Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017திராவிட இயக்க அரசியலால், இங்கே நிகழ்ந்திருக்கும் மகத்தான மாற்றங்களை அளவிடமுடியாது. எனினும், இன்னும் நம் சமூகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் பழுதுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், பார்ப்பனரல்லாதாரின்  சமூகப் பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுயமரியாதையோடு தன்னிறைவு பெற்று, மானத்தோடு சூத்திரர்களும், பஞ்சமர்களும் வாழவேண்டும். அதற்கு சாதி, மதம், கடவுள் போன்றவை தடையாக இருப்பதால், அவற்றை அழித்தொழிக்கப் போராட வேண்டும், போராடி வெற்றிபெற வேண்டும். சமூக அடிப்படையிலான இந்த விடுதலைக்கு சுயமரியாதையே அடிப்படையாகும் என்று திராவிட இயக்க-அரசியலின் அடிப்படைத் தத்துவம் 1916-ல் உருவாக்கப்பட்டது. இது தோன்றி ஒரு நூற்றாண்டைக் கடந்திருக்கும் நிலையில் இதுகுறித்து ஒரு சிறு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

உலகமெங்கும் முற்போக்கு பிற்போக்கு யுத்தம்!

ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாமனிதர் கௌதம புத்தர், இந்த உலகத்திற்குக் கூறிய தத்துவம்தான் அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டதே ஆகும்’ என்பது. ஆகவே, மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உலக இயற்கை. ஆனால், மாற்றத்தை தடுத்துநிறுத்த, உலகம் முழுவதிலுமுள்ள பிற்போக்கு சக்திகள் முயன்றுவருகின்றன.

இன்று சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு, கலாச்சார கட்டமைப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடுந்துயரில் அல்லல்பட்டு, அவதிப்பட்டு வாழ்ந்துவரும் பல்லாயிரம் கோடி மக்கள், இந்தக் கட்டமைப்பை அடியோடு மாற்றியமைக்க போராடிவருகின்றனர். அதேநேரத்தில், இந்த கட்டமைப்பில் சுகவாழ்வும், வளமும் பெற்று ஏகபோக வாழ்வை அனுபவித்துவரும் எதிர்திசைக் கும்பல், இந்த சமூகக் கட்டமைப்பு மாறிவிடக்கூடாது என்று தடுத்துவருகிறது.

இந்த சமூகத்தை மாற்ற பாதிக்கப்பட்டோர் ஓர் அணியிலும், இந்த அமைப்பினால் பாதிக்கப்படாத சுகவாசிகள் எதிரணியிலும் நின்று போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்தை காரல்மார்க்ஸ் அவர்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், உழைப்போரின் அணிக்கும், உழைப்பைச் சுரண்டி முதலாளிகளாக வாழ்ந்துவருவோர் அணிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் என்பார். இந்தியாவில், தமிழ்நாட்டில் 1916-ல் தோன்றிய நீதிக்கட்சி, உயர்சாதி ஆதிக்கப் பணக்காரப் பார்ப்பனர்களை ஓர் அணியிலும், உழைத்து உருக்குலைந்த அழுக்கடைந்த கீழ்சாதியினரை அதாவது திராவிடர்களை ஓரணியிலும் நிறுத்தி, பார்ப்பனர்- பார்ப்பனரல்லாத சாதி-வர்க்க போராட்டமாக வகைப்படுத்தியது.

இந்தியாவில் பிறப்புக்கு முன்பே மனிதவிதியை சாதி நிர்ணயிக்கிறது. ஆனால், மனிதனின் சிறப்பு, பிறப்பால் வருவதல்ல. அவனது பண்பாலும் செயலாற்றலாலும்தான் வரும். எனவே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்கிறது திராவிடத் தமிழ் நெறி.

புத்தரின் பகுத்தறிவு போதனை

 “உங்களிடம் தெரிவிக்கப்பட்டது என்பதற்காகவோ, இதுதான் மரபு என்பதற்காகவோ அல்லது நீங்கள் கற்பனை செய்துவைத்தது இதுவே என்பதற்காகவோ எதையும் நம்பிவிட வேண்டாம். ஆசானை மதிக்க வேண்டும் என்பதற்காகவே,

அவர் சொன்னவற்றை எல்லாம் நம்பிவிட வேண்டாம். போதுமான பரிசீலனைக்கும், பகுப்பாய்வுக்கும் பிறகு எது நல்லது? எது பயனுள்ளது, எது அனைவர்க்கும் நன்மை தருவது என்று ஆராய்ந்து, அந்தச் சித்தாந்தத்தைத் தேர்ந்தெடுத்து நம்புங்கள்; அதனையே விடாப்பிடியாகப் பின்பற்றுங்கள் என்பது புத்தரின் சிகர போதனை.

புத்தன் இப்படி தெளிவை உபதேசிக்கிறான். சுயசிந்தனையை நோக்கி நம்மை நடக்கச்செய்கிறான். ஆனால், கீதை அப்படியல்ல; பிறகு எப்படி?

 கீதையின் பிறழ் உபதேசம்

சுரண்டும் உயர்சாதி வர்க்கம், சுரண்டப்படும் கீழ்சாதி வர்க்கத்திற்குக் கூறும் அறிவுரைதான் கீதையின் உபதேசம். அது என்ன சொல்கிறது?

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு?

கௌதம புத்தர் போதனையும் பகவத் கீதை போதனையும் ஒப்பிட்டுப் பார்த்தால், புத்தருடைய போதனை சமூக மாற்றத்திற்கு உள்ளதாகும். கீதையின் போதனையோ சமூக மாற்றத்திற்கு எதிரானது. இதிலிருந்தே ஆரிய-சனாதனிகளின் பகவத் கீதை உழைக்கும் திராவிட மக்களுக்கு எதிரிடையானது என்பது வெள்ளிடைமலை. அடிப்படையில் புத்தர் போதனையும், தந்தை பெரியாருடைய போதனையும் மனிதநேயத்தின் அடிப்படையிலும், பகுத்தறிவின் அடிப்படையிலும் எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம். ஒரு நாட்டில் சிந்தனைப் புரட்சி ஏற்படவேண்டுமானால், அதற்கு மக்கள் மத்தியில் அறிவுத்தூய்மை ஏற்படவேண்டும்.

அறிவுத்தூய்மை

ஒரு நாட்டின் சமுதாயமும் பொருளாதாரமும், முன்னேறவேண்டுமானால், முதலில் அம்மக்களின் சிந்தனையில் அடிப்படை மாற்றம் ஏற்படுத்தவேண்டும். அதாவது சிந்தனைப்புரட்சி ஏற்பட வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மேதையும், புரட்சியாளருமான மா-சே-துங்’ சீனப் புரட்சியின் அனுபவ அடிப்படையில் கூறியது மிக முக்கியமாகும். அதாவது “ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கத் தொடங்கும் பொழுது, முதலில் மக்களின் சிந்தனை ஓட்டத்தைப் புரட்சிகரமாக மாற்றவேண்டும்’’ என்கிறார். அவர் மட்டுமா?

உலக அளவில் சிந்தனையாளர் மார்க்சும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரும், தென்னாட்டளவில், குறிப்பாகத் தமிழக அளவில் தந்தை பெரியாரும் மக்கள் சிந்தனையில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டுமென, பல வழிகளிலும் முயன்றுள்ளனர்.

காரல் மார்க்ஸ், உலகவரலாறே, வர்க்கப் போராட்டத்தின் உள்ளடக்கம் தான் என்றார், பெரியாரோ, சாதிகளிடையே உள்ள சமத்துவமின்மையை ஒழித்துச் சமுதாய மாற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும், சமூக நீதியையும் ஏற்படுத்தத் திராவிடர் இயக்கத்தின் மூலம் களப்பணி செய்தார். அடிப்படைச் சமுதாய மாற்றத்திற்குக் காரல் மார்க்சும், தந்தை பெரியாரும், அம்பேத்கரும் தத்துவ விளக்கங்களை அளித்து அயராது பாடுபட்டனர். ஆக, ஆரிய சனாதன மத வலையிலிருந்து தமிழர்களை விடுவிப்பதே இன்றைய சமுதாய மாற்றத்தின் முக்கிய குறிக்கோளாக திராவிட இயக்கம்  கருதுகிறது.

 வஞ்சகத்தின் நிறம் சிவப்பு

இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் சூரத் கடற்கரையில் வியாபாரம் செய்ய டெல்லி பாதுஷா ஜஹாங்கீரிடம் பிரித்தானியர் 1600-ல் அனுமதிபெற்றனர். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள், அதாவது 1757-இல் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌô மீது போர் தொடுத்தனர்.

இந்தப் போரில் ஆங்கிலத் தளபதி இராபர்ட் கிளைவ் வெற்றிபெற்றார். இவர் வெற்றிபெறுவதற்குக் காரணமானவர் மீர் ஜாபர் என்ற நவாப்பின் தளபதி ஆவான். எப்படி? அவன் துரோகிகளின் பட்டியலில் இடம்பெற்றான். வெற்றி பெற்ற இராபர்ட் கிளைவ் இந்தியர்களைப் பற்றி இங்கிலாந்திலுள்ள தன் மேலதிகாரிகளுக்குக்  கீழ்காணுமாறு எழுதினான்... “"ஓரளவு மிகுந்த நம்பிக்கையுடன் நான் வலியுறுத்துவதாவது, செழுமைமிக்க, வளமான இந்த சாம்ராஜ்யத்தை மிகச்சிறிய சக்திகொண்ட இரண்டாயிரம் ஐரோப்பியர்களுடன் வென்றெடுக்க முடியும். இந்தியர்கள் சோம்பேறிகளாகவும், சுகபோகிகளாகவும், மூடர்களாகவும், கோழைகளாகவும்,

நினைத்துப் பார்க்கமுடியாத ளவிற்கு தூரத்தில் உள்ளனர்.

இவர்கள் எல்லாவற்றையும் வலிமையின் வழியாக அடைய நினைக்காமல் துரோகத்தின் மூலமே அடைய எத்தனிக்கின்றனர்'

அந்தக் குணம், இந்தியர்களிடம் மட்டுமல்ல; நம் தமிழர்களிடமும் அதிகமிருக்கிறது. அதுதான் நம்மை முன்னேறவிடாமல் நமது காலையே வாருகிறது. இப்படி முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளில் முக்கிய காரணி வருணாசிரமம்.

வருணாசிரம முறை

இந்தியாவிலும் தமிழகத்திலும் வருணாசிரமம், சாதீயத்தை அகோரமாக வளர்த்து வைத்திருக்கிறது. இந்தியாவை ஆண்ட காங்கிரஸும் பா.ஜ.க.வும் சாதீயத்தை  ஒடுக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

சாதியை ஒழித்து உண்மையான தேசிய ஒற்றுமையைக் காக்க இவர்கள் நினைத்தால், கலப்புமணம் செய்து கொண்ட தம்பதிகளின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு தர முன்வந்திருக்கலாமே. பிற தேசியக் கட்சிகளும், இங்கே இருக்கும் திராவிடக் கட்சிகளும் இது குறித்தெல்லாம் அக்கறைகாட்டவில்லை. பொருளாதார அடிப்படையில் பலருக்கும் இட ஒதுக்கீடு கேட்கும் இவர்கள், ஏன் கலப்பு மணத் தம்பதிகளின் பிள்ளைகளுக்கு கூட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறவில்லை, கூறமாட்டார்கள். ஏனெனில், சாதிப்பிரிவை வைத்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் இவர்கள் எல்லோரும் இருப்பதால், அதை ஒழிப்பதற்கான உண்மையான நடைமுறைகளைக் கையாள முற்பட மாட்டார்கள். திசைதிருப்பி ஏமாற்றுவதுதான் இவர்களின் நடைமுறைத் தந்திரம்.

சமூக உயர்வைக் காட்ட மத சம்பிரதாயங்கள் முக்கியமானவை. அதனால்தான் அன்று முதல் இன்றுவரை கோயில் கட்டுவதிலும், அதைப் பாதுகாப்பதிலும் சனாதனிகள் முனைப்புடன் செயல்படுகின்றனர். இதில் பலனடையும் ஏனைய உயர்சாதி இந்துக்களும், சனாதனிகளைப் பின்பற்றி உயர்சாதி வேஷம் போட்டுக்கொண்டு திரிகின்றனர்.

இவர்களை சனாதனிகள் பயன்படுத்திக்கொண்டு, மனதிற்குள் எள்ளி நகையாடுகின்றனர்.

வருணாசிரம முறைப்படி இப்போது, தொழில்கள் அடிப்படையில் சாதிகளைக் கண்டறிய முடியாது. என்றாலும், பல்வேறு கைத்தொழில்கள் சாதி அடிப்படையிலேயே இன்றும் உள்ளன. இதில் புதைந்திருக்கும் தத்துவம் திராவிடர்களுக்கு எதிரானது.

அதாவது, இந்த சமூக கட்டமைப்பை நிலைநிறுத்த, மாற்றாமல் இருப்பதற்கு கூறப்படும் விளக்கம் என்னவென்றால், ஒருவன் இப்பிறவியில் கீழ்சாதியில் பிறந்திருந்தால் அவன் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. அவன் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப இப்பிறவியில் சாதி அடுக்கு முறையில் பிறந்துள்ளான். இவன் உயர் சாதியில் பிறக்க வேண்டுமென்றால், இப்பிறவியில் புண்ணியம் செய்தால் மறுபிறவியில் உயர் சாதியில் பிறப்பான். எனவே, இப்பிறவியில் உயர் சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். கீழ்சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள். எனவே,

இதை மாற்ற முற்படுவது பாவச் செயலாகும். சாதி அடிப்படையில் உள்ள தொழில்களை செய்து பிழைப்பதே இப்பிறவியில் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தர்மம் ஆகும். இதுவே குல தர்மம். இதுவே வருணாசிரம முறையாகும். இதை சமஸ்கிருத மொழியில் விதைத்துத் தழைக்க வைத்தனர்.

இத்தத்துவத்தின் மூலம் பார்ப்பனர்கள் மேல் தட்டிலும், பஞ்சமர்கள் கீழ் தட்டிலும், பிற மக்கள் நடுத் தட்டிலும் சமூகப் படிகளில் உள்ளனர். எனவே வருணாசிரம முறை என்பது திராவிட இயக்க நெறியான சாதி ஒழிப்பிற்கு, மத ஒழிப்பிற்கு, கடவுள் ஒழிப்பிற்கு எதிரிடையானதாகும். இதுவே ஆரிய-திராவிட போராட்டத்தின் உள்ளடக்கமாகும். இதை மாற்றியமைக்க போராடுபவன் திராவிடன் ஆவான். வருணாசிரமத்தை  ஆதரிப்பவன் ஆரிய கும்பலைச் சார்ந்தவன் ஆவான்.

இத்தகைய வருணாசிரம முறைகளை ஒழித்தால்தான், மனிதன் மனிதனாக தலைநிமிர்ந்து வாழமுடியுமென புரட்சியாளர்கள் எண்ணத் தலைப்பட்டார்கள். இதன் அடிப்படையிலேயே திராவிடக் கட்சிகளின் தாயான நீதிக்கட்டி முதலில் புரட்சிக்கொடி பிடித்தது.

நீதிக்கட்சியின் சாதனைகள்

மதராஸ் ராஜதானியின் முதல்வராக இருந்த இராமராய நீங்கர் அதாவது பனகல் அரசர், 9-11-1923 - 3-12-1926 காலகட்டத்தில் ஆட்சி செய்தபொழுது மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டது. பஞ்சமர் என்ற பெயர் ஆதி திராவிடர் என்று மாற்றப்பட்டது. இந்துசமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது.  1925-ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.  ஆதி திராவிட குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பதற்கான தடை நீக்கப்பட்டது. பேருந்துகளில் ஆதி திராவிடர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்படாத பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரிகள், ஆந்திர பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டன. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1920-லிருந்து 1937 வரை ஆட்சி புரிந்த நீதிக்கட்சி மறக்க முடியாத சாதனைகளை வரலாற்றில் பதிப்பித்துள்ளது.

நீதிக்கட்சி பின்னர் தன்மான இயக்கமாக வடிவெடுத்துப் பல்வேறு மாநாடுகளை நடத்தியது. அதில் புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிப் பெயர்களை வைத்துக் கொள்ளக்கூடாது. மதக் குறியீடுகள் உடலில் இருக்கக் கூடாது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும். மதம், வேதம், சாத்திரம், புராணம் ஆகியவற்றை யாரும் கடைப்பிடிக்கக் கூடாது. தீண்டாமையை எதிர்க்க வேண்டும். ஆதரிப்போரை தண்டிக்கவேண்டும். கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் பணத்தை செலவிடக் கூடாது. கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே தரகர் இருக்கக்கூடாது. பள்ளிப் பாடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் பாடங்கள் இருக்கக்கூடாது. தன்மான இயக்கத்தில் உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆண், பெண் இடையே சமத்துவம் இருக்க வேண்டும். இருவருக்கும் சொத்துரிமை சமமாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்கள், கொள்கையாய் மலர்ந்து செயல்வடிவம் பெற்றபோது, அதுவரை பேயாட்டம் போட்டுவந்த சனாதனம், சாய்ந்து அலறத் தொடங்கியது.

தந்தை பெரியார் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இந்தச் சமூக கட்டமைப்பை ஒழிக்கப் பாடுபட்டார். இதனடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் மேலேற படிக்கட்டுகள் பல உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒரு உன்னதமான படிக்கட்டுதான் இட ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு-ஒரு கேள்விக்குறி?

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியிலும், வேலையிலும் 69 விழுக்காடு பெற்ற மாநிலம் என்ற சிறப்பை அடைந்துள்ளது. இது, செல்வி ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எதிர்பாராது நிகழ்ந்த சிறந்த செயல்பாடாகும். இந்த ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால் 69 விழுக்காடு நீதிமன்றத் தீர்ப்பு பாதிக்காது என்றனர். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கக்கூடாது என்பது உச்ச வரம்பாகும். இதனால் இன்று இது கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லத்தக்கதா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் அளவை எதிர்ப்பவர்களின் சார்பாக தமிழ்நாட்டைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் வாதிட உள்ளார். 2010-ல் உச்சநீதிமன்றமானது பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்திற்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு எந்த வகையில் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டிற்று.   2011 ஜூலை 8-ஆம் நாள் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தி மாநில அரசிற்கு அந்த பிற்படுத்தப்பட்ட ஆணையம் நியாயப்படுத்திக் கூறிற்று. ஆக, இனி வருங்காலங்களில் திராவிட இயக்க அரசியலுக்கு உள்ள சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே எதிர்கால வினாவாக உள்ளது.

திராவிடத்தால் விடியத் தொடங்கிய இந்த  மண்ணில் சோசலிச சிந்தாந்தங்கள் எடுபடவில்லையே ஏன்? 

சோசலிசப் பொருளாதாரமும், சமூக சீர்திருத்தமும்

சாதிமதப் பண்பாட்டு இலக்கியத் தளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பொருளாதார மாற்றங்கள் - பொருளாதார சீர்திருத்தங்கள் அடிப்படையானவை என்பது காரல்மார்க்ஸின் வாதமாகும். ஆக, மேல் கட்டுமான மாற்றத்திற்கு அடிப்படையான காரணம் அடிக்கட்டுமானத்தில் அதாவது பொருளாதார தளத்தில் செய்யப்படும் மாற்றமே முக்கியமாகும். 

கார்ல்மார்க்ஸின் இந்த வாதத்தின் அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்டுகள் பொருளாதார காரணிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். சமூகக் காரணிகளுக்குப் போதிய முக்கியத்துவம் இந்தியச் சூழலுக்கு ஏற்ப கொடுக்கவில்லை. இதுவே பொதுவுடைமை கட்சியின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோல்விக்கான காரணங்கள் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைந்துவிட்டன. திராவிட இயக்கங்கள் சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்தன. ஆனால் பொதுவுடைமை இயக்கம் பொருளாதார சீர்திருத்தங்களுக்கே முக்கியத்துவம் அளித்தது. இது ஒருதலைப்பட்சமான அணுகுமுறையாக அமைந்துவிட்டது. இந்திய-தமிழக சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளில் இரண்டிற்கும் சம அழுத்தங்களை அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது, பொதுவுடைமை இயக்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த மண்ணில், வருணாசிரம ஆதிக்கத்தின் அடிப்படையைத் தகர்க்கப் பாடுபட்டவர்களில் அம்பேத்கர், ஒரு போராளியாகவே செயல்பட்டார். அவர், வருணசிரம சக்திகளுக்கு எதிராக பிராமணரல்லாதார் மேலெழுந்ததையும், சென்னை மாகாணத்தை ஆண்டதையும், கண்டு மகிழ்ந்தார்.

அதேபோல், அவர்கள் வீழ்ந்தபோது வருந்தினார். 

டாக்டர் அம்பேத்கரின் ஆய்வுரையில் தொடுக்கப்படும் கணைகள் “ஒரு பிராமணரல்லாதார் கட்சியின் தோற்றம் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

அக்கட்சியின் வீழ்ச்சியும் வேதனையுடன் காணவேண்டிய ஒரு நிகழ்ச்சியே. 1937 தேர்தல்களில் ஏன் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பதை அக்கட்சித் தலைவர்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.  தேர்தலுக்கு முன்னால் 24 ஆண்டுக் காலம் மதராசில் பிராமணர் அல்லாதார் கட்சியின் ஆளுமை இருந்துவந்தது. 

நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த அக்கட்சி அட்டைவீடு போலச் சரிந்து போனது எதனால்? பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால்?  இந்த வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று நான் கருதுகிறேன்.

பிராமணர் பிரிவுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை இவர்கள் உணரவில்லை. பிராமணர்களுக்கு எதிராகத் தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்த போதும், இவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் கொள்கை வழிப்பட்டவை என்று இவர்கள் கூற முடியுமா?  பிராமணர் தன்மை அவர்களிடமே எவ்வளவு இருந்தது? அவர்கள் நவாப்களாக இருந்தார்கள்.

இரண்டாம் தர பிராமணர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டார்கள்.  பிராமணியத்தை விட்டொழிப்பதற்குப் பதிலாக, எட்டத் தகுந்த இலக்காக கருதி அதன் ஆத்மாவை இவர்கள் இறுகப் பற்றியிருந்தார்கள்.  பிராமணர்களுக்கு எதிரான அவர்களது கோபம் எல்லாம் தங்களுக்கு அவர்கள் இரண்டாந்தரப் பட்டம் தருகிறார்கள் என்பதே.

நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள்

 “ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்னொரு கட்சியை எதிர்க்கச் சொல்லும்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே உள்ள கொள்கை ரீதியான வேறுபாடுகள் என்ன என்று அவர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் அந்தக் கட்சி எப்படி வேரூன்றும்? எனவே பிராமணிய வகுப்பினருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளை ஒழுங்குற எடுத்துக்கூறாததே அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம்.

 கட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணம் அதனுடைய வேலைத் திட்டம் மிகக் குறுகலானதாக இருந்தது. இக்கட்சியின் எதிரிகள் “வேலை தேடிகள்’’ என்று இக்கட்சியை வர்ணித்தனர்.  இந்தச் சொல்லைத்தான் "இந்து' பத்திரிகை அடிக்கடி பயன்படுத்தியது.  இந்தக் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஏனென்றால் அடுத்த கட்சியினரும் இதே வகைப்பட்டவர்தானே.  பிராமணரல்லாதார் கட்சியின் வேலைத் திட்டத்திலுள்ள ஒரு குறை என்னவென்றால், அவர்கள் தமது இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிட்டவேண்டும் என்று கூறுவதே. இது மிகவும் நியாயமானதுதான். ஆனால், பிராமணரல்லாத இளைஞர்கள்- இவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக கட்சி 20 வருட காலம் போராடியிருக்கிறது.  தமக்கு வேலையும், ஊதியமும் கிடைத்த பின்னர் தமது கட்சியை நினைத்துப் பார்த்தார்களா? 

கடந்த இருபது வருடங்களாக பதவியிலிருந்த கட்சியை, கிராமங்களில் வசிக்கும் 90 சதவீத மக்களை மறந்துவிட்டனர்.  இவர்கள் வசதி சிறிதுமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கடன்காரர்களின் பிடியில் சிக்கி அல்லல் படுகின்றனர்.

“இந்தக் காலகட்டத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை நான் பரிசீலித்தேன். நிலச்சீர்திருத்தம் என்ற ஒரேயொரு நடவடிக்கை தவிர, குத்தகைதாரர்கள், விவசாயிகள் பற்றி இவர்கள் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. அதாவது “காங்கிரஸ் பேர் வழிகள் இவர்களது ஆடைகளையே திருடிச் சென்றுவிட்டனர் என்றுதான் இது காட்டுகிறது.’’

நடந்துள்ள சம்பவங்கள் என்னைப் பெரிதும் வருத்துகின்றன.  ஒரு கட்சி மட்டும்தான் அவர்களைக் காப்பாற்றும் என்று மட்டும் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்சிக்கு நல்ல தலைவர் வேண்டும், ஒரு கட்சிக்கு நல்ல அமைப்பு வேண்டும், ஒரு கட்சிக்கு அரசியல் மேடை வேண்டும்.’’

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன அம்பேத்கர், காந்தியடிகளையும் ஜின்னாவையும்கூட விமர்சிக்கத் தயங்கவில்லை.

கடைசியாக அவர் சொல்கிறார்...

’’பிராமணரல்லாதோருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே தாமதமின்றி பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான். (பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பகுதி 37 (பக்.405,- 408, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)’’

முடிவுரை

சோசலிசம் இல்லாத திராவிடமும், திராவிடம் இல்லாத சோசலிசமும் நிகழ்கால, எதிர்கால சவால்களான சாதிக் கொடுமைகளான தீண்டாமை, ஆணவக்கொலை போன்றவற்றையும் வறுமை, வேலையின்மை, குறைந்த வாழ்க்கைத்தரம் போன்ற பொருளாதாரச் சீர்கேடுகளையும் சந்தித்து சமாளிப்பதற்கு தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளும், பேராசான் காரல்மார்க்ஸ் கண்டறிந்த சோசலிச கொள்கையும் இன்றைய ஏழை இந்தியாவில் செயல்படுத்தியாக வேண்டும்.

சோசலிசம் இல்லாத திராவிடமும், திராவிடம் இல்லாத சோசலிசமும்  எதிர்கால இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு எதிர்காலம் இல்லையென்று அறுதியிட்டுக் கூறலாம். திராவிட கட்சிகளின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் நினைவுகூரவேண்டியது இந்த தாரக மந்திரமாகும். அதாவது, அனைவருக்கும் நீதி- எவருக்கும் இல்லை அநீதி இதுவே அடிப்படை திராவிட நெறியாகும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :