|
|
நாவல் - தொடர்ச்சி
8
அரசன் சந்திரகுப்தன் சோமதத்தையின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் பலமாக மூச்சுவிட முடியாத அளவிற்கு வந்த புகையின் வாசனையால் எழுந்தான். தன்னுடைய கண்களைத் திறக்காமலே, அவன் சோமதத்தையை அழைத்தான். எந்த பதிலும் வரவில்லை. பாதி மூடியிருந்த- தூக்கக் கலக்கத்துடன் இருந்த கண்களால் அவன் பார்த்தபோது, படுக்கையில் சோமதத்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் அறையைச் சுற்றிலும் பார்த்தான். ஆனால், அவன் கண்களில் அவள் தென்படவில்லை.அப்போது முழு அரண்மனையும் எழுந்து விட்டிருந்தது. பயந்துபோன பெண்கள் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்கள். வீடுகளில் வளரும் பிராணிகளும் பறவைகளும் பயத்தால் கத்திக் கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருந்த நெருப்பின் ஓசை மற்ற எல்லா சத்தங்களையும் அடக்கி, சுற்றிலும் இருந்த காற்றை வெப்பமாக்கிக் கொண்டிருந்தது. அந்த மரத்தாலான அரண்மனையில் எதையும் காப்பாற்றுவது என்பது இயலாத விஷயமாக இருந் தது. ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி- அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுவதுதான். அங்கிருந்த மக்கள் எல்லாரும் தங்களுடைய பொருட்களை வேகவேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அரசனோ அல்லது அரசியோ பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ- உயிருடன் இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. அவர்களுடைய முழுக் கவனமுமே அவர்கள் தப்பித்துச் செல்வதில்தான் இருந்தது.நெருப்பு மிகவும் வேகமாகப் பரவிக் கொண்டி ருந்தது. அது ஒரு இடம் முடிந்ததும் இன்னொரு இடத்திற்குப் பரவிச் சென்று கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. நெருப்பின் வெளிச்சத்தில் அமாவாசை இரவு கிழிந்து அழிந்து கொண்டிருந்தது. அந்த முழுப் பகுதியும் சிவப்பு நிறமாக ஆனது. தூரத்திலிருந்து அதைப் பார்க்க முடிந்தது. முதலில் மக்கள் அரண்மனையை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கத்திக்கொண்டே அதைச் சுற்றிலும் போய் நின்றார்கள். திடீரென்று சந்தோஷக் கூப்பாடுகளும் வெற்றி முழக்கங்களும் தூரத்தில் கேட்டன. கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் கத்தினான்: ""ஓடுங்கள்! ஓடுங்கள்... பகைவன் நகரத்திற்குள் நுழைந்துவிட்டான்.'' உடனடியாக மக்கள் கூட்டம் கலைந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. ஓடும் வழியில் இருந்த தடைக்கல்லில் மோதி பலர் தங்களின் கால்களை ஒடித்துக் கொண்டார்கள். பலர் மூச்சுவிட முடியாமல் இறந்தார்கள். துயரத்தால் உண்டான சலனமும் அழுகையும் கோட்டையிலும் அரண்மனையிலும் ஒலித்த வண்ணம் இருந்தது. இது இப்போது நகரமெங்கும் பரவிக் கொண்டிருந்தது.அந்தச் சமயத்தில் சோமதத்தை எங்கே இருந்தாள்?சோமதத்தை அரசி குமாரதேவியின் அரண் மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவளு டைய கூந்தல் சுதந்திரமாக கிடந்தது. அவளுடைய ஆடைகள் கலைந்து காணப்பட்டன. அரசியின் அரண்மனை அந்தச் சமயத்தில் நெருப்பிற்கு இரையாகாமல் இருந்தது. ஆனால், பணியாட்களும் பணிப்பெண்களும் காவலாளிகளும் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசியையும் அவளுடைய மகனையும் பாதுகாக்காமல் ஓடிவிட்டிருந்தனர். அரசி தன் மகனைத் தன்னுடைய கரங்களில் பிடித்த வண்ணம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள்.சோமதத்தை அவளைக் குலுக்கி எழுப்பிக் கொண்டே சொன்னாள்: ""என் அரசியே! தயவு செய்து எழுந்திருங்கள். அரண்மனையில் நெருப்பு பிடித்திருக்கிறது.''குமாரதேவி படுக்கையை விட்டு எழுந்து, தூக்கக் கலக்கத்துடன் கேட்டாள்: ""யார் அது?''""நான்தான் சோமதத்தை. இனிமேலும் தாமதிக் காதீர்கள். உடனடியாக எழுந்திருங்கள்.'' இதைக் கூறிக் கொண்டே அவள் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் சமுத்திரகுப்தனை தன் கைகளில் தூக்கினாள்.அதற்குள் குமாரதேவி எழுந்து விட்டிருந்தாள். அவள் சோமதத்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: ""என் மகனைத் தொடதே, பணியாட்கள் எங்கே?''""அவர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள்.''""அரண்மனையில் எப்படி நெருப்பு பற்றியது?''""நான்தான் அரண்மனைக்கு நெருப்பு வைத்தேன்.''அதற்குமேல் இப்போது மறைத்து வைப்பதற்கு எதுவுமில்லை. சோமதத்தை குமாரதேவியையே தைரியம் நிறைந்த கண்களுடன் பார்த்தாள்.குமாரதேவி உரத்த குரலில் கத்தினாள்: ""நீ... வேசி! ஒருநாள் நீ இதைச் செய்வாய் என்று நான் எதிர்பார்த்தேன். நீ புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு துறவியை உன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றபோதே உன்னுடைய திட்டத்தை நான் புரிந்து கொண்டேன்.''சோமதத்தை சொன்னாள்: ""அரசியே! உங்களுடைய கோபத்தில் ஒரு அப்பாவி மனிதனின் மீது பழி கூறாதீர்கள். அந்த புத்த துறவியால்தான் இப்போது உங்களைக் காப்பாற்ற என்னால் முடிந் திருக்கிறது. இப்போது வாருங்கள்... பிரதான அரண்மனை முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. நீங்கள் தாமதித்தால், என்னால் உங்களைக் காப்பாற்ற இயலாமல் போய்விடும்.''""நீ என்னைக் காப்பாற்றப் போகிறாயா? என்னை நானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?''""இல்லை... என் அன்பான அரசியே! இன்று மட் டும் தான் என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும்.''""நீ இதன் மூலம் என்ன சொல்ல வருகிறாய்?''""இதற்கு அர்த்தம்- சந்திரவர்மனின் படை நகரத்திற்குள் நுழைந்துவிட்டது. இந்த நேரத்தில் அரண்மனையின் எரியாத பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்திருப்பார்கள்.''குமாரதேவியின் கண்கள் ஒளிர்ந்தன. ""நீ... மாயஜாலக் காரி! நீதான் இதற்கெல்லாம் காரணம். உன்னால் மகத அரசே அழிந்துவிட்டது...''சோமதத்தை அமைதியான குரலில் கூறினாள்: ""நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நீ இதற்கு மேலும் தாமதித்தால், இளவரசரைக் காப்பாற்ற முடியாமலே போய்விடும். அரண்மனையை நெருப்பு எப்படி சுற்றி வளைத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.''திறந்திருந்த சாளரத்தின் வழியாக புகை வேகமாக நுழைய ஆரம்பித்திருந்தது.சோமதத்தை தன் கைகளில் இளவரசன் சமுத்திரகுப்தனை எடுத்துக் கொண்டே சொன் னாள்: ""இன்று நான் என் கணவரின் வாரிசை காப்பாற்றுகிறேன். அதற்காகத்தான் நான் இங்கே வந்தேன். நீங்கள் இங்கே இருக்க விருப்பப்பட்டால் இருக்கலாம். நான் போகிறேன்.'' இந்த வார்த்தைகளைக் கூறிக்கொண்டே, அவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.குமாரதேவி ஓடிச்சென்று அவளுடைய கரங்களைப் பற்றினாள்: ""நீ... பேயே! என் மகனை என்னிடம் கொடு.''சோமதத்தை அரசியை தன் கோபமுற்ற பார்வையால் எரித்து விடுவதைப் போல பார்த்துக்கொண்டே சொன்னாள்: ""மூளையற்ற பெண்ணே! உங்களுக்கு எது நல்லது என்பதையே புரிந்துகொள்ளத் தெரியவில்லையா? என் கணவரின் மகன் என்னுடைய மகனும்தானே? இந்த அரண்மனை என்னால் நெருப்பு வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் உங்களின் பிடிவாதத்தாலும் கர்வத்தாலும்... அதன் காரணமாக உங்களின் சொந்த கணவரையே நீங்கள் ஒதுக்கினீர்கள். இந்த நெருப்பில் நீங்கள் எரிய வேண்டும்.''சோமதத்தை இளவரசனைத் தூக்கிக் கொண்டு புகை பரவிவிட்டிருந்த வாசல்கள் வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். குமாரதேவி தன்னையே அறியாமல் அழுதுகொண்டும், அவளைத் திட்டிக்கொண்டும் சோமதத்தையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். தன்னுடைய படுக்கையறைக்குத் திரும்பி வந்த சோமதத்தை அங்கு அரசன் குழப்பமான அமைதியுடன் படுக்கையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறை முழுவதும் புகை நிறைந்திருந்தது. அறையின் நான்கு பக்கங்களிலும் இருந்த நான்கு விளக்குகளும் மங்கலாகத் தெரிந்தன.சோமதத்தை பதைபதைப்புடன் இளவரசனை அரசனின் மடியில் வைத்துவிட்டு, ஒரு வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்தாள். புகை மண்டலத்திற்கு மத்தியில்- தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றாலும், அவள் தர்மசக்கரம் என்று அழைக்கப்படும் வழிபடும் சக்கரத்தின் மையத்தில் இருந்த துவாரத்தைக் கூர்ந்து பார்ப்பதற்கு முயற்சி செய்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. அவள் தன்னுடைய குறியைத் தவற விட்டாள். அம்பு சுவரின்மீது போய் மோதியது. அடுத்த அம்போ தரையில் விழுந்தது. சோமதத்தை நம்பிக்கையை இழந்து தேம்பி அழுதாள். ரகசிய கதவு எந்தச் சமயத்திலும் திறக்காதா? பிறகு தன்னுடைய அன்பான கணவனையும் அவனுடைய மகனையும் அவள் எப்படிக் காப்பாற்றுவாள்?முன்னேறி வந்து கொண்டிருந்த நெருப்பால் அறை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமாகிக் கொண்டிருந்தது. அரசனும் குமாரதேவியும் பேசும் சக்தியை இழந்து, பார்வையாளர்களைப்போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சோமதத்தை தன்னுடைய உணர்வுகளை மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு, மீண்டும் மேற்கூரையின்மீது குறி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். புகை, கண்ணீர் ஆகியவற்றுக்கு மத்தியில் குறி வைப்பது என்பது மிகவும் சிரமத்திற்குரிய விஷயமாக இருந்தது. அவள் மிகவும் அக்கறை எடுத்து முயற்சி செய்தாள். இந்த முறை அம்பு சரியான இடத்தில் போய் மோதியது- மேற்கூரையிலிருந்த சக்கரத்தின் மையப் பகுதியில் இருந்த துவாரத்தில்! உடனடியாக சுவரில் ஒரு ரகசியக் கதவு திறந்தது. அப்போது இருண்ட சுரங்கப் பாதைக்குள் செல்லும் படிகள் தெரிந்தன. சோமதத்தை உணர்ச்சிவசப்பட்டு நின்றாள். சிறிது நேரம் அவள் தரையில் படுத்து அழுதாள். பிறகு வேகமாக எழுந்து குமாரதேவியிடம் சென்று சொன்னாள்: ""என் அரசியே! இப்போது உங்கள் கணவருடனும் மகனுடனும் இந்த சுரங்கப் பாதைக்குள் செல்லுங்கள். இது மிகவும் பழமையான, நகரத்திற்கு வெளியே எதிரிகளின் பார்வையிலிருந்து விலகி, கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் ஒரு மடத்தில் போய் முடியும். நீங்கள் அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுவிடலாம்.''சந்திரகுப்தன் சுரங்கப் பாதையின் ஆரம்பப் பகுதியையே வெறித்துப் பார்த்தான். அவன் சொன்னான்: ""தப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?''""எதிரிகள் நகரத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''அரசனும் அரசியும் இளம் இளவரசனுடன் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தார்கள். சோமதத்தை அரசனுக்கு கண்ணீர் மல்க ஒரு பிரியா விடை கொடுத்தாள். திடீரென்று சந்திரகுப்தன் தன்னுடைய சுயஉணர்விற்கு வந்தான். ""நீ எங்களுடன் வர வில்லையா, சோமதத்தை?''சோமதத்தை தன்னுடைய முகத்தை கைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டாள். ""இல்லை, என் அன்பிற்குரிய அரசே! நான் உங்களுடன் வரும் நிலையில் இல்லை. அரசி உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுவார். சந்திரவர்மன் என்னுடைய தந்தை. இதைத் தெரிந்துகொண்டு, என்னை மன்னித்துவிடும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் புறப் பட்டாக வேண்டும்... நான் இன்னொரு பாதையில் செல்கிறேன்.''சோமதத்தை பலவந்தமாக சுரங்கப் பாதையின் கதவை மூடியதும், இதயமே நொறுங்கிப் போகும் அளவிற்கு உரத்த குரலில் சந்திரகுப்தன் அழுதாள். சோமதத்தை அழுது கொண்டே அவள் கூறினாள்: ""நான் இறந்து விட வேண்டும்... நான் உங்களை இந்த வாழ்வுக்குப் பிறகு சந்திப்பேன். நாம் இருவரும் இந்தப் பிறவியில் இனி எப்போதும் சந்திக்க மாட்டோம்.''தரையில் உட்கார்ந்து கொண்டு, சோமதத்தை மனதில் கசப்பு உண்டாக தேம்பித் தேம்பி அழுதாள். ஆனால், அவளுடைய கண்ணீரால் அரண்மனையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.9
சந்திரவர்மனின் போர்ப்படை கவுதம் துவாரின் வாயிலின் வழியாக, அதன் தளபதி சந்திரவர்மனே முன்செல்ல கோட்டைக்குள் நுழைந்தது. நான் அங்கிருந்த காவலாளிகள் எல்லாரையும் அங்கிருந்து அகன்றுவிடும்படிக் கூறிவிட்டேன். அப்படியென்றால்தான் அங்கு ரத்தம் சிந்தாமல் இருக்கும்.சந்திரவர்மன் என்னைப் பார்த்துக் கேட்டான்: ""நீதான் துரோகியா?''அவனுடைய குரலின் தன்மையே எனக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய நன்மைக்காகத்தான் நான் என்னுடைய அரசனுக்கே துரோகம் செய்தேன். எது எப்படி இருந்தாலும், நான் பணிவான குரலில் சொன்னேன்: ""ஆமாம்... என் அரசரே! வெற்றி உங்களுக்குக் கிடைக்கட்டும்.''சந்திரவர்மன் தன் கொடூரமான கண்களால் என்னையே பார்த்தான். பிறகு சொன்னான்: ""எங்களை அரண்மனைக்குள் அழைத்துச் செல்.''நெருப்பில் எரிந்து கொண்டிருந்த அரண் மனைக்குள் அவனை அழைத்துச் செல்வதென்பது சிரமமான விஷயமாக இல்லை. அரண்மனையில் வாசலுக்குள் நுழைவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், அரசவை இருந்த இடத்திற்குச் சென்றோம்.அந்த இடத்திற்கு இன்னும் நெருப்பு பரவாமல் இருந்தது. அந்த அறை மிகவும் இருண்டதாகவும் ஆட்கள் யாருமே இல்லாமலும் இருந்தது. அரசனின் சிம்மாசனத்திற்கு அருகில் சோமதத்தை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.அவள் ஒரு மின்னல் கலந்த இடியைக் கொண்ட மேகத்தைப்போல காணப்பட்டாள். அவளுடைய நீளமான கறுத்த கூந்தல் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் நெற்றியில் சிவப்பு நிறத் தில் குறி வைத்திருந்தாள். அவளுடைய கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இருண்ட அரசவை படைவீரர்களால் விளக்கேற்றப்பட்டு வெளிச்சம் நிறைந்ததாக ஆனது. சோமதத்தை வேகமாக முன்னோக்கி வந்து, சந்திரவர்மனின் பாதத்தைத் தொட்டாள். சந்திரவர்மன் மிகுந்த பாசத்துடன்அவளையே பார்த்தான். பிறகு, மென்மையான குரலில் ""என் அன்பு மகளே!'' என்றான்.சோமதத்தை தழுதழுத்த குரலில், ""தந்தையே, நான் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டேன்.'' என்றாள்.சந்திரவர்மன் சொன்னான்: ""என் மகளே! நான் உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இந்த விலைமதிப்பற்ற கழுத்தில் அணியும் பதக்கத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டும்.'' அவன் ஒரு பதக்கத்தை தன் மார்பிலிருந்து எடுத்து சோமதத்தையிடம் கொடுத்தான்.சோமதத்தை கழுத்தில் அணியும் அந்தப் பதக்கத்தை வீசி எறிந்துவிட்டுக் கூறினாள்: ""எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். என் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் முடிந்துவிட்டன.''சந்திரவர்மன் ஆச்சரியம் மேலோங்க கேட்டான்: ""சந்திரகுப்தன் எங்கே?''""உங்களால் என் கணவரைப் பார்க்க முடியாது. அவர் அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டார்.''""அவன் எங்கே சென்றிருக்கிறான்?''""ஒரு ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக அவர் தப்பித்துச் செல்ல நான் உதவினேன்.''""நீ ஏன் அதைச் செய்தாய்?''""எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் இதற்கு மேலும் இங்கு இருந்தால், எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்துகொள்ள நேரிடும். அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை தந்தையே! நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஒரு பெண்ணுக்கு மதிப்புள்ளவையாக என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை எல்லாவற்றையும் ஒரு கொடூரமான மிருகம் என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டது.''அவள் வெறுப்பு நிறைந்த கண்களுடன் என் பக்கம் திரும்பினாள். அவள் என்னை நோக்கி விரலை நீட்டியவாறு சொன்னாள்: ""நான் எவற்றையெல்லாம் மதிப்பு உள்ளவையாக நினைத்தேனோ, அவற்றையெல்லாம் தனக்குத் தந்து விடும்படி இந்த கொடூரமான மிருகம் என்னை பலவந்தம் செய்தது.''என் மூளைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் ரத்தம் வேகமாகப் பாய்ந்தது. நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் உலகமே நின்றுவிட்டதைப்போல உணர்ந்தேன். ஒரு உறுமலுடன் சந்திரவர்மன் என்னை நோக்கி வந்து, என் தலைமயிரைப் பற்றி, தன்னுடைய இன்னொரு கையின் விரல்களைக் கொண்டு என் கண்களைப் பிடுங்குவதற்குத் தயாரானான்.குரூரமான ஒரு சிரிப்புடன் சோமதத்தை சொன்னாள்: ""தந்தையே! சற்று பொறுங்கள். நான் என்னுடைய பரிசைப் பெற விரும்புகிறேன். இந்த அரக்கனை இப்போது கொல்ல வேண்டாம். இவன் படிப்படியாக, வேதனை அடைந்து சாகட்டும். விஷத் தன்மை கொண்ட- முட்கள் முழுமையாக நிறைந் திருக்கும் கிணற்றுக்குள் கிடந்து இவன் மெல்ல மெல்ல சாகட்டும். புழுக்கள் தின்று கொண்டிருக்கும் அழுகிப்போன பன்றி மாமிசத்தை மட்டுமே இவன் சாப்பிடட்டும்...இவன் இறப்பதற்கு முன்னால், இவனுடைய கைகள் ஒரு குஷ்ட ரோகியின் கைகளைப்போல கீழே விழட்டும்... அதற்குப் பிறகுதான் என்னுடைய ஆன்மாவுக்கு சாந்தி உண்டாகும்.''சந்திரவர்மன் சொன்னான்: ""நீ சந்தோஷப்படும் வண்ணம், நான் அதைச் செய்வேன் என் மகளே!'' சில மனிதர்கள் என்னை தரையில் வீசி எறிந்து பிறகு கயிற்றால் கட்டினார்கள். சோமதத்தை எனக்கு அருகில் வந்து என் முகத்தில் மிதித்தாள். பிறகு அவள் சந்திரவர்மனை நோக்கித் திரும்பி, ""தயவு செய்து இப்போது ஒரு தந்தையின் கடமையைச் செய்யுங்கள்'' என்றாள்.சந்திரவர்மனின் குரல் இடறியது. ""நான் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விருப்பப்படுகிறாய்?'சோமதத்தை சொன்னாள்: ""என்னுடைய பிறப் பிற்கு நீங்கள்தான் பொறுப்பு. இப்போது நீங்கள் இந்த உடலை அழியுங்கள்.''சந்திரவர்மன் ஒரு சிலையைப்போல நின்று விட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மெதுவான குரலில் சொன்னான்: ""சரி...''""என் ஆன்மா புனிதமானது- அதை இந்த அசுத்தமான உடலிலிருந்து தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்'' என்றாள் சோமதத்தைஅவள் தன் தந்தைக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். சந்திரவர்மன் உறுதியான குரலில் சொன்னான்: ""என்னையே பாருங்கள்! என் மகளின் உடல் அசுத்தமானதாக ஆகி வெறுப்பிற்கு இலக்காகிவிட்டது. நான் அதை அழிக்கிறேன்.''அவன் தன்னுடைய ஈட்டியை அவளுடைய மார்பைக் குறி வைத்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தான். சோமதத்தை பயமே இல்லாத கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.நான் பயந்துபோய் கண்களை மூடிக்கொண்டேன்.நான் மீண்டும் கண்களைத் திறந்தபோது- அங்கிருந்த வெள்ளை நிற பளிங்குத் தரையில் சோமதத்தையின் உயிரற்ற உடல் ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைப் பார்த்தேன்.பின்கதைபாடலிபுத்திரத்தின் அரண்மனைக்கு அருகில் இருந்த பாதி வறண்டு போயிருந்த ஒரு கிணற்றில் நான் வீசி எறியப்பட்டேன். கிணற்றின் வாய்ப் பகுதி ஒரு பலமான இரும்பு வலையால் மூடப்பட்டிருந்த என்னுடைய இடுப்புப் பகுதி வரை கிணற்றின் வழவழப்பான நீருக்குள் மூழ்கியிருக்க, நான் அடுத்த மூன்று மாதங்களும் அங்கேயே வாழ்ந்தேன். பாம்புகளும் தவளைகளும் மட்டுமே என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள். ஒரு உயர்நிலை பணிப் பெண் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த சுத்திகரிப்புப் பெண்ணுடன் வருவாள். அந்த தாழ்ந்த இனப் பெண் புழுக்கள் தின்று கொண்டிருக்கும் பன்றியின் மாமிசத்தை நான் சாப்பிடுவதற்காக கிணற்றுக்குள் எறிவாள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வினோத மான நட்பை உண்டாக்கிக் கொண்டேன். தான் அவளுக்கு லஞ்சம் தருவதாகக்கூட கூறினேன். இங்கிருந்து நான் தப்பிப்பதற்கு எனக்கு அவள் உதவினால், அவளுக்கு பத்தாயிரம் பொற்காசுகளைத் தருவதாகக் கூறினேன். ஆனால் பயந்துபோன அந்தப் பணிப்பெண் என்னைத் திட்டிவிட்டு ஓடிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் அங்கு வரவே இல்லை.நான் இந்த நரகத்தில் இருந்துகொண்டு சோமதத்தையை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். அவள் சந்திரவர்மனால் ஒரு ஒற்று வேலை செய்யும் பெண்ணாக அமர்த்தப்பட்டாள். சந்திரகுப்தனின் அரண்மனைக்குள் அவள் எப்படியோ நுழைந்துவிட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் தன் கணவன்மீது இந்த அளவுக்கு ஆழமான காதல் கொண்டவளாக ஆவோம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய தந்தை கோட்டையைக் கைப்பற்றப் போகும் செயலுக்கு உடந்தையாக இருப்பதன் மூலம் தன் கணவனுக்கு துரோகம் செய்வது என்பது அவளைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. குமாரதேவி தன் கணவன் மீது மிகுந்த வெறுப்புடன் இருக்கிறாள் என்பதும், எல்லா வகையிலும் அவனை அவள் பொருட்படுத்தவே இல்லை என்பதும் அவளுக்குத் தெரியும். சோம தத்தையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி கோட்டையை தன் தந்தையிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும் என்பதில் தெளிவான முடிவை மனதில் எடுத்திருந்தாள். ஆனால், தன்னுடைய சேவைகளுக்கான பரிசாக தன் தந்தையிடம் அதைத் திரும்பவும் கேட்டுப் பெறவேண்டும் என்று அவள் தீர்மானித்திருந்தாள். அதற்குப் பிறகு பாடலிபுத்திரத்தின் அரசனாக தன் அன்பிற்குரிய கணவனை ஆக்குவது என்று அவள் முடிவெடுத்திருந்தாள். குமாரதேவியின் பலமும் கர்வமும் அழிந்துவிடும். அதற்குப் பிறகு சந்திரகுப்தனுடன் சேர்ந்து கமாராணியாக சோமதத் தையே ஆட்சி செய்வாள்.ஆனால், என்னுடைய காமவெறி அவளுடைய திட்டங்களை அழித்துவிட்டது. அவள் மிகப்பெரிய தொல்லையில் சிக்கிக் கொண்டாள். அவள் ஒரு ஒற்று வேலை பார்த்த பெண் என்ற உண்மை தெரிந்தால், அவளுடைய அன்பிற்குரிய கணவனிடம் உண்டாகும் வெறுப்பையும் நம்பிக்கையற்ற தன்மையையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. தன்னைப் பற்றிய எந்த விஷயமும் சந்திரகுப்தனுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் அவளுடைய முழு எண்ணமும். அப்படியென்றால் மட்டுமே, அவள்மீது அவன் கொண்டிருக்கும் காதல் சிறிதும் பாதிப்படையாமல் இருக்கும். அவள் என்னுடைய திட்டத்தின்படி நடந்தாள். ஆனால் சந்திரகுப்தன், குமாரதேவி, அவர்களுடைய மகன் சமுத்திரகுப்தன் ஆகியோர் ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக தப்பித்துச் செல்வதற்கு அவள் உதவினாள். தன்னுடைய உண்மையான காதலி அவள் என்ற தெளிவான தீர்மானத்துடன் எப்போதும் சந்திரகுப்தன் இருக்கும்வரை, சோமதத்தை இறப் பதற்கு பயப்படவில்லை. எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் ஒரு பெண்ணின் மனம் செயல்படுகிறது என்பதே வினோதமான விஷயம்தான்! தன்னுடைய அன்பிற்குரிய கணவனின் கண்களில் தான் எப்போதும் காதல் தேவதையாக நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டாள்.நம்முடைய முந்தைய பிறவிகளில் நமக்குத் தெரிந்தவர்களை, இந்தப் பிறவியில் நாம் சந்திக்க நேர்வதுண்டு என்பதை நான் நம்புகிறேன். சோமதத்தையை நான் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், நான் உடனடியாக அவளை அடையாளம் கண்டுகொள்வேன். ஒருகாலத்தில் அவள் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் அவள்மீது கொண்டிருந்த அளவற்ற வெறியை அவளுடைய புதிய வாழ்க்கையின் புதிய தோற்றம் சிறிதும் தணித்துவிடாது.ஆனால், அவள் என்னை அடையாளம் தெரிந்துகொள்வாளா? அவள் முகத்தைச் சுளிக்க மாட்டாளா? இப்போது அவள் என்னைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய உதடுகள் வெறுப்பால் இறுகாதா? நான் எதை விரும்புவேன் என்பது எனக்குத்தான் தெரியும்!
|
|