Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Logo
ஓம்
சித்ரா பௌர்ணமி சிறப்பு!
 ................................................................
பூரண கும்பத்தில் பரமன்!
 ................................................................
மே மாத ராசிபலன்கள்
 ................................................................
ராகவேந்திர விஜயம்!
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ராஜா ராமானுஜர்!
 ................................................................
அரசியலில் வெற்றி தரும் சாகம்பரி!
 ................................................................
மே மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ரங்கன் கொடுத்த ரத்தினமாலை!
 ................................................................
உய்ய ஒரு வழி- உடையவர் திருவடி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
வானுயர நிற்கும் காளி!
 ................................................................
பேரருளாளன்! -மும்பை ராமகிருஷ்ணன்
 ................................................................
01-05-17
ழகிய மணவாளனான ஸ்ரீரங்க நாதப் பெருமாள், தன்மீது தூய அன்பும் பக்தியும்கொண்ட பக்தையின் தொண்டை உலகுக்கு எடுத்துக்காட்ட ஒரு திருவிளையாடலை நடத்தினார்.

"சீரான கருவூரார் பிறந்த நேர்மை
செப்புகிறேன் செம்பவள வாயால் கேளீர்
கூறான சித்திரையாம் மாதமப்பா
குறிப்பான அஸ்தமதிரண்டாங்காலம்
தேரான நாள்தனிலே பிறந்தசித்து
தேற்றமுடன் கருவூரார் என்னலாமே'

என்கிற போகரின் பாடல்படி, கருவூரார் என்கிற சித்தர் சித்திரை மாத அஸ்த நட்சத்திரத்தில், சோழவள நாடான கருவூரில் (தற்போதைய கரூர்) பிறந்தார். விக்கிரகங்களைச் செய்தல், சுதையில் இறை உருவங்களைச் செய்தல், ஆலய கோபுரங்களைக் கட்டுதல் போன்றவை இவருடைய குலத்தொழிலாகும். சிற்ப, ஆகம சாஸ்திரங்களை இவர் கருவில் இருக்கும்போதே கற்றவர் எனக் கூறுவார்கள்.

இப்படி இயற்கையாகவே சிற்ப, ஆகமக் கலையில் சிறந்து விளங்கிய கருவூரார், போகர் என்னும் சித்தரை சந்தித்து அவரையே குருவாகக்கொண்டு பல உபதேசங்களைப் பெற்றார். அவரது வழிகாட்டுதல்படி தனது குலதெய்வமான அம்பிகையைத் தொடர்ந்து வழிபட, பராசக்தியின் அருளால் சிறந்த சித்த புருஷனாக மாறினார் கருவூரார்.

இவர் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆங்காங்கு கோவில் கோபுரங்களை சீர்படுத்துதல், புதிதாகக் கட்டுதல், விக்கிரகங்களை உருவாக்குதல் போன்ற திருப்பணிகளைச் செய்துகொண்டு இறைபக்தியில் திளைத்திருந்தார். பல இடங்களில் தனது சித்திகளால் அரிய பெரிய பணிகளைச் செய்த இவர், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, எதிர்பாராதவிதமாக திருவரங்கத்தில் வசித்த அபரஞ்சி என்னும் தாசிக்குலப் பெண்ணை சந்திக்க நேரிட்டது.

அழகிய தோற்றத்தைக் கொண்ட தேவதாசியான அபரஞ்சி நடனக்கலையில் சிறந்து விளங்கினாள். ஸ்ரீரங்கநாதரின்மீது அளவற்ற பக்தியும் அன்பும் கொண்டு கோவில் திருப்பணிகளைச் செய்துவந்தாள். சித்த புருஷரான கருவூராரின் தோற்றத்தைக் கண்டவுடன் இவர் ஒரு சிறந்த ஞானி என்பதை யூகித்துக்கொண்டாள். மேலும் அவரது ஒளிவீசிய அழகிய முகத்தைக் கண்டு தன்னையே மறந்தாள்.

அபரஞ்சியின் பணிவான வணக்கத்தை ஏற்ற கருவூரார், இவள் பிறப்பால் தாசியாக இருந்தாலும், இறைபக்தியில் பண்பட்டவள் என்பதைப் புரிந்துகொண்டார். "கண்டதும் காதல்' என்கிற வகையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். இந்தக் காதல், காமத்தால் ஏற்பட்டதன்று; பக்தியால் ஏற்பட்ட தெய்வீகக் காதல்!

தன் இல்லத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தனக்கு ஞானத்தையும் அறநெறிகளையும் உபதேசம் செய்யவேண்டும் என்று வேண்டினாள். நல்ல கருத்துகளை அறியவேண்டும் என்கிற அவளின் ஆர்வத்தை உணர்ந்த கருவூரார், அவளின் இல்லத்தில் தங்க சம்மதித்தார்.

சித்தரை முறைப்படி நல்ல ஆசனத்தில் அமர்த்தி, அவரது திருவடிக்கு பூஜைசெய்து அவரையே தனது குருவாக ஏற்று, அவர்மூலம் தனது சந்தேகங்களுக்கு விளக்கத்தைப் பெற்றாள். மேலும் கருவூரார் யோகம், சாஸ்திரம் சம்பந்தமான உபதேசங்களைச் செய்து நல்லறிவுரைகளை வழங்கினார்.தங்கியிருந்த இரண்டு நாட்களும் அவள் பலவகையான அறுசுவை உணவு வகைகளைத் தயாரித்து நன்கு உபசரித்தாள். அவளுடைய அன்பில் ஓர் புனிதத்தன்மையும், பண்பும் இருந்ததைக் கண்டு கருவூரார், ""அபரஞ்சி, உன் இறை சிந்தனையும், விருந்தோம்பலும் எனக்கு மகிழ்ச்சியளித்தது. ஸ்ரீரங்கநாதர் தனது ரத்தினமாலையை உனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். பெற்றுக்கொள்'' எனக் கூறி மாலையைக் கொடுத்தார். தங்கத்தாலும், ரத்தினக்கற்களாலும் ஜொலித்த இறைவனின் மாலையை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டாள். அவளிடமிருந்து விடைபெறும்போது அபரஞ்சியின் முகத்தில் பிரிவு என்கிற வாட்டம் இருந்ததைக் கண்டு, ""வருத்தப்படாதே அபரஞ்சி. நீ நினைக்கும்போது நான் நிச்சயம் வருவேன்'' என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய பயணத் தைத் தொடர்ந்தார்.

மறுநாள் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின்போது கருவறைக்குச் சென்ற பட்டர், ஸ்ரீரங்கநாதரின் திருமேனியில் ரத்தினமாலை இல்லாமல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, கோவில் நிர்வாகிகளிடம் தகவலைத் தெரிவித்தார். பெருமாளின் மாலை திருடுபோன செய்தி ஊரெங்கும் பரவியது. இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான செய்தியை அறியாமல் கருவூரார் முதல்நாள் தனக்குக் கொடுத்த ரத்தினமாலையை அணிந்துகொண்டு எப்பொழுதும்போல ஸ்ரீரங்கநாதரை சேவிக்க அபரஞ்சி பக்தியுடன் வந்தாள். அழகிய வனப்புடன் எப்பொழுதும் இருக்கும் அபரஞ்சியின் முகம் அன்று ரத்தினமாலையால் மேலும் பிரகாசித்தது. இதைக்கண்ட கோவில் ஊழியர்கள் அபரஞ்சியின் கழுத்தில் புதிதாக இருக்கும் ரத்தினமாலையைப் பற்றிய தகவலை நிர்வாகிகளிடம் சொல்ல, அவர்கள் அபரஞ்சியை நேரில் வரச்சொல்லி விசாரித்தனர். விசாரணையின்போது மூலஸ்தான பட்டரும் வந்து அபரஞ்சியின் கழுத்தில் இருப்பது ஸ்ரீரங்கநாதரின் மாலைதான் எனத் தெளிவாகக் கூறினார்.

ஊர்மக்கள் "அபரஞ்சிதான் திருடி விட்டாள்; அவளுக்குத் தக்க தண்டனை தரவேண்டும்' என கூச்சலிட்டனர். தாசி குலத்தில் பிறந்தவள் என்கிற இழிச்சொல்லை ஏற்கெனவே தாங்கிவந்த அபரஞ்சிக்கு, தற்போது புதியதாக திருடி என்கிற இழிச்சொல்லும் வந்ததால் செய்வதறியாது திகைத்தாள். பலர் பலவிதமாகப் பேசினாலும் நிதானம் இழக்காமல் அபரஞ்சி, ""இந்த மாலையை ஸ்ரீரங்கநாதர் சார்பாக கருவூரார் என்கிற சித்தர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார்'' என நடந்த அனைத்து செயல்களையும் விளக்கினாள்.

உடனே ஊர்மக்கள் கருவூராரைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்துவிட்டனர். பெண் மோகத்தால் இரண்டு நாட்கள் தங்கியவர், பெருமாளின் மாலையைத் திருடி எப்படி ஒரு தாசிப் பெண்ணுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்றும்; இறைவனின் மாலையை தாசிப்பெண் அணிந்ததால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் கேலிப்பேச்சு பேசினார்கள்.

சற்றே நிலைகுலைந்த அபரஞ்சி, தன் அவல நிலையைப் போக்க கருவூராரை நேரில் வருமாறு வேண்டினாள். அவளுடைய வேண்டுதலுக்கேற்ப அவரும் நேரில் வந்தார். இதுவரை நடந்த நிகழ்வுகளை அபரஞ்சி கருவூராரிடம் வருத்தத்துடன் தெரிவித்தாள்.

கோவில் அதிகாரிகளிடம், தான் ரத்தினமாலையைத் திருடவில்லை என்பதை ஆணித்தரமாக கருவூரார் எடுத்துரைத்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. அபரஞ்சியின் புனித பக்தியை மெச்சி ஸ்ரீரங்கநாதர்தான் தன்னிடம் மாலையைக் கொடுத்தார் என மீண்டும் மீண்டும் விளக்கியும் யாரும் நம்பத் தயாராகவில்லை. இறுதியாக, ஸ்ரீரங்கநாதர் சந்நிதிக்குச் சென்று அவர்முன்பு கருவூராரும் அபரஞ்சியும் உண்மையைச் சொல்லட்டும் என கோவில் நிர்வாகிகள் தீர்மானித்து, அதன்படி ஸ்ரீரங்கநாதரின் சந்நிதிக்கு அனைவரும் வந்தனர்.

கருவூரார் ஸ்ரீரங்கநாதரிடம் நடந்தவற்றை விளக்குமாறு வேண்டினார். அப்போது வானிலிருந்து ஓர் அசரீரி குரல், ""அபரஞ்சி சிறந்த குணமுள்ள பெண். அவளின் தூய அன்பையும் பக்தியையும் மதித்து நான்தான் ரத்தினமாலையைக் கருவூரார்மூலம் கொடுத்தேன். நீங்கள் அனைவரும் என்னை அழகுபடுத்திப் பார்க்கவேண்டுமென ஆசைப்பட்டீர்கள். நானோ என்மீது உண்மையான பக்தி கொண்டவர்களை அழகுபடுத்திப் பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். அபரஞ்சி முற்றும் துறந்த தவக்கோலம் கொண்ட புனிதப்பெண். ஆனால் நீங்கள் யாரும் அவளை மதிக்காமல் இழிவுபடுத்தினீர்கள்'' என்று ஒலித்தது. பெருமாளின் குரலைக் கேட்டவுடன் அனைவரும், "ரங்கா! ரங்கா!' என பக்திப் பரவசத்துடன் கூவினார்கள். இறைவனின் லீலையைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

நடந்த தவறுக்கு கோவில் நிர்வாகிகளும், பட்டரும் கருவூரார் மற்றும் அபரஞ்சியிடம் மன்னிப்பு கேட்டனர். கோவில் நிர்வாகிகள் அபரஞ்சியிடமிருந்து பறித்த ரத்தினமாலையை மீண்டும் அவளுக்கே கொடுக்க, அவள் அதை வாங்க மறுத்து ஸ்ரீரங்கநாதருக்கே அதை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டாள். அபரஞ்சியின் உள்ளார்ந்த பக்தியை, ஸ்ரீரங்கநாதர் கருவூராரை ஒரு கருவியாகக்கொண்டு உலகுக்கு உணர்த்தினார்.

தூய மனதுடன் இறைவனை வழிபட்டால் நிச்சயம் அவளின் திருவருள் கிட்டும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாகும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :