.

கவிதையை மனச்சுக மோகினி என்கிற கவிஞர் கிராமத்தின் விதவைச் சிறுமியை மனம் விம்ம விம்ம வெள்ளைரோஜாவாகக் காட்டுகிறார்.

அந்த
வெள்ளை ரோஜா
வீதியில் வந்தால்
பக்கென்று நெஞ்சம் பற்றி எரிகிறது
என்கிற கவிஞர்
சீவி முடிந்தால்
சிங்காரம் வந்துவிடுமென்று
எண்ணெய் போடாத வறண்ட கூந்தலைக்
கோதி முடித்துக்
கோடாலி போடுகிறார்
என்கிறார்.

அன்றைய காலநிலையில் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சமூகத்தில் விதவைகள் கட்டாயம் வெள்ளைப்புடவை அணியவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த வேடிக்கை விதி இன்று பெருமளவில் மாறியிருக்கிறது என்றாலும் அன்றைய நிலையில்

          வெள்ளை ரவிக்கையில்
          வெள்ளைப் புடவையில்
அலங்கரிக்காத வெள்ளைரதமாய்
அவள் அசைந்து போகையில்
இதயம் தீப்பிடித்து எரிந்து போகிறது,
என்று கசிகிறார் கவிஞர்.  
    வானம் வடிக்கும்
     ரத்தத் தாரைகளோ ..இந்த
     மழைத் தாரைகள்?

என்று கற்பனைக்குள் பயணப்படுகிற கவிஞர்தான் சமுதாயத்தின் அவலத்தை அங்கதமாக வெளிப்படுத்துகிறார். கள்ளப் பணத்தையும் கறுப்புப்பணத்தையும் எங்கே பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்பதை எவரால் கண்டுபிடிக்க முடியும்? சமீபத்தில் ரூ 500ம் ரூ1000மும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னாலும் எத்தனை கோடிகள் எப்படி எப்படியோ காணக் கிடைத்தன என்பது நாம் கண்ட காட்சிதான்.

என்றைக்கோ கவிஞர் எழுதிய கவிதையை இன்றைக்குப் பொருத்திப் பார்க்க நேரிடுகிறது. "ஒரு வேண்டாத தாலாட்டு' என்கிற கவிதையில்,

ஈசன் துணையிருக்க
எம்பெருமான் பார்த்திருக்க
பூசை யறையிலல்லோ
புதையலே உன்படுக்கை
என்கிற கவிஞர்
வருமான வரி அத்தை
மாபாவி கொள்ளிக்கண்
எரிய உனைப்பார்த்தாள்
என்றா கலங்குகிறாய்..
அவளைச் சரிசெய்வார்
ஆடிட்டர் உன்மாமன்
கவலை யொதுக்கிவிட்டுக்
கண்மூடி நீயுறங்கு

என்று பாடுகிறார். திருமண வீட்டு உணவுப்பந்தியில், கருவுற்றிருப்பதால் கால்மடித்து உட்கார முடியாமல் பசியில் தவிக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்ணை கிராமத்து மொழிநடையில் கலங்கவைக்கிறார்

பண்ணாடி ஒறமறைக ஊர்பொறப்பட் டாச்சு
பின்னாடி வாசலிலே ஏழைக பந்தி
பக்கத்தூர்ச் சக்கிலிக பறச்சாதிச் சனங்க
படைபடையா வந்திங்கே குவிஞ்சி ருக்கிறாக
என்கிற கவிஞர்
உண்டவுக எழுந்தாச்சு உக்காரச் சொல்றாக
மண்டியிட்டுப் பாக்கறேங் கால்மடிக்க மாட்டலயே
அம்மாடி உசிர்ப்பாரம் அடிவயிற்றில் உந்தறது
சம்மணங்கால் போட, இந்தச் சண்டாளிக் காகலயே..
பாவிமகள் ஒருசெமய வயித்திலே வெச்சல்லோ
பசியாற மாட்டாமெ வெளியேறிப் போறேன்நான்
பசியாற மாட்டாமெ வெளியேறிப் போறேன்நான்

என்று கண்ணீர் பெருக்கெடுக்கப் பாடுகிறார். இது ஒருபக்கக் காட்சியென்றால் மறுபக்கத்தில் இன்னொரு காட்சியைக் காட்டுகிறார் கவிஞர். இன்றைக்கு அந்தக் காட்சியை இப்படி எழுதிவிட முடியுமா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்தக் காட்சி "ஈடு' என்கிற கவிதை.

அத்தக் கூலிக்கு
வேலைக்குச் சென்ற
முத்தாளை
மத்தியானத்தில் கவுண்டர்
கையைப் பிடித்திழுத்தாரென்று
எச்சுக் கூலிக் கடிப்போட்டு
எகிறி நின்றான் கருமாதாரி.
பண்ணாடிச்சி
பக்குவமாகச் சொன்னாள்
அவனைத் தனியே கூப்பிட்டு
எச்சுக் கூலின்னடா
போனசே வாங்கிக்குவே
கவுண்டர் தோட்டம் போன பிறகு, பார்த்து
பொறவடைச் சாப்புக்கு
அலுங்காமெ வா, போ

இப்படி எத்தனை எத்தனையோ காட்சிகளைத் தன் கிராமத்து மொழிநடையில் எழுதிச் செல்கிற கவிஞர்

அவரவர் பாட்டுக்கு
அகப்பட்டது சுருட்டல்
தவறில்லை என்னுமொரு
தருமந் தழைக்கிறது

என்று அன்றே இன்றைய நிலையையும் எழுது  கிறார் போலும்.

நாற்காலி ஒட்டிகளால் நாடு சுடுகாடாகிக் கொண்டிருப்பதைக் கண்டு கொதிக்காதா கவிஞர் நெஞ்சம்? அதனால்,
உப்புச் சமுத்திரம் எத்தனை காலத்துக்கு
உற்பத்தியாவது கண்களிலே
தப்பித் திருக்கின்ற மேட்டுக் குடிக்கிங்கு
சாசுவதமின்னும் எத்தனைநாள்?
சிவிகை யேறிய காவிய ராணியைத்
தெருப்புழுதிக் கிழுத்திடுவோம்
கவிதை ராட்சத வாள்களினால் நிகழ்
கால முக்காடு கிழித்திடுவோம்
என்று பாடுகிறார். இன்னும் தெளிவுபடுத்த விரும்புகிற கவிஞர்
பொய்யும் சூதும் களவும் என்றால்
ஐயோ என்று அச்சம் உங்களுக்கு
தலைவர்களுக்கோ அவை
நீதியும் தர்மமும்.

அவரவர் அனுபவம் அவரவர் சுகம் என்பதோடு நேரடியாக அரசியல் நிலையைப் புரியவைக்கிறார்
அறுதிப் பெரும்பான்மை! அறுதிப் பெரும்பான்மை!

அதுமட்டும் தேர்தலில் கிடைத்து விட்டால்
அதிகாரப் போதைவெறி ஆணவம் தலைக்கேற
ஆடாத ஆட்டமெலாம் ஆடிப் பார்க்கலாம்
பாடாத பாட்டெல்லாம் பாடிப் பார்க்கலாம்.
ஈரேழு லோகமும் சுற்றிப் பார்க்கலாம்

ஆறேழு தலைமுறைக்குச் சொத்துச் சேர்க்கலாம் என்று பதவி பெறப் பாருங்கள் என்ற கவிதையில் நன்றாகவே நையாண்டி செய்கிறார். கூவத்தூரிலும் குஜராத்திலும் நடைபெற்ற கூத்தெல்லாம் கவிஞரின் நக்கீரக் கண்களுக்கு அன்றைக்கே தெரிந்துவிட்டதோ என்னமோ?  அதனால்தான் "யுகதர்மம்' என்ற கவிதையில்

அன்னத்தை, பாலை விற்கலாகாது
பாவமாம்
அந்தக்காலத்துத் தர்மம்
என்னத்தை வேண்டுமானாலும் விற்கலாம்
இன்றைக்கு.
சட்டமன்ற, பாராளுமன்றப் பதவிகளில்
ஒட்டியிருக்கும்
ஆசாமிகளே விலைக்குக் கிடைக்கிறார்களே
என்ன
தொகை கூடுதல் அவ்வளவே
என்கிறார். இன்னும் வெளிப்படையாகவே
மகாத்மா கொள்கைகளை
அவர் நினைவிடத்திலேயே வைத்து மறந்து
நெடுந்தூரம் வந்துவிட்டவர்கள் இன்று
ஆட்சி அதிகாரத்தில்

என்கிறார். எந்தக் கட்சியின் ஆட்சி என்பதல்ல எந்தக் கொள்கையின் படி நடக்கிறது ஆட்சி என்பதுதான் முக்கியம். அதனால்தான் “காவிகள் ஜாக்கிரதை என்று எழுதியிருக்கிறார் போலும்.

இன்றைக்கு
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது
போலிகளின் குடியிருப்புகள்
புதிய ஆசிரமங்கள்!
கர்ம யோகிகள் அல்ல
மர்ம யோகிகள்.
வாலை ஞானங்களல்ல
இவர்களுக்கு வசமானவை
சேலை ஞானங்கள்!
ஆண் துறவிகளின் அட்டகாசம் காணாதென்று
தாடி வைக்காத சந்நியாசினிகள்
மூடி வைக்காத மோக மது ஜாடிகளாய்!
ஆன்மிக பாமரமே எச்சரிக்கையாய் இரு
காவிகள் ஜாக்கிரதை!
இப்படித் தங்குதடையில்லாமல் எழுதமுடிந்
ததால்தான்
காலம் என்னைக் கவிஞனாய்ச் சமைத்தது
கவிதைகளால் நான் ஒரு
காலத்தை விதைத்துவிட்டேன்.

என்று கவிஞரால் சொல்ல முடிகிறது.தன் கருத்துக்களைப் பதிய வைக்க நெடுங்கவிதைகளை நாடுகிறவர் கவிஞர். என்றாலும் குறுங்கவிதைகளிலும் தன் கோபத்தையும் எள்ளலையும் எடுத்து வைக்கிறார்.

ஒரு கவிதை சுட்டிக்காட்டுகிற உட்பொருள் உணர முழுக்கவிதையையும் படிக்கவேண்டிய வகையில் கவிதை படைப்பது தேனரசின் கலையாக மிளிர்கிறது. என்றாலும் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் பளிச்சென்று சொல்லவும் தவறவில்லை என்பதை

காட்டாமணக்குக்கும் திருநீற்றுப் பத்தினிக்கும்
காப்புரிமை கொண்டாடி
நாளை நம் பெரியண்ணன் உருகி வழிந்தால்
உலகமயப் பெருமிதத்தில்
உச்சி குளிருவோம் நாம்

என்கிற கவிதை வரிகள் சமகால உலகியல் போக்கைச் சித்தரிக்கிறது. அமெரிக்க வல்லாதிக்கத்தை அலசிப் பார்க்கிறது. அங்கதம் இவர் கவிதைகளில் எளிய மொழியில், கிராமத்து மொழியில் இயல்பாகக் கோலேச்சுகிறது. கிராமத்தில் பால்கறப்பது இயல்பானது. இதைப் பார்த்துப் பார்த்துப் பழகிய கவிஞர் கறத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தி இன்றைய கல்வி நிலையை எள்ளி நகையாடுகிறார்.

மாட்டுப் பண்ணை இருந்த இடத்தில்
நர்சரி பள்ளியாம்
நல்ல ஏற்பாடு. அங்கும்
நடைபெறவுள்ளது
முட்டக் கறத்தால்தானே. பொருத்தம்

என்கிற வரிகளில்தான் எத்தனை எள்ளல்? மானுடத்தை மேலேற்ற எழுதுகிற கவிஞன் தான் என்பதை

மனிதன் இல்லாத-இணையாத
எந்த வனப்பும் வனப்பில்லை
அவன் கலவாத எதிலும்
ஜீவ உயிர்ப்பில்லை
என்று  உறுதிப்படுத்துகிறார்.

அழகியலைத் தொலைத்துவிட்ட கவிதை வெறும் சொற்கட்டுகளாகத்தான் நிற்கும். கவிதையின் அழகியல் கவிதையைக் கவிதையாக அடையாளப்படுத்துகிறது. கவிஞர்

விடிந்ததிலிருந்து
பொழுதுக்கும் பார்த்துக் கொண்டிருந்த
சூரியன்
சொல்லாமலேயே போய் மறைந்துவிட
வரட்டுமா என்று கேட்பதுபோல்
வாசலில் வந்து நிற்கிறது
அந்தி
என்றும்
சித்தப்பிரமை பிடித்த சின்னப் பெண்ணாக
அர்த்த ராத்திரியிலும்
செல்லச் சிரிப்பில் சிலிர்த்துக் கிடக்கும் ஏரி
தங்க ரேகைகள் சலசலக்க.

என்றும் எழுதுகிற பொழுது இயற்கையின் புன்சிரிப்பை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

குறுகத் தரித்த நறுக்குக் கவிதைகளிலும் சுருக்கென்று குத்துகின்ற ஆற்றல் கவிஞருக்கு உண்டு என்பதை

“மாலை,பூமாலை என்று
ஆலாய்ப் பறக்க
உள்ளூர்த் தலைவனுக்கு
ஒருவாறாய்
கடைசியில் வந்தது காமாலை

. வானம்பாடிக் கவிஞர்களில் இவரளவுக்குக் கொங்கு மணம் கமழ எழுதியவர்கள் இல்லை என்பதை நேர்மையாக நாம் பதிவு செய்ய வேண்டும். பேச்சுக் கவிதை, எழுத்துக்கவிதை இரண்டிலும் வெற்றிபெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர் என்பதும் உண்மை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :