|
|
ஈரோட்டில் பெரும் வணிகரான வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மாள் தம்பதியரின் மகனான ஈ.வெ.ராமசாமி, ஈரோடு நகரமன்றத் தலைவராகப் பொறுப்பில் இருந்து மக்களுக்கானப் பல திட்டங்களை நிறைவேற்றி வந்தார். இந்தியாவில் முதன்முறையாக, குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஈ.வெ.ரா.பெரியார்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் இதன்மூலம் குடிநீர் கிடைக்கச் செய்தார். காந்தியடிகளின் தலைமையை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்ட பெரியார் ஈ.வெ.ரா, கதர் விற்பனை, கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரப் பணியாற்றியவர். சமுதாயத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் மனிதர் களிடையே பாகுபாடு உருவாக்கப்பட்டிருப்பதையும் பெரியார் எதிர்த்து வந்தார்.தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், கேரள மாநிலம் வைக்கத்தில் உயர்சாதியினர் மிகுந்துள்ள தெருவில், தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாட அனுமதிக்க வேண்டி நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். அவருடையப் போராட்டத்தின் காரண மாக, வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கு இருந்த தடை நொறுக்கப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிவந்த வர்ணாசிரம பேதங்கள்- வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் காட்டிய தயக்கம் ஆகியவற்றின் காரணமாக அக்கட்சியிலிலிருந்து விலகிய பெரியார், காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தான் கொண்டு வந்த வகுப்பு வாரி உரிமைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகினார். 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். "குடி அரசு' என்ற வார இதழையும் தொடங்கி நடத்தினார். மதம்-சாதி-கடவுள் இவற்றின் பெயரால் மக்கள் ஒடுக்கப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார். வகுப்புரிமைக்கான இயக்கங்களில் நீதிக்கட்சியினருடன் இணைந்து போராடினார். பெண்களை அடிமைப் படுத்தும் சமுதாயப் பழக்கங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பெண்களைக் கூலிலியில்லாத வீட்டு வேலையாளாகவும், பிள்ளைகள் பெறும் இயந்திரமாகவும் மாற்றிவைத்துள்ள நமது பண்பாட்டிற்கு எதிராகக் குரல் கொடுத்தார் பெரியார். அந்தக் காலத்தில் யாரும் சிந்திக்காத முற்போக்கு கருத்துகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன.குடும்பக்கட்டுப்பாடு பற்றிய தன்னுடைய கருத்துகளை 1928-லேயே வெளியிட்டு, பிரச்சாரத்தை மேற்கொண்டவர் அவர். எதிர்காலத்தில் சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகள் உருவாகும் நிலை ஏற்படும் என்பதால், பெண்கள் தங்கள் கர்ப்பப்பைகளை அகற்றிக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட துணிச்ச லானக் கருத்துகளை முன்மொழிந்தார். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் நடைபெற்ற முதல் சுய மரியாதை மாநாட்டில், குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். அதுபோலவே, பெயருக்குப் பின்னால் ஆண்கள் போட்டுக் கொள்ளும் சாதிப்பட்டத்தை விட்டொழிக்கும் தீர்மானத்தையும் செயல்படுத்தினார். நீதிக்கட்சி தன்னுடைய ஆட்சியை இழந்து, உள்கட்சிப் பூசல்களால் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், "இந்தத் தோல்வி நன்மைக்கே' என்ற கருத்தை வெளியிட்டு, அக்கட்சியை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாக மாற்றுவதில் அளப்பரிய பணிகள் செய்தவர் பெரியாரே. ""ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்ததால் நான் மகிழ்ச்சி அடைவதோடு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்கும் பார்ப்பனர் அல்லாத மக்களின் ஆதரவுக் கிடைக்கக்கூடும் எனக் கருதுகிறேன். சிதறிக் கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்யத் தோல்வி ஒரு சாதனமாகும்'' என்று பெரியார் எழுதினார். நீதிக்கட்சியின் தவறுகளை விமர்சித்தபடியே ஆதரித்தவர் அவர். அக்கட்சியின் பத்திரிகையான "திராவிடன்' இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பெரியார் இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை எப்படி நடைபெறுகிறது, சுயாட்சியில் கூடுதலாக என்னென்ன அதிகாரங்களை இந்தியர்களுக்கு அளிக்கலாம் என்பதற்காக 1927-ஆம் டிசம்பரில் சர் ஜான் சைமன் என்பவர் தலைமையிலான 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அமைத்து, அக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. சைமன் குழுவைக் காங்கிரஸ் எதிர்த்தது. நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் சைமன் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. எனினும், பெரியார் இந்தக் குழுவை வரவேற்றார். சுயாட்சி அதிகாரங்கள் குறித்து இக்குழுவினருடன் சந்திப்பு நடத்தவேண்டியது அவசியம் என்பது அவரது நிலைப்பாடு. பெரியாரின் கருத்துக்கே நீதிக்கட்சியினர் இறுதியில் இணங்கி வந்தார்கள். சைமன் குழுவை சந்தித்து, இந்திய அரசுக்குக் கட்டுப்படாத சுயாட்சிமிக்க மாகாண (மாநில) நிர்வாக சபை, மாகாண சட்டசபையில் ஒற்றையாட்சி ஆகியவற்றை வலிலியுறுத்தினர். சுயமரியாதை இயக்கத்தை நடத்திக்கொண்டே, நீதிக் கட்சியின் சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து வந்தவர் பெரியார். அவர் ஒரு வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியினருக்கும் நீதிக்கட்சியினருக்கும் அனுப்பினார். அதில், அனைவருக்கும் கல்வி- தீண்டாமை ஒழிப்பு-பெண்கள் முன்னேற்றம்-தொழிலாளர் நலன்-விவசாயிகளின் உரிமை- வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினருக்குமான பங்கு-நியாயமான வரிவிதிப்பு- உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்-மதுவிலக்கு ஆகியவை வலிலியுறுத்தப் பட்டிருந்தன. இந்த வேலைத் திட்டத்தை காங்கிரஸ் ஏற்க வில்லை. நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. பெரியாருக்கும் நீதிக் கட்சிக்குமான இணைப்பு மேலும் பலம் பெற்றது.நீதிக்கட்சியைத் தேர்தல் களத்தில் தோற்கடித்திருந்த காங்கிஸ் கட்சி, 1937-ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையை அமைத்தது. 1937-இல் நடந்த தேர்தல் என்பது, காங்கிரஸ் கட்சி எந்த சைமன் குழுவை எதிர்த்ததோ, அந்த சைமன் குழுவின் பரிந்துரையின்படி நடந்த தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிலிருந்து, அக்குழுவைத் தொலை நோக்கோடு பெரியார் வரவேற்றிருக்கிறார் என்பதும் விளங்கும். சென்னை மாகாணத்தின் தலைமை அமைச்சராக (பிரிமியர்) இருந்த ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி), 1938-இல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கி னார். இதனை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தினரும் தமிழறிஞர்களும் போராட்டத்தைத் தொடங்கினர். பெரியார் தலைமையில் மொழிப்போராட்டம் வேகமும் வலுவும் பெற்றது. கைது செய்யப்பட்ட பெரியாரும் அவருடைய தொண்டர்களும் வழக்காடவில்லை. நீதி மன்றத்தில் பெரியார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.""இந்த நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின்- அமைச்சர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் (நீதிபதி) பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர்கள். இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அமைச்சர்கள் அதிதீவிர வளர்ச்சியைக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் நியாய, அநியாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும் இந்தக் கிளர்ச்சியைத் திடீரென்று புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதன்மந்திரியார் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே, இந்தி எதிர்ப்பு விஷயமாக மந்திரிகள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் கருத்து.அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி நீதிமன்றங் களில் நியாயத்தை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகும். ஆதலால் இந்த நீதிமன்றத்தின் நியாயத்தில்- இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே கோர்ட்டார் அவர்கள் திருப்தி அடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இட முண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்க மாய்க் கேட்டுக் கொள்கிறேன்.எவ்வளவு நியாயமான இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காக கஷ்ட நஷ்டத்தை அடைதல் என்னும் விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். ஆதலால் அவ்வாறே வேண்டிக் கொள்கிறேன்''-இவ்வாறு துணிச்சலான அறிக்கையை நீதிபதியின் முன் வாசித்து, இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை பெற்ற பெரியார், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதே, அவர் நீதிக்கட்சித் தலைவராக 29.12.1938 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப்போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தானை தனி நாடாகப் பிரித்துக்கொடுக்க வெள்ளைக்காரர்கள் முடிவெடுத்தனர். அதுபோலவே, சென்னை மாகாணத்தை திராவிடநாடு எனும் தனி நாடாகப் பிரித்துத்தரவேண்டும் என்ற பிரகடனத்தை 1942-இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் வெளியிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றி, பல மாநாடுகளில் பங்கேற்றார். சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காகப் பெரியார் பாடுபட்டார். பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்த முஸ்லிலிம்லீக் தலைவர் முகமது அலிலி ஜின்னாவை ஆதரித்த பெரியார், சோசலிலிச இயக்கத்தவரான எம்.என்.ராய் அவர்களுடனும் இணைந்து செயலாற்றினார்.பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சூத்திர-பஞ்சம மக்களின் வாழ்வுரிமை, சிறுபான்மையினர் நலன், பொதுவுடைமை சமுதாயம், திராவிட நாடு ஆகியவற்றை முன்னிறுத்தி நீதிக்கட்சியை வளர்த்த பெரியார், அக்கொள்கைகளை இந்திய அளவில் கொண்டு செல்லும் முயற்சியாகவே பல தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.திருக்குறள் நெறியைப் பரப்ப பல மாநாடுகளை நடத்தியவர் பெரியார். தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான மாநாடுகளில் பங்கேற்றார். தமிழிசை மன்றங்களை ஆதரித்தார். இனம்-மொழி-சமுதாயம் என அனைத்து நிலையிலும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து ஒடுக்கப்பட்டோர் உரிமை பெறவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. பதவிகளுக்கு ஆசைப்படாத அவருடைய தன்னல மற்ற பணியே திராவிட இயக்கத்திற்கு புது வேகத்தைக் கொடுத்தது. 1940 மற்றும் 1942-களில் சென்னை மாகாண அரசின் தலைமைப் பொறுப்பை (முதல்மந்திரி பதவி) ஏற்கும் வாய்ப்பு பெரியாரைத் தேடி வந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத்தினரே இதை வலிலியுறுத்தினர். ஆனால், சமூக இழிவை அகற்றும் தமது பணிக்கு ஆட்சிப் பொறுப்பு இடையூறாக இருக்கும் என்று பதவி களைப் புறக்கணித்தவர் பெரியார். அழிவின் விளிம்பி லிலிருந்த நீதிக்கட்சியை ரசவாதம் செய்து, புதிய எழுச்சிக்குத் தமிழகத்தைத் தயார்படுத்திய சமுதாய விஞ்ஞானி என்று பெரியாரை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.1944-இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை, திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் தளபதியாக விளங்கிய அண்ணா அதனை முன்மொழிந்தார். அண்ணாதுரை தீர்மானம் என்றே அது நிறைவேற்றப் பட்டது. வெள்ளைக்காரர்கள் கொடுத்த சர் பட்டம், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களை நீதிக்கட்சி பிரமுகர்கள் துறக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. திராவிடர் கழகத்திற்கெனத் தனிக்கொடி உருவாக்கப் பட்டு, புதுவேகத்துடன் செயல்படத் தொடங்கியது. நீதிக் கட்சியைச் சேர்ந்த பி.டி.ராஜன் போன்ற சில தலைவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் பழைய பெயரிலேயே பெயரளவுக்கு இயங்கிய போதும், தொண்டர்கள் பெரியாரின் வழி சென்றனர். அவருடைய இயக்கம் சமுதாய விடுதலைக்காகவும் பகுத்தறிவு வளர்ச்சிக்காகவும் பாடுபட்டது. பெரியாரும் அவருடன் பொதுவாழ்வில் ஈடு பட்டவர்களும் கருஞ்சட்டை அணிந்து பணியாற்றினர்.மூடப்பழக்கங்களை ஒழிக்காமல் உண்மையான விடுதலையை அடைய முடியாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். சாதி-மதம்-கடவுள் இவற்றின் பெயரிலான மோசடிகளை அவர் எதிர்த்தார். புராணத்தில் உள்ள அறிவியலுக்கு ஒவ்வாத கற்பனைகளைச் சாடினார். அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தவும் அவர் அஞ்சவில்லை. சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்தார். சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தார். பார்ப்பன ஆதிக்கம் தகர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகப் போராடினார்.இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கிரிப்ஸ் தலைமையிலான தூதுக்குழுவை சந்தித்து, திராவிடநாடு கோரிக்கையை வலிலியுறுத்தினார் பெரியார். ஆனால் அதை அக்குழு ஏற்கவில்லை. 1947 ஆகஸ்ட் 15-இல் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிக்கப்பட்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டபோது, அதனைத் துக்க நாளாக அறிவித்தவர் பெரியார். இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலை இது அல்ல என்பதை அவர் அழுத்தமாக வலிலியுறுத்தினார். 1949-இல் அவர், மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். பெரியாருக்கும் மணியம்மை யாருக்கும் ஏறத்தாழ 46 வயது இடைவெளி.இது திராவிடர் கழகத்தில் புயலை உருவாக்கியது. கழகத்தில் பிளவு ஏற்பட்டது. தமிழக அரசியல் களத்தில் புதிய விதை ஊன்றப்பட்டது. (வரும் இதழில்-தி.மு.க தோற்றமும் இரட்டைக் குழல் துப்பாக்கிளாகச் செயல்பட்ட கழகங்களும்)
|
|
|
Name |
: |
stephenraj |
Date & Time |
: |
8/31/2012 10:26:07 AM |
-----------------------------------------------------------------------------------------------------
இன்றைய தேவை ஒரு பெரியார் அல்ல ஆயிரம் பெரியார் வேண்டும் தமிழனை காப்பாற்ற மூட நம்பிக்கையின் ஊற்றாக தமிழ்நாடு ஆகிவிட்டது -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Karuppasamy.B |
Date & Time |
: |
8/15/2012 5:42:47 PM |
-----------------------------------------------------------------------------------------------------
periyar pol seyal padavendum
udhaungal -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
pudhumaipiththan |
Date & Time |
: |
8/12/2012 1:59:57 PM |
-----------------------------------------------------------------------------------------------------
1925 ல் பெரியார் தேவையாக இருந்தது. அப்போதுகூட இந்து மத கொள்கைகள்தான் எதிர்க்கப்பட்டன. சுயமரியாதையின் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு செய்து ஒடுக்கியது நாசி ஜெர்மானியர்களை ஞாபகப் படுத்துகிறது. காலப்போக்கில் பெரியாரின் கொள்கை அரசிலாக்கப்பட்டு தற்காலத்தில் அவசியம் இல்லதாகப்பட்டது. -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Natarajan |
Date & Time |
: |
8/5/2012 1:55:14 PM |
-----------------------------------------------------------------------------------------------------
திருக்குறளில் எந்தக் கடவுளின் பெயரை திருவள்ளுவர் கூறியுள்ளார்? கடவுள் வாழ்த்து என்பது அவர் சூட்டிய தலைப்பே இல்லை என்று சில குறள் அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர் பஜனையோ பக்திப் பாடலோ இல்லாதது திருக் குறள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் போதே கடவுள் மூட்டைக் கட்டிக் கொண்டு போக வேண்டும். உலகம் பழித்ததை ஒழித்து வாழ்ந்தால் போதும் என்றவர் வள்ளுவர். மழித்தலும் நீட்டலும்( போலி வேடம்) வேண்டாம் என்றவர் வள்ளுவர். .திருக்குறளை புலவர்களின் பிடியிலிருந்து விடுவித்து பொது மக்களும் அறிய உதவியவர் பெரியார்.குறளுக்கு இணையான அற நூல் இவ்வுலகில் இல்லை. புத்தர் வள்ளலார், பெரியார் இவர்களுடைய கருத்துக்கள் ஒன்று போல் இருக்கும். புத்தர் மென்மையாகக் கூறினார். வள்ளலார் கடவுளர்களைப் பற்றி பிள்ளை விளையாட்டு ( பொம்மை வைத்து விளையாடுவது) என்றார். சம்மட்டி அடியாகத் தெரிவித்தது பெரியார் தான். மூட நம்பிக்கையில் அடிமையாக வாழ்ந்தவனுக்கு பெரியார் சொல்வது தான் புரியும். அவர் மணியம்மையை திருமணம் செய்தது சொத்துக்களை பொது மக்களுக்கு அளிக்கவே. ரமண மகரிஷி தன் சொத்தை உறவினருக்குத் தான் கொடுத்தார். யார் பெரியார்? -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
subramani |
Date & Time |
: |
8/4/2012 5:55:19 AM |
-----------------------------------------------------------------------------------------------------
பெரியார் மதம்-கடவுள் கருத்தை எதிர்த்தார். சரி அவர் ஒவ்வொரு மாநாடு நடத்தும்போதும்,தொடக்கம் திருக்குறள் மாநாடாகத்தான் தொடங்கினாரே .திருக்குறளில் முதல்பாடலே கடவுள்வாழ்த்துதானே.பெண்விடுதலையை பேசியவர் 46 வயது வித்தியாசமுள்ள இளம்பெண்ணை ஏன் மணந்தார்? -----------------------------------------------------------------------------------------------------
|
|
|