அண்மைச் செய்திகள்
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு ||
Logo
பொது அறிவு உலகம்




         முஸ்லிலிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு மத்திய காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்டிருந்த 4.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது ஆந்திர உயர் நீதிமன்றம். ஆந்திரப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணய்யா என்பவரும் இன்னும் பலரும், சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தனித் தனியாக தாக்கல் செய்த மனுவை விசாரித்துதான் தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு காரணமாக, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது அரசியல்  சாசனத்திற்கு எதிரானது என்றும், சிறுபான்மையினருக்கான சிறப்புச் சலுகை பெறும் அளவிற்கு முஸ்லிலிம்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அடுத்து 4.5 சதவீத இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அறிவித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, மத அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என குரலெழுப்பியது. முஸ்லிலிம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் உள்ள முஸ்லிலிம்களுக்கு அவர்களின் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில்தான் 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என மத்திய அரசு பதிலளித்தது. இதே பதிலை ஆதாரத்துடன் ஆந்திர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியது காங்கிரஸ் அரசின் குற்றம்தான். கடந்த ஜனவரி 1, 2012-இல் இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தபோதே, சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் முஸ்லிலிம் மக்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் கமிஷனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்திருக்கிறது; அதன் அடிப்படையில்தான் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியது. ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஆந்திர உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

நேரு முதல் ராஜீவ்காந்தி வரை இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருந்த காங்கிரஸ், இப்போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து நீதிமன்றங்களில் வலுவான ஆதரங்களை எடுத்துவைக்காமல் வழக்கை தோல்வியடைய செய்துவிட்டது. இதனால் முஸ்லிலிம்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது என்ற எண்ணவோட்டம் முஸ்லிலிம்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது. இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு சம்மந்தமான வினக்களுக்கு பதில்தரும் வகையில் பி.எஸ்.கிருஷ்ணன் கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில் இக்கட்டுரையை  பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு, அவர்களுள் சிறப்பாக இஸ்லாமியர்களுக்கு அதிக இடஒதுக்கீடு கொடுக்கப் பட்டிருப்பதாக யாரும் குற்றம் சொல்ல முடியாது.



பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 4.5 விழுக்காடு ஒதுக்கீட்டைச் சமூக நிலை யிலும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கும் சிறுபான்மையினருக்குக் கொடுப்பது என மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது; அரசின் இம் முடிவு அறியாமையாலும் குழப்பத்தாலும் சிலரால் எதிர்க்கப்படுகிறது.  இந்த உள் ஒதுக்கீட்டிற்கும் தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு லோக்பாலிலின் கீழ் கொடுக்கப் படும் 50 விழுக்காட்டிற்குக் குறைவான ஒதுக்கீட்டிற்கும் இடையேயான வேறுபாடு தெரியாமல், ஊடகங்களில் உள்ள சிலரால் இந்தத் தனி இடஒதுக்கீடு மேலும் சிக்க லாக்கப்படுகிறது. 4.5 விழுக்காடுத் தனி இடஒதுக் கீட்டைப் பற்றி ஆய்வாளர்கள் கூறும் நான்கு கருத்துகள் சரியானவை அல்ல. அவற்றை பகுத்து பார்க்கலாம்.

அ) மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப் படுகிறது; எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

இக்கருத்து தவறான ஒன்றாகும்.  இவ்வொதுக்கீடு என்பது சிறுபான்மையினருக்கோ இஸ்லாமியருக்கோ அன்று!  இது புதிய இடஒதுக்கீடும் அன்று!  மாறாகப் பிற்படுத்தப்பட்டோரில் சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின்தங்கியுள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு ஆகும். சிறுபான்மையினருள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் 1993-ஆம் ஆண்டு வாக்கிலேயே மாநிலவாரியாக எடுக்கப்பட்டு மையப் பட்டியலிலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான  தேசிய ஆணையம் (என்.சி.பி.சி) மாநிலப் பட்டியல், மாநிலங்களின் மண்டலப் பட்டியல் ஆகியவற்றில் காணப்படும் பொதுத்தன்மையைக் கருத்தில் கொண்டு 1993, 2000 ஆகிய ஆண்டுகளில்  சில சட்ட அறிவுரை களை வழங்கியது.  இவ்வறிவுரைகள், 1992-ஆம் ஆண்டு வந்த "மண்டல்' தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுடன் அமைந்தன.  இவை  அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் குறிப்பிடும் "சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின் தங்கியுள்ள நிலை'யை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டன.  இவற்றில் மதங்கள் எவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

ஒரு மதத்தில் உள்ள எல்லாச் சமூகத்தினருக்கோ எல்லாச் சாதியினருக்கோ இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மட்டும்தான் அதை மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்று கருத முடியும். இஸ்லாமிய சாதிகள் என்றோ இஸ்லாமிய சமூகங்கள் என்றோ சொல்லப்படுகின்ற செய்யது, பதான், மொகல், அரபு, இரானி, கட்சி-மெமோன், போரா, கோஜா ஆகியனவும்; கிறித்தவ சாதிகள்  (அல்லது சமூகங்கள்) ஆன சிரியன் கிறித்தவர்கள்,  சீக்கிய மதத்தைச் சேர்ந்த சாதிகளான ஜட்சிக், கத்ரி சிக் ஆகியனவும் மாநில வாரியான மையப்பட்டியலிலில் சேர்க்கப்படவில்லை.  ஏனென்றால் அவை இந்து மதத்தில் உள்ள சில சாதிகளைப் போலச் சமூக நிலையில் பின் தங்கிய நிலையில் இல்லை.  இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் உள்ள சாதிகளும் சமூகங்களும் மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என அறியலாம்; எனவே இவ்வொதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு          எதிரானது அன்று.

இந்து மதத்தில் இல்லாத சாதிகளையும் சமூகங் களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் சேர்த்தது என்பது வாக்குச்சீட்டுக்கு அலையும் அரசியலாளர்களின் "புத்தம் புதிய கண்டுபிடிப்பு' என்று நினைத்துவிடாதீர்கள்.  தென்னிந்திய மாநிலங்கள் சிலவற்றில் இஸ்லாமியர்களில் சில பிரிவினரை இந்து, கிறித்தவம் ஆகிய மதங்களின்  பிற்படுத்தப்பட்டோருடன் சேர்த்தது என்பது இந்திய விடுதலைக்கு முன்னரே நடந்திருக்கிறது.  விடுதலைக்குப் பின்னும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான மாநிலக் குழுக்கள், கலேல்கர் (1953-55), மண்டல் (1979-80) குழுக்கள் போன்ற தேசிய குழுக்கள் ஆகியனவும் இப்படி அடையாளம் கண்டிருக்கின்றன. சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடத்தும் (தாழ்த்தப் பட்டோர் புத்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப் பட்டோராகவே கருதப்படுவார்கள் என்பதற்கு முன்பு) பிற்படுத்தப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த வகையினர் அனைவரிடமும் உள்ள சமூக இயல்பு நிலைதான் கணக்கில் கொள்ளப்பட்டதே தவிர அவர் களின் மதம் அன்று!  எனவே மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்பதும் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதும் தவறானது.

ஆ) இஸ்லாமியர்களிடத்துப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு என்பது அடிப்படையிலேயே தவறானது ஏனென்றால் இஸ்லாம் சாதியை மறுதலிலிக்கிறது.

இந்தக் கருத்தை இரு எதிர்க்கோணங்களில் அணுகலாம் முதலாவது, இசுலாம் சாதியை மறுதலிப்பதால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு என்பதே கூடாது என்பதாகும். இரண்டாவது, இஸ்லாம் சாதியை மறுதலிலிப்பதால் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதாகும்.  இரண்டாவது முறையைச் செயல்படுத்த அரசியல் சட்டத்தின்படியோ சமூக நீதிக் கொள்கைகளின் அடிப்படையிலோ வாய்ப்பே இல்லை.  இடஒதுக்கீடு முதலிலியவற்றைக் கொண்ட சமூக நீதி என்பது இந்தியச் சமூக அமைப்பு முறையில் பிற்படுத்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் "தீண்டாமை'யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மட்டுமே தேவையான ஒன்றாகும்.  நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம் தனியாள் சார்ந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள வில்லை. எனவேதான், சமூக அமைப்பு முறையில் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சமூகங்களையும் சாராத மக்களில் உள்ள தனியாட்களுக்குப் பொருளாதார அடிப் படையில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது சமூக நீதிக்கு முரணாகவும் அரசியல் சட்டத்தின்படித் தவறாகவும் இருக்கிறது.

மதம் என்னும் கொள்கையையும் சமூகக் கட்டமைப்பு, சமூக அடுக்குமுறை ஆகியவற்றையும் சரிவரப் பிரித்தறிய முடியாத நிலையே முதல் முறையில் சிந்திப்பதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கொள்கையளவில் இஸ்லாம் சமத்துவம் கொண்டதாகவும் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்! ஆனால் இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் சமூகநிலை என்பது நடைமுறையில் சமூகவியல், பொருளியல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இவ்விரண்டின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவிலும் உலகின் மற்ற சில பகுதிகளிலும் வாழும் இஸ்லாமியர்களின் சமூக நிலை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.  மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராக 1931-ஆம் ஆண்டு பணியாற்றிய புகழ்பெற்ற அறிஞர் ஜே.எச். அட்டன் கூறுவது போல, "சாதி என்பது காற்றோடு கலந்திருக்கிறது;  இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களையோ கிறித்தவர்களையோ அக்காற்று தீண்டாமல் விடுவதில்லை. மத மாற்றம்கூட சாதிய அமைப்பை அழித்துவிடவில்லை. சாதிகளை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாத்தில் கூட இந்து மதத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை சாதிகள் நடைமுறையில் இருக்கத்தாம் செய்கின்றன.' (அட்டன் 1980 (1946)).

இந்திய இஸ்லாம் சமூகத்தில் சமத்துவ சமூகம் என்னும் கருத்தியலுக்கும் நடைமுறையில் உள்ள ஏற்றத் தாழ்வு, மரபு சார்ந்த இணைப்புகள், புறமணத்தடை ஆகியவற்றுக்கும் இடையே இருவேறு நிலைகள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள், கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள், மக்கள்தொகை ஆய்வாளர்கள், சமூகவியல் திறனாய்வாளர்கள் எனப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  இவையனைத்தும் "ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள இஸ்லா மியர்களின் சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின்தங்கிய வகுப்புகளை அடையாளப்படுத்துதல்' என்னும் என்னுடைய அறிக்கையிலும் (ஜூன் 2007) (இவ்வறிக்கை ஆந்திரத்தில் உள்ள இஸ்லாமியர்களிடையே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு நான்கு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.) "எக்னாமிக் அண்டு பொலிலிடிகல் வீக்' இதழின் 2010 ஆகஸ்டு 21-ஆம் நாள் பதிப்பில் நான் எழுதிய "இஸ்லாமியச் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைப் புரிந்துகொள்ளுதல்' என்னும் கட்டுரையிலும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் இஸ்லாத்திற்கு மாறுவோரின் சமூகப் பண்பாக, சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை (1897) நினைத்துப் பார்ப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.

""இந்தியாவில் முகம்மதியர்களின் வெற்றி என்பது ஒடுக்கப்பட்டோருக்கும் ஏழைகளுக்கும் ஒரு விடிவாகவே அமைந்தது; அதனால்தான் நம்முடைய மக்களுள்  ஐவருக்கு ஒருவர் முகம்மதியர் ஆனார்;  கத்திக்கு அஞ்சி மக்கள் முகம்மதியர்கள் ஆனார்கள் என்று எண்ணுவது அறியாமையன்றி வேறில்லை''  என்கிறார் அவர்.

இதே நிலைதான் மற்ற மதங்களைப் பின்பற்று வோருக்கும் பொருந்தும். உயர்வான ஆன்மிகக் கருத்துகள் எவையும் இன்றித் தீவிரமான சாதிய அமைப்புமுறை இந்துச் சமூகத்தில் நிலவுகிறது.  உச்சநீதி மன்றத்தில் வெளியான மண்டல் தீர்ப்பும் இந்து மதம் தவிர்த்த பிற மதங்களிலும் சாதிய அமைப்பு முறை நிலவி வருவதைக் குறிப்பிட்டுக் காட்டியது.  "இஸ்லாம் சாதியை ஏற்றுக்கொள்ளவில்லை' என்று சொல்வதும் "இஸ்லாத்தில் சாதிகளோ அவற்றைப் போன்ற அமைப்புகளோ இல்லை' என்று சொல்வதும், இவற்றை எல்லாம் கருதும் போது நடைமுறைக்குச் சிறிதும் ஒவ்வாத, பொருத்தமற்ற வாதங் களாக அமைந்துவிடுகின்றன.

இ) இந்துக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதி பறிக்கப்பட்டு இஸ்லாமியர் களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாதமும் சொத்தையானதுதான்!  பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு என்பது இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்று அன்று; மதத்தைக் கருதாது கொடுக்கப்பட்ட ஒன்றாகும்.  இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே அடையாளம் காணப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்து பிற்படுத்தப்பட்டவர்களைப் போலவே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியவர்கள்தாம்! ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காட்டளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அவர்கள் அனைவரது பிற்படுத்தப்பட்ட நிலையும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கவில்லை;  சிலரது நிலை மிகவும் பின்தங்கியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட நிலை என்பது எல்லோருக்கும் ஒரே அளவில் இல்லை என்பதும் சிலர்தம் சமூகநிலை மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்பதும் உச்சநீதி மன்றத்தின் மண்டல் தீர்ப்பு ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!  பிற்படுத்தப்பட்டவர்களுள் "சமூக நிலை' சார்ந்த பகுப்புகள் வேண்டும் என்பதையும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் மண்டல் தீர்ப்பு வலிலியுறுத்துகிறது.  இப்படிச் செய்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அன்று என்பதையும் அப்போதுதான் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இடஒதுக்கீட்டின் உண்மையான பலனை அடையமுடியும் என்பதையும் சேர்த்தே அத்தீர்ப்பு சொல்கிறது.  இத்தீர்ப்பை ஏற்கெனவே பல மாநிலங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுள் உள் ஒதுக்கீடு வழங்கிப் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகின்றன.

மாநில அரசுகள் செய்ததை மத்திய அரசு மிகுந்த காலம் கடத்தி எடுத்தாலும் கூடச் சரியான திசையில் எடுத்திருக்கிறது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே பிற்படுத்தப் பட்டவர்கள் இருப்பதாலும் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வருவதாலும் அவர்களுக்கு 27 விழுக்காட்டில் ஒரு குறிப்பிட்ட பங்கை ஒதுக்குவது என்பது "இந்துக்களிடம் இருந்து பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவது' என்று சொல்வது பொருத்தமாகாது.

ஈ) இஸ்லாமியர்களுக்கு இப்போது வழங்கப் பட்டிருப்பது மிக மிக அதிகம் அல்லது இஸ்லாமியர் களுக்கு இப்போது வழங்கப்பட்டிருப்பது மிக மிகக் குறைவு

இந்திய மக்கள்தொகையில் 43.7 விழுக்காட்டளவில் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக "மண்டல்' குழு தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள்தொகையில் 83.84 விழுக்காடு இருக்கும் இந்துக்களில் 43.7 விழுக்காடு என்பது ஏறத்தாழ 100-க்கு 52 பேர் ஆவர். இதே அளவை நிலை அள வாகக் கொண்டு சிறுபான்மையினரிடத்திலும் 52 விழுக்காட்டுப் பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கணக் கிடப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் (83.84 இந்துக்கள் போக) மீதி 16.16 விழுக்காடு சிறுபான்மை யினர் ஆவர்;  அப்படியானால் அவர்களுள் 52 விழுக்காடு என்பது 8.4 விழுக்காடு ஆகும். மொத்தத்தில் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் 43.7 விழுக்காடு; சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்டோர் 8.4 விழுக்காடு.  ஆக மொத்தத்தில் 52 விழுக்காடு ஆகும்.

இந்துப் பிற்படுத்தப்பட்டோருக்கு எடுத்துக்கொண்ட நிலையளவைச் சிறுபான்மையினருக்கும் அப்படியே பொருத்திப் பார்ப்பது நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாதுதான்!  ஆனால் மொத்தமாகப் பிற்படுத்தப்பட்டோர் எத்தனை விழுக்காடுப்பேர் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படுவதே இல்லை!  எனவே மண்டல் குழுவிற்குப் பிற்படுத்தப்பட்டோரைக் கணக் கிடுவதற்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.   எனவே சிறுபான்மையினருள் பிற்படுத்தப்பட்டோருக்கு 4.5 விழுக்காட்டளவு இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தப் பிற்படுத்தப்பட்டோர் கணக்கைக் கொண்டு முடிவு செய்தது சரிதான்!  இதைக் கூடுதல் ஒதுக்கீடு என்று சொல்ல முடியாது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் இந்துக்கள் 81.47 விழுக்காடும், சிறு பான்மையினர் 18.53 விழுக்காடும் இருக்கிறார்கள்.  "மண்டல்' குறிப்பிடும் சிறுபான்மையினருள் 0.5 விழுக்காடு இருக்கும் சமண மதத்தில் பிற்படுத்தப் பட்டவர்களே இல்லை; சமணத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் வைசிய, பனியா சமூகங்களைச் சேர்ந்தவர் களே ஆவர்; புத்த மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் தாழ்த்தப் பட்டவர்களாகவே கருதப்படுவர் என்னும் நிலைக்குப்  பிறகு, 0.7 விழுக்காடு இருக்கும் புத்த மதத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை.  ஆக, 13.43 விழுக்காடு இருக்கும் இஸ்லாமியர்கள், 2.4 விழுக்காடு இருக்கும் கிறித்தவர்கள், 2 விழுக்காடு இருக்கும் சீக்கியர்கள் ஆகிய மூன்று மதங்களிடம் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருக்கின்றன.

இவற்றுள் சீக்கிய மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் உயர்சாதியினரும்தாம் அதிகம். கிறித்தவ மதத்தில் மலை வாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதியினர் ஆகியோர் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள்.  இஸ்லாமிய மதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மலைவாழ் மக்களும், அதிக அளவில் பிற்படுத்தப்பட்டோரும், மிகக் குறைந்த அளவில் உயர் சாதியினரும் இருக்கிறார்கள்.  "தீண்டாமை'க் கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப் பட்டோர் இந்து மதத்தில் இருப்பது போல, இஸ்லாமிய மதத்திலும் கிறித்தவ மதத்திலும் இருந்தாலும் அவர்கள் "பிற்படுத்தப்பட்டோர்' ஆகக் கருதப்படுவதால் இவ்விரண்டு மதங்களிலும் தாழ்த்தப்பட்டோர் என்னும் பிரிவே இல்லை.  அதே சமயம் "மலைவாழ் மக்கள்' என்னும் பிரிவும் "பிற்படுத்தப்பட்டோர்' என்னும் பிரிவும் இஸ்லாமிலும் கிறித்தவத்திலும் இருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

மலைவாழ் மக்கள், உயர்சாதியினர் ஆகிய இரு பிரிவினரைக் கழித்துப் பார்த்தால், கிறித்தவர்களுள் 1.4 விழுக்காட்டளவிலும் இஸ்லாமியர்களுள் 10.5 விழுக் காட்டளவிலும் பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாகக் கருதலாம்.  சீக்கியர்களுள் பிற்படுத்தப்பட்டோர் 1.2 விழுக் காட்டளவில் இருக்கிறார்கள்.  இவையனைத்தையும் (1.4 + 10.5 + 1.2) கூட்டிப்பார்த்தால் 13.1 விழுக்காடு ஆகிறது.  நாட்டின் மொத்த பிற்படுத்தப்பட்டோர் விழுக்காடான 52 விழுக்காடில் 13.1 என்பது நான்கில் ஒரு பங்காகிறது.  சிறுபான்மையினருக்கான 27 விழுக்காட்டளவில் இது 6.75 விழுக்காட்டளவைப் பிடிக்கிறது.  ஒட்டு மொத்தப் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையில் (52 விழுக்காட்டில்) இசுலாமியப் பிற்படுத்தப்பட்டோர் (10.5 விழுக்காடு)  எண்ணிக்கை என்பது ஐந்தில் ஒரு பங்காகும்.  எனவே பிற்படுத்தப்பட்டோர்க்கான 27 விழுக்காட்டளவில் இஸ்லாமியர்கள் 5.4 அல்லது 5.5 விழுக்காடைக் கொண்டிருக்கிறார்கள். எனவே 4.5 விழுக்காடுத் தனி ஒதுக்கீடு என்பது ஒப்பீட்டளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

அ) கால தாமதமான முடிவு இது!  முன்னரே இம் முடிவை எடுத்திருக்க வேண்டும்.

இந்த உள் ஒதுக்கீட்டை அரசு 1990-களிலேயே கொடுத்திருக்க வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.  ஏனெனில் 1961-இல் வந்த பாலாஜி தீர்ப்பின் (பாலாஜி தீர்ப்பு மொத்த இடஒதுக்கீடு ஐம்பது விழுக் காட்டைத் தாண்டக்கூடாது என்னும் கொள்கை பற்றியது)  அடிப்படையில் முடிவெடுத்த மண்டல் குழுவே பிற்படுத்தப்பட்டோருள் பகுப்பு என்னும் முடிவில் 4:1 என்னும் அளவில் பிரிந்து நின்றது. மண்டல் குழுவின் உறுப்பினராக இருந்த எல்.ஆர். நாயக், பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் என இருவகையாகப் பிரிக்கப்பட்டு 27 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொன்னார்.  ஆனால் பெரும்பான்மை உறுப்பி னர்கள் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்நேரத்தில் நாயக், என்னுடன் இது பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார்.  அதன் பிறகு 1992-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வெளிவந்த மண்டல் தீர்ப்பு, பிற்படுத்தப்பட்டோரை, அவர்களிடையே உள்ள வேறுபட்ட பிற்படுத்தப்பட்ட நிலையைக் கருத்தில் கொண்டு வகைப்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது அன்று என்றும், அப்படி வகைப்படுத்துவது தேவையான ஒன்று என்றும் கூறியது.

எனவே இப்படிப் பிற்படுத்தப்பட்டோரை வகைப் படுத்துவது என்பது 1990-ஆம் ஆண்டிலோ 1993-ஆம் ஆண்டிலோதான் செயல்படுத்தப்பட்டிருக்க முடியும்.  ஆனால் வட இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் செய்த தவறான பரப்புரையாலும் அவை எடுத்த சார்பு நிலையாலும் இதை எதிர்த்து மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அவ்வெதிர்ப்பை வழிநடத்திய சிலர்தாம் மீண்டும் 2007-ஆம் ஆண்டு மத்திய கல்வி           நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதையும் எதிர்த்தார்கள். அவர்களுள் சிலர் ஊடகங்களிலும் இயக்கங்களிலும் பெரிய பொறுப்புகளில் இன்றும் இருந்து கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்ப் பதற்குப் பின்புலமாகப் பணியாற்றி வருகிறார்கள்.  இவற்றை எல்லாம் கருதிப் பார்க்கும்போது, 90-களின் சூழலில் அரசு கவிழ்வதற்கு முன் பிற்படுத்தப்பட்டோருள் உள் ஒதுக்கீடு என்பது சற்றே கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதையும் அதை ஒப்புக்கொள்ள வைப்பதையும் மட்டும்தான் அப்போதைக்குச் செய்ய முடிந்தது.

1993-ஆம் ஆண்டுக்குப் பிறகு (அதாவது 1992-ஆம் ஆண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்துவதைச் செய்திருக்க முடியும். அதற்காக என்னையும் உறுப்பினராகக் கொண்ட அறிஞர் குழு ஒன்று 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் அமைக்கப்பட்டது.  பிற்படுத்தப்பட்டோருள் சமூக நிலையில் ஓரளவு முன்னேறிய ஆட்கள், பிரிவுகள் ஆகியவற்றைப் பதினைந்து நாட்களுக்குள் கண்டறிந்து சொல்லுமாறு அக்குழு பணிக்கப்பட்டது. ஆனால்  பதினைந்து நாட்களுக்குள் அப்பணியை முடிக்க முடிய வில்லை.  அப்பணி முடிந்த பிறகு, மண்டல் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் வகைப்பாட்டைப் பரிந்துரைக்க, அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்பணியைக் குழு செய்து கொண்டிருந்தபோதே, அரசு பிற்படுத்தப்பட்டோருள் உள்ஒதுக்கீடு என்னும் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கிக்கொண்டது.  பிற்படுத்தப்பட்டோருள் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் தம் ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பலன் கண்டு வந்த சிலரால் அரசு இப்படி நடந்துகொள்ள நேர்ந்தது.  ஆனால் எது எப்படியோ, அரசு நினைத்திருந்தால் 1993-ஆம் ஆண்டே இவ்வொதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்க முடியும். அப்படி ஏன் கொண்டுவரவில்லை என்பதற்கு 1993-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் இருந்த ஒவ்வோர் அரசும் விடை சொல்லிலியே ஆகவேண்டும்.

ஆ) இவ்வகைப்பாடு முழுமையானது இல்லை.

இக்கருத்து சரியான ஒன்று என்றாலும் யாரும் இதை எழுப்பவில்லை.  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் இருக்கும் சாதிகளும் சமூகங்களும் ஒரேயளவில் பிற்படுத்தப்பட்டவை கிடையாது. இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகச் சென்றடைய வேண்டுமென்றால் அச்சமூகங்களின் சமூக நிலையில் உள்ள வேறுபாடுகளைத் "தேர்தலை' ஒதுக்கி வைத்துவிட்டுச் சிந்திக்க வேண்டும்.  "பிற்படுத்தப்பட்டோர்', "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்', "மிகமிகப் பிற்படுத்தப் பட்டோர்', "மீமிகு பிற்படுத்தப்பட்டோர்' ("பிச்சாடே', "ஆதி பிச்சாடே', "அத்தியந்த பிச்சாடே', "சர்வாதிக பிச்சாடே') என நான்கு வகைகளாகப் பிற்படுத்தப்பட்டோர் வகைப் படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்.  எவ்வித மரபு சார்ந்த திறமைகளும் சொத்துகளும் இல்லாத சாதிகளை "மீமிகு பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலிலில் சேர்க்க வேண்டும்.  "குற்றப் பரம்பரை' என்று முத்திரை குத்தப்பட்ட சாதிகளையும் துப்புரவுத் தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் சாதிகளையும் இப்பட்டியலிலில் சேர்க்கலாம். இச்சாதிகளுள் சில, இந்து மதத்தில் இருந்தால் தாழ்த்தப்பட்ட சாதிகள் பட்டியலிலில் இருக்கின்றன.  ஆனால் அதே சாதிகள் இஸ்லாமில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தாம் இருக்கின்றன. இந்து வால்மீகி, சீக்கிய மசாபி ஆகியவற்றிற்கு இணையாக இஸ்லாமில் இருக்கும் ஹலல்கோர், இலால்பெகி, மெதர், நற்று, ஜோகி ஆகிய சாதிகளும் இந்து, கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் இருக்கும் பிச்சை எடுக்கும் சாதிகள், பரதேசிச்சாதிகள் ஆகியன இன்னும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில்தாம் இருக்கின்றன.

"மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலிலில் மரபு சார்ந்த தொழில் திறமைகள் மட்டும் கொண்டிருந்து சொத்து ஏதும் இல்லாதோரைச் சேர்க்கலாம்.  கைவினை சார்ந்த தொழில்களைச் செய்யும் பெரும்பாலான சாதிகள் ஆகியன இப்பட்டியலிலின் கீழ் வரும்.  இஸ்லாமிய மதத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகள் பெரும்பாலானவை இப் பட்டியலிலில் வந்துவிடும்.

குத்தகைக்கு எடுத்து நிலங்களை உழும் உழவர்கள் சார்ந்த சாதிகளை "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலிலில் சேர்க்கலாம். மேல் சொன்ன மூன்று வகைகளிலும் வராத பிற்படுத்தப்பட்டோரை, அதாவது கொஞ்சமாவது சொத்துகளுடனும் உரிமைகளுடனும் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் வைக்கலாம்.

இந்நான்கு பிரிவுகளையும் ஒரே போட்டியில் ஒன்றாக ஓடவிட முடியாது.  இதை உணர்ந்துதான் கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உட் பிரிவுகளை ஏற்படுத்தி உள் ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்திருக்கின்றன. இவ்வகை ஒதுக்கீடுகள், இட ஒதுக் கீட்டின் பலனைச் சமூகம் முழுமையாகப் பயன்படுத்திச் சமூக நீதியை நிலைநாட்ட உதவுகின்றன.  இம்மாநிலங் களைப் போல வேறு சில மாநிலங்களும் உள் ஒதுக் கீட்டைக் கொண்டு வந்திருந்தாலும் அது முழுமையானதாக இல்லை. மைய அரசும் வட இந்தியாவின் சில மாநில அரசுகளும் வழக்கம் போல் மந்தமாகத்தான் இருக்கின்றன. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் திட்டக்குழுவின் பத்தாவது திட்டப் பணிக்குழுவின் தலைவராகவும் நான் இருந்த போது பிற்படுத்தப்பட்டோரிடையே உள்ஒதுக்கீடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன்.  ஆனால் அரசு வழக்கம்போல் மெத்தனமாகவே இருந்தது.

இ) சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இடஒதுக்கீடு மட்டுமே போதாது.

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இடஒதுக்கீடு என்பது இன்றியமையாத ஒன்றாகும். முன்னேறிய சாதி களுடன் சரிக்குச் சமமாகப் பொருளாதாரத்தில், கல்வி நிலையில், உடல்நலத்தில் என எல்லா நிலைகளிலும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வர வேண்டும் என்பதற்கான பணிகளில் இடஒதுக்கீடு என்பது ஒரு கூறு மட்டுமே!  எனவே அரசு தன்னை இடஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் சுருக்கிக்கொள்ளக் கூடாது;  அதைத் தாண்டியும் செயல்பட்டு சமூகநீதியை நிலைநாட்டப் பணியாற்ற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோருள் சிறுபான்மையினருக்குச் சிறப்பாக இஸ்லாமியருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை. எனவே அரசு உறுதியாகச் செயல்பட்டு நான்கு, ஐந்து பிரிவுகளாகப் பிரித்து உள் ஒதுக்கீட்டிற்கு வகைசெய்ய வேண்டும். இதற்கான தரவுகளை ஓரிரு மாதங்களில் எடுத்து விடலாம்.  உரிய காலத்தில் உள் ஒதுக்கீட்டைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாம்.  இத்துடன், பனிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் உரிய திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும்            அமைத்துச் சமூகநீதியை நிலைநாட்டுவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்ன செய்கின்றனவோ அதைத்தான் மக்கள் நினை வில் வைத்திருப்பார்கள் என்று கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் போதுமான அரசியல் விழிப்புணர்வு பெற்றுவரும் இக்காலத்தில் அக்கருத்து பொய்யானது எனப் பலமுறை நிறுவப்பட்டு விட்டது.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோர் என்று மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அவர்தம் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கும் போதுமான தரவுகள் தெளிவாக இருக்குமாயின் இப் பட்டியலிலில் இல்லாத ஏழைகளுக்கும் உரிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  போது மான தரவுகள் ஏராளமாக இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கவனிக்கப்படாமலேயே நீண்ட காலம் வைக்கப்பட்டிருக்கின்றன.                    =


 (கட்டுரையாளர்: பி.எஸ். கிருஷ்ணன் "மத்திய அரசுச் செயலாளராக 1990-ஆம் ஆண்டு இருந்தவர். தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் திட்டக் குழுவின் பத்தாவது திட்டப் பணிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர். அறுபது ஆண்டு களுக்கு மேலாகத் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மைச் சமூகங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குச் சமூக நீதி கிடைக்க போராடி வருபவர்.)

நன்றி: "பிரண்ட்லைன்' ஆங்கில மாத இதழ்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : karuppasamy Date & Time : 8/15/2012 5:42:47 PM
-----------------------------------------------------------------------------------------------------
குட் செய்தி
-----------------------------------------------------------------------------------------------------
Name : karuppasamy Date & Time : 8/15/2012 5:42:47 PM
-----------------------------------------------------------------------------------------------------
குட் news
-----------------------------------------------------------------------------------------------------