Add1
logo
முழுஅடைப்புப் போராட்டம்; இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் சாலை மறியல் (படம்) || பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் உருவாகியிருக்கிறது : ஓபிஎஸ் || உழைப்பாளர் சிலை போல அஜித்-ன் போஸ்டர்; அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டிஸ் (படம்) || முழுஅடைப்புப் போராட்டம்; கடலூரில் நூற்றுக்கணக்கானோர் கைது! (படம்) || ஈரோட்டில் முழு அடைப்புப் போராட்டம்; அரசியல் கட்சியினர் கைது! (படம்) || சுகேஷூக்கு 5 நாள் காவல் நீட்டிப்பு || டெல்லி கோர்ட்டில் சுகேஷ் ஆஜர் || வெறிச்சோடிய சென்னை: திரையரங்கம், வணிகவளாகங்கள் அடைப்பு (படங்கள்) || முழுஅடைப்புப் போராட்டம்; கலையிழந்த திரையரங்குகள் (படங்கள்) || உத்திர பிரதேசத்திற்கு ஒரு நீதி தமிழ் பிரதேசமான தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? கம்யூனிஸ்ட் போராட்டம் || டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை! || சென்னை சைதையில் மறியல் போராட்டம்; திமுக மா.செ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கைது! || கொத்தமங்கலத்தில் விவசாயிகள் போராட்டம் டாஸ்மாக் கடை முற்றுகை! (படம்) ||
Logo
இனிய உதயம்
01-04-2017



(மதுரை தியகராசர் கல்லூரியில் 68-ஆம் ஆண்டு புலவர்விழா இன்குலாப் விழாவாக 01-03-2017 புதன்கிழமை தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வுற்றபோது, ஆற்றிய உரையின் செழுமைபெற்ற வடிவம்)

அதிசயிப்பும் மகிழ்ச்சியுமாக  உணர்ந்தேன் - தியாகராசர் கல்லூரி முதல்வர் பெயர் எயினி. சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்துஸ்தானி என பலப்பல கலப்புகளில் வெளிப்படும் தமிழ்க் குடும்பங்களின் நவீனப் பெயர்களின் நடுவில்- ஈராயிரம் ஆண்டுகளின் முன்னான இவ்வாறான ஒரு பெயரைக் காணுகிறபோது, அது ஒரு பெயராக மட்டும் நிற்கவில்லை; வரலாறு, மொழி, இனம், பண்டைய வாழ்வியல் போன்ற பல குறிப்புக்களில் கொண்டுபோய் நிறுத்தியது. இன்றைய தமிழ்ப் பண்பாட்டு நடப்புகளின் கொடுவேனலிருந்து வெளியேறி சற்று இளைப்பாறச் செய்தது.

தந்தை-   திராவிட இயக்கச் சிந்தனையாளர்; பகுத்தறிவு வழிநடந்தவர். தமிழன் என்ற உணர்வோடு வாழ்ந்த தந்தை இப்பெயர் சூட்டியதாக முதல்வர் எயினி தெரிவித்தபோது, என் அதிசயிப்புக்கு எந்த நியாயமுமில்லை எனத் தெளிந்தேன். என் மற்றொரு அதிசயிப்பு- "தீராநதி' மாத இலக்கிய இதழ் முதல்வர் எயினியின் மேசைமேல் இருந்தது. நவீன சமகால இலக்கிய சங்காத்தமே வேண்டாமென விலக்கமாகி நிறையப் பேராசிரிய வட்டம் நிற்க, இந்த அதிசயிப்பு என்னைச் சூழ்ந்தது.

""கல்லூரி முன்புறம் அலைகுதிக்கும் தெப்பக் குளம். பின்புறம் பெருகியோடும் வைகை ஆறு. தெப்பக்குளம் வைகை என்னும் நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் கட்டிடத் தாஜ்மகால் என்று கல்லூரி குறித்து தீராநதியில் எழுதியிருக்கிறீர்கள். அலையடித்த தெப்பக்குளம் படம் இப்போது கிடைக்குமா'' என்று கேட்கிறார் முதல்வர்.

அலைகள்வீசிய தெப்பக்குளம் அவரது வலது பக்கம் வறண்டு கிடக்கிறது. குளத்தின் கட்டாந்தரையில்- மேலைதேச ஆட்டங்களில் கிறுக்குப்பிடித்த சிறுவர் கூட்டம் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தது.

""நம் கல்லூரி ஆண்டுமலரிலேயே அலைபுரளும் தெப்பக்குள புகைப்படம் வெளிவந்துள்ளதே'' என
முதல்வரிடம் தெரியப்படுத்தினேன். ""தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை'' என்றார்.

அப்போது அவருடனான உரையாடலில் பரிமாறிக்கொண்டேன்; இன்குலாப் 1964- 65-ல் தியாகராசர் கல்லூரியின் தமிழ் மன்றத் தலைவர். அதற்கு முந்திய ஆண்டு நானிருந்தேன். இன்குலாப் தலைவராக இருந்தபோது இதே தொல்காப்பியர் அரங்கில் நீர்க் குடும்பம் என்ற தலைப்பில் கவியரங்கம்.  திராவிட இயக்கச் சிந்தனையாளரான முடியரசன் கவியரங்கத் தலைவர். கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், நா. காமராசன், அபி, நாஞ்சில் ஆ. ஆரிது என ஒவ்வொருவரும் குளம், கண்மாய், கடல், கிணறு, ஆறு என நீர்நிலைகள் பற்றி கவிதை வாசித்தனர். கவியரங்க நிறைவுக்குப்பின் கவிஞர் முடியரசன், ஔவை நடராசன், கவிப்பெருமக்கள் அனைவருடனும் அரங்கின் பின்புறப் புல்தரையில் அமர்ந்து உரையாடினோம். தெப்பக்குள அலைகள் தனுமையாய் வீசி எம்மை நீவின. இனி நீர்க்குடும்பம் என்ற தலைப்பில் அப்படியொரு கவியரங்கம் நிகழ இயலுமா!

ஆற்றாமையை முதல்வரிடம் பகிரமட்டுமே இயன்றது. 

வரவேற்புரை நிகழ்த்திய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இ. பேச்சிமுத்து கல்லூரி தொடங்கப்பட்ட 1949-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் புலவர் விழா -  இது 68 ஆம் ஆண்டு என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அவரோடும், முன் அமர்ந்திருக்கும் உங்களோடும் இணைந்து நானொரு குறிப்பைப் பகிரவேண்டியிருக்கிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்பதிலும், சங்கப் புலவர்கள் 49 பேர் என்பதிலும் ஐயமெதுவும் இல்லை. ஈராயிரம் ஆண்டுகள் ஓய்ந்துகிடந்த தமிழ் நெஞ்சங்களில் அந்தப் புலவர் குழுவை மீட்டமைக்க வேண்டும் என்ற பேரவா முளைவிட, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முன்முயற்சியில் 49 தமிழ்ப்புலவர்கள் குழு 1960-களின் தொடக்கத்தில் உருவாயிற்று.

பாரதியின் உற்ற நண்பரும் பசுமலைப் பாரதியார் என அழைக்கப் பெற்றவருமான தமிழறிஞர் நாவலர் சு. சோமசுந்தர பாரதியார் புலவர் குழுத் தலைவர். பெரும் புலவர் அவ்வை துரைசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், அ. சிதம்பரநாதனார், மு. வரதராசனார், க. வெள்ளைவாரணார், மயிலை சிவக்கொழுந்து, தமிழ்ச் சிங்கம் சி. இலக்குவனார் என 49 தமிழ்ப் புலவர்கள் கொண்ட குழு உருவாயிற்று.

எந்த மதுரையில் தமிழ்ச் சங்கம் அமர்ந்து தமிழ் வளர்த்தனரோ,  அதே மதுரையில் 49 புலவர்கள் கொண்ட தமிழகப் புலவர் குழுவின் தொடக்க விழாவை நடத்தினார்கள். தானி என இன்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்கள் அக்காலத்தில் இல்லை. ரிக்சாக்கள் இருந்தன. ஒவ்வொரு ரிக்சாவிலும் ஒரு தமிழறிஞரை அமரச்செய்து, மதுரையின் நான்கு மாசிவீதிகளிலும் இதே தியாகராசர் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ஊர்வலமாக முழக்கங்களுடன் அழைத்துச் சென்றோம். தமிழகப் புலவர்குழுவுக்கு நாங்கள் செய்த பழைய சிறப்பு நெஞ்சில் முட்டி முட்டி மேலெழுகிறது! பதிவு செய்யவேண்டும் இதைத் தமிழ் வரலாறு!

1960-களில் தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்கும் பல்கலைக்கழகங்கள் மூன்று இருந்தன. கல்லூரிகள் எனச் சொல்ல இயலாது. தமிழ் வளர்ப்பில், தமிழ்த் தொண்டில் அவை பல்கலைக்கழகங்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஓயாத்தமிழ் அலைகள் அடித்துக்கொண்டிருந்த மதுரைத் தியாகராசர் கல்லூரி அவை.

தமிழ்வளர்த்த முந்தைய புலவர்கள் வரிசையில் தியாகராசர் கல்லூரியில் அவ்வை துரைசாமி, அ.கி. பரந்தாமனார், பேரா. தமிழ்ச்சிங்கம் இலக்குவனார், அ.சிதம்பரநாதனார், ஐயா தமிழண்ணல் என்று இந்த தமிழ் அறிஞர் வரிசையும் எமக்கு ஆசிரியர்களாய் தமிழ் வளர்த்தனர்.  

"யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; எதை எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன் வைக்கும் சவால்' என சக எழுத்தாளரான ஜெயஸ்ரீ குறிப்பிடுகிறார். இவர் மலையாளத்தின் சிறந்த நவீனப் படைப்புகளை தமிழுக்கு ஆக்கம் செய்பவர்.

வினையாற்றலும் பயன்பாடும் அவசியமற்றவை; இரண்டாம் பட்சமேயெனில் இந்த எழுத்து என்ற விருதா வேலையை நாம் ஏன் செய்ய வேண்டும்? பின்னெதற்கு நனைந்து பொதி சுமக்கிற வேலை!

எனக்கு வாழக் கற்றுக் கொடுத்தது
ஒரு குருவி
புயல் வீசும் மரத்திலும் கூடுகட்ட வேண்டும்என்கிறார் துரை. குணா (கீழத் தெரான் - கவிதைகள்).

வாழ்வதற்காய் முயலும் ஒவ்வொரு நெஞ்சோடும் இக்கவிதை பேசுகிறது, விடுதலை நோக்கிய செயற்குணம் இங்கு ஒவ்வொருத்தருக்கும் கடத்தப்படுகிறது.

உணர்வு மற்றும் சிந்தனைத் தளத்தின்மீதான இத்தாக்கமே வினையாற்றல், பயன்பாடு.

இன்குலாபின் எழுத்தை எங்கிருந்து, எப்பக்கத்திலிருந்து அணுகுவது, மதிப்பீடு செய்வது? வினையாற்றல், பயன்பாடு, நிலவும் சமகால வாழ்வியல்- ஆகியவற்றிலிருந்து செய்யவேண்டும். சமகால வாழ்வியல்  என்னவாக  இருக்கிறது, என்னத்தை நம்முன் வைக்கிறது?

ஒரு நெடுவாசல் அல்ல, தமிழ்நாடெங்கும் நெடுவாசல்கள்.  காவிரிப் பாசன மக்களின் கண்ணீருக்கும் துக்கத்துக்கும் காரணமென்ன? பாலாறு மறிக்கப்பட்ட விவசாயிகள் தமக்குள்ளிருந்தே துக்கத்தையும் மகிழ்ச்சியையும் வந்தடைந்தனரா? மீத்தேன் திட்டத்தில் டெல்டா விவசாயிகள் வில்லடிக்கு ஆளான பஞ்சுத்துகள்கள்போல் பறக்கிறார்களே, ஏன்? இது திணிக்கப்பட்ட துக்கம்! தானே உருவானதில்லை. இந்தக் கால வாழ்வியலில்தான் இன்குலாப் இருந்தார். நீங்களும் நானும் இருந்தோம். வஞ்சிக்கப்பட்ட வாழ்வு கோபாக்கினியைத் தூண்டுமா? இல்லையா? வஞ்சிக்கப்பட்ட வாழ்வைப் பற்றி வஞ்சித்தவர்களைப் பற்றி- வஞ்சித்தோருக்கு ஒத்துப் போகும் தத்துவ விருத்தியுரை வழங்கும் ஈஷா யோகி பற்றி எழுதாமல் வேறு எதை  இன்குலாப் எழுதுவார்?

   இந்த அரங்கத்தில் மேடையில் அமர்ந்தபோது என் எதிரில் கண்டேன்- மாணவர்களைவிட மாணவியர் அதிகம் தெரிந்தனர். தமிழிலக்கியம் மீதுகொண்ட ஈர்ப்பினால் மாணவியர் அதிகம் சேர்ந்துள்ளனரா? என   விசாரித்தபோது, இல்லை எல்லாத் துறைகளிலும் பெண்களே மிகுதி என புன்னகையுடன் பதிலளித்தார் முதல்வர்.

பெண்கள் அணி, அணியாக பெருவாரியினராக வெளியுலகில் நடைபோடத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இந்த மிகுதி வெளிப்படுத்துகிறது.

இறக்கை வெட்டிய கிளிகளாய்
எத்தனை காலம் கூண்டுக்குள்ளே’

என்று பெண்களை நோக்கி கேள்வி எழுப்பினார் இன்குலாப். மண்டியிட்டு முழங்கால் மடிக்கப்பட்டு கைகட்டிக் கிடந்த பெண்டிரை விடுவிக்கத்தான் அவர் கேள்வி வைத்தார்.

    இல்லை இல்லை,
    நாங்கள் கிளிகள் இல்லை
    இறக்கை வெட்டிய கிளிகள் இல்லை
    இறக்கை கட்டிய கிளிகள்’’

என்று இந்த அரங்கின் பெருவாரிப் பிரசன்னத்தால் நீங்கள் பதில் தந்திருக்கிறீர்கள்.

இன்குலாப் என்றால் நாதியற்றவர்களின் குரல் என நான் பதிவிடுவேன். அவர் சொல்லும் செயலும் நாதியற்றவர்களின் பக்கம் நின்றன. நாதியற்றவர்கள் யார்? ஆணதிகார சமுதாயத்தால் ஒடுக்கப்படும் பெண்கள், சாதிய ஆணவத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர்,  ஆதிக்கக் குழுக்களால் அடக்கப்படும் உழைப்பவர்கள், நிறபேதத்தால் அடிமையாக நடத்தப்படும் கறுப்பர்கள்- மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழர்கள் - இவர்கள் அனைவரும் நாதியற்றோர்.

    வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரியக்
    கறுப்பனாய் இருந்து பார்
    ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறுதெரிய
    தமிழனாய் இருந்து பார்
    பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப்
    பறையனாய் இருந்து பார்
    வல்லாங்கு செய்யப்பட்ட
    பெண்ணாய் இருந்து பார்
    வன்முறை ஏன் என்ற காரணம் புரியும்“

நாதியற்ற அனைத்து மக்களின்   குரலை அவர் ஒலித்தார்.

பிரச்சனைகளின் நெருஞ்சி பூத்த கானலில் இன்று யார்தான் கைம்பெண் இல்லை? பிரச்சனைகளென்னும் வெக்கைநிலத்தில் வெந்து குமைந்து அனாதரவாய் நிற்கும் அனைவரும் கைம்பெண்டிர் அல்லவா?

இந்த அவலப் புலம்பலினூடாக, இதிலிருந்து மீளும் ஒரு குரல் உள்ளிருக்கக் காணலாம்.  ஒவ்வொரு இருளுக்குப் பின்னாலும் ஒளிக்கோளம் ஒன்று தோன்றல் இயல்புபோல், ஒவ்வொரு அவலத்துக்குள்ளும் ஒரு மாற்றுக்குரல் வாழுதலும் இயல்பு. நொம்பலப்பட்ட இந்தக் கைம்பெண் போலவே இன்னொரு பெண் சொன்னாள். இந்தப் பெண்ணும் நாட்டுப்புற மகள்தான். 

மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளேமயானம் போற வரை தோசைசுட்டவளேஉழைப்பு, உழைப்பு, உழைப்பேதான் வாழ்க்கை. காலில் வெள்ளெழும்பு தெரியும் வரை, கண்ணில்  ஒளித்திரை மங்கும் வரை  பெண் உழைக்கிறாள். மண்டையிலுள்ள மயிர் உதிரும் காலம் மட்டும் மாவிடித்தாள்; மயானம் ஏகும் காலம் வரையும் தோசை சுட்டுப் போட்டாள். பெண்ணினத்தின் மேல் சற்றும் ஈவிரக்கமில்லாமல் அவளைச் சாக்குழிக்குள் தள்ளும் காலமும் சுரண்டலுக்குள் தள்ளுகிறது சமூகம். இந்த மாற்றுச் சிந்தனைக் குரல் இதனுள் தங்கியிருப்பதுதான் இதன் துயர வீரியம். ஆம், துயரத்துக்குள்ளும் ஒரு வீரியம் உண்டு.

இது ஒரு பெண்ணின் பாடு மட்டுமல்ல; காலந்தோறும் கேட்கும் கோடி கோடிப் பெண்களின் முறைப்பாடு இது. முந்திய நிலைகளிலிருந்து ஒரு அங்குலமாவது இந்த சமுதாயத்தை உயர்த்தவேண்டுமென்ற சிந்திப்பு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ உள்ளுறையாகக் கிடைக்கவேண்டும். இதுதான் இலக்கியத் திறன். இலக்கியப் பயன்பாடு.

நமது அழகான பொய்களால் எத்ததனை ஆயிரம் ஆண்டுகளாகப் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்?

காம்புநீக்கப்படாத அனிச்சப்பூவை என் காதலிக்குச் சூட்டினேன். அந்தோ பாவம் வள் இடை முறிந்துவிட்டது என்று வள்ளுவரில் தொடங்கி, ஒடிவதுபோல் இடையிருக்கும் என்று கண்ணதாசன் வரை நாம் எத்தனை காலம் பெண்களை ஏமாற்றிவந்தோம்! தேவைக்கு அவள் அழகைப் பாராட்டுவோம்... தேவை தீர்ந்தால்?

நமது வானொலியைக் கேளுங்கள். மாதத்திற்கு ஒருமுறையேனும் "பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே' என்று வசைபாடாது இருக்கிறதா? 

(ஆனால் - கட்டுரைத் தொகுப்பு; பக்கம் 93).

மக்களில் பாதியாகிய பெண்பாலினம் ஒடுக்கப்படுவது ஒருதுளியும் இன்குலாபுக்கு உடன்பாடல்ல. கவிப்புனைவு அல்ல, கருத்து நிலையே முதன்மை என சிந்தித்தார்.

வள்ளுவர் முதல் கண்ணதாசன் வரை எவருக்கும் விமர்சன விலக்களிக்கவில்லை. நவீன ஊடகப் பரப்புரைகளும் பெண்டிருக்கு எதிரான கருத்து நிலையில்  செயல்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தினார்.

 எம்மதமாயினும் அது பெண்களுக்கு அளிக்கும் அவமானத்தை,  துயரத்தை எடுத்துப்பேச தயங்காதவர். சொந்த வாழ்வுக்குள்ளிருந்து எடுத்துரைக்கிறார்.

எங்கள் வீட்டில் என் மூத்த அக்காள் மிக அருமையாகப் பாடுவார். நான் கேட்ட ஒருசில அபூர்வமான குரல்களில் அவர் குரலும் ஒன்று.

அவர் குரலைப் பதிவுசெய்யாமல் போனது எங்கள் துரதிர்ஷ்டம். இளமையிலேயே அவர் இறந்துவிட்டார். 

அவர் குரல் இனிமையானது.

அவர் வாழ்ந்த நாட்களிலும் அந்தக் குரலை மதித்துப் பாராட்டும் பண்பு எங்களில் யாருக்கும் இருந்ததில்லை.

அவர் ஒரு முஸ்லிம் பெண். அவர் முகத்தை மட்டுமல்ல,  அவர் குரலையும் எந்த ஆடவனும் கவனித்துவிடக் கூடாது.

கூண்டில் அடைபட்ட குயில்போல வீட்டுக்குள்ளேயே அந்த வீணை அதிரும். அதிலும் பக்திப் பாடல்களாக அதிரும்.

எந்த வெற்றிடத்தையும் காற்று நிரப்பும். எந்த ஒலியையும் காற்று எடுத்துச் செல்லும். எங்கள் வீட்டிற்குள் காற்று வரும்; என் சகோதரியின் இசையுடன் காற்று வெளியேறும். காற்றைத் தடுக்க முடியாது. காற்று பர்தா போட்டுக்கொள்ளாது. அது வீட்டைத் தாண்டும்; தெருவில் நடமாடும்;  செவிகளைத் தொடும்; பக்கத்துவீட்டுக் குழந்தையைத் தாலாட்டும்;
எதிர் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் கிழவிக்கு
இதமூட்டும்; அதற்கு மேலும் காற்றுசெல்லும்.
அதனுடன் சேர்ந்து கடைசி வரை செல்வதற்கு
என் சகோதரியின் குரலுக்குச் சக்தியில்லை.

(ஆனால் -கட்டுரைத் தொகுப்பு; பக்கம் 91-92)

இன்குலாப் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்; எனினும் அவர் இஸ்லாமியராக ஒருபோதும் தன்னைக் கருதியதுமில்லை. வாழ்ந்தவருமல்ல.

ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் இஸ்லாமிய சமுதாயத்தில் நிலவும் தலாக் விவாகரத்து முறை பற்றி நேர்காணல் செய்யவந்தார். கவிஞரின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்தியாளர் அனுப்பப்பட்டார். இன்குலாப் செய்தியாளரிடம் கேட்ட கேள்வி "நீங்கள் என்னை ஒரு இஸ்லாமியராகக் கருதி வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் இன்குலாப்பாக பேசுவேன்' என்றார்.

செய்தியாளர் சொன்னார், "நான் இன்குலாப்பின் கருத்தை தெரிந்து கொள்ளவே வந்தேன்.'

இன்குலாப் பேசினார்.

"தலாக் ஆணாதிக்கக் கொடூரத்தின் உச்சம். பெண்களை உயிருள்ள மனுசிகளாக எண்ணாமல் அடிமைகளாகக் கருதுகிற தலாக் முறைக்கு எந்தக் காரண காரியமும் இல்லை. காரணகாரியமில்லை என்பதுதான் அதற்கான ஒரே காரணம்மூத்த மகன் பெயர் செல்வன். செல்வன் என்றிவ்வாறான தமிழ்ப் பெயரை இஸ்லாமியப் பாரம்பரியத்தில் காண இயலுமா? விடை, அவரைப் பொறுத்தவரை எளிதாது.

    சமயம் கடந்து மானுடம் கூடும்
    சுவரில்லாத சமவெளி தோறும்
    குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
    மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்

இதுதான் அவர் பதில்.

பாரதி காலத்திலும் நாம் இல்லை; அவரது தாசன் பாவேந்தர் காலத்திலும் வாழவில்லை. இன்குலாபின் காலத்தில் நாம் வாழ்ந்தோம். பாரதி காலத்தில் பிரச்சனைப் பிசாசுகள் ஒரு நூறு என்றால், பாரதிதாசன் காலத்தில் ஐநூறு பிசாசுகள். இன்குலாப் காலத்தில் ஆயிரம் பிசாசுகள். இங்கிருந்துதான் இன்குலாபை நாம் அளவிட வேண்டும். பிரச்னைகளின் காளவாயிலில் பிறக்கும் சொற்கள் இதமாகவோ வெதுவெதுப்பாகவோ இருக்கவியலாது.

   சொல்லும் செயலும் முரண்படா வாழ்வு அவருக்குரியது. சிறுமை கண்டு பொங்கும் எழுத்து அவர் வசப்பட்டிருந்ததுபோலவே முரண்களில்லா சுயவாழ்வுக்கும் வசப்பட்டிருந்தார். இரண்டையும் தனித்தனியே நிறுத்தியவரில்லை அவர்.

1984 டிசம்பர் 3 ஆம் நாள் இரவு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு ஆலை விசவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. விசவாயு தாக்கிய இரண்டு நாளில் 2500 பேர் மாண்டுபோயினர். இதுவரை 15000-க்கு மேற்பட்டோர் பிணமாகியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் கண்பார்வை இழந்தனர்.

இலட்சக்கணக்கான பேர் இன்னமும் நடைப்பிணமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

போபால் விஷவாயுக்கு மூலமான யூனியன் கார்பைடு தொழிற்சாலை ஒரு அமெரிக்க நிறுவனம்.
யூனியன் கார்பைடு நிறுவனத்தையும் உடந்தையாய்ச் செயல்படும் அரசையும் கண்டித்து 1985-ல் சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், மருத்துவர் டொமினிக் சாமிநாதனும்   கவிஞர் இன்குலாப்பும் இணைந்து குழந்தைகளைத் திரட்டி அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

கவிஞர் இன்குலாப் தனது மகன்கள் செல்வம், மகள் ஆமீனாவுடன் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். 

கவிஞர் கனல்மைந்தன் தனது குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அமெரிக்க தூதரகத்
திற்கு எதிரே நின்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. அனைவரும் குழந்தைகளுடன் சாலையில் இறங்கிப் போராடினர். அப்போது இன்குலாப் மகள் ஆமினாவுக்கு மூன்று வயது. கீச்சுக் குரலில்  அந்தச் சின்னஞ்சிறு குஞ்சு எதிர்ப்புக் குரல் எழுப்ப, கூடிநின்ற குழந்தைகள் முழக்கமிட்டன.

    வானம் வேண்டும்
    பூமி வேண்டும்    
    நாங்கள் வாழ தூய்மையான
    காற்று வேண்டும்

குழந்தை ஆமினா ஒலிக்க, மற்ற குழந்தைகளும் தடையை மீறி முன்னேறி முழங்க ஒரு மணி நேரம் போக்குவரத்து நின்றுபோனது. அன்று தொடங்கிய சுற்றுச்சூழல் கேடு எதிர்ப்புக் குரல் இன்குலாப்பிடம் அணு உலை எதிர்ப்புப் போராட்டமாக தொடர்ந்தது. இன்குலாபுடையதாக மட்டுமல்ல, அவர் குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலில் சூழல் பாதுகாப்பு இன்றளவும் தொடருகிறது.

இந்த சமுதாயத்தை நோக்கி  அவர் முன்வைத்த கேள்விகள்  இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளன. பதிலளிக்கும் முயற்சியில் சிறு எட்டுகூட இந்தச் சமுதாயமும் அரசும் முன்னெடுத்து வைக்கவில்லை.

  தலித் விடுதலை நோக்கிய இக்கேள்விக்கு பதிலளிக்கும் செயல்வடிவு எதுவும் இதுகாலமும் உருக்கொள்ளக் காணோம். ஒரு கேள்வி அல்லது விமர்சனம், பதிலளிக்கப்படாமல் உயிர் வாழுகிறதெனில், அதன் ஆணிவேர் ஆழமானது. பதிலளிப்பைக் காணுகிற நாள் இந்தப் பழைய சமுதாயம் அடிமட்டமாய் தகர்ந்து தூள் தூளாய் உதிர்ந்துபோகும் நாளாக அமையும்.  அது இன்குலாப் என்ற புரட்சிக் கவி காணவிழைந்த விடியல்!
    

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :