Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
Logo
இனிய உதயம்
நான் இயல்பிலேயே நாடோடி மனம் கொண்டவன்!
 ................................................................
ஒரு கிராமத்தின் ஈரக்குரல்
 ................................................................
சிற்பியே! உனக்கு அம்மி கொத்தத் தெரியாதா?
 ................................................................
உழவன் தோற்றல் உலகம் தோற்கும்!
 ................................................................
01-05-2017பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் நாடறிந்த நாட்டுப்புற இயல் ஆய்வாளர். திருநெல்வேலிலி மாவட்டம் கால்கரை கிராமத்தில் எளிய குடும்பத்தில் 1949 நவம்பர் 30-ல் பிறந்த இவர் சுந்தரபாண்டியனாகப் படைப்புலகில் பவனி வருபவர். நாட்டுப்புறவியலை ஆய்வு செய்து“"நாட்டுப்புறவியல்- ஓர் அறிமுகம்' என்று இத்துறையில் தமிழில் முதல் ஆய்வு நூலை வெளியிட்டவர். நாட்டுப்புறவியலைக் குறித்து தமிழில் அதிகம் எழுதியவர் இவராகத்தான் இருக்க முடியும். அத்துடன் செவ்வியல் நூல்களை, ஆய்வு நூல்களை பெரும் பொருட்செலவில் வெளியிட்டு வருகிறவர். 1973-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயின்று பல்கலைக்கழகத்தில் முதலிலிடத்தைப் பிடித்தவர். நாட்டுப்புற ஆய்வுக்காகவே “"தன்னானே'’’ என்ற காலாண்டிதழை நடத்தியவர். இப்பொழுது “"காவ்யா'’’ காலாண்டிதழை நடத்திக்கொண்டிருப்பவர். சாகித்ய அகாதமி, குறள்பீடம் அமைப்புகளில் பங்கேற்றவர், பணியாற்றியவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரைகள், ஆய்வுநூல்கள் என்று இவர் எழுதியவை ஏராளம். இவருடைய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளதுடன் இவர் பெற்ற விருதுகளும் ஏராளம். தமிழுக்குத் துறைதோறும் தொண்டாற்றும் இப்பெருமகனாரோடு நடத்திய நேர்காணல் இதோ..

தமிழ் இலக்கியத்தின்பால் தங்களுக்கு ஈடுபாடு வந்ததற்கு என்ன காரணம்? தங்களின் ஆரம்பகால நிலையைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

நான் நெல்லை மாவட்டத்து கால்கரையில் ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தை சுடலைமுத்துத்தேவர் விவசாயியாகவும் பலசரக்கு விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தவர். என்னோடு ஏழு பேர்கள். நானே மூத்தவன். எனக்கு என் தாத்தா பெயரான வென்னிமலையை விட்டுவிட்டு ஆத்தா (பாட்டி) பெயரான சண்முகத்தை வைத்தனர். நான் ஆத்தா செல்லம். வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியின் போர்டிங் என்னை நல்ல மாணவனாக்கியது. பாளையங்கோட்டை ஜான்ஸும் சேவியரும் என்னைத் தமிழ் மாணவன் ஆக்கின. சென்னை பச்சையப்பனும் பல்கலைக்கழகமும் என்னைத் தமிழ் ஆய்வாளன் ஆக்கிற்று. நூலகத் தொடர் வாசிப்பும், சினிமா நேசிப்பும் என் படைப்பின் ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டன.

பள்ளிப்பருவத்தில் மர்ம நாவல் எழுதிப் பார்த்தேன். கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதிப் பார்த்தேன். சேவியரில் நான் வாசித்த கவிதை தமிழ்த் துறைத் தலைவரால் பாராட்டப்பட்டது. பச்சையப்பன் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து புதுக்கவிதைத் தொகுப்பினை 1972-ல் வெளிக்கொண்டு வந்தேன். 1975-ல் பொங்கல் நாளில் எனது முதல் ஆய்வு நூல், என் சொந்த வெளியீடாக (இலக்கிய மாணவர்) வெளிவந்தது. தமிழன்- தமிழ் எனும் உணர்வு எனக்கு பாரதிதாசன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் எனும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் மூலமே வந்துசேர்ந்தது. ஆனால் தமிழ்ப் பண்பாடு பற்றிய பிரக்ஞையை நான் மிகுதியாக நாட்டுப்புற இயல் மூலமாகப் பெற்றுக்கொண்டேன். சங்க இலக்கியங்களும் குறளும் சிலம்பும் காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் நவீனப் படைப்புகளும் என் ஆய்வை கூர்மைப்படுத்திற்று.அறிஞர் நா.வா.,  ஆறு அழகப்பன்,  தமிழண்ணல், கி.வா.ஜ. போன்றவர்கள் நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதன் விளைவு இன்று நாட்டுப்புறப்பாடல்களைக் குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதில் தங்களின் பங்களிப்பு என்ன?

மேலே சொல்லப்பட்ட இவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை ரசித்தவர்கள், தொகுத்தவர்கள், ஆய்ந்தவர்கள். நான் 1971-ல் பச்சையப்பனில் முதுகலையில் விருப்பப்பாடமாக நாட்டுப்புற இலக்கியத்தைப் படித்துவிட்டு 1973-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நெல்லை நாட்டுப்புறப் பாடல்களைச் சமூகப் பண்பாட்டு அடிப்படையில் ஆய்வுசெய்யத் தொடங்கினேன்.

நாட்டுப்புறத்து பாடல், கதை, பழமொழி, விடுகதை, கலை, வழிபாடு, சடங்கு, நம்பிக்கை, விளையாட்டு, விழா போன்றவற்றை மொத்தமாக ஆய்வுக்குட்படுத்தும் துறையாக எர்ப்ந்ப்ர்ழ்ங் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. தமிழில் அதனை நாட்டுப்புறவியல்’ என்று மொழியாக்கம் செய்து "நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம்'’ என்று 1974-ல் நூல் எழுதியவன் நான். அதனை எனக்குப் பின்னால் வந்த பேரா.ச.வே.சு., பேரா. ச. அகத்தியலிலிங்கம், பேரா. சு.சக்திவேல், பேரா. ஆறு. இராமநாதன் போன்றோர் ஏற்றுப் பயன்படுத்தினர். பேரா. தே.லூர்து சேவியரில் எனக்குத் தமிழ்ப் பேராசிரியர். அவர் நாட்டார் வழக்காற்றியல்’ என்ற பெயரை எர்ப்ந்ப்ர்ழ்ங்-க்குச் சூட்டினார். நாட்டார்’ என்பது சாதியைக் குறிக்கும் பெயராகவும் உள்ளதால் அதனைத் தவிர்த்தேன். நான் கிராமிய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்தபோது அவரும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் நாடு எனும் விரிந்த தளத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

எனினும் பெரும்பான்மையானவர்கள் எனது மொழியாக்கத்தையே பின்பற்றுகின்றனர்.

நான் ஆய்வு மாணவனாக இருக்கும்போது நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, நாட்டுப்புறவியல் சிந்தனைகள், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் என்று அடிப்படையான சில நூல்களை எழுதினேன். அத்துடன் நீலிலிகதை, ஈனமுத்துபாண்டியன் கதை, மெச்சும் பெருமாள் பாண்டியன் கதை, பாலம்மாள் கதை போன்ற கதைப் பாடல்களையும் பதிப்பித்தேன். எனது, அகத்தார் புறத்தார் கோட்பாடும், சுடலைமாடன், கண்ணகி ஆய்வுகளும், நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியமும், நெல்லை நாட்டுப்புறக் கலைகள் ஆய்வும் குறிப்பிடத்தக்கவை.

ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தக் கூடியவையாக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் விளங்கு கின்றன என்று கருதுகிறீர்களா? மக்களின் சமூக, மானிடவியல், வாய்மொழி வரலாறு ஆகியவற்றில் நாட்டுப்புறவியலிலின் பங்கு என்ன?

ஏற்கனவே சொன்னதுபோல் நாட்டுப்புறம் என்பதே வட்டாரங்களைத் தழுவியது தான். மக்களின் பண்பாட்டு வேர்களை அதன் வேரடி மண்ணோடு ஆராய்வதுதான் இத்துறை. நாட்டுப்புற வழக்காறுகளும் வாய்மொழி வரலாறுகளும் (ஞழ்ஹப் ட்ண்ள்ற்ர்ழ்ஹ்) தான் தமிழர் வாழ்வியலை ஆராய ஏதுவானது. இனவரைவியல், சமூகவியல், மானிடவியல், உளவியல், வரலாற்றியல் போன்ற பல்வேறு துறைகளுக்கும் இதுவே அடித்தளமாகும்.

சங்ககால முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை நிலங்களின் முதல், கரு, உரிப்பொருள்களிலேயே தமிழ்நாட்டுப் புறவியல் தொடங்கிவிட்டது எனலாம். தொல்காப்பியமும் பண்ணத்தி, பிசி, நொடி, முதுமொழி, புலன் என்றெல்லாம் இவற்றைப் பதிவுசெய்துள்ளார். கண்ணகி கதைகளின் மூலப்படிவங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இளங்கோ வாய்மொழிப் பாடல் களையும் கதைகளையுமே காப்பியமாக்கினார்.

வள்ளுவர் முதன்முதலாக பழமொழியின் மிகச்சிறிய வடிவில் ஒன்றரை அடியில் குறளாக்கினார். கம்பன் ஏற்றப்பாட்டைக் கேட்டு ஒரு ஊரிலேயே தங்கிவிட்டானாம்.

தேவாரமும் திருவாசமும் பள்ளும் குறவஞ்சியும் நாட்டுப்புறத்து மக்களுக்காக உருவாக்கப்பட்ட இனிய எளிய வடிவங் களே. பாரதியும் ஏற்ற நீர் பாட்டின் இனிமையிலும் சுண்ணம் இடிப்பார்தம் சுவை மிகுந்த பண்களிலும் நெஞ்சைப் பறிகொடுத்துள்ளார்.

நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது மக்களின் வாழ்வியல் கூறுகளை நஸ்ரீஹய் செய்யும் தரத்தில் உள்ளது.

சுந்தரபாண்டியன்’ என்ற பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், எழுதியுள்ளீர்கள்? தங்களுக்குள் இருந்த படைப்பாளியை எப்போது கண்டுபிடித்தீர்கள்?

அவை பூக்கள் பூக்கும் தருணங்கள்தான். எனக்குத் தெரிந்து முதலில் என்னைக் கவிஞனாகவே கண்டு கொண்டேன். நிறைவேறாத காதலிலில் எழுதிய "தென்றல் விடு தூது'ம், இந்துக் கல்லூரி வள்ளுவர் விழாவில் நான் வாசித்த கவியரங்கக் கவிதையும் என்னை ஈர்த்தாலும் பச்சையப்பன் கல்லூரியில் எங்கள் தொகுப்பில் வந்த விபச்சாரம்’ எனும் தலைப்பில் நாங்கள் பொருள் பாலுக்காககாமத்துப்பாலை விற்கிறோம்அதற்காகஅறத்துப்பால் ஏன்அழுது புலம்புகிறதுஎன்ற கவிதையே என்னை முழுமையாக்கிற்று. நா.காமராசனும், மீராவும், ஞானக்கூத்தனும் அப்போது என்னைக் கவர்ந்த புதுக்கவிஞர்கள். காவ்யாவின் முதல் நூலே "எனது பகல் கனவுகள்' கவிதைத் தொகுதி தான். எங்கள் கிராமத்தில் தரிசித்த களவு கொடுத்தவனின் உன்னதத்தை களவு’ கதையாக நான் எழுதியபோதுதான் நான் சிறுகதை ஆசிரியன் ஆனேன். வெங்கட்சாமிநாதன் இதனை இந்தியில் "ஷச்சோர்'’ என்று மொழிபெயர்த்துள்ளார். கன்னடியர் மகள், திப்புசுல்தான், சாணக்கியன் என்று சரித்திர நாவல்களில் சுவை கண்டாலும், காவேரிப் பிரச்சனையின்போது ஒரு உள்நாட்டு அகதியாய் ஒடுங்கியபோது, என் பால்யத்தின் பூப்பை "ஆராரோ'’ என்று எழுதியபோதுதான் நான் நாவலாசிரியன் ஆனேன். இதனை சுஜாதா, கி.ரா., நீல.பத்மநாபன் போன்றோர் சிலாகித்தபோது எனது "அந்தி' உருவாயிற்று.

பெங்களூர்தான் சண்முகசுந்தரத்தைச் சுந்தர பாண்டியனாக 1978-ல் ஆக்கியது. நான் பாண்டிய நாட்டுக்காரன் என்பதோடு, எனது பால்ய நண்பன் செல்லப்பாண்டியனின் பெயரில் பாதியையும் எடுத்துக்கொண்டேன். புனைவுக்கான பெயராக இது பொருந்திப்போயிற்று.

தங்கள் கவிதைகள் நாட்டுப்புறப்பாடல் வடிவிலேயே உள்ளன. எவன்டா அந்த பீட்டா? எடுடா தேஞ்ச பேட்டா!’’ -நியாயமான  சமூகக் கோபத்தை யும் அதே வடிவில் வெளிப்படுத்தி உள்ளீர்களே!

கவிதை மட்டுமன்று, கதை, நாவல், நாடகம் என எனது அனைத்துப் படைப்புகளுமே நாட்டுப்புற எடுத்துரைப்பியல் (Narratology)) முறையில் அமைந்தவைதான்எனது "அந்தி'’ நாவல் சாவுச் சடங்குகளையும், பாடல்களையும் கொண்டு பின்னப்பட்டது. "அக்னி'’ நாடகம் தெருக்கூத்துப் பாணியிலும் "அக்னி ப்ரவேசம்'’ பாவைக்கூத்துப் பாணியிலும், "அக்னி தேவி' வில்லுப்பாட்டுப் பாணியிலும் "தீப்பாஞ்ச அம்மன்கள்' ராஜாராணி ஆட்டப்பாணியிலும் எழுதப்பட்டன.

பன்னிப் பன்னி பேசாமல் பட்டென்று பேசுவதுதான் நாட்டுப்புறப்பாணியாகும். ஏட்டு இலக்கியங்கள் வேகவைத்தவை என்றால், நாட்டுப்புற இலக்கியங்கள் பச்சை ஆனவை. சக்கரை வள்ளிக்கிழங்கை மண்ணிலிருந்து பிடுங்கி, துடைத்துச் சாப்பிடுவது போன்றது ஒன்று என்றால் மற்றொன்று கழுவி, அவித்து ஸ்பூனில் சாப்பிடுவது போன்றது.

பேராசிரியர் பணியில் ஈடுபாடுகாட்டாமல் பதிப்புத் துறைக்கு வந்ததற்கு என்ன காரணம்? குறிப்பாக, நவீன ஆய்வு நூல்களையும் வட்டாரப் படைப்புகளையும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். தற்போதைய ஆய்வுகளின் தரம், தரமின்மை பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நான் இயல்பிலேயே நாடோடி மனம் கொண்டவன்; சின்ன வயது முதல் பயணங்களில் என்னை இழப்பவன். தொடக்கத்தில் ரசிக மனமும் போகப்போக ஆய்வு மனமும் எனக்குள் பரிணாமம் பெற்றன. கால்கரையில் இருந்து பாளை, சென்னை என்று கல்வி பொருட்டும் பெங்களூருக்கு வேலையின் பொருட்டும் பயணிப்பதில் மகிழ்ந்தேன். என்றாலும் எனக்குள் என் ஊரும் உறவும் மண்ணும் தெய்வங்களும் ஆழமாக வேரூன்றியிருந்தன. தேடல், வாழ்வுக்குச் சுவை ஏற்றிற்று. ஆய்வும்வெளியீடும் எனக்கும் ரொம்ப இஷ்டமானது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணி வாங்கமுடியாததால் கர்நாடகத்து புலம்பெயர் வாழ்வில் பேராசிரியர் பணி என்பது எனக்குத் தொழிலாயிற்று என்றாலும் அவகாசம் கிடைத்தபோதெல்லாம் ஆய்வு செய்தேன். என் மகள் காவ்யா பிறந்ததும் பதிப்பகத்தைத் தொடங்கினேன். எனக்கான இந்த முயற்சி நண்பர்கள், நல்ல படைப்புகள் என்று விரியலாயிற்று.

பிறமொழி தேயத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் கற்பிப்பது என்பது ஒரு சவால்தான். பிழைப்புக்காக வந்து வாழும் இவர்களிடம் தியாகத்தையோ திறமை யையோ ரொம்ப எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும் எங்கள் பழம்பெரும் கல்லூரியும் நட்புடனிருந்த ஆசிரிய உலகமும் நவீனத்துவமிக்க மாணவர் உலகமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இளையவர் மத்தியில் இளமைபெறுவதும் ஒருவகை இன்பம்தான். எனினும் எனக்குச் சவாலாக அமைந்தது பதிப்புப் பணிதான். பெண்ணியம், தலிலித்தியம், நவீனத்துவம், பின் நவீனத் துவம், அமைப்பியம் என நவீனத்துவ நூல்களையும் வட்டார அடிப்படையில் சிறுகதைத் தொகுதிகள், தெய்வக் களஞ்சியங்கள், படைப்பாளிகளின் இலக்கியத் தட வரிசைகளும், சாதனை மிக்கவர்களின் பெருந்தொகுப்புகளைக் கொண்டுவருவதும் எனக் கேற்ற சவாலாகவும் சாதனையாகவும் கருதுகிறேன். சொற்பொழிவாளன் என்பது பேராசிரியப் பணியையும் ஆய்வாளன் என்பது பதிப்புப் பணியையும் மேம்படச் செய்தது. தரம்- தரமின்மை என்பது ஒரு சுத்தமான சீர்தூக்கல் என்று சொல்லமுடியாது. இது சுயம் மற்றும் நயம் சார்ந்தது.

பொருட்செலவைப் பொருட்படுத்தாமல் பெருந்தொகுப்புகளைக் கொண்டுவருகிறீர்களே வாசகத் தளத்தில் இவை எத்தகைய வரவேற்பைப் பெறுகின் றன?

பெரிதினும் பெரிது கேள்’ என்பது என் சின்ன ஆசை. சுஜாதாவின் விவாதங்கள் விமர்சனங்கள்’ நூல் (1985) தொகுப்பு தொடங்கி, க.நா.சு., நகுலன், நீலபத்மநாபன், விந்தன், பழமலய், பாரதிதாசன், கவி.கா.மு.ஷெரீப்., லா.ச.ரா., வ.ரா., சமுத்திரம் எனப் படைப்புத் தொகுப்புகளும் தெ.பொ.மீ., வையாபுரி, ம.ராசமாணிக்கம், கா.சு.பிள்ளை, ரகுநாதம், தமிழவன், ஞானி, பஞ்சு என ஆய்வுத் தொகுப்புகளும் காவ்யாவின் சாதனைகள், அத்துடன் சோதனைகள்.

இதனை, ஓர் இலக்கிய வேள்வியாகவே கருதுகிறேன். பழ. கருப்பையா ஒரு முறை கேட்டபோது, “"நான் நெல்லைக்காரன். தமிழ் அங்கேதான் பிறந்தது. என் உடன்பிறப்பை வளர்க்கிறேன். என்னைப் பாண்டித் துரைத் தேவரின் வாரிசாகக் கருதுகிறேன். எனினும் சங்கம் வைக்க முடியாததால் பதிப்பகம் வைத்து பாதுகாக்கிறேன்' என்றேன். "விற்குமா?' என்று தமிழருவி மணியன் ஒருமுறை கேட்டபோது, "இவை 10 வருடம் விற்கும்; ஆனால் 100 வருடம் நிற்கும்' என்றேன். மேத்தா அவர்கள், "பதிப்பகம் நல்ல தொழில் ஆயிற்றே' என்று விசாரித்தபோது, "நீங்கள் குறிப்பிடுவது வணிகப் பதிப்பகங்களை. நான் நன்ல்ல்ப்ஹ்ங்ழ் அல்ல ல்ப்ஹஹ்ங்ழ் என்றேன். இந்த உணர்வும் உற்சாகமும்தான் என்னை இத்துறை யில் இயங்கவைக்கிறது.

வாசிப்பு குறைந்துவருகிறது, அரசின் ஆதரவும் இல்லை, நவீன ஊடகங்களின் ஆக்கிரமிப்பும் பொழுதைப் போக்கும் விருந்துகளும் இளையவர்களை இதன் பக்கம் அண்டவிடுவதில்லை. எனினும் சிறு குழுக்களே படங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் வாசிப்பையும் மறுவாசிப்பையும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இன்றைய நிலையில் 1000 பிரதிகள் அச்சிட்டது போய் 100 பிரதிகள் போதும் என உங்ம்ஹய்க் ஹய்க் நன்ல்ல்ப்ஹ்லிக்குள் புகுந்து விட்டனர் பதிப்பாளர்கள்.

இலக்கியத்துக்கு இலக்கு வேண்டும் என்பதுபோல் இலக்கிய நூல்களை வெளியிடுபவனுக்கும் இலக்கு வேண்டும். எனக்கும் தமிழை, அடுத்த தலைமுறைக்கும் தந்து செல்லவேண்டும் என்பதுதான் இலக்கு.

திராவிட இயக்கம் வேரூன்றி இருக்கும் தமிழகத்திற்கு இன்று பல  திசைகளில் இருந்தும் நெருக்கடிகள் எழுகின்றன. எதிர்காலத் தமிழகம்  பாலைவனமாகிவிடுமோ என்று அச்சம் எழுகிறது. போராட்ட உணர்வுகள் முனைமழுங்கிப் போய்விட்டனவே.

இதற்குப் படைப்புலகத்தைவிட அரசியல் உலகமே எதிர்வினை ஆற்ற வேண்டும். திராவிட இயக்கம் வேரூன்றிய தமிழகத்தில் இசுலாமியர் மீதான வெறுப்பும் ஆரியக் கடவுளரையும் அது சார்ந்த மத நம்பிக்கை மற்றும் சடங்காச்சாரங்கள் போன்றவை விலக்கப்பட்டுள்ளது. அல்லது வீரியம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஆனால் சினிமா, அரசியல்  போன்றவற்றில் மதமும் சாதியும் முக்கிய இடம் வகிக்கத்தான் செய்கிறது. ஐயர், ஐயங்கார், ரெட்டியார், நாயக்கர், நாயர், மேனன், அருந்ததிய, பிறமொழி போன்ற சாதிப் பெயர்களைப் பெருமையாகச் சூடிக்கொள்ளப்படுகிறது. ஆனால் தேவரோ, நாடாரோ, வன்னியரோ, கவுண்டரோ, பள்ளரோ பறையரோ, தமிழ் தம் சாதிப் பெயர்களை அணிந்து கொள்ளும்போது முணுமுணுப்பும் முறைப்பும் அதிகரித்து வருவதை அறிந்துகொள்ளலாம்.

தமிழர்கள் உரிமைப் போராட்டங்களில் பிறமொழிக்காரர்களின் பங்களிப்பு குறைவதுபோலவே பிறமொழிக்காரர்களின் படைப்புகளிலும் தமிழர் உரிமை மறைக்கவும் மறுக்கவும் படுகிறது. அது கலை இலக்கியங்களிலும் தொடர்வது கவலை தருகிறது. உலக அரசியல் பேசுவோரும், இந்திய அரசியல் பேசுவோரும் மிகுந்து வரும் சூழலிலில் தமிழர் அரசியலுக்கான படைப்புகள் காபலிலிகளின் முன்பு இளமிகள் போன்று கண்டு கொள்ளப்படாமலேயே போகின்றன. ஜெய-சுய மோகன்களின் பாரத யுத்தங்களாக கதையுலகமும்.

தமிழின் பழம் பெருமைகளையே பேசிப் பயனில்லை. நவீன வாழ்வியலுக்கேற்றதமிழ்ப் பண்பாட்டை - இன உணர்வை மீட்டெ டுக்க இலக்கியவாதிகள் என்ன நடவடிக்கைளை மேற்கொள்ளலாம்?

பழம்பெருமை பேசலாம், எழுதலாம் எனினும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அவற்றை உரமாக்கி உயர முயலவேண்டும். இன்றைய இலக்கியவாதிகள் தொல் இலக்கியச் செழுமையைக் கற்றுப் பெற்றுக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியம் தமிழ் வாழ்வியலையும், திருக்குறள் தமிழ் அறத்தையும், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள் தமிழ் மக்களையும் வட்டாரப் படைப்புகள் தமிழ் மண்ணையும் தருவன. தமிழ் இன உணர்வை மீட்டெடுக்க விரும்பும் கலை இலக்கியவாதிகள் இவற்றை உள்  வாங்கியும், நாட்டுப்புறக்கலை வடிவங்களின் நிகழ்த்துமுறைகளை முன்னிறுத்தியும் படைப்புகளை உருவாக்க வேண்டும். அது கதை, கவிதை, நாடகம், சினிமா என எதுவாக இருந்தாலும் சரிதான்.

அரசு பொது நூலகங்களுக்காக புதிய நூல்களை வாங்குவதும் தடைப்பட்டிருக்கிறது. அறிவுசார் சமூகம் உருவாவதற்குத் தடைகள்  உருவாகிக் கொண்டிருக்கின்றன. மாற்று என்ன?

வாசக சாலைகள், படைப்பாளர் மன்றங்கள் உருவாகவேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங் களில் நூல் நிலையங்களுக்கும் வாசிப்புக்கும் குறிப்பு எடுப்பதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். துணியைப் பொன்னாடையாகப் போர்த்துவதற்கு பதில், நூல்களைப் பொற்பொட்டலங்களாகத் தரவேண்டும். நிறுவன விருந்துகளிலும் குடும்ப விழாக்களிலும் நூல்களைப் பரிசுகளாக வழங்க வேண்டும்.

தீப்பாஞ்ச அம்மன்கள் போன்ற சில நாடகங்களை எழுதி இருக்கிறீர்கள். தமிழ் நாடக, சினிமாவில் தங்கள் பங்களிப்பு என்ன?

சிறுவயதில் சினிமாவால் ஈர்க்கப்பட்ட நான் பாளையங்கோட்டை கல்லூரிகளில் 1968-71 படிக்கும்போதே 3 ஆண்டுகள் 3 நாடகங்களை (சவாலே சமாளி, வெற்றிமேல் வெற்றி,  லவ் பண்ணுங்க சார்) எழுதி, இயக்கி நடிக்கவும் செய்தேன். அதில் எனக்கு விளம்பர உதவி செய்த என் மைத்துனன் கதிரேசன் கதிராகி "இதயம்'’ முதல் "காதல் வைரஸ்'’ வரை திரைப் பட இயக்குநராகச் சாதித்திருக்கிறார்.

சேவியரில் "ஈவினிங் இன் சேவியர்' என்றொரு ஓரங்க நாடகம் எழுதி, விடுதி விழாவில் மேடை ஏற்றினேன். பெங்களூரில் எங்கள் கல்லூரி விழாவில் "ஒரு வழக்கு கொலை செய்யப்படுகிறது'’ என்றொரு நாடகம் எழுதி, அரங்கேற்றினேன். எனது "பாலம்மாள்' கதையை "விசில்' ஆக சுஜாதா மாற்றினார்.  எனது ஆராரோவை பாலுமகேந்திரா படமாக்க விரும்பினார்; முடியவில்லை. எனக்கு சினிமாவை விமர்சனம் செய்வது பிடிக்கும். இதுவரை வைரமுத்துவரை, பாரதிராஜா: மண்ணும் மக்களும், உடுமலைகவி, கலைஞர் கலை இலக்கியத்தடம், அண்ணாதிரை, பி.யு. சின்னப்பா என 6 நூல்கள் எழுதியுள்ளேன். இப்போது "தமிழ் சினிமா சரித்திரம்' 3000 பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் பதிப்பு நிலை வளர்ந்து வருகிறதா, தேய்ந்து வருகிறதா?

நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்’ என்று 1981-ல் பதிப்பகத்தைத் தொடங்கியபோது, ஆண்டுக்கு 2 அல்லது 4 நூல்களை வெளியிட்டு வந்தேன். இது என் எழுத்துக்காகத் தொடங்கப்பட்டாலும் நண்பர்கள் சிலரும் பண உதவி செய்து இடம்பிடித்துக்கொண்டனர். எனக்குப் பிடித்த எழுத்துக்களைக் கொண்டுவந்தபோது க.நா.சு. சாகித்ய விருது பெற்றார். சுஜாதாவும் வைரமுத்துவும் தம் எழுத்துக்களைத் தந்து உதவினர். ஆண்டுக்கு 10 நூல்களாகி இன்று 75 வரை வெளியிடும் நிலை வளர்ந்துள்ளது. தமிழவன் இவ்வகையில் எனது வழிகாட்டி. அவர் ரொம்ப நல்ல எழுத்துக்களை இனங்காட்டியதோடு மோசமான எழுத்துக்களை விலக்கும் துணிவையும் தந்தார்.

இன்று பணம் இருந்தால் நூலை வெளியிட்டு விடலாம், விற்பதில் உள்ள சிரமங்கள் சினிமா தயாரித்துவெளியிடுவதைப் போன்றது. அவற்றைப் பாதுகாக்கவும் விற்கவும்தான் சிரமப்பட வேண்டியதுள் ளது. அதனால்தான் புதிய எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் 50 அல்லது 100 பிரதிகள் உங்களால் விற்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் வெளியிடுவோம் என்று இணங்கி, உரிய கழிவு போக அதற்குரிய தொகையை மட்டும் பெற்றுக்கொள்கிறேன். இதுவரை இதனால் பயன்பெற்றவர்கள் எப்படியும் 500க்கு மேலிலிருக்கும். கஷ்டப்படுகிறவர்களங என்னிடம் வாருங்கள், காவ்யா உங்களோடு இருக்கும்’’ என்பது எனது பிரகடனம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இது ஒரு நம்பகமான வணிகம்தான். ஆனால் பெருந்தொகுப்புகளும் நூற்றாண்டு அறிஞர்களின் களஞ்சியங்களும் சுத்தமான தமிழ்த் தொண்டுதான்.

தங்கள் இதழாசிரியர் அனுபவங்கள் எத்தகை யவை? காவ்யா தமிழ்’  நடத்துவதில் உள்ள சிரமங்கள் யாவை?

இந்த அனுபவங்கள் எனக்கு ஒரு தொடர்கதைதான். தமிழவனோடு சேர்ந்து எழுபதுகளில் படிகள், எண்பதுகளில் இங்கே இன்று’, தொண்ணூறுகளில் வித்யாசம்’ என்று 3 நவீன இதழ்கள் நடத்திப் பார்த்தேன். தனியாக தன்னானே’ இதழைத் தொண்ணூறுகளில் தொடங்கினேன். எல்லாமே ஈராண்டுக்குள் இறுதியை எய்திற்று. இப்போது காவ்யா தமிழ்’ ஆறாவது ஆண்டில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நின்றுவிடாமல் இருக்க பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதிருக்கிறது. இது காலாண்டு ஆய்விதழாக இருந்தாலும் படைப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் இடம் தந்து, ஒவ்வொரு இதழிலும் ஒரு நவீன நாடகம், சிறுகதைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் விமர்சனங்கள் என்று இடம்பெறச் செய்கிறேன். கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக இதழ்தோறும் குறைந்தது 20 கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேன். இவர்களிடம் மட்டும் மூன்றாண்டு சந்தாவும் கட்டுரைக்கு ஆயிரமும் இதழின் உயிர்ப்புக்கு பெறுகிறேன். விளம்பரம் வாங்க முடிவதில்லை, அரசு நூலகங்களுக்கு விற்கமுடிவதில்லை. எனினும் படைப்பாளிகளையும் படிப்பாளிகளையும் நம்பி இதழைத் தொடர்ந்து கொண்டுவருகிறேன். ஆய்வில் தரமில்லை என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.

பல்கலைக்கழக ஆய்வுகளின் தரம்தான் இது. இதற்கு ஆய்வாளர்களும் வழிகாட்டிகளுமே பொறுப்பு. பணம் வாங்கிக்கொண்டு கட்டுரை போடுவதை சில நண்பர்கள் குறைகூறலாம். எனினும் தரமான தயாரிப்பில், அழகாக அச்சில் கொண்டுவரவும் அவற்றை அஞ்சல், கூரியர் மூலமும் அனுப்பவும் ஓரிதழுக்கு 60 ஆயிரம் வரை செலவாகிறது. 200 பேருக்குச் சந்தா இல்லாமல் அனுப்பி வருகிறேன். ஒரு நண்பர் இலவசமாக அனுப்புகிறீர்களே என்று ஆதங்கப்பட்டார். நான் சொன்ன பதில், "இலவசமாகத் தரும் தகுதியும் மனமும் எனக்கிருக்கிறது. பெறும் தகுதியும் மனமும் இருப்பவர்கள் பெற்றுக்கொள்ளட்டும்'என்பதுதான்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :