Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17


மேலப்பாதி ஈசன்!
கோவை ஆறுமுகம்


"கொள்ளியை இழுத்தால் கொதிப்பது அடங்கும்' என்பது பழமொழி. கொதிப்பதற்குக் காரணமாய் இருக்கின்ற கொள்ளியை அடுப்பிலிருந்து வெளியே இழுத்துவிட்டால் கொதிக்கின்ற நீரானது அடங்கும் என்று பொருள். அதுபோல குடும்ப நபர்களிடமோ, நட்பு வட்டாரத்திலோ, உறவுகளிடமோ சில சூழ்நிலைகளில், தவறான சில காரியங்களை வீம்புக்காகவோ, விதண்டாவாதத்திற்காகவோ, அகம்பாவத்தின் காரணமாகவோ தெரிந்தே செய்துவிட்டு, பிறகு அவற்றை அவ்வப்போது நினைத்து, "நாம் செய்தது எவ்வளவு பெரிய தீமை' என்று மனதிற்குள் கொதித்துக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எதை வெளியே இழுப்பது? எதை உள்ளே வரவழைப்பது என்பதை ஆராய்ந்தால் சிறப்புடன் வாழலாம். நம்மால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, "அவசரத்தி லும் ஆத்திரத்திலும் அறிவிழந்து நடந்து விட்டேன்; இப்போதுதான் நல்ல புத்தி வந்தது' என்று மனதார மன்னிப்பு கேட்டால் போதும். ஆனால் அதற்கு சுயகௌரவம் இடம் கொடுக்காதென்றால் மன அழுத்தம் ஏற்படும். மனஅழுத்தங்களோடு வாழ்வது நம்மை நாமே மரணப் பாதைக்கு அழைத் துச் செல்வதற்கு சமம். தவறென்பது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒரு வினாடியில் நம்மால் நிகழ்த்தப்பட்டுவிடுகிறது. பிறகு தான் நாமே அச்செயலின் விபரீதத்தை உணர்கிறோம். அத்தகைய நிகழ்வுகள் விஸ்வாமித்திரர் வாழ்விலும் வந்தது.

ஜெகம் புகழம் புண்ணிய காவியமான இராமாயணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி...

விஸ்வாமித்திரர் தசரதரிடம் சென்று, ""உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெறும் பொருட்டு வனத்தில் நான் ஒரு தவவேள்வி நிகழ்த்தினேன். ஆனால் தாடகை என்னும் அரக்கி, அவளின் புதல்வர்கள் மாரீசன், சுபாகு ஆகிய மூவரும் யாகம் நடந்து கொண்டிருக்கும்போது வேள்வித்தீயில் மாமிசத்தையும், மதுக்குடுவைகளையும் போட்டு மேற்கொண்டு வேள்வியைத் தொடரவிடாமல் செய்துவிடுகின்றனர். எனவே, அது வெற்றிகரமாக நிறைவேற உன் புதல்வன் இராமபிரானை என்னுடன் காட்டுக்கு அனுப்பவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி அவரோடு ராம- லட்சுமணர் காட்டுக்குச் சென்று யாகத்தைக் காத்தனர். யாகம் சிறப்புற நிறைவேறியது.

விஸ்வாமித்திரர் தசரத புதல்வர்களை அழைத்துவந்த நோக்கம் நிறைவேறி விட்டது. அப்புறமென்ன? இருவரையும் அயோத்தி அரண்மனையில் ஒப்படைக்க வேண்டியதுதானே உரிய செயல்? ஆனால் அப்படிச் செய்யாமல் அவர்களை மிதி லைக்கு அழைத்துச் செல்கிறார் மாமுனிவர். இங்குதான் ஒரு புராண சூட்சுமம் அடங்கி யுள்ளது.

விஸ்வாமித்திரர் மனதிற்குள் ஒரு நெருடல் இருந்தது. அந்த மன அழுத்தம் அவரை உறங்கவிடாமல் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு பாவமும் அறியாத அரிச்சந்திரன்- சந்திரமதி தம்பதி யரைப் பிரித்த செயல் அவர் உள் மனதை வாட்டிக்கொண்டே இருந்தது. அரிச் சந்திரனை எப்படியாவது பொய் பேச வைக்க வேண்டும் என்பதற்காக விபரீதத்தைச் செய்துவிட்டோமே- அதற்குப் பரிகாரம் தேடவேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தார் விஸ்வாமித்திரர்.

சூரிய குலத்தின் வேந்தன் அரிச்சந்திரன். எனவே, எந்த சூரியகுலத் தம்பதியைப் பிரித்தோமோ அதே சூரிய குலத்தில் தம்பதிகளை ஏற்படுத்துவதே தக்க பரிகாரம்! தன் மனப்புண்ணுக்கு அதுவே மருந்து என்றெண்ணி ராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்னன் ஆகிய நால்வரின் திருமணத்தையும் நடத்திவைத்தார் விஸ்வாமித் திரர். அவர் மிதிலைக்குச் சென்றது மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவே!

அனைவரது மனத்துக்குள்ளிருக்கும் ஆண்டவனின் பிரதிநிதியான மனசாட்சி அவர்களைக் கண்டு கொள்கிறது; கண்டிக்கிறது. வேண்டாதவற்றை வெளியே அனுப்பு என்று எச்சரித்தும் நச்சரித்தும் நம்மைத் தூங்கவிடாமல் துன்புறச் செய்கிறது. இப்படி ஆக்கிரமித்திருக்கும் அந்நிய சக்திகளை (ஆத்திரம், பொறாமை, முன்கோபம், மனஅழுத்தம்) வெளியே அனுப்பி, ஆட்கொள்ளும் புண்ணிய சக்தி களை (அன்பு, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, நட்புணர்வு) உள்ளே வரவழைத்து வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துகின்ற மேன்மையான திருத்தலம்தான் மேலப்பாதி வெண்ணெய் ஈஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: வெண்ணெய் ஈஸ்வரர், நவநீத ஈஸ்வரர்.

இறைவி: திரிபுரசுந்தரி.

விநாயகர்: சித்தி விநாயகர்.

ஊர்: மேலப்பாதி, நாகை மாவட்டம்.

தலவிருட்சம்: மருதமரம்.

தீர்த்தம்: கூபநாராயண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி தீர்த்தம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட காவேரி வடகரைத் தலங்களில் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகின்ற தலம். பிரம்மஹத்தி தோஷம், மாதுர்ஹத்தி தோஷம், முன்னோர் சாபத்திற்கு தீர்வு கிடைப்பதோடு மகரிஷிகள் பூஜித்துப் பேறு பெற்றதொரு திருத்தலம். இத்தலம் பிரம்மாண்ட புராணத்தில் க்ஷேத்திரகாண்டத் தில் ருத்ர சம்ஹிதையில், நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமுனிவர் கூறுவதாக 13 அத்தியாயங்களில் அநேக மகத்துவங்களுடன் விளக்கமாய் கூறப்பட்டுள்ளது.

இத்தலத்து இறைவன் நவநீத ஈஸ்வரர், நாகார்ஜுன ஈஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், நீலகண்ட பரமேஸ்வரர் என ஐந்து பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அனைவரின் மனதிலும் நடைமுறையிலும் வெண்ணெய் ஈஸ்வரர் என்றே நிலை நிற்கிறது.

முன்னொரு காலத்தில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைய, ஆலகால விஷம் வெளிப்பட்டது. அப்போது பிரம்மதேவன் பாற்கடலில் திரண்டிருந்த வெண்ணெயை எடுத்து ஒரு மகாலிங்கம் செய்து பூஜை செய்தார். அந்த லிங்கத்திலிருந்து பரமேஸ்வரன் தோன்றி விஷத்தை உண்டார். தேவர்களையும் அசுரர்களையும் காத்து மீண்டும் அமிர்தம் எடுக்க அருள்புரிந்தார்.

அந்த வெண்ணெய் லிங்கத்தை உத்தாலக ரிஷியின் புத்திரர் ஸ்வேத கேது முனிவர் பிதுர் சாபம் நிவர்த்திக்கும் பொருட்டு இத்தலத்தில் வைத்துப் பூஜை செய்தார். பிறகு திருவெண்காடு எடுத்துச்செல்ல முயன்றபோது மகாலிங்கம் பூமியில் வேரூன்றிவிட்டது.

ஸ்வேத கேது மனம் வருந்த, சிவன், "இத்தலத்தில் என்னைப் பூஜித்தால் பிதுர் சாபம் நீங்கி பிரம்மஞானம் அருள்வோம்' என அசரீரியாகக் கூற, அவர் அவ்வாறே செய்து சாபம் நீங்கி ஞானம் பெற்றார்.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட, அதன் காரணமாக கயிலாய மலையின் ஒரு சிகரமான காயத்ரி சிகரம் சிதறியதில், ஒரு பாகம் இத்தலத்தில் விழுந்தது. அந்த சிகரத்தின்மேல் வெண்ணெய் லிங்கம் இருக்கிறது.

ஒரு காலத்தில் கன்வ முனிவர் இந்த லிங்கத்தைப் பூஜித்து வந்தார். அப்போது ஒரு நாள் சுசர்மன் என்பவன் பசி மிகுதியால் பூஜைக்கு முன்பே அங்கிருந்த வெண்ணெயைத் தின்றான். உடனே கன்வ முனிவர் சுசர்மனை "பூனையாகக் கடவது' என சாபமிட்டார். அவன் பூனையாக மாறினான். ஒரு நாள் இரவு அப்பூனை சிவசந்நிதியில் மாட்டிக்கொண்டு பசியால் கதறியது. சிவபெருமான் வெண்ணெயாக மாறினார். பூனை அந்த வெண்ணெயை உண்டது. உடனே கன்வ மகரிஷி இட்ட பூனை உருவ சாபம் நீங்கிற்று. சுசர்மன் மோட்சம் பெற்றான். இப்போதும் இந்த லிங்கத்தில் பூனையின் பாதச்சுவடுகளும் உண்ட அடையாளங்களும் உள்ளன.

மருதமர வரலாறு

கயிலை மலையில் சிவசர்மா என்ற மகரிஷி இருந்தார். சுவேத கேது முனிவர் இத்தலத்தில் வெண்ணெய் லிங்கத்தை பூஜை செய்து வருவதை அறிந்த சிவசர்மா, எப்பொழுதும் குளிர்ச்சியையும் நிழலையும் தருகின்ற அர்ஜுன் என்ற மருதமரமாய் மாறி இங்கு நின்றார். அதுவே இங்கு தலமரம்.

இப்போது இம்மரத்தின் உள்கூடு இல்லை. வெளிப்பட்டை மட்டுமே உள்ளது. அதன்மூலம் கிளைகள், இலைகள் உள்ளன. இது ஒரு அதிசயமான- அற்புதமான காட்சியாகும்.

கூபநாராயண தீர்த்த வரலாறு

ஒருசமயம் அசுரர்கள் ஒன்றுசேர்ந்து சொர்க்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தேவேந்திரன் மகாவிஷ்ணுவிடம் முறையிட, மகாவிஷ்ணு அசுரர்களைத் துரத்தினார். அப்போது அவர்கள் பிருகு முனிவரின் மனைவி வயிற்றில் தஞ்சமடைந்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு பிருகுமுனிவரின் மனைவியைக் கொன்று, அசுரர்களையும் அழித்தார்.

இதனால் மகாவிஷ்ணுவுக்கு ஸ்திரீஹத்தி தோஷம் பிடித்தது. அவர் இத்தலத்துக்கு வந்து, இக்கோவிலுக்கு தென்மேற்கில் (வெளிப்பிராகாரத்தில்) ஒரு கிணறு வெட்டி, அதில் சொர்க்கத்திலிருந்த கங்கையை சேர்ப்பித்து தவமிருந்தார்.

சிவபெருமான் நவநீத ஈஸ்வரராய் எழுந்தருளி மகாவிஷ்ணுவின் ஸ்திரீஹத்தி தோஷத்தை நீக்கினார். அப்போது பத்து திசைகள் பிரசன்னமாயின. மகாவிஷ்ணுவை இந்திரனும் தேவர்களும் துதித்தனர்.

பிரம்மதீர்த்த வரலாறு

பிரம்மதேவனின் புத்திரன் இளஞ்சக்கரவர்த்தி வேட்டை யாடும் பொருட்டு ஆரண்யம் தோறும் சஞ்சரித்தான். இத்தலம் வந்தபோது அரசன் பெண்ணாக மாறினான்.

இதையறிந்து வசிஷ்டர் முதலிய முனிவர்களிடம் பிரம்மா முறையிட, அவர்கள் அஸ்வமேத யாகம் செய்தனர்.

பெண்ணாக இருந்த அரசன் கோவிலுக்குமுன் உள்ள தடாகத்தில் நீராடி வழிபட்டான். சிவபெருமான் தோன்றி அந்த அரசனின் பெண்ணுருவைப் போக்கினார். அதனால் அன்று முதல் இத்தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்பட்டது.

இக்குளத்தில் சிவபெருமான் பார்வதிக்காக கங்கையை வரச்செய்தார். பிரம்மாவின் மகள் களான யமுனையும் சரஸ்வதியும் சேர்ந்தனர். இத்தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்குவதோடு, அவர்கள் விரும்பிய வண்ணம் சுகபோகம் அனுபவிப்பர். ஆண்டு முழுவதும் நீர் இருக்கும் ஒரே தீர்த்தம் இதுமட்டுமே.

சிறப்பம்சங்கள்

✷ இவ்வாலயம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

✷ மனிதர் வாழ்வில் சகல நன்மைகளையும் கொடுத்து முடிவில் முக்தியளிக்கக் கூடிய உயர்ந்த தலம் நகார்ஜுனம் எனும் மேலப்பாதி.

✷ முன்பு நாரத முனிவரால் கூறப்பட்ட இத்தல வரலாறு, பிறகு வியாசரின் சீடர் ஜைமினியால் அவரது சீடர் தலவகரருக்குச் சொல்லப்பட்டு, அவர் மூலம் மற்றவர்களுக்கு சொல்லப்பட்டது.

✷ ஜமதக்னி முனிவரின் குமாரர் பரசுராமர் பிரம்ம தீர்த்தித்தில் நீராடி மாதுர்ஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார்.

அத்துடன் பரசுராமர் ஈசனிடம், "தேவரீர்! தங்களது மங்கள உருவத்தைப் பார்த்துக்கொண்டே நான் இவ்விடத்தில் தினந்தோறும் நீராட, கீழ்திசை நோக்கி பிரவேசிக்கும் காவேரியை மேல்திசை நோக்கி பிரவேசிக்கும்படி செய்வீர்' என்று வழிபட்டார். ஈசனும் அவ்வாறே அருளினார். அதை இப்போதும் காணலாம். மேற்கில் பிறந்த காவேரிப் பெண் கடல் அரசனிடம் கலக்கும் முன்பு, தனது தாய்வீடு நோக்கி சிறிது தூரம் செல்கிறாள் என்றும் சொல்வர். இதனால் இவ்வூர் "மேலப்பாதி' என்று பெயர் பெற்றது.

✷ தெற்கு நோக்கிய அம்பிகை திரிபுரசுந்தரியை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமியன்று வழிபட, வேண்டியது நிறைவேறும்.

✷ வெண்ணெய் ஈஸ்வரரை ஒருமுறை வில்வ தளங்களால் அர்ச்சிப்பவருக்கு மறுபிறவி இல்லை.

✷ "ஓம் நகார்ஜுனேசா, ஓம் முக்தீசா, ஓம் நவநீதேசா, ஓம் சித்தீசா, ஓம் நீலகண்டேசா' என்று சொல்லி இத்தலத்தை வழிபட்டவர்கள் எதற்கும்- யாருக்கும் பயமின்றி வாழ்வார்கள்.

✷ பிரம்ம தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நீராடி பூஜை செய்தால் குஷ்டரோகம் நீங்குவதோடு, கைலாச பதவி அடைவர்.

✷ கூபநாராயண தீர்த்தத்தை சித்ரா பௌர்ணமியன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்பவர் நுறு கங்கா ஸ்நானப் பலன் பெறுவர்.

✷ கூபநாராயண தீர்த்தம் பருகினால், மாணவர்களுக்கு கல்வியில்  மேன்மை, ஞாபகசக்தி வளரும்.

✷ சிவபெருமான் வசிப்பதால் "கயிலாயம்' எனவும்; ஆதியில் தோன்றியதால் "ஆதிஜனனம்' எனவும்; விஷ்ணு பூஜை செய்ததால் "விஷ்ணுபுரம்' எனவும்; பிரம்மா வழிபட்டதால் "பிரம்மபுரம்' எனவும்; பரசுராமர் பிரம்மஹத்தி நீங்கியதால் "பாபஹரம்' எனவும்; சிவசர்மா மருதமரமாக உள்ளதால் "நகார்ஜுனம்' எனவும்; புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதால் "தட்சிணகாசி' எனவும்; பூனை மோட்சம் பெற்றதால் "முக்தி க்ஷேத்திரம்' எனவும் பல பெயர்களில் பெருமையடைகிறது மேலப்பாதி சிவாலயம்.

காவேரி வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயத்தில் அனைத் துப் பரிவார தெய்வங்களும் சிறப்புடன் எழுந்தருளியுள்ளனர்.

பிதுர் தோஷங்களகற்றி பிரம்மஞானம்

அருள்கின்ற அற்புதத் தலத்தில், பக்தி சிரத்தையுடன் வணங்குபவர்க்கு பதினாறு வகைப்பேறுகளும் தருவதோடு, தன்னைப்போல சாரூப பதவியை அடைய வகைசெய்யும் வெண்ணெய் ஈஸ்வரரை வழிபடுவோம். மேன்மைமிகு பலன்களைப் பெறுவோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு:
கே. நவநீத ஈஸ்வர சிவாச்சாரியார்,
வெண்ணெய் ஈஸ்வரர் திருக்கோவில்,
மேலப்பாதி அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்-609 304.

அலைபேசி: 94441 70161.

அமைவிடம்: மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில், நடுக்கரை பஞ்சாயத்தில், பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேலப்பாதி. பேருந்து, சிற்றுந்து வசதியுண்டு.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :