Add1
logo
கெளசல்யா தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை! || 98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி || காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!! || விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்! || குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி || சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்! || தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை! || ‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி || தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்! || சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்! || இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை! || ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்! || அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? ||
Logo
இனிய உதயம்
கன்னத்தில் பதிந்த கொடுங்கரம்!
 ................................................................
கவிக்கோ விழாவில் பெருமிதக் குரல்
 ................................................................
அரசியல் வரலாற்றை இலக்கியமாக்கிய ஏடு!
 ................................................................
கவிதையைக் கைவாளாக்கிய கவிஞர்!
 ................................................................
கலைஞரை தலைமுறை மறக்காது!
 ................................................................
அந்தக் கனவு நனவாகும்!
 ................................................................
வீர சந்தானம்: விடுதலையை சுவாசித்த தூரிகை!
 ................................................................
இயக்குநர் அகத்தியன் சிறப்புக் கவிதை!
 ................................................................
கலைஞரின் பத்திரிகை சாதனை!
 ................................................................
01-08-2017ழத்தமிழர்களையும் அவர்களது விடுதலையையும் தமது உயிர்மூச்சாகக் கொண்டிருந்த தூரிகைப் போராளி அய்யா வீரசந்தானத்தின் மறைவு தமிழ்த்தேச உலகிற்கு மிகப்பெரிய இழப்பு! தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகவே வாழ்ந்தவர் அவர். அவரது மறைவுச் செய்தியை இன்னமும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. கலைஞன் என்பவன் சமூகத்திலிருந்து விலகி நிற்பதைவிட, சமூகத்தினூடே ஒன்றிணைந்து கலப்பதுதான் அவனுக்கும் அவனது படைப்புக்கும் மரியாதை! இதனை தமது வாழ்நாளில் கடைப்பிடித்த மகா கலைஞன் வீரசந்தானம்!

தமிழீழத்தின் மீது இன அழிப்பை நடத்திய சிங்கள பேரினவாத அரசு, தான் ஆடிய கோரத்தாண்டவத்தின் அடையாளத்தை முற்றிலுமாக அழித்துக்கொண்டிருந்த நேரம் அது. இன அழிப்பின் தடயங்கள் உண்மை சரித்திரத்திலிருந்து அழிக்க முடியாதளவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என ஏங்கினார் வீரசந்தானம். அப்போதுதான், தஞ்சையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க உணர்வாளர்கள் திட்டமிட்டனர்.

அந்த நினைவு முற்றத்தில், ஈழத்தின் இன அழிப்பின் கொடூரங்களை தமது ஓவியங்கள் மூலம் கற்சிலையாக வடித்தார் அய்யா. அந்த கற்சிலை சிற்பங்கள் இன அழிப்பின் கோரத்தை உலகிற்கு பறைசாற்றும் சான்றாகஇருந்தது. உலக சரித்திரத்திலிருந்து சிங்கள பேரினவாதத்தின் கொடூர முகங்களை மூடி மறைத்துவிட முடியாத நிலையை வீரசந்தானத்தின் கோட்டோவியங்கள் உருவாக்கியன. காலத்தால் அழிக்கமுடியாத கலைப்பொக்கிஷங்கள் அவை!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அந்த வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் அய்யாவோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை முடக்க அப்போதைய அரசாங்கம் செய்த தந்திரங்களெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஈழத்து முள்ளிவாய்க்கால் துயரங்களைத்தான் நம்மால் தடுக்கமுடியவில்லை; தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையாவது நாம் பாதுகாக்க வேண்டும் என சூளுரைத்துக்கொண்டு அய்யா பழ.நெடுமாறனோடு இணைந்து போராடிய காலகட்டத்தில் வீரசந்தானத்தோடு எனது நட்பு மேலும் மேலும் இறுகியது. அதன்பிறகு அவருடைய மகனைப் போலத்தான் என்னை பாவித்தார். எங்களுக்குள் மோதல்கள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் வந்திருக்கிறது. ஆனால், அடுத்த நிமிடமே அவை பனிபோல கரைந்து மறைந்துவிடும். என்னோடு அவர் முரண்படுவதுகூட என் மீதுள்ள அக்கறையால்தான். 

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க முற்பட்ட அரசாங்கத்தை கண்டிக்கும் விதத்தில் 50 மாணவர்களோடு அண்ணா மேம்பாலத்தை முற்றுகையிட்டு மாணவர்களில் பாதிப்பேரை மேம்பாலத்தின் ஒரு முனையிலும், மீதி பேரை மற்றொரு முனையிலும் பாலத்துக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தினேன். மேம்பாலத்தை சங்கிலியால் பிணைத்துப் பூட்டுப்போடும் போராட்டம் முதல்முறையாக நடந்தது இங்குதான். அதன்பிறகு தான் கிண்டி மேம்பாலம். மேம்பாலத்தின் இரு முனைகளையும் சங்கிலியால் பிணைப்பதுகண்டு 200, 300-க்கும் மேற்பட்ட போலீசார் எங்களை சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர். நாங்கள் அதனை எதிர்கொண்டோம். கைது செய்தார்கள். பிறகு விடுவித்தார்கள். அதனைக் கேள்விப்பட்டு என்னிடம் பேசிய அய்யா வீரசந்தானம், ""டேய், கௌதமா. . . மானமுள்ள காரியத்தை செஞ்சேடா நீ !

யுத்தத்தைத்தான் நம்மால் நிறுத்த முடியலை. முற்றத்தைப் பாதுகாக்க நீ பண்ணிய இந்த காரியத்தால உசந்துட்டடா நீ ! தமிழ்த்தேசியத்தின் ரத்தம்டா நீ !

ஆனாலும், இனிமே இப்படி செய்யாத!'' என்று சொன்னார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தை எனக்குள் சட்டுன்னு கோபத்தை கொண்டு வந்தது. கோபத்தை அடக்க முடியாமல், ""ஏன், இப்படி சொல்றீங்க? உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கலை! ஈழத்தில் அழிச்சாங்க. இப்போ தமிழகத்திலும் அழிக்கப்பார்க்கிறாங்க. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு உணர்வுள்ள தமிழன் எப்படி சும்மா இருப்பான்? மானமும் ரோஷமும் உணர்வும் உள்ள தமிழன் நான். என்னை அமைதிப்படுத்த நினைக்காதீங்க?'' என்று கோபம் விலகாமலே பேசினேன். அப்போது அவர், ""முட்டாள், முட்டாள். தனி ஒருவனா போய் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாகி உனக்கு ஏதேனும் நடந்துட்டால் அதை என்னால் தாங்கிக்க முடியாதுடா! உணர்வுள்ள நேர்மையாளர்கள் யாரையும் இந்த மண் இழந்துவிடக்கூடாது. உன்னை இழக்க எனக்கு என்னால் முடியாது. அதனால் தான், தனியாகப்போய் போராடாதே; பெருந்திரளோடு சென்று போராடு என சொல்வதற்காகத்தான் அப்படிச்சொன்னேன்'' என்றார் வீரசந்தானம்.அதைக்கேட்டு என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. என்னால் பேச முடியவில்லை. என் மீதும் எனது தமிழின உணர்வு மீதும் எந்தளவுக்கு அவர் மதிப்பும் அக்கறையும் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தேன். இப்படி நடந்த சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் எங்களுக்குள் முரண்பாடுகள் வந்தால் அதன் பின்னணியில் என்மீதான அக்கறைதான் வீரசந்தானத்திடம் இருப்பதை அடிக்கடி உணர்ந்தேன்.

என்னுடைய "மகிழ்ச்சி' திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என வீரசந்தானத்திடம் நான் பேசியபோது, உடனே ஒப்புக்கொண்டார். என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்கவில்லை. இதை அவரிடம் சொன்னபோது, ""உன் படத்துல குஷ்டரோகியா கூட நடிப்பேன்டா!'' என்றார். நான் பிரமித்துப்போனேன். ஏன்னா, அந்த கதாபாத்திரத்துக்குத்தான் அவரிடம் சம்மதம் கேட்க வந்திருந்தேன். அந்த கதாபாத்திரம் படத்தில் மிக கனமானது. அவர் ஒப்புக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. படப்பிடிப்புக்கு எப்போது வர வேண்டும் என சொல்லிவிட்டு கிளம்பினேன்.

குறிப்பிட்ட நாளில், படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் அய்யா வீரசந்தானம். பிச்சைக்காரன் தோற்றத்திலேயே வந்திருந்தார். அழுக்குச் சட்டை; அதில் பல இடங்களில் கிழிசல்! எந்த தோற்றத்தில் இருந்தாலும் கம்பீரமும் இறுமாப்பும் திமிரும் அவருடனேயே இருக்கும். அதை மட்டும் எப்போதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார். அந்த கம்பீரத்துடனேயே, பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்தஅத்தனை பேரும் அவரையே திரும்பிப்பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. வி.எஸ்.ராகவனோ, "யார் இந்த ஆள்? அவன் பாட்டுக்கு வந்து என் பக்கத்துல உட்கார்றான். இந்த ஆளை வெளியே அனுப்புங்க!' என்று கோபம் காட்டினார். அவர் வீரசந்தானங்கிறது எனக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும்தான் தெரியும். அதனால் நாங்க அமைதியாக இருந்தோம். அதைப்பார்த்துட்டு, "நான் சொல்லிலிக்கிட்டே இருக்கேன். யாரும் கண்டுக்க மாட்டேங்கிறீங்க.

அந்த ஆளை அனுப்புறீங்களா? இல்ல நான் வெளியே போகட்டா?' என கத்துகிறார் ராகவன்.

அப்போது தான் நான், அவர் யார் என்பதைச் சொல்லிவிட்டு, "அவருக்கு இன்றைக்கு சில காட்சிகள் இருக்கிறது. அதனால் தளத்துக்கு வரும்போதே நடிக்க வேண்டிய தோற்றத்திலேயே வந்திருக்கிறார்' என்று விளக்கினேன். ஆச்சரியப்பட்டுப்போன ராகவன், "அவரை பற்றி கேள்விப்படிருக்கேன். இன்னைக்குத்தான் பார்க்கிறேன். ஆனா, முதன்முதலாக பார்க்கும்போதே இந்த தோற்றத்திலா பார்க்க வேண்டும்?'  என்று சொன்னவர், வீரசந்தானத்தோடு அவரும் சகஜமானார். வீரசந்தானமும், பாலுமகேந்திராவின் படத்திலேயே கதாநாயகனாக நடித்தவன் என சொல்லி, ராகவனோடு நட்பானார். ஆக, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஒத்திகை இல்லாமலே அந்த கதாபாத்திரத்தை கண் முன் கொண்டுவந்து நிறுத்துபவர் வீரசந்தானம்.

அதேபோல, லயோலா கல்லூரியின் ஊடக நண்பர்களை வைத்து "வேட்டி' எனும் ஒரு குறும்படத்தை எடுத்திருந்தேன். இதை எடுப்பதற்காக காஞ்சிபுரம் போயிருந்தோம். நாங்கள் முதலில் எடுக்க திட்டமிட்டது "வேட்டி' குறும்படம் அல்ல. வேறு ஒன்றை எடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தோம். அதாவது, ஒரு குளத்தில் ஓடும் மீனைப் பிடித்து, அங்கேயே சுத்தம்பண்ணி அப்படியே நெருப்பில் வாட்டி அதை சாப்பிட்டால் என்ன ருசி இருக்குமோ அப்படிப்பட்ட ருசி, ஒரு இடத்துக்குபோய், அங்கேயே ஒரு கதைக்கருவை உருவாக்கி, அங்கேயே வசனம் எழுதி, அங்குள்ள மக்களையே நடிக்க வைத்து எடுக்கும்போதுதான் கிடைக்கும். அதனால, படம்ங்கிறது மரத்தடியில உட்கார்ந்துகொண்டு  தவம் இருந்துதான் எடுக்க முடியுங்கிறதல்ல மாணவர்களுக்குச் சொன்னேன்.
அதனால ஏற்கனவே தீர்மானிச்சிருந்த கதை செட்டாகததால் அங்கேயே யோசித்தபோது கிடைத்த கதைதான் வேட்டி! அங்கிருக்கும் குழந்தைகள், மக்கள், கால்நடைகள் என பயன்படுத்தி எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். அப்போ படத்துக்கு ஒரு பெரியவர் தேவைப்படுகிறார். அவர்தான் கதையின் அடிநாதம். அந்த கதாபாத்திரத்துக்கு வீரசந்தானம்தான் பொருத்தமானவர்  என முடிவுசெய்து அவரிடம் பேசினேன்.

அப்போதுதான் அவர் மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார். அந்தச்சமயத்தில்தான், இரவு 11 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து தொலைபேசியில் அவரை கூப்பிடுகிறேன். தொலைபேசியை எடுத்தவர்,  "என்னடா, இந்த நேரத்துல? சொல்லு' என்றார். லயோலா மாணவர்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க வந்திருப்பதையும் அதில் அவர் நடிக்க வேண்டும் என்பதையும்நான் விவரித்தபோது, "டேய், என்னை கொல்லப் பார்க்கிறீயா நீ? தெறந்து கிடக்கிற ஜன்னலிலிருந்து சாரல் பட்டாக்கூட உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொல்லியனுப்பியிருக்கிறாரு.

நீ, என்னடான்னா நடிக்கணும்னு கூப்பிடுறே? அதுவும் காஞ்சிபுரத்துக்கு கூப்பிடுறே?' என்று கோபப்பட்டார். உடனே நானும் உரிமையாக, "நீ ஒரு போராளி. சாகறதப்பத்தி இப்படியெல்லாம் யோசிக்கிறே? நாங்க மட்டும் என்ன 100 வருசத்துக்கு வாழப்போறமா? இருக்கிற நாட்கள்ல ஏதேனும் நம்மால் முடிந்ததை சாதிக்கலாமேன்னு யோசிக்கிறோம்.
நீ, என்னன்னா சாவறதைப் பத்தி யோசிக்கிற?' என்று நானும் கோபமாகவே பேசினேன். உடனே, "இப்போ, நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற நீ?' என்று சொல்ல, வேட்டி குறும்படத்தின் கதையை உக்கிரமாக சொல்லிக்கொண்டே இருந்தேன். அவர் கேட்கிறாரா? கேட்கவில்லையா? என கூட எனக்குத் தெரியாது. நான் பாட்டுக்குச் சொல்லிகொண்டே இருந்தேன். சொல்லி முடித்ததும், "இது தான் கதை. நீ நடிச்சா நடி இல்லாட்டி போ!' என்று சொன்னேன்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், "டேய். டேய் கௌதமா, தொடர்புல இருக்கியாடா?' என்றவர், "இருக்கேன்' என நான் சொன்னதும், "செத்தாலும் பரவாயில்லடா. இந்த படத்துல நான் நடிக்கிறேன். நடிச்சிட்டு சாகிறேன்' என்றார். அதே மாதிரி வந்தார் . நடித்தார். குளத்தில் முங்கி நனைய வேண்டிய முக்கிய காட்சி. குளத்துல இறங்கும்போது, "என்னை பொணமாகத்தான் கொண்டு போகப்போறே! பார்த்துக்க!' என்று சொல்லிக்கொண்டேதான் குளத்தில் இறங்கினார். நடித்தார். நாங்கள் எதிர்பார்த்ததையும்விட அற்புதமாக உனர்ச்சிபூர்வமாக நடித்தார் அய்யா வீரசந்தானம். டப்பிங் பேச அழைத்தபோதுகூட, "எனக்கு பதிலா வேறு ஒருவரை பேச வைத்துக்கோ'என சொன்னார். நான் அதையும் ஏற்க மறுத்து, "வீரசந்தானம் என்றாலே உன்னுடைய  ஓவியம் போல குரலும் கம்பீரமானது.

உனக்கு இன்னொருத்தர் குரல் கொடுக்கிறது பொருத்தமாக இருக்காது. அதுவும், கடைசியில தூ என துப்புற காட்சியில் நீ துப்புனாதான் ஒரு உயிர்ப்பு இருக்கும்' என பிடிவாதம் பிடித்தேன்.

அதேபோல, உடல் நலிவுற்ற நிலையிலும் டப்பிங் பேசிக் கொடுத்தார். படமும் அவ்வளவு அற்புதமாக வந்து, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைக்கும் நெருப்புப் பிழம்பாக அந்த குறும்படம் நிற்கிறது. அந்த படத்துல அவர் பேசிய வசனங்கள், எதிர்பார்த்த கனவு எல்லாம் இன்னும் நடக்கலை. அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அப்படி நடக்கும்போது வீரசந்தானம் இன்னும் உயர்ந்து தெரிவார். இப்படி பல நினைவுகள் அவரைப் பற்றி நிழலாடுகின்றன. ஒவ்வொரு சம்பவத்தையும் நான் இப்போ நினைக்கிறபோது மனசு கனத்துப்போகிறது.

தமிழினத்திற்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே கடைசி வரை குரல் கொடுத்து உணர்ச்சிகளின் பிழம்பாக வாழ்ந்தவர் அய்யா வீரசந்தானம்.  தமிழனுக்கு  தனிநாடும், தனிக் கொடியும் ஒரு நாள் கிடைத்தே தீரும் ; அதைப் பார்த்துவிட்டுத்தான் நான் கண்களை மூடுவேன் என்றார். அந்த கனவு நனவாகுவதற்கு முன்பாகவே கண்களை மூடிக்கொண்டார். ஆனால், அவர் மூட்டிய தமிழனுக்குத் தனி தேசம் என்கிற தீ அணையவில்லை; அணையவும் அணையாது.

மண்ணையும் மக்களையும் உயிராக நேசித்த ஒரு மகா கலைஞனை, ஒரு போராளியை நாம் இழந்திருந்தாலும் அவர் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ள உணர்வு நெருப்பு எப்போதும் கனன்றுகொண்டேதான் இருக்கும்! ஓங்கி உயர்ந்து எரியும் அந்த கனலில் தமிழ்த்தேசத்தின் அடையாளமாக, சாட்சியாக, கம்பீரமாக மிளிரும் வீரசந்தானத்தின் முகம்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :