Add1
logo
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம் || நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் || தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல் || நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது || ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது || கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017ன்றைய நமது தமிழ்நாடு பல்வேறு வகையான ஊடகங்களால் நிரம்பிவழிகிறது.

படிப்பதற்கான ஊடகங்களையும் காண்பதற்கும் கேட்பதற்குமான ஊடகங்களையும், கேட்பதற்கு மட்டுமேயான ஊடகங்களையும் ஆயிரக்கணக்கில் பெற்றிருக்கும் நமது தமிழ்ச் சமூகம், அவற்றின் வாயிலாக எந்த அளவுக்கு மேன்மைகளைப் பெற்றிருக்கிறது என்கிற கேள்விக்குறி நம்முன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அரசாங்கம் நடத்துகிற வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு எதையெதையெல்லாம் சொல்லக்கூடாது  என்கிற எச்சரிக்கை உணர்விலேயே எந்த நேரமும் செயல்படுவதால், எதையெதைச் சொல்லவேண்டும் என்பதும் அவற்றுக்குத் தெரியாமல் போய்விட்டது. எல்லாவற்றையும் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்களோ தங்களது பெருங்கடனாகவும், பிறவிக் கடனாகவும் திரைப்படங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அத்திப்பூத்தாற்போல, அவ்வப்போது அரங்கேற்றப்படுகிற சமூக அலசல்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும்கூட, அவை போதுமானவையாகவோ உள்ளடக்க வீரியம் கொண்டவையாகவோ இருப்பதில்லை.

கூட்டம் கூட்டமாக மக்களை அமரவைத்துக் கொண்டு, நீட்டி முழக்கிப் பேசி மேம்போக்கான நியாயங்களை அள்ளி அள்ளி வீசுகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, அறிவுசார்ந்த சமூக அலசலாகச் சித்தரிக்கிற போக்கு தலைதூக்கியிருக்கிறது. எதையெதை நீட்டி முழக்கிப்பேசி நியாயம் சொல்கின்றன என்பதைவைத்து மட்டுமல்ல, எதை எதைப் பேசாமல்தவிர்த்துக் கள்ளமௌனம் சாதிக்கின்றன என்பதை வைத்தும் இன்றைய நமது தமிழகக் காட்சி ஊடகங்களைக் கணித்துக் கணக்கிட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்படம் எனும் ஊடகம் நமது தமிழக மக்களின் மீது ஒரு பெருமழையெனப் பொழிய ஆரம்பித்து, இன்னமும் அவ்வாறே பொழிந்து கொண்டிருக்கிறது. திரைப்படப் பெருமழையிலிருந்து விலகி தங்களை உலர்த்திக் கொள்வதற்கு நமது மக்களால் முடியவில்லை. பாமரத்தனங்களும், தாழ்வு மனப்பான்மைகளும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் பல்கிப் பெருகிய நிலையில், கோடிக்கணக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற, முறையான கல்வி அறிவு கிடைக்கப் பெறாத, நமது மக்கள் அதாவது படிக்கத் தெரியாத நமது மக்கள் தங்களது கண்களுக்கும் காதுகளுக்கும் ஒருசேரக் கிடைக்கும் விருந்தாகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார்கள். அதாவது, படிக்கத் தெரியாத நமது மக்களை பேசியவர்களும் பாடியவர்களும் நடித்தவர்களும் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். இன்னமும் அவ்வாறே வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகம் என்பது எத்தகையது என்பதை நமது மக்கள் கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் திரையுலகை நம்புகிற நமது மக்கள் எத்தகையவர்கள் என்பதைத் திரையுலகினர் மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டனர்.

எனவேதான் அரசியலில், ஆட்சியதிகாரங்களில், ஆடைகளில், ஆடல்பாடல்களில், பெயர்களில், என்று தமிழர் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் திரையுலகம் நீக்கமற நிறைந்து கலந்து பின்னிப் பிணைந்து கொண்டது.

இந்தப் போக்கினை நன்கு உணர்ந்துகொண்ட அனைத்துவகைத் தமிழ் ஊடகங்களும் திரையுலகைக் காட்டியே அதே மக்களைக் கைப்பற்றித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டன. ஆக, இன்றைய நிலையில் நமது பெரும்பாலான தமிழ் ஊடகங்கள், அறுபது விழுக்காடு திரையுலகச் சார்புச் செய்திகளையும், முப்பது விழுக்காடு அக்கப்போர் செய்திகளையும், பத்து விழுக்காடு கற்பனைச்  செய்திகளையும் வெளியிட்டுத் தங்களது ஊடகக் கடைமையினை நிறைவேற்றிகொண்டு வருகின்றன. திரைப்பட மோகம் என்பது நமது சராசரித் தமிழர்களுக்கு மட்டுமன்றி, நமது ஊடகங்களுக்கும் இருக்கின்றன. அதன் விளைவாகவும் அவை திரையுலகைச் சார்ந்து இயங்குகின்றன. சின்னத் திரைகளுக்கு பெரிய திரைகளின் மீது ஏற்பட்டுள்ள மோகம் மிகவும் விந்தையானது.திரையுலகிற்கு வாழ்த்து சொல்வதும், திரைப்பாடல்களுக்குப் பொழிப்புரை அளிப்பதும், திரையுலகை வழிமொழிவதும், திரையுலகிற்கு விளக்கம் சொல்வதும், திரையுலகிற்கு விருதுகளை அளிப்பதும்தான் நமது காட்சி ஊடக அறமா? இன்றைய தமிழ்நாட்டின் ஊடகங்களில் பெரும்பான்மையானவற்றை வாழவைத்துக் கொண்டிருக்கிற கொடையுலகமா தமிழ்த் திரையுலகம்? ஆக தமிழ்மக்களை மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களையும் வழிநடத்திச்செல்கிற விபரீத வலிமையைத் தமிழ்த் திரையுலகம் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் வளர்ந்து செழிக்கிற ஒற்றை ஊடகமாக, கடந்த ஐம்பது ஆண்டுகாலமாகக் கோலோச்சி வரும் தமிழ்த் திரையுலகம், தமிழ்ச் சமூகத்தின் மீதான தன் பிடியை சிறிதளவும் தளரவிடவில்லை. திரையுலகத் திரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறு வேறு வகையான தனித் தன்மைகளைக் கொண்டு, கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பல்கிப் பெருகிய அச்சிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் போன்ற ஊடகங்கள், திரைத்துறையின் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவித்து அறிவுசார்ந்த தளத்திற்கு அவர்களை உயர்த்த முயற்சி செய்திருக்கலாம். திரையுலகம் பேசத் துணியாத திரையுலகத்தால் பேசமுடியாத பல விஷயங்களை மேற்குறிப்பிட்ட ஊடகங்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மாறாக, மேற்குறிப்பிட்ட ஊடகங்களும் தம் பங்கிற்கு மக்களின் பாமரத்தன்மை மிகுந்த அறியாமைகளுக்குப் பாதுகாப்புச் சுவர்களாக மாறியிருக்கின்றன. வெள்ளித்திரை என்று அழைக்கப்படுகின்ற பெரியதிரையும், சின்னத்திரை என்றழைக்கப்படுகின்ற தொலைக்காட்சித் திரையும், அறியாமை மிகுந்த நம் மக்களுக்குச் செய்த, இன்னமும் செய்து வருகின்ற, பின்னிழுப்பு வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எப்பாடு பட்டேனும், எத்தகைய  இழிநிலையைப் பின்பற்றியேனும் கூட்டம் கூட்டமாக மக்களைப் பார்க்க வைத்துவிட வேண்டும் என்பதைத் தவிர இந்த இரண்டு திரைகளுக்கும் வேறு நோக்கம் ஏதுமில்லை. அந்த அடிப்படையில்தான் பெரிய திரைகளில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அந்தக் காட்சிகள் யாவும் சின்னத்திரைகளால் வழிமொழியப்படுகின்றன. பல்வேறு வகையில் பெரியதிரையை வழிமொழிந்தது போக, எஞ்சியிருக்கும் நேரங்களில் சின்னத்திரைகள் அரங்கேற்றுகிற அவலங்களில் பெரும்பான்மையானவை, வேதனைக்குரியவையாகும்.

இன்றைய தமிழ்நாட்டில் இயங்கிவரும் பெரும்பான்மையான செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் யாவும், அரசியல் கட்சிகளின் சார்புடையவைகளே. எனவே இவற்றில் இருந்து பெறப்படும் செய்திகளில், அவரவர் நிலைசார்ந்து மறைப்புகளும் மௌனங்களுமே மேலோங்கியிருக்கின்றன. குறைகூறல், தப்பித்தல், விடையளித்தல் எனும் மூன்று கோணங்களில்தான் இவற்றின் பெரும்பான்மைச் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. அதுபோக, முதன்மையான நிகழ்ச்சிகளாக இடம்பெறுபவை மெகா தொடர்கள் என்றழைக்கப்படுகிற நெடுந்தொடர்கள், வாதவிவாதங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்றவையாகும். இவற்றில், மெகா தொடர்களும்,  குழந்தைகளையும் இளம் பெண்களையும், திரைப்பாடல்களுக்கு நடனமாடச் செய்யும் நடன நிகழ்ச்சிகளும் உடனடியாகத் தடை செய்வதற்கு உரிய அடிப்படைகளைக் கொண்டவை.

எதற்கெடுத்தாலும், எந்த நிலையிலும், எப்போதும் அழுது வடிகின்ற கதாபாத்திரங்களைக் கொண்டு கட்டமைக்கப்படுகிற மெகா தொடர்கள், லட்சக்கணக்கான குடும்பப் பெண்களை, ஒவ்வொரு நாளும் சகதியில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. வணிக நோக்கம் கொண்ட ஒரு சிறு குழுவினர், சிந்தித்துத் திட்டமிட்டு அரங்கேற்றும் சகிக்க முடியாத கற்பனைக் கதைகளுக்கு நம்முடைய லட்சக்கணக்கான பெண்கள் உளவியல்ரீதியில் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். கற்பனையான, செயற்கைத்தனங்கள் மிகுந்த, சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு அலுப்பையும் வெறுப்பையும் உண்டாக்குகின்ற, மனம்போன போக்கில் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகின்ற, பெண் இனத்திற்குக் கடுகளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தாத, பொறுமை, பேராசை எனும் இரண்டே நிலைகளில் பெண்களை நிறுவுகிற, இவற்றுக்கெல்லாம் மேலாக பெண்களே பெண்களுக்கு எதிரி என்கிற புழுத்துப்போன பழைய ஆணாதிக்கக் கருத்தை வெட்கக்கேடான முறையில் ஒவ்வொரு நாளும் உயர்த்திப் பிடிக்கிற மெகா தொடர்கள், தடை செய்யப்படவேண்டிய அடிப்படைகளைக் கொண்டவை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இப்படிக் கோருவதற்கு சமூக ஆர்வலர்களுக்கும், காட்சி ஊடக நுகர்வில் மேன்மைகளை விரும்புவோருக்கும் முழு உரிமை இருக்கிறது. ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே குறிப்பிட நினைக்கிறேன்.

அங்கேரி நாட்டில், 1933-ஆம் ஆண்டு  Gloomy Sunday,  அதாவது இருண்ட ஞாயிறு எனும் பெயரில் லெஸ்ஸோ ஜவோர் (Laszlo Javor)என்பவர். கேட்பவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிற ஒரு தற்கொலைப் பாடலை எழுதினார். அந்தப் பாடலுக்கு ரெஸோ செரஸ் -  (Rezsoseress) என்பவர் மிகவும் கொடூரமாகவும் கேட்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்படியும் இசை அமைத்தார். இதில் என்ன வேதனை என்றால், தான் இசையமைத்த பாடலை தானே கேட்ட ரெஸோசெரஸ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அவரோடு சேர்ந்து அந்த பாடலைக்கேட்ட அவரது மனைவியும் தானே தன்உணவில் விஷத்தைக் கலந்து அதை அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அங்கேரியில் அந்தப் பாடல் தடைசெய்யப்பட்ட நிலையில் அங்கேரியன் தற்கொலைப்பாடல்  (Hungarian Suicide Song) என்ற பெயரில் அமெரிக்காவில் ஒலிபரப்பு செய்யப்பட்ட அந்த பாடல், அங்கேயும் சிலரைத் தற்கொலை செய்துகொள்ள வைத்தது. எனவே Gloomy Sunday என்கிற அந்தப் பாடல் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது.

ஆர்வக் கோளாறு காரணமாக கணிப்பொறி ஒலிபெருக்கியில் அந்த பாடலைக் கேட்ட நாம், இசைக்கு இருக்கும் இன்னொரு முகத்தை உணர்ந்து அதிர்ந்துபோனோம். எதற்காக இதைக்குறிப்பிடுகிறோம் என்றால் -   Gloomy Sunday தடை செய்யப்பட்டதற்கான அதே காரணங்கள், இன்று ஒவ்வொரு நாளும் நமது பெண்களை தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்ற மெகா தொடர்களுக்கும் பொருந்துகின்றன என்பதற்காகத்தான். நல்ல நல்ல திரைப்படங்களைத் திரையிட்டு, மக்களின் ரசனையை மேம்பாடடையச் செய்து வருகின்ற திரைப்பட இயக்கங்களைப் போல, தொலைக்காட்சிகளின் மெகாதொடர்களுக்கும், பண்பாட்டுச் சீரழிவைப் பரப்பி வருகின்ற குத்துப்பாட்டு நடனங்களுக்கும், எதிராக நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகின்ற இயக்கங்களும் தோற்றுவிக்கப்படவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது, ஊடகச் சுதந்திரம் என்பது எவராலும் கேள்வி கேட்கமுடியாத, வானளாவிய அதிகாரம் படைத்த ஒன்றல்ல என்பதை, ஊடக நுகர்வாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

தற்போதைய தமிழகத்தின் திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய இரண்டு மாபெரும் காட்சி ஊடகங்கள், 90 விழுக்காட்டளவிற்கு மேம்போக்கிகளை உருவாக்கி வளர்க்கும் பணியினைச் செய்து வருகின்றன.

இந்தியாவில் வறட்சி, வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து
கொள்கின்றனர். இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல், வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. கிரிக்கெட், சினிமா, பேஷன் ஷோ போன்ற பொழுதுபோக்குச் செய்திகள்தான் 90% சதவீதம் ஒளிபரப்பப்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை, ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள், பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை போன்ற செய்திகள் வெறும் 10% சதவீதம்தான் ஊடகங்களில் இடம்பிடிக்கின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலைபெற வேண்டும் என்பதற்காக ஜோதிடம், அரைகுறை ஆடையுடன் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேய்க் கதைகள் மற்றும் தொடர் கதைகள் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகள் சுய கட்டுப்பாடுடன் இருப்பதாகக் கூறிக்கொள்கின்றன. சுய கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடே அல்ல. எந்தவொரு சுதந்திரமும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான். எனவே காட்சி ஊடகங்களையும் பத்திரிகைக் கவுன்சிலின் கீழ்கொண்டு வரவேண்டும். சமூகக் கொடுமைகளான ஜாதிப் பிரச்சனைகள், மூடநம்பிக்கைகள், ஏழ்மை போன்றவற்றிற்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும். மக்களை அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். மக்களின் மூடநம்பிக்கைகளைக் காட்டி அவர்களை ஏமாற்றக்கூடாது என்றெல்லாம், ஆதங்கம் மிகுந்த கருத்துகளைத் தெரிவித்திருப்பவர், இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவராக இருந்த நீதிபதி மார்கண்டேய கட்ஜ். நமது ஊடகங்களைப் பற்றிய இதே நிலை ஆதங்கம் நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான சமூக ஆர்வலர்களுக்கு மேலோங்கியிருக்கிறது. ரஷ்யாவில் பெஸ்லான் பள்ளியில் குண்டு வெடித்து பள்ளிக் குழந்தைகள் பலர் இறந்துவிட்டனர். குண்டுவெடிப்பில் குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சிகளை இஸ்வெஸ்தியா (ஒக்ஷ்ஸ்ங்ள்ற்ண்ஹ) என்கிற நாளிதழில் வெளியிட்டார்கள். இதுபோன்ற காட்சிகளை வெளியிட்டால்தான் பத்திரிகை பெருமளவில் விற்று லாபம் கிடைக்கும் என்று அதற்குக் காரணமும் சொன்னார்கள். ஆனாலும்கூட அந்தப் பத்திரிகையின் பங்குதாரர்களே ஒன்றுசேர்ந்து பொங்கியெழுந்து, தனி நபர் துயரங்களை பணவரவாக மாற்றும் ஊடக உத்தி இழிவானது என்று சொல்லி அந்த நாளிதழின் ஆசிரியர் ராஃப்ஷாகிரோவ் என்பவரை இரண்டே நாளில் பணிநீக்கம் செய்தார்கள். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் கோரமான உயிர்ப்பலிக்காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை. நமது மண்ணில்தான், பதிமூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரம் என்று தலைப்பிட்டு - பாதிப்பிற்குள்ளான சிறுமியின் படத்தையும் வெளியிட்டு, பக்கம் பக்கமாக விவரித்து எழுதுகிறார்கள்.

இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்யவேண்டும்.

தாய்மைப்பேறு அடைந்த பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், லண்டனில் உள்ள கிங்எட்வர்ட் மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சேர்ந்திருந்தார். இதையறிந்த ஆஸ்திரேலிய - வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்களான மெல் கிரிஜ் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் அந்த மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரிடிஷ் ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் என்ற போலியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, இளவரசி கேத் மிடில்டன் உடல்நலம் பற்றி விசாரிக்க, அப்போது வரவேற்பறையில் இருந்த செவிலியரும், இந்திய மரபு வழியைச் சேர்ந்தவருமான ஜெசிந்தா, அந்த அழைப்பை மருத்துவமனையின் தலைமைச் செவிலியருக்கு மாற்றினார். அந்தத் தலைமைச் செவிலியரும் இளவரசி கேத் மிடில்டன் உடல்நலம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க, அது அந்த வானொலியிலும் செய்தியாக ஒலிபரப்பானது. என்ன நடந்தது என்பது பிறகு தெரியவர செவிலியர் ஜெசிந்தா மன உளைச்சல் காரணமாக இறந்து போனார். பின்னர் அந்த செய்தி உலகச் செய்தியாக மாறியது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்களான மெல்கிரிஜ், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் தங்களது வானொலியின் வாயிலாகவே, தங்களது தவறான செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதறி அழுதனர். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி வானொலி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. அதோடு இறந்துபோன செவிலியர் ஜெஸிந்தாவின் குடும்பத்திற்கு ரூ. 2.84 கோடி நிதியுதவி செய்ய இருப்பதாகவும் அந்த வானொலி நிறுவனம் அறிவித்தது. ஆஸ்திரேலிய வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்கள் செய்தது தரக்குறைவான, பொறுப்பற்ற, ஊடக நெறிகளுக்கு முரணான, விளையாட்டுத்தனமானதொரு செயல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரத்தில் ஓர் ஊடகத்தின், அந்த ஊடகப் பணியாளர்களின், செயல் போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நமது ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வகையில் நமது ஜெசிந்தாக்களைப் புண்படுத்தி வருகின்றன. ஒரு திரைப்பட நடிகைக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவரை அது குறித்து கேலிபேசி எழுதும் உரிமையை நமது சில ஊடகங்கள் கையிலெடுத்துக் கொள்கின்றன.

ஏழு கோடிக்கும் மேல் மக்கள் தொகையும், பல்லாயிரக்கணக்கில் பிரச்சனைகளும், தோன்றிக்கொண்டேயிருக்கிற நமது மண்ணில் விவாதிப்பதற்கும், வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களையும் நிர்வாகத் துறையையும் வழிநடத்துவதற்குமான செய்திகள் ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன. இந்நிலையில், பெரும்பான்மையான அச்சு ஊடகங்களில் வெளியாகும் சமூகம் பற்றியதான செய்திகளே நமக்கு ஆறுதலாகவும், நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களாகவும், சிந்திக்கத் தூண்டுவனவாகவும் இருக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அனைத்து வகை ஊடகங்களுக்குமான தாய் ஊடகமாக நாம் நமது அச்சு ஊடகங்களைக் குறிப்பிடலாம். நமது தமிழ் மண்ணில் அச்சு ஊடகம் மட்டும்தான் சமூக ஆர்வலர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான சரணாலயங்களாக விளங்குகின்றன. நாம் முன்னமே குறிப்பிட்டதைப் போல காட்சி ஊடகங்களாகி, படிப்பறிவற்ற நமது மக்களை, கோடி கோடியாகச் சுரண்டிச் சூறையாடிக் கொண்டிருக்கும் திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய இருபெரும் ஊடகங்கள்  முப்பது விழுக்காட்டளவிற்குக்கூட தமக்கிருக்கும் பொறுப்பை உணரவில்லை என்பதோடு, அப்படியொரு பொறுப்புணர்வு தேவையற்றது என்றும் அவை கருதுகின்றன.

இது பிசினஸ்.... இங்கே எங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்றுகூட வெளிப்படையாக வெட்கமின்றிச் சொல்லவும் செய்கின்றனர். பிசினஸ் என்று சொல்லிக் கொண்டு எதைவேண்டுமானாலும் காட்டிக் கொண்டிருக்கலாமா? என்று கேள்வி கேட்க வேண்டியவர்களாக, அவற்றின் நுகர்வோர்களாகிய நாம் மாறியாக வேண்டிய கட்டாயத் தேவை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தாயா- சேயா; குரங்கா- சிரங்கா?

என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு, நீட்டி முழக்கி நியாயம் பேசுவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி, விவாத அரங்குகளை அடிக்கடி விளம்பரதாரர்களின் பெயரைச் சொல்லியே நடத்திக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களும் அவற்றின்
ஊடகர்களும், தங்களது மேம்போக்கான பார்வைகளை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நூலகத்துறைக்கு கடந்த பல ஆண்டுகளாகப் பதிப்பகங்களிடமிருந்து புத்தகங்களையே வாங்கவில்லையே ஏன்?

வீட்டுவரியில் 5% தொகையாக வசூலிக்கப்படுகின்ற நூலக வரிப்பணம் எங்கே போகிறது?

ஆண்டுக்குப் ரூ.28,000 கோடி எனும் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மது, தமிழர்களை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது?

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான ஆறுகள் வறண்டது ஏன்? அவற்றின் மணலைச் சுரண்டுவது எப்படி நடக்கிறது?

தமிழ்நாட்டில் வேளாண்மைத் தொழிலின் இடுப்பு, யாரால் எப்படி ஒடிக்கப்பட்டது?

இந்திய அளவில் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 12,500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்களே ஏன்?

தமிழகத்தின் விளைநிலங்களில் எல்லாம் வேலிக்காத்தான் மரங்கள் மண்டிவிட்டதே எப்படி? ஏன்?

துணிச்சல்மிக்க ஊடகப் பெண்மணி வீரமங்கை மேரி கால்வின் எப்படிக் கொல்லப்பட்டார்?

அஸாமில் ஒரு தனிமனிதன் 550 எக்டேர் காடு வளர்த்திருக்கிறானே அது எப்படி?

சத்துணவில் மட்டும் அடிக்கடி பல்லி விழுந்து அவ்வப்போது குழந்தைகள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குப் போகிறார்களே ஏன்?

இந்தியாவில் 48% விழுக்காட்டுப் பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தப்பட்டுவிடுவதாக யுனிசெஃப் அமைப்பு சொல்கிறதே அது உண்மைதானா?

பான்பராக் இளைஞர்கள் தமிழ்நாட்டில் பெருகுவது ஏன்? பக்கத்து மாநிலமான கேரளாவில் துப்ப முடியாத பான்பராக் எச்சிலை, தமிழ்நாட்டில் எங்குவேண்டுமானாலும் துப்பமுடிகிறதே அது எப்படி?

தமிழ்த் திரைப்படங்களில் மட்டும் ஒரு விபத்தில் நினைவுதவறி, இன்னொரு விபத்தில் நினைவு
திரும்புகிறதே அது எப்படி?

சாலை விபத்துகளிலும், தற்கொலைகளிலும் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிப்பது ஏன்?

ஓர் ஆண்டுக்குச் சராசரியாகப் 15,000 பேர் எனும் கணக்கில் தமிழ்நாட்டில் மக்கள் சாலை விபத்துக்களில் செத்துமடிவதைத் தவிர்க்கவே முடியாதா?

முல்லைப்பெரியாறு அணையைக் கட்ட பொறியாளர் கர்னல் பென்னிகுக் எப்படியெல்லாம் பாடுபட்டார்?

இந்தியாவில் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அது ஏன்? இந்த நிலையில் வால்மார்ட் வகையறாக்கள் நுழைந்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை குறையுமா?

என்றெல்லாம் இன்னும் இன்னும் நீண்டுகொண்டேயிருக்கின்ற நூற்றுக்கணக்கான பிரச்சனைகளின் பக்கமும், சாதக பாதகம் நிறைந்த சமூக நிகழ்வுகளின்  பக்கமும் காட்சி ஊடகங்கள் தங்களது கவனத்தைத் திருப்ப வேண்டும், பேசாப் பொருளைப் பேசத் துணிய வேண்டும். பெரிதினும் பெரிது கேட்டுப் பழக வேண்டும்.

முட்டைகளை உடைப்பதற்குக் கடப்பாரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்து கடப்பாரை - முட்டை ஆகிய இரண்டு தரப்பையுமே கொச்சைப்படுத்துவதுபோல அமையும் என்பதைத்தவிர வேறென்ன சொல்லமுடியும்?

பாவலரேறு பெருச்சித்திரனார் அவர்கள் சொன்னதைப்போல - சூழ்வன மீறிச் சுடர்வன செய்யவேண்டும்!

அப்படிச் செய்யுமா நமது காட்சி ஊடகங்கள்?


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :