Add1
logo
ஏழை மாணவிக்கு அரசு வழங்கிய சீட்டை, பணத்துக்கு விற்ற சுகாதாரத்துறை அமைச்சர் கல்லூரி! || முன்னாள் எம்.பி. தங்கவேலுவின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் (படங்கள்) || மதுபாட்டில் மாலையுடன் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற பெண்கள்! || சிவகங்கையை சேர்ந்தவர் புதுச்சேரியில் வெட்டிக் கொலை: தப்ப நினைத்தவர்கள் கடலூரில் சிக்கினர் || பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி ||
Logo
இனிய உதயம்
நான் இயல்பிலேயே நாடோடி மனம் கொண்டவன்!
 ................................................................
ஒரு கிராமத்தின் ஈரக்குரல்
 ................................................................
சிற்பியே! உனக்கு அம்மி கொத்தத் தெரியாதா?
 ................................................................
உழவன் தோற்றல் உலகம் தோற்கும்!
 ................................................................
01-05-2017விஞர் கவி வளநாடனின் "அய்யனார்  கோயிலும் அபுபக்கர் வகையறாவும், என்கிற தொகுப்பு, காரைக்குடி சமையல்போல், கிராமியச் சுவையோடு கமகமக்கிறது.

கிராமங்களின் தன்மை மெல்ல மெல்லத் திரிந்து, நம் உணர்வுவெளியில் ஒரு பாலைவனத்தை உருவாக்கிவரும் இந்த நேரத்தில், வளநாடன் தன்மனதில் நின்று தழைத்திருக்கும் தனது கிராமத்தை, தனது படைப்பிற்குள் பதமாகப் பத்திரப்படுத்தியிருக்கிறார்.

இதற்காகத் தமிழ்ச் சமூகம் வளநாடனை வாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறது.

இருவாட்சி பதிப்பகத்தின் நேர்த்தியான வடிவமைப்பில், ஒரு அழகிய கவிதைபோல் நம் கைகளில் தவழ்கிறது இந்தத் தொகுப்பு.

கட்டுரை நடையில், பாத்திர  அமைவுகளால்  நாடகத் தன்மை கொண்டு, வெட்டொன்று துண்டிரண்டு என்கிற கறார்த்தனத்தோடு, தேவையான இடங்களில் கவித்துவ மின்னலையும் மிளிரவைத்துக்கொண்டு, இந்தப் படைப்பு, உணர்ச்சி பாவத்தோடு ரத்தமும் சதையுமாய்  எழுந்தருளியிருக்கிறது.  

சின்னச் சின்ன அத்தியாயங்கள். அவற்றில் விதவிதமான  கிராமத்து மனிதர்கள்...  அவர்கள் எல்லோருமே பாசாங்கின்றி வளநாடனின் சொற்களின் கைபிடித்து நம் கண்முன் அச்சு அசலாக வந்துபோகிறார்கள்.

இந்த வெள்ளந்தி மனிதர்கள், வாழ்வோடு அந்நியம் பாராட்டாதவர்கள். ஒருவரோடு ஒருவர் உறவுபேணி அன்பாடு வாழ்ந்துகரைகிறவர்கள்.

இப்படிப்பட்ட பாத்திரங்களை உயிர்ப்போடு நம்முன் உலவவிட்டிருக்கும் இப்படைப்பின் போக்கு, நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறது.

எல்லாமே தனித்தனி அத்தியாயங்கள். ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை. எனினும், எல்லா அத்தியாயத்தையும் படித்து முடிக்கிறபோது ஒரு விசாலமான பசுமை மிகுந்த கிராமம் நம் மனதிற்குள் சேகரமாகிவிடுகிறது. அதன் தெருக்களும் வீடுகளும் மரங்களும் மனிதர்களும் நமக்கு  மிகவும் பரிச்சயமாகிவிடுகிறார்கள். இதுதான் படைப்பாளரின் பலம்.

அன்றைய தனது இளமைக்கால கிராமத்தின் பசுமையையும், தனது கதாபாத்திரங்கள் பலரையும் பறிகொடுத்துவிட்டு, அரைகுறையாய் நிற்கிற இன்றைய கிராமத்தையும் வளநாடன் ஒப்பிட்டுச் சொல்கிறபோது, அவருக்கு வலிக்கிறதோ இல்லையோ நமக்கு வலிக்கிறது. 

அதிகம் படிக்காவிட்டா லும் வித்தகம் பலவற்றைக் கற்று வைத்திருந்த பாசக்கார காளிமுத்து மச்சான் ஆகட்டும், மானசீக நட்பு பாராட் டும் டீக்கடை யூசுப் அத்தா, கீழக்கோட்டையார் எனும் வேர்பிடித்த நண்பர்கள் ஆகட்டும், ஊர்க்காவல் தெய்வமாக நின்று அந்நிய மனிதர்களிடம்  கேள்வி கேட்கும் கரியாபட்டி கிழவியாகட்டும், பேரன்பு மனுஷிகளான மீனா அத்தாச்சி, அன்னபூரணி அயித்தையாகட்டும், முண்டாசும் மீசையுமாக பாரதியை ஞாபகப்படுத்தும் கைநாட்டு கீதாரியப்பு ஆகட்டும் எல்லோரும் நம் நெஞ்சுக்குள் இடம்பிடித்துக்கொள்கிறார்கள்.

இவர்களை நமக்குள் உயிர்ப்பாக உலவவிட்டுவிட்டு, இவர்கள் செத்துப்போய்விட்ட செய்தியையும் போகிற போக்கில் வளநாடன் சொல்லும்போதெல்லாம்,  ஆகா.. அவரும் இல்லையா..? அடடா இவரும் இல்லையா..?. அச்சச்சோ இவரும் போய்ச் சேர்ந்துட்டாரா? என படிக்கிற நாம் பதைக்கவேண்டியிருக்கிறது.

எப்போதும் எண்ணெய்ப் பிசுக்கேறிய சட்டை யுடன் காட்சிதரும் மாரியப்ப செட்டியார், இரண்டே சட்டைகளோடு தன் வாழ்நாளை முடித்துக்கொண்ட வெள்ளையன் மாமா,  கருப்புச் சட்டையோடு மட்டுமே கிராமத்துக்குக் காட்சியளித்த சீனி மச்சான் போன்ற பலரும், ஒரே ஒருநாள்... புதுச்சட்டையுடன் தரிசனம் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் வளநாடன். எப்போது?

‘இவங்கல்லாம் செத்துக் குளிப்பாட்டிப் பாடையில் ஏறி புதைக்குழிக்குப் போனப்பதான் பார்த்தேன். அந்தப் பயணத்தில் மட்டும் எல்லோருமே வெள்ளை வேட்டியும், சட்டையுமா  அதுவும் புதுசாவே உடுத்தித்தான் போனாங்க’ என்கிறார்.

வளநாடன் படைப்பில், இப்படிப்பட்ட வாழ்வியல் எதார்த்தம், நெஞ்சில் வாள்வீசி, மறக்க முடியாத வடுக்களை உண்டாக்கிவிட்டுப் போகிறது.

சித்தானூர் மல்லியையும் கண்டமுத்து கத்திரிக்காய் போன்றவற்றையும் கூவிக் கூவி விற்ற குரல்களோடு, உயிர்த்துக்கிடந்த வாரச் சந்தையையும் காலம் களவாடிவிட்டதாம்.  அங்கே ஐந்துமாடிக் கட்டிடமாய் வணிகவளாகம் முளைத்துவிட்டதாம். அதில்.. ’இயந்திரங்களே வியாபாரம் பார்க்கிறது. அட்டையைத் தேய்த்தே அனைத்தையும் பெறலாம். செவ்வாய் புதனென்று எதுவுமில்லை’ என்று அவர் சொல்லும்போது, அப்பழுக்கற்ற கிராமியம், சலனம் மிகுந்த  நகரியத்தை நோக்கி எவ்வளவு வேகமாய் ஓடிவந்திருக்கிறது என்பது புரிகிறது.

கத்தாருக்கு பிழைப்பு தேடிப்போனவன் தன் மாமனுக்கு, பொருட்களைப் பத்திரமாக பூட்டிவையுங்கள் என்று அக்கறையாகக்  குறுஞ்செய்தி அனுப்ப... அதற்கு மாமன்காரர், "கடல்தாண்டி நீபோன பின்னால களவாணிப் பயமெல்லாம் எங்களுக்கில்லை மாப்பிள்ளை...' என மறுசெய்தி அனுப்பிவைக்கிறாராம்.

இப்படிப்பட்ட ரசனையான காட்சிகளையும் தொகுப்பில் அள்ளிவைத்திருக்கிறார் வளநாடன். இத்தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே வியந்துபாராட்டலாம். அப்படிச் செய்தால், அது இத்தொகுப்பை விடவும் பெருந்தொகுப்பாக மாறிவிடக்கூடிய விபரீதமும் நேரலாம்.

அதனால்தான், ’எங்களை கவனிக்க மாட்டியாப்பு’ என்று கேட்கும் தென்கரை பூசாரி, சேர்வாரன் வீட்டுக் கிழவி, துரைசாமியய்யா, மீசைக்கார நாகராஜ் மாமா, துயரக்கதையாய் முடிந்துபோன சின்னான்மகள் சுந்தரி, சகலத்திற்கும் மௌன சாட்சியாய் உட்கார்ந்திருக்கும் நல்லாந்துரை முனியய்யா சாமி என எல்லோரையும் அவசரமாய்க் கடந்து வெளியே வந்துவிடவேண்டியிருக்கிறது.

முகநூலில் முகம் பார்த்துக்கொண்ட  பதிவுகளின் தொகுப்பு என்பது, இந்தத் தொகுப்பிற்கு வாய்த்திருக்கும்  உபரிச் சிறப்பாகும். தொகுப்பின் நெற்றிக்கு  சந்தனப் பொட்டாய்த் திகழ்கிறது கவிஞர் ஜெயதேவனின் ஈர்ப்பான நட்புரை.

மொத்தத்தில் இந்த நூல், அப்பழுக்கற்ற கிராமம் ஒன்றின் ஈரக் குரல். இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனக்கென ஒரு கதையைத் தன்

மடியில் கட்டிக்கொண்டு நடமாடுகிறது. நட்பு, மானம், ரோசம், கோபம், நெகிழ்ச்சி என சகல பாவங்களையும் அந்தப் பாத்திரங்களிடம் பார்க்க முடிகிறது.  கிராமங்களுக்கே உரிய  ஆழ்ந்த அனுபவங்களையும், தான்  வாழ்ந்த அனுபவங்களையும் சரிவிகிதக் கலவையோடு சுவையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வளநாடன். தமிழுக்குக் கிடைத்திருக்கும் அரிய நூல்களில் ஒன்றாக இந்நூல் திகழ்கிறது. இந்த நூல் விருதுகளால் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அய்யனார் கோயிலும்
அபுபக்கர் வகையறாவும்

ஆசிரியர்; கவி வளநாடன்
விலை; ரூ 90.
முகவரி; இருவாட்சி
(இலக்கியத் துறைமுகம்),
41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை-600 011.
அலைபேசி : 94446 40986

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :