Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017டல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு (343).

-என்பது வள்ளுவர் சொல்லும் துறவுக்கான இலக்கணம். 

ஐம்புலன்களையும் அடக்கியாள்வதோடு, அவற்றின் ஆசைகளையும் விட்டுவிடுவதுதான் துறவுக்கான இலக்கணம் என்பது இதன் பொருள்.

ஆனால், இங்கு துறவையே துறந்துவிட்ட ஒருவர், தன்னைத் துறவி என்றும் சத்குரு என்றும் யோகி என்றும் சொல்லிக்கொண்டு, ஆடம்பரத் தொப்பி, காஸ்ட்லியான கருப்புக் கண்ணாடி, ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்றெல்லாம் பெண்கள் புடைசூழ தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவர்தான் ஜக்கி வாசுதேவ்.இந்த சாமியார் நடத்தும் கோவை ஈசா மையத்தில் சிவராத்திரி விழாவாம். அதற்கு பாரதப் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பக்திப் பரவசத்தோடு ஓடுகிறார்களாம்.

ஜக்கியின் ஆனந்தமான பக்திப் பிரவாகத்தில் மூழ்கி எழுகிறார்களாம். இந்தக் காட்சியைக் கண்டு தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. என்ன காரணம்? 

சகல ஆசைகளையும் துறந்த  துறவிகள் வாழ்ந்த இந்த மண்ணில், அத்தனைக்கும் ஆசைப்படும் சாமியாராக  உலவிக் கொண்டிருக்கிறார் ஜக்கி வாசுதேவ். அடுக்கடுக்கான புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் சுமந்துகொண்டிருக்கும் அந்த சாமியாரின் புகழை, அதிகாரப் பீடத்திலிருக்கும் மோடிகளும் எடப்பாடிகளும்  உயர்த்திப் பிடித்திருக் கிறார்கள். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?

"ஜக்கி சரியானவர் அல்ல. தேசத்தின் உயர்ந்த சொத்தான வனத்தை அத்துமீறி அபகரித்துக் கொண்டிருக்கிறார். அரசு அனுமதியை மீறி, அங்கே மேலும் மேலும் கட்டடங்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்.  அரசின் உத்தரவுகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல், அவற்றை அவர் குப்பைக் கூடையில் வீசிக்கொண்டிருக்கிறார். அவர் மீது  ஏராளமான சர்ச்சைகளும் வழக்குகளும் இருக்கின்றன. அவர் ஒரு மோசடிப் பேர்வழி. எனவே அவர் நடத்தும் விழாவுக்கு பிரதமர் வரக்கூடாது' என்று சமூக அக்கறையுள்ள பலரும் உரத்துக் குரல்கொடுத்தனர்.

"ஜக்கியின் உண்மை முகத்தை அறிந்துகொள்ளுங்கள். அவர் நடத்தும் விழாவில் பங்கேற்காதீர்கள்' என்று அய்யா சி.பி.ஐ. நல்லகண்ணு, சி.பி.எம். ராமகிருஷ்ணன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும், அரிபரந்தாமன் போன்ற நீதிமான்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தார்கள்.

எதற்கும் அசைந்து கொடுக்காத மோடியும் எடப்பாடியும், மோடியின் ஆன்மிக ஜோதியில் கூச்சமில்லாமல் ஐக்கியமாகியிருக்கிறார்கள். ஜக்கி விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்தது எதனால்? யாரிந்த ஜக்கி?

பெங்களூரைச் சேர்ந்த சாமான்யரான ஜக்கியின் இயற்பெயர் ஜெகதீஷ்.

படித்துவிட்டு பொழுதுபோக்குப் பிரியராக, உல்லாச ஆர்வலராக, ஊரெல்லாம் சுற்றித் திரிந்துகொண்டிருந்த ஜக்கி, யோகா டீச்சராக மாறினார். மைசூரில், ரிஷி பிரபாகரன் என்பவரின் தியான மையத்தில் இருந்தபடி, மாணவர்களுக்கு யோகா  வகுப்பெடுத்தார். 

இந்த ஜக்கியை, ரிஷி பிரபாகரன்தான், கோவையிலும் திருப்பூரிலும் தியான வகுப்புகள் நடத்துவதற்காக மைசூரிலிருந்து அனுப்பிவைத்தார்.  இங்கே  ஜக்கியின் யோகா வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

ஜக்கி, அழகாய் பேசக்கூடியவர். பேசிப் பேசியே ஆட்களை வசப்படுத்தக்கூடியவர்.அந்த வித்தைதான், அவரது ஆன்மிகச் சுரண்டலுக்கு மூலதனமாக இருக்கிறது. ஜக்கியின் இந்தப் பேச்சில் மயங்கிய தொழிலதிபரான கரிவரதன் என்பவர், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்த தனது 13 ஏக்கர் நிலத்தை, ஜக்கிக்கு தானமாகக் கொடுத்தார் என்கிறார்கள். அங்குதான் ஈசா யோக மையத்தை 92-ல் ஆரம்பித்தார் ஜக்கி.

அவரது விளம்பரத்தை நம்பி, தொழிலதிபர்களும் வெளிநாட்டவர்களும் அவரை மொய்க்க ஆரம்பித்தனர். தங்களை மறந்து கரன்ஸி கட்டுக்களை அவர்மீது கொட்ட ஆரம்பித்தனர். இடையில் ஜக்கியின் மோசடித் தனத்தைக் கண்டு விழித்துக்கொண்ட சிலர், போலீஸ், புகார்  என்றும் போனார்கள்.

இதன்பின், அத்தனைக்கும் ஆசைப்படு என போதிக்க ஆரம்பித்த ஜக்கி வாசுதேவ், பின்னர்  தானும், அத்தனைக்கும் ஆசைப்பட ஆரம்பித்துவிட்டார். அதுதான் அவரை இன்று விமர்சன வளையத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள், அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், இது பற்றிப் பேசியபோது...

"ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியைக் கொலை செய்ததாக பெங்களூரு காவல்துறை பதிவு செய்த வழக்கு, கோவை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாரா என்பதும் தெரியவரவில்லை, விசாரணை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை 'என்று சொன்னதோடு, அது தொடர்பான ரிட் மனுவுக்கு பதிலளித்து ஈஷா மையம் தாக்கல் செய்த மனுவில், அந்தக் குற்றச்சாட்டை ஜக்கி, மறுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுமட்டுமா?

ஜக்கி வாசுதேவ், தனது ஈசா மையத்துக்கு வரும் இளைஞர்களையும் இளம் பெண்களையும், யோகாப்பயிற்சி, தியானப்பயிற்சி என்ற பெயரில், மூளைச்சலவை செய்து அடிமைப்படுத்துகிறார் என்று ஏகப்பட்ட புகார்கள் ஒரு பக்கம் வந்துகொண்டே இருக்கிறது. 

குறிப்பாக, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருக்கும் காமராஜும் அவர் மனைவி சத்தியஜோதியும் காவல் நிலையத்துக்குப் போய், எங்கள் மகள்களான லதாவையும் கீதாவையும் ஜக்கியின் பிடியிலிருந்து மீட்டுக்கொடுங்கள். அந்த ஜக்கி, எங்கள் மகள்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதோடு, அவர்களுக்கு மொட்டை அடித்து, பிரமச்சாரியாக அவர்களை மாற்றிவருகிறார். எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும். அவர்களுக்கு நாங்கள் திருமணம் செய்து பார்க்கவேண்டும். அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை நாங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று கதறினார்கள். மீடியாக்களிடம் வந்து பேட்டி கொடுத்துப் புலம்பினார்கள். ஆனால், அவர்களால் தங்கள் பிள்ளைகளை மீட்கமுடியவில்லை. இதேபோல் மதுரை போலீஸ் ஏட்டு மகேந்திரன், தன் மகனை ஜக்கியிடமிருந்து மீட்டுத்தர வேண்டுமென்று புகார் கொடுத்திருக்கிறார்.

இப்படி பலரும் தங்கள் பிள்ளைகளை மீட்க முடியாமல், ஜக்கி கும்பலோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஈசா கும்பலோ, அந்தப் பிள்ளைகள் திருமண வாழ்வை வெறுத்து, ஜக்கியின் போதனையை ஏற்றுக்கொண்டு, சுயவிருப்பத்தோடு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்கிறது. பிரமச்சரியம்தான் இறைவனை அடையும் வழி என்று அடுத்தவர்களுக்கு போதிக்கும் ஜக்கி, எப்படிப்பட்டவர்?

அவரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்தான்.

அவரது ஒரே மகளான ராதேவை அவர் துறவறத்தில் ஈடுபடுத்தவில்லை. தமிழகப் பண்பாட்டின் சாயல் கொஞ்சமும் தன் மகள் மேல் படியாமல், அவரை மாடர்னாக வளர்த்த ஜக்கி,  சந்தீப் என்கிற கர்நாடகப் பாடகரான,  பணக்கார வாலிபருக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்து, ஆசிர்வதித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

அவரது துறவற உபதேசம் ஊருக்குதானே தவிர அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ அல்ல.

ஊர்ப் பிள்ளைகளுக்கு துறவற மொட்டை.

தன் மகளுக்கு ஆடம்பரத் திருமணம். இதுதான் ஜக்கியின் சுயரூபம்.தனது தொழில் பார்ட்னர்களையும் விட்டு வைக்கதவர் ஜக்கி. கார்த்தி, பாமா ருக்மணி என்ற தம்பதிகளோடு சேர்ந்து, திரிசூல் ஷெல்டர்ஸ் என்ற கட்டுமானக் கம்பெனியை 2005-ல் தொடங்கினார் ஜக்கி. இந்த நிறுவனம் ஏகபோகமாக லாபத்தைக் குவித்ததால், அதை முழுதாக அபகரிக்க நினைத்த ஜக்கி, அந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக தனது மகள் ராதேவை நியமிக்கவேண்டும் என்று கெடுபிடி பண்ணினாராம். கார்த்தி ஒத்துக்கொள்ளவில்லை. பஞ்சாயத்துக்கள் நடந்தது. சமாதானமாகவில்லை. கடைசியில் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றம் போயிருக்கிறதாம்.

தமிழக இயற்கை ஆர்வலர்கள், ஜக்கி மீதும் அவரது ஈசா யோக மையத்தின் மீதும் வைக்கும்  பிரதான குற்றச்சாட்டு, அவர் வனத்தை ஆக்கிரமிக்கிறார்  என்பதுதான். அரசு நிலத்தை அபகரிப்பது குற்றம். ஆனால் ஜக்கி, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலத்தை பல்வேறு வகைகளில் அபகரித்திருக்கிறார் என்கிறார்கள்.

அதேபோல், எந்தக் கட்டடம் கட்டவேண்டுமென்றாலும் அதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பது விதி. ஆனால் கட்டடமே கட்டக்கூடாத வனப்பகுதியில், அனுமதியே வாங்காமல் ஜக்கி, கட்டடத்திற்கு மேல் கட்டடமாகக் கட்டிக்கொண்டிருக்கிறார் தனது ஈசா மையத்துக்கு.

கீழே இருக்கும் அதிகாரிகள் இதுகுறித்துக் கேள்வி கேட்டாலும்,  நடவடிக்கைகளை எடுக்க முயன்றாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களைக் கையில் போட்டுகொண்டு, தனது ஏகபோக சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் ஜக்கி.

குறிப்பாக,  1994-ல் இருந்து 2005 வரையிலான 11 ஆண்டுகளில், அவர் கட்டிய கட்டடங்களின் மொத்த பரப்பளவு 37, 424.32. சதுர மீட்டர். இதில் பல கட்டடங்களும், அ.தி.மு.க புள்ளிகளின் ஒத்துழைப்போடு கட்டப் பட்டது. இதேபோல், 2006-ல் இருந்து 2011 வரையிலான  ஐந்து ஆண்டுகளில், தி.முக. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களின் மொத்தப் பரப்பளவு  55, 044.82 சதுர மீட்டர். இப்படி பசுமை சூழ்ந்த வனத்தை அழித்து, கான்கிரீட்  காடாக்கிவருகிறது ஜக்கி கும்பல்.

2011-ல், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதிலிருந்து ஜக்கியின் வன ஆக்கிரமிப்பிற்கும் அத்துமீறல் கட்டடத்திற்கும் எதிராக, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை முயற்சிகளை மேற்கொண்டார்கள். அடுக்கடுக்காய்ப் போராடினார்கள். எனினும் அசைந்துகொடுக்கவே இல்லை, ஜக்கியின் ஈசா மையக் கும்பல்.

கோவை மாவட்ட வனத்துறை அதிகாரியாய் இருந்த திருநாவுக்கரசு,2012 அக்டோபர் 17-ந் தேதி,  மேலதிகாரிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார். அதில், ஈஷா மையம் சார்பாக 42.77 ஹெக்டர் பரப்பளவில்  ஏற்கனவே  அனுமதி இல்லாமல் 63,380 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மேலும்   28, 582.52 சதுர மீட்டர் பரப்பளவுக்குப் புதிய  கட்டடங்களைக் கட்டப்போகிறார்களாம் என்று குறிப்பிட்டதோடு...

இந்த முறைகேடான, அனுமதி பெறாத கட்டிடங்கள் மூலம், யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ள தால், ஈஷா மையத்திற்கு அருகிலுள்ள வனத்தில் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் யானைகள் வனத்தைவிட்டு வெளியேறத் தொடங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அப்படி யானைகள் காட்டை விட்டு வெளியேறினால், அவற்றால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் அதிகாரிகள், ஜக்கியின் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து பல கடிதங்களை எழுதினார்கள்.

கடைசியாகக்  கடந்த 3-8-2015 அன்று,  மாவட்ட வன அலுவலர் மு.செந்தில்குமார்,  கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்,  அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால், ஈஷா மைய உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? ஜக்கியை நெருங்க முடியாத மாவட்ட நிர்வாகம், அந்த அதிகாரியை டிரான்ஸ்பரில் தூக்கியடித்தது.

இன்னும் ஜக்கியின் ஈசா மையம் நடத்திய, வன ஆக்கிரமிப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அரசாங்கத்தின் அதிகார மையங்கள் ஜக்கிக்கும் அவரது ஈசா மையத்துக்கும், பாதுகாப்பாகக் குடைபிடித்து, தொண்டூழியம் பண்ணிக்கொண்டிருக்கின்றன.

இப்படி, வன நிலங்களை அபகரித்த, அங்கே கட்டடங்களைக் கட்டிக்கொண்டே இருக்கிற, மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்களைச் சுமந்துகொண்டிருக்கிற, இளம்பெண்களையும் இளைஞர்களையும் அடிமைப் படுத்தி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற அந்த ஜக்கியை, ஆதரிக்கத்தான், அவரது  புனிதராகக் காட்டத்தான், அவர் மீதான புகார்களைப் பற்றிக் கூட கவலைப்படாமல் பிரதமர் நரேந்திர மோடி, ஓடோடி வருகிறார். முதல்வர் எடப்பாடி அதிலே பக்திப் பரவசத்தோடு கலந்துகொள்கிறார்.

அதுமட்டுமல்ல, இப்படிப் பட்ட ஜக்கி வாசுதேவுக்கு, இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருதையும், வழங்கப் போவதாக அறிவித்து தீராப் பழியை சுமந்துகொண்டிருக்கிறது மத்திய அரசு. மோடிக்கு பத்மவிருதைக் கொடுக்கக் கூடாது என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.

குற்றங்களைச் செய்வது மட்டுமல்ல. குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். குற்றங்களை அங்கீகரிப்பதும் குற்றம்தான்.

அப்படியொரு குற்றத்தைத்தான் மத்திய- மாநில அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன.

நடந்த குற்றங்களை விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதே அரசின் கடமை. இதைத்தான்...

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து                      (561).

என்கிறார் வள்ளுவர்.

-ஆதங்கத்தோடு,
நக்கீரன் கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :