Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017""ஆயிரக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாக-கவிஞர்கள், இலக்கியவாதிகள், தமிழ்த்துறைத் தலைவர்கள் என கொடுத்துவிட்டு- இரண்டே இரண்டு வரி விமர்சனத்துக்காகக் காத்திருக்கிறேன் பத்தாண்டுகளாக-ஒரு பாமரப் பெண்ணாக'' அன்புடன் வெ.இரா.நளினி என்ற கையொப்பத்தோடு அந்த நூல் என் மேசையில் இருந்தது. வயது எழுபத்தைந்தைத் தாண்டிய அந்த அம்மையார் தன் தந்தையின் படைப்புகளை இருபெரும் தொகுதிகளாக்கி 107 பல்கலைக்கழகங்களுக்கும் 20-க்கும் மேற்பட்ட திங்கள், வார, நாள் இதழ்களுக்கு அனுப்பியதோடு இலக்கியக்கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் அந்த இரு தொகுதிகளையும் தூக்கிச் சுமந்துகொண்டு 500 படிகளைப் பல பேராசிரியப் பெருமக்களுக்கும் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் உவந்தளித்து இரண்டு வரிகளாவது கவிஞரைப் பற்றி எழுதுங்கள் என்று மன்றாடி எதிர்பார்த்த கொடுமை பெருங்கொடுமை. தினமணியில் நான்கு வரி விமர்சனம் வந்ததோடு சரி. திரும்பிப்பார்க்க ஆளில்லை.

சத்திய ஆவேசத்தைச் சமரசப்படுத்திக் கொள்ளாமல் செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்த ஒரு கவிஞருக்கு நம் தமிழுலகம் காட்டும் மரியாதை அடடா... தானாகத் தலை தொங்கிவிடும் மரணத் தறுவாயிலும் அந்தக் கவிஞர் தன் மகளிடம் கூறுகிறார். கவிஞன் என்பவன் மரணத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாய்ப் பார்ப்பவன். காலத்தையும் வென்று நிற்பவன். நீ ஒரு கவிஞனின் பெண் என்பதை மறந்து பாமரப்பெண் போல கண்ணீர்விட்டு அதைக் களங்கப்படுத்திவிடாதே' என்று. கவிஞன் என்கிற பெருமிதத்தோடு வாழ்ந்த பெருந்தகையின் வாழ்க்கை போராட்டங்களால் நிறைந்தது.

கோவையில் இருந்து குந்தா செல்லும் வழியில் உள்ள வெள்ளியங்காட்டில் 21.08.1904-ல் பிறந்த கவிஞரின் வாழ்வு 1991-ல் காலவெளியில் கரைந்து போய்விட்டது. இயற்பெயர் இராமசாமி. ஊர்ப்பெயரே ஊரறியும் பெயரானது. முதல் கவிதை "யுத்தகானம்' 1942-ல் பிரசண்டவிகடனில் வெளிவந்தது. 1948 வரை கவிஞர் எழுதிய கவிதைகள் இனிய கவிவண்டு என்ற பெயரில் 22.09.1948-ல் வெளிவந்தது. பத்துக்கும் மேற்பட்ட காவியங்கள், கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த குறுநாவல்கள், நீதிக்கதைகள், பழமொழிகள் ஏராளம். மூன்றாம் வகுப்போடு திண்ணைக் கல்வியை இழந்துவிட்ட கவிஞர் தேடித்தேடிச் சேகரித்த அறிவோ அற்புதமானது. விவசாயம், களைஎடுப்பது, மாடு மேய்ப்பது, தையற்கலை, நவஇந்தியா இதழின் பிழைதிருத்துநர் என்று அவர் வயிற்றுப்பாட்டுக்காக வதைபட்டது பலவழிகளில். வறுமை அவரை மிதித்துத் துவைத்தபோதும் அவர் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை ஏறுநடை போட்டவராகவே வாழ்ந்தார்.

16-1-1948-ல் கடிதம் எழுதியனுப்புகிறார். என்ன செய்தியைச் சுமந்திருக்கிறது கடிதம்? நான் ஒரு கவிஞன். எனக்கு இந்த உலகத்தில் யாரும் நண்பர்கள் கிடையாது. அதே நிமிடத்தில் பகைவர்களும் கிடையாது.உற்றாருமில்லை. உறவினருமில்லை. எனக்கு எல்லாரும் சமம். எங்குக் குற்றமிருந்தாலும் விசம்போல் வெறுப்பேன். யாருக்கும் அஞ்சமாட்டேன். யாருக்கும் வணங்கியதுமில்லை. கடிதத்தின் செய்திதான் அவர் வாழ்க்கையின் செய்தி. கொள்கைகளை விற்றுவிட்டுக் கோலோச்சத் துடிக்காத கவிஞரின் மனம் அவர் கவிதை

களில் அனலைக் கக்குகிறது.
அடிமையாக மாட்டேன்-எவர்க்கும்
அடிமையாக மாட்டேன்
அடிமை யென்ற ழைத்தே-என்னை
அடிமை செய்த போதும்
அடிமை யாக மாட்டேன்-எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்.

என்று நெஞ்சுரத்தோடு பொய்மைகளை நேர்நின்று எதிர்த்தவர்.   

 தன் படைப்புகளில் எல்லாம் சுயமரியாதையைத் தூக்கிப்பிடித்த கவிஞர் ஒருநாள் தன் மகளை அழைக்கிறார். தந்தையின் அழைப்புக்கு ஓடோடி வருகிறாள் மகள். அங்கே கண்ட காட்சியோ அடிவயிற்றில் நெருப்பை அப்பிவைக்கிறது 1950-ல் காஞ்சிபுரத்தில் அச்சிடப்பட்ட அவரின் "எச்சரிக்கை' என்ற கவிதைப் புத்தகங்கள் கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. எதிரில் நிற்கிறான் பழையதாள் வாங்குபவன். அவன் கையில் தராசுத்தட்டு. நல்ல கவிதைகளை எடைபோடத் தெரியாத நம் மக்களுக்கு என்ன புரியப்போகிறது? அந்தக் காட்சியைப் பார்த்த மகளோ அதிர்ந்துபோய் நிற்கிறாள். கவிதைப் புத்தகங்கள் விற்றால் கொஞ்சம் வறுமை தீரும் என்று பார்த்தால் என்ன இது கோலம்? கவிஞரோ சிரிக்கிறார். அந்தச் சிரிப்பு யாரைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு? ""என்னம்மா பார்க்கிறாய்? கண்ணீர் எதற்கு? ஒரு காசு செலவில்லாமல் நம் கவிதைகளுக்கு விமர்சனமும், விளம்பரமும் கிடைக்கப் போகிறது. கடையில் சுண்டலோ, கடலையோ வாங்கிக் கொறிப்பவன் சும்மா கொறிப்பானா? நம் கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொண்டல்லவா கொறிப்பான்? ஆகா! என்ன அருமையான கவிதை என்று பாராட்டமாட்டானா? அடுத்துவரும் கவிதைத் தொகுப்பு சக்கைபோடு போட்டு விற்பனையாகப் போகிறது பார். அட்டைப்படங்களைக் கிழித்துக் கொடு'' என்கிறார். கிலோ ஆறரை அணாவிற்கு விலைபோகிறது கவிதை. சில வேளைக் கஞ்சிக்கு அது பயன்படும்.

அவ்வளவுதான்.

1945-46 ல் கோவையில் வரதராஜபுரத்தில் ஒரு மாட்டுக் கொட்டகையில் குடியிருந்தது கவிஞரின் குடும்பம். பால்தான் அவர்களின் வாழ்க்கைக்கு வழி. பாலைக்கறந்தால் சற்று நீர்தெளித்து வைப்பது எங்கும் இருக்கும் பழக்கம். அப்படி ஒருநாள் அன்பு மனைவி அப்படிப் பாலைக் கறந்ததும் சிறிது நீரைத் தெளிக்கிறார். அதைப் பார்க்கிறார் கவிஞர். அவ்வளவுதான். பால் பாத்திரத்தை எட்டி உதைக்கிறார். மனைவியோ திகைத்துநிற்கிறார். "கவிஞனுக்கு மனைவியாய் இருந்தும் பாலில் தண்ணீரைக் கலக்குகிற பாதகத்தைச் செய்கிறாயே. இந்தப் பாவத்தை எங்குபோய்த் தீர்ப்பது?' என்று கொந்தளித்து நிற்கிறார்.

குடிசையெங்கும் பால் சிதறிக்கிடக்கிறது. பதறுகிறார் அந்த அம்மையார். குழந்தைகளின் வயிற்றுக்கு எதை வார்ப்பது? கலங்கிய அம்மையார் கண்ணீரோடு நிற்கிறார். இப்படி எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்.

ஆனால் எதற்கும் கலங்கியதில்லை கவிஞர்.

மகாத்மாகாந்தியின் காலத்தவராகிய நாம் உண்மையைப் பின்பற்றாமல் வாழ்ந்தால், கதராடை அணிந்து சுயநலனாகத் திரிந்தால் அவரைக் கொன்ற கோட்சே நம்மைவிட நல்லவனாகிவிடுவான்’’ என்ற கவிஞர், 5.11.1962-ல் எழுதிய கடிதத்தில் "என் அன்பு மகளே! நீ என்றும் எந்த நிலையிலும் ஒரு மல்லிகை மலராகவே இரு. உன்னிடமிருந்து வருவது நறுமணமாகவே இருக்கட்டும். மனச்சோர்வு என்ற இருளுக்கு இலக்காகாதே. மவுனமாக உன் கடமைகளைச் செய். ஆனந்தம் என்பது அன்பில்தான் நிறைந்திருக்கிறது. கோடீசுவரன் வீட்டிலும் துக்கம் இல்லாமலில்லை. ஏழைவீட்டிலும் சாந்திஒளி வீசவே செய்கிறது' என்கிறார். எத்தனை நம்பிக்கை தருகிற சொற்கள் இவை. இப்படி அவர் எழுதிய 39 கடிதங்கள் சாகாவரம்பெற்ற தனிப்படைப்பாகத் திகழ்பவை. படிப்பவர் நெஞ்சில் நம்பிக்கை நாற்றுகளை நடுபவை.

1942 முதல் 1950 வரையிலான கவிஞரின் கவிதைகள் தியாகி, தமிழன், தமிழுலகம், சுதர்மம், பிரசண்ட விகடன், மதுரமித்ரன், சேரநாடு, நவஇந்தியா என்று பல இதழ்களில் ஒளிவீசின. கவிஞன், அறிஞன், தமிழன், பரிசு, புரவலன் என்று மரபில் வடித்த காவியங்கள் 1967-ல் இருந்து வெளிவந்தன. கீதையின் கருத்துக்களை உள்ளடக்கிய அமரகீதம் பாடல்கள் 1951-ல் நவஇந்தியா இதழில் அரங்கேறின. கர்நாடகத்தில் கவிஞர் இருந்தபொழுது "கஸ்தூரி' என்ற இதழில் வெளிவந்த உலகப்புகழ்பெற்ற மிர்தாத் என்னும் படைப்பின் சிறு பகுதியை மொழிபெயர்த்தார். திருக்குறளிலும், புறநானூற்றிலும், கலீல் ஜிப்ரானின் எழுத்துகளிலும் அவர் மனம்பறிகொடுத்து மகிழ்ந்தார். ஒவ்வொரு நொடியிலும் கவிதையை வடித்தெடுக்க வேண்டும் என்று துடித்த அவர் மனம் காலத்தை வீணாக்குவதை வெறுத்தொதுக்கியது. சமுதாய மேன்மைக்காக அவர் வடித்த கவிதைகளில் சத்தியம் முரசு கொட்டிக்கொண்டேயிருந்தது. பொய்மையற்ற செம்மாந்த ஒரு கவிஞனின் வாழ்க்கையோ காலம் கண்டுகொள்ளாத வாழ்க்கையாகப் போய்விட்டது.

சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராகக் கனல்கக்கும் கவிதைகளைத் தீட்டிக்கொண்டேயிருந்தார்.

தீட்டி வீசிடும் கத்திக் கெதிர்செலின்
தீங்கு நேருமென் றுள்ளம் தெளியினும்
நாட்டு நன்மையைக் கோரி யழைத்திடின்
நகைமு கத்துடன் தாங்கத் துணிகிறேன்
என்று முழக்கமிட்டார். அழகும்
ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய
மனிதவாழ்வோ குப்பைக்கூடை
யாகக் கிடக்கிறது. தாங்குமா கவிஞரின் உள்ளம்?
கூட்டி யெறியடா கூட்டியெறி-கூடும்
குப்பைகூ ளங்களைக் கூட்டியெறி
நாட்டு நலந்தனில் நாட்டமில் லாச்சுய
நாயகக் குப்பையைக் கூட்டியெறி
வீட்டில் வெறுமை விதிப்பய னேயெனும்
வேதியக் குப்பையைக் கூட்டியெறி
கூட்டி யெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே டாய்விடும் கூட்டியெறி
என்கிற கவிஞர்,
காட்டும் நியதி கடைப்பிடிக் காமலே
கல்லும் கழிவும் கலந்துவிட்டுக்
கூட்டி விலைகளைக் கூறியே விற்கும்
கொடியவர் குப்பையைக் கூட்டியெறி
என்றும்,
தோட்டம் தொடியில் தொழும்பர்க ளாகித்
தொழில்புரி வோர்களைத் தொட்டு
விடின்
தீட்டெனச் செப்பிதீண் டாமை
திணிக்கிற
தேறலர் குப்பையைக் கூட்டியெறி
என்றும் சொல்லிவிட்டு,
வாட்டும் பசிக்கொரு காரண மாகவே
வந்த தனைத்தையும் கூட்டியெறி
என்று குமுறுகிறார்.
தனியொரு மனிதருக் குணவிலை எனில் ஜகத்தினை

அழித்திடுவோம் என்ற பாரதியின் அதே ஆவேசம் கவிஞரிடத்திலும் இருக்கிறது. போலி வாழ்க்கை வாழ்ந்து வயிறு வளர்க்கும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? நெறிப்பட்ட வாழ்க்கையில் நிற்காமல் தறிகெட்டு வாழும் வாழ்க்கை எதற்கு? இதோ கவிஞர்,
புனிதத் தன்மை யிழந்த பின்னுமிப்
பூமி யின்மீதில்-போலி
மனித னென்றுயிர் வாழு வதைவிட
மரண மினியது காண்.
எச்ச ரிக்கையி தாகக் கொண்டினி
இருக்கும் நாள்வரையும்-உலகில்
அச்ச மற்றிரு உன்னை யாரும்
அசைக்க இயலாதே
என்கிறார். இந்தக் கொள்கையை மனதில் இருத்திக்கொண்டு
தலைநி மிர்ந்து நிற்பேன்-மொழியால்
தமிழ னென்று ரைப்பேன்
என்ற பெருமிதத்தோடு
ஒளிமி குந்த கதிரோன்-உதித்தே
உலகை யோம்பு மாறு
களிமி குந்த வாழ்வை-உலகம்
காணச் செய்கு வேனே!

என்கிறார். வீட்டுக் கவலைகளை விட்டுவிட்டு நாட்டுக் கவலைகளைப் பற்றி நாளும் வதைபட்டவர் கவிஞர் என்பதைஅரைக்கால்பொய் கால்பொய் அரைப்பொய் அனைத்துமேநிறைக்காதீர்! நேமிநீர் என்னக்-குரைக்கும்

முழுப்பொய்யில் வீழ்ந்துகண் மூடியநம் நாடுவிழிப்பெய்தல் என்று விடிந்து?

என்று தவிக்கிறார். இதன் காரண காரியங்களை அறியாதவரல்ல கவிஞர். அதனால்,

வெந்தபுண் மீதினில் வேலெறி
வாரெவர் தோழீ-அது
வேதங்க ளோதிய விற்பனர்
வேலைதான் தோழா!
என்று உரக்கச் சொல்கிறார்.
அதோடு நிற்கிறாரா இல்லையே.
உழைப்ப வர்க்கு மட்டு முலகம்
உரிமை யுள்ள தென்றுதான்
எழுப்பு கின்ற வோசை எங்கும்
இடிமு ழங்கு தின்றுதான்!
என்று முழங்கியபடியே
காடு கரைகளில் வாடும் பயிர்களைக்
கண்ட மாத்திரம் அண்டங் கலங்கவே
கூடி வந்திடி மின்மழை யாகியே
குளிரப் பெய்யும் முகில்குணம் கொள்கிறேன்
என்கிறார்.
மாபெரு மிந்த வுலகம் முழுவதும்
மக்க ளுடைமையடா-அடா
மக்க ளுடைமையடா-கொடும்
பாபிக ளான வொருசில ரேயிதைப்
பங்கிட்டுக் கொண்டாரடா-அடா
பங்கிட்டுக் கொண்டாரடா..

என்று கொதிக்கிறார்.

வந்து போகிற ஒவ்வொரு நாளும் அதன்போக்கில் போய்விடுகிறது. காலத்தை வீணாக்காமல் படிப்பதும் படைப்பதுமாக வாழ்ந்த கவிஞர்,

இரவு பகலெனவே-மாறி
இன்றுநேற் றாகியேநாள்
வருவது போவதுமாய்-எனது
வாழ்வும் கழிகிறதே!
என்று தவித்தபடி
மாலை யாகிய காலமே-இன்று
மகிழ்ந்து நீ சென்று
வேலை செய்திடக் காலை
யாய்-நாளை
விடிய மறவாதே!

என்று வேண்டுகிறார். ஏனெனில் உழைப்பதே மனிதனின் வாழ்நாள் கடமை என்பதில் உறுதியாய் இருந்தவர் கவிஞர். தன் மகனுக்கு 60-களில் எழுதிய கடிதத்தில் காலம் நிற்பதில்லை.

இளமை நிற்பதில்லை. இன்ப துன்பங்களும் நிலைபேறுடையனவல்ல. என் அன்புக் குழந்தையே! நம்முடைய சாதனைதான் உலகில் நிலைத்திருப்பது. இந்தச் சாதனைக்காகவே நாம் அனைவரும் சதா இயங்குவோமாக! என்று குறிப்பிடுகிறார்.

மூன்றாவது வரை மட்டுமே பள்ளிக் கல்வி கற்ற கவிஞருக்குள் முத்தமிழும் கூத்தாடின. தன் வாழ்க்கை வரலாற்றையே வடித்து வைப்பதுபோல் அவர் எழுதிய வலைக்குள் கலை நம்மை வலைவீசிப் பிடிக்கிறது.

மேலும் மேலும் பயிலத் தொடங்கினேன்
ஆலை வாயில் கரும்பென நூல்களை
ஆய்ந்து சாறு பிழிந்திடும் வேளையில்
வேலை யற்றவ ரேனுமங் குற்றிடின்
வெறுப்பு, வேதனை,வெஞ்சினம்  
                         மிஞ்சுமே

என்று தன்நிலையை விளக்குகிற கவிஞர் உறவுகள் எல்லாம் ஒதுங்கிப்போய்விடத் தன் பிறந்த ஊரான வெள்ளியங்காட்டைவிட்டுக் கோவைக்குக் குடிபெயர்கிறார்.

படும் துயரங்கள் ஏராளம். பதைப
தைக்கிறது உள்ளம். அதை,
கொலைக்குக் கூடத்தம் கூடப் பிறந்தவர்
கூட மாட உதவிடும் உலகினில்
கலைக்குக் கைதர முற்றும் மறுத்துநான்
கலக்க மின்றி முயன்றுமுன் னேறியும்
மலைக்குள் சிங்கம் புலிகட்குத் தப்பியே
மகிழ்ச்சி கூர்ந்திடும் வேளை மறதியால்
வலைக்குள் பட்ட கலையென வேமண
வாழ்க்கை யால்தடு மாறி வருந்தினேன்,
என்று பதிவுசெய்கிறார். என்றாலும் அவருடைய பாட்டி சொன்ன பழமொழி அவருக்கு உரத்தை ஏற்றிக்கொண்டேயிருக்கிறது. அதாவதுஓட்டை வீட்டில் ஒருசுவ ரோரமாய்ஒஞ்ச ரித்திரு கண்களும் மூடியேமூட்டுந் துன்பப் பிசாசுகள் முன்வரின்முறுவல் பூத்து விரட்டுக நீயெனப்பாட்டி சொன்ன பழமொழி ஒன்றிலேபடிந்து நெஞ்சம் தடிந்து கிடக்கையில்வீட்டு வாசலில், கிண்கி ணெனும்ஒலிவிரைந்தெ ழுந்து விடும்படி செய்தது.

என்கிறார். பாட்டி ஊட்டிவிட்ட அந்த உரம் அவரை ஓயாமல் இயங்கச் செய்தது. அந்த இயக்கம்தான் அவரை தலையாய இனியதமிழ் கலைபேணி வளர்க்காமல் தன்னலங் கருது வோனாய் எனதுவாழ் நாளிலொரு நாழிகையும் வீணாக என்றுங் கழிக்க மாட்டேன், என்று பாடச்செய்தது. இயற்கையையும் மானுடத்தையும் அளவு கடந்து நேசித்தவர் கவிஞர். பெருக்கெடுத்தோடிய நொய்யலில் குளித்துமகிழ்ந்து பெருங்காவியங்கள் தீட்ட வேண்டும் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவர். நீர் நிறைந்த குளங்களைக் காண்கையில் மீனாக மாறிக் களித்த கவிஞர் ஒருகட்டத்தில்,

சோம்பல் மிகுந்தவர் தேம்பித் திரியச்
சுகங்கள் சுருங்குதல்போல்-ஆற்றில்
தீம்புனல் வற்றித் தெருவெனக் காணத்
திடுக்கிடு தென்னிதயம்!

என்று திகைத்துநிற்கிறார். இன்றைக்கு இருந்தால் கவிஞரின் இதயம் பொங்கிப் பொசிந்துபோயிருக்கும். உண்மை ஓம்புக. ஒப்புர வொழுகுக என்பதுதான் கவிஞரின் எண்ணமாயிருந்தது. அதனால்தான்பஞ்சை யாயினும் பக்தி பசனைகள்பண்ண வேண்டுமாம் பாரத நாட்டிலே என்று எள்ளி நகையாட முடிந்தது.

தந்தை பெரியாரைப்போல் மூடநம்பிக்கைகளைச் சாடிக் கொண்டேயிருந்தவர். அவர் உதிர்த்த பொன்மொழிகள் ஏராளம். அவையெல்லாம் அவர்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாகவதத்தைப் பாடமாக வைத்தால் பாவையரின் ஆடைகள் பத்திரமாக இராது. தாடகையும் ஒரு பெண்தான். அதோடு ஒரு தாயும்கூட என்பது தசரத இராசகுமாரனுக்கு ஏன் புரியவில்லை? காசின் மேல் கண்ணும் ஈசன்மேல் சொல்லும் வைத்துக் கொண்டுள்ளவன் மனதில் மாசு படிந்திருக்கும். திருக்குறளையும்
புறநானூற்றையும் கற்றுத் தெளியாத ஒருவன் தன்னைத் தமிழன் என்று சொல்ல வெட்கப் பட வேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதது மெய். கைநீட்டிச் சுட்டிக்காட்டப்படும் தெய்வங்களும் உதவாததும் மெய். நமது நாட்டு மக்கள் மதுபானத்தைப் பருகி மகிழ்ந்த அளவு ஞானத்தைப் பருகி மகிழவில்லை. புறநானூறு புறக்கணிக்கப்பட்ட காலம்தான், தமிழர்தம் தாழ்வுக்கு வித்திட்ட காலம். எல்லாக் கொள்ளைகளிலும் மிகப்பெரிய கொள்ளை காணிக்கை என சொல்லிக்கொண்டு தெய்வங்களின் பெயரால் மக்களிடமிருந்து பணம் பறிப்பதுதான். கூடாத செயல்களைச் செய்து கோடீஸ்வரன் ஆன ஒருவனை நாடாளத் தேர்ந்தெடுத்தால் நல்ல செயல் எனப்படுமா? மந்திரம் போட்டுப் பசுமாட்டின் நோய் குணப்படுத்த முடியுமென்றால் அதன் பசியையும் மந்திரத்தால் ஏன் குணப்படுத்த முடியாது? இப்படிச் சரவெடியாகக் கவிஞர் கொளுத்திப்போட்ட சிந்தனைகள் ஏராளம்.

கவிஞரின் படைப்புகள்
அனைத்தும் 2010-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அரும்பாடுபட்டு அவர் எழுதியவற்றையெல்லாம் அவருடைய மகள் நளினிஅம்மையார் இரண்டு பெரும் தொகுப்புகளாகக் கொண்டுவந்திருக்கிறார். எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை கல்லூரிகள் அவற்றை வாங்கி மாணவர்களின் கண்களுக்குக் காட்டியிருக்கின்றன? எத்தனை பேரை இந்தக் கவிதைகளில் ஆய்வுசெய்ய ஆற்றுப்படுத்தியிருக்கிறார்கள்? இன்றைய படைப்பாளிகள், கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் எத்தனைபேர் இவர் படைப்புகளைப் படித்திருக்கிறார்கள்? செம்மாந்த இலக்குகளோடு ஓயாமல் படிப்பதும் படைப்பதுமாக வாழ்ந்து  கவிஞரைக் கண்டுகொள்ளாமல் கள்ள மவுனத்தோடு கடந்து போய்க்கொண்டிருந்தால்அன்பில் லாத பேச்சு-வாழ்வேஅவல மாகிப் போச்சுஎன்பு தோலு மாச்சு-உடலில்இருப்ப தோய்ந்த மூச்சுஎன்ற கவிஞரின் வரிகளைப் பாடிக்கொண்டே ஒவ்வொரு படைப்பாளனும் தடுமாறிச் செல்லும் காலம் வருவதைத் தடுக்கமுடியுமா? முடிந்தவர்கள் ஒரு நன்றிச் சொல்லையாவது அந்த அம்மையாருக்கு 94875 15609 என்ற எண்ணில் தெரிவியுங்கள். உலகச் சிந்தனைகளோடு எழுதிய ஒரு கிராமத்துக் கவிஞராக மின்னிக்கொண்டேயிருக்கிறார் வெள்ளியங்காட்டான். அந்த ஒளி இனியாவது திசைகளெங்கும் தெரியட்டும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : பென் செருபாபேல் Date & Time : 4/21/2017 9:57:23 AM
-----------------------------------------------------------------------------------------------------
அருமையான கட்டுரை. காலம் எனும் ஆழமறியாப் பெருங் கடலின் கருங்குகைகள் மறைத்து வைத்திருக்கும் இது போன்ற தூய ஒளி வீசும் முத்துக்கள் எத்தனையோ? நல்ல வேளை கவிஞர் ஒரு நன்முத்தை மகளாகப் பெற்றெடுத்தார். அம்மையாரின் நன் முயற்சி வெற்றி பெறுக! தமிழ்த்தாத்தா எடுத்த அரும்பெரும் முயற்சிகளால்தானே இன்று தமிழ் இலக்கியம் ஒளி வீசுகிறது. அம்மையாரின் அரிய முயற்சியால் அவரது தந்தை கவிஞர் வெள்ளியங்காட்டானின் ஆழமான கவிதைகள் தமிழுக்குப் புதிய முகவரியை எழுதட்டும். இது மட்டுமல்லாமல், தாமஸ் கிரே பாடியது போல, நூலகம் என்னும் கல்லறைகளில் எத்தனையோ தமிழ் முத்துக்கள் முடங்கிக் கிடக்கின்றன. சிறந்த நூல்களை வெளியிடுவதற்கும், எழுத்தாளர்களுக்கு உரிய எழுத்தூதியத்தை உடனடியாக அளிப்பதற்கும், எழுதப்பட்ட நூல்களைப் படிக்கவும் ஆராயவும் வாசகர்களை உருவாக்குவதற்கும் ஒரு பெரும் கூட்டு இயக்கம் தேவை. இது முடியாத காரியம் அல்ல. சாதி, இனம், மதம்,கொள்கை, பிடிவாதம், கட்சி, அகங்காரம் ,பதவிவெறி, சுயநலம் அற்ற தமிழை மட்டும் நேசிக்கும் ஒரு நூறு பேர் ஒன்றிணைந்தால் போதும். கோபால் அண்ணன் கொஞ்சம் யோசியுங்களேன்!
-----------------------------------------------------------------------------------------------------