|
|
பாரசீக ரோஜாக்களைப் பாருக்குத் தெரியும். அதன் வசீகரமும், வாசகரமும் மனித மனங்களை ஈர்ப்பன. ரோஜா என்பது இதழ் விரிக்கும் காந்தம் அல்லவா!"வியாபாரிகளே... வியாபாரிகளேரோஜாக்களை விற்றுஎன்ன வாங்குவீர்கள்ரோஜாக்களைவிட உயர்வானதாய்'என்று ஒரு பாரசீகக் கவிஞன் வினா தொடுக்கிறான். ரோஜாக்களின் பாரசீக தேசத்தில் மலர்ந்த கவிஞர் களின் கவிதை மணம், இலக்கிய உலகில் காலமெல்லாம் கமழ்கிறது.இமாம் சாஅதி, நிஜாமி, ரூமி என வளமிகு கவிஞர்களின் வரிசையில் தனித்துவமாய் பிரகாசிக்கும் ஒரு கவிஞர் ஃபிர்தவ்சி... ஃபிர்தவ்சியின் இயற்பெயர் அபுல்காசிம் ஹசன். பிரம்மாண்டமான ஒரு கவித் துவம் உள்ளிருப்பதை அவரது பிள்ளைப் பருவமே பிரகடனம் செய்தது. நாளும் இன்னிசையில் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர் பிள்ளைப் பருவத்தில் கவிபாடி பிரமிக்க வைத்தவர் என்பர். அபுல்காசிம் ஹசனுக்கும் அவ்வாறே ஒரு ஞானசம்பந்தம். குறும்புகள் விளையும் அரும்பு மீசைப் பிராயத்திலேயே அபுல் காசிம் ஹசனுக்கு கரும்புச்சுவைக் கவிதை கள் மனமெங்கும் விளைந்தன. அபுல்காசிம் எப்படி ஃபிர்தவ்சி ஆனார்?அபுல்காசிமின் தந்தைக்கு ஒரு தோட்டம் இருந் தது. அது அழகான தோட்டம். அந்தத் தோட்டம்தான் அபுல்காசிமின் கவிதை மனதிற்கு எப்போதும் நாட்டம்."எனது தேசம் ஒரு பூந்தோட்டம்நாங்கள் இந்தத் தோட்டத்தின் புல்புல் பறவைகள்'என்று பாடினார் மகாகவி அல்லாமா இக்பால். (பாடல்- சாரே ஜஹான்சே அச்சா)இந்தியாவின் இக்பாலுக்கு தேசம் ஒரு தோட்ட மாய்த் தெரிந்தது.பாரசீக அபுல்காசிமிற்குத் தோட்டம்தான் தேசமாக இருந்தது.அந்தத் தோட்டத்திற்குப் பெயர் ஃபிர்தவ்ஸ். ஃபிர்தவ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு சொர்க் கத்துத் தோட்டம் என்று பொருள்.தோட்டத்தில் மனம் விதைத்து, கவி வளர்த்த அபுல்காசிம் ஹசன் தோட்டத்தின் பெயரையே தன் பெயராக்கிக் கொண்டார். அதன்பிறகு ஃபிர்தவ்சி என்ற பெயரில் பிரபலமானார். ஃபிர்தவ்சி என்றால் சொர்க்கவாசி. வாசித்தால் சொக்க வைக்கும் வரிகளை மலர்த்தும் ஃபிர்தவ்சி பெயரால் சொர்க்கவாசியாக இருந்தார். ஆயினும் வாழ்க்கை முழுதும் அவர் வதைபட நேர்ந்தது. அவரது வலி கள் வரிகளாயின. ரணங்களே ஆபரணங்கள் ஆயின.கவியரசு கண்ணதாசன் தன் சுயசரிதையில், ""நான் தயாரித்த "கவலையில்லாத மனிதன்' என்ற படம்தான் என் கவலைகள் அனைத் திற்கும் காரணமானது'' என்றார். பெயரில் சுவர்க்கத் தைக் கொண்டிருந்த ஃபிர்தவ் சிக்கு, வாழ்க்கை சுவர்க்கமாய் அமையவில்லை. வறுமை அவரை வாளால் கீறியது. பசியோ அவரைப் பரிதவிக்க வைத்தது.காசு தருவோர்க்கு கவி எழுதிக் கொடுத்து வாழ நேர்ந்த வறிய நிலை.கொடிய வறுமையின் குடியிருப்பாகிவிட்ட ஃபிர்தவ்சியின் வாழ்வில், வசந்தம் ஒருநாள் வாசல் திறந்தது. அது, பாரசீக அரசரின் அவைக்களப் புலவரான அன்சாரியின் நட்பு.அன்சாரி என்றால் உபகாரி என்று பொருள். அதிகார பீடத்தில் அமர்ந்திருந்தாலும் அவர் அதிகாரி போல் இல்லாமல் உபகாரியாகவே இருந்தார். ஃபிர்தவ்சியின் கவியாற்றலும், அறிவாற்றலும் அவரை காந்தம் போல் கவர்ந்தன. பாரசீக மன்னர் மஹ்முது, அந்நாட்டு அரசர்களின் வாழ்வை கவிதைச் சரிதமாய் வரைந்து தர தலைமை அவைப் புலவர் அன்சாரியிடம் வேண்டியிருந்தார்.அரசரின் வேண்டுகோளை நிறைவேற்றும் ஆற்றல் தனக்கில்லை என நம்பினார் அன்சாரி. காலத்தால் அழியாத காவியமாய் அதை வடித்துத் தரப்போகும் வரகவிக்காய் அவர் காத்திருந்தார்.ஃபிர்தவ்சியைப் பார்த்ததும் அன்சாரிக்கு நம்பிக்கைப் பிரவாகமானது. ""பாரசீக அரசர்களின் சரித்திரங்கள் தெரியுமா?'' என்றார் அன்சாரி. ""அரசர் களின் சரித்திரங்கள் என் மனம் என்னும் விளைநிலத்தில் விதைகளைப் போல் உறங்குகின்றன'' என்றார் ஃபிர்தவ்சி.அரசரிடம் ஃபிர்தவ்சியை அழைத்துச் சென்றார் அன்சாரி. தன்மீது ஒரு பாடல் பாடுமாறு கேட்டார் மன்னர்.அந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த கவிக்குயில் கூவியது.பாரசீகத்தில் பாடாண்திணையை செழிக்க வைத்த ஃபிர்தவ்சியின் பாடலில் மஹ்முது அரசர் மனம் பறிகொடுத்தார். அரச வரலாறுகளைப் பாடும் பணியை ஃபிர்தவ்சியிடம் வழங்கினார். ஒரு பாடலுக்கு ஒரு தங்கக்காசு என ஊதியமும் நிர்ணயித்தார். அரண் மனைக்கு அருகிலேயே அந்த மகாகவிக்கு காவியம் எழுதுவதற்கென ஒரு மாளிகை எழுப்பப்பட்டது. காவியச்சூழல் ஏற்படுத்துவதற்காக, சுவர்களில் நாட் டின் தலைசிறந்த ஓவியர் களால் காட்சிகள் வரையப் பட்டன.காடுகளும், வனங்களும், அருவிகளும், அழகிய சோலைகளும், போர்க் களங்களும் சுவர்களில் உயிரோவியமாய் உருவாகின.எட்டாண்டுகள் கவிதை யாய்க் கழிந்தன. நான்கு பாகங்கள் பாடி முடித் திருந்தார். அறுபதாயிரம் பாடல்கள் ஜொலித்தன. கேட்போர் மனதில் தங்கும் வரிகள். பெறப்போகும் சன் மானத்தால் அவை தங்க வரிகளும்கூட. தனது காவியத் திற்கு "ஷா நாமா'. (அரசகாவியம்) என்று பெயரிட்டார் ஃபிர்தவ்சி.ஒரு கவிஞன் அரசரிடம் இவ்வளவு செல்வாக்கு பெற்றதைக் கண்டு தலைமை அமைச்சர் அபுல் காசிம் அஹ்மது மனம்புழுங்கினார். எழுதுகோலால் தங்கச் சுரங்கம் தோண்டும் ஃபிர்தவ்சிக்கு எதிராக, பொழு தெல்லாம் கோள் சொல்லி அரசரின் புத்தியைக் கெடுத்தார்.தற்காலிகமாக கொடுங்"கோள்' வென்றது. எழுது கோல் தோற்றது. அறுபதாயிரம் தங்கக் காசுகளுக்கு பதிலாக வெள்ளிக்காசுகளை அனுப்பினார் அரசர். ஒரு பொதுக்குளியலறையருகே ஃபிர்தவ்சி இருந்த போது, அறுபதாயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து அரசரின் பணியாள் கவிஞரிடம் வழங்கினார்.காசு கொண்டு வந்தவனுக்கு கையளியாக 20 ஆயிரம் வெள்ளிக்காசுகளைத் தந்தார். அங்கே சர்பத் விற்றவனை அழைத்து அவனுக்கு 20 ஆயிரம் காசு கொடுத் தார். குளியலறைக் காவலாளியிடம் மீதி 20 ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார். பையை வீசியெறிந்தார். அரசனுக்கு அஞ்சி தலைமறைவானார்.தனக்கு மிக வேண்டிய ஒருவர் மூலம் "ஷா நாமா'வை எடுத்துவரச் செய்து அதில் அரசரைப் பற்றி "அறம்' பாடினார்.(அறம் பாடுதல்- சபித்துப் பாடுதல்)"எட்டி மரத்தைசொர்க்கத்தில் நட்டாலும்வானதியின் நீரையே ஊற்றினாலும்அதன் கிளைகளில்தேனைக் கொட்டினாலும்அதன் இயல்பான குணம்மாறாது.அரசரின் ரத்தத்தில் கண்ணியமில்லை' என்று அழகு தமிழில் ஃபிர்தவ்சியின் கவிதை களை மொழிபெயர்த்துள்ளார் கவிக்கோ அப்துல் ரகுமான். காலங்கள் சுழன்றோடின.ஒருநாள் மன்னரின் அவையில் ஒருவர் கவிதை பாடினார்.அந்தப் பாடலின் அழகில் மஹ்முது மன்னர் மனம் பறிகொடுத்தார். அந்தக் கவிவரிகளின் முகவரியை விசாரித்தார். பாடியவர் ஃபிர்தவ்சி; பாடல் இடம் பெற்ற நூல்- "ஷா நாமா' என்ற விவரம் கிட்டியது. அது மன்னரின் மனசாட்சியைத் தட்டியது.ஃபிர்தவ்சி தனது சொந்த ஊரில் வறுமையில் வாடுவதையும், மகளுக்கு மணம் செய்து வைக்க முடியாமல் தவிப்பதையும் அரசர் விசாரித்து அறிந்தார்.உடனே அறுபதாயிரம் பொற்காசுகளை ஃபிர்தவ்சியின் சொந்த ஊருக்கு அனுப்பினார்.அரசரின் பொற்காசுகள் அவர் வீட்டை அடையும் முன் அவரது உயிர்ப்பறவை கூட்டைப் பிரிந்தது. ஃபிர்தவ்சியின் மகளும், தந்தையின் தன்மானத்தை மதிக்காத அரசரின் சன்மானத்தை நிராகரித்துவிட்டார். "என் தந்தையின் புதைகுழியை நிரவ அரசன் அனுப்பிய பொன்மண் இவை என்று கூறி புறந்தள்ளினாளோ' என்பார் கவிக்கோ. ஃபிர்தவ்சியின் மரணம், தங்கக்காசுகளைப் பார்த்து ஏளனமாய்ப் புன்னகைத்துவிட்டது. இலக்கியச் செழுமை மிகுந்த "ஷா நாமா' எழுதிய ஃபிர்தவ்சி, வறுமையிலேயே வாழ்வை முடித்தார். புவியரசன் அந்தக் கவியரசனை வாழவைக்கவில்லை. அந்தக் கவியரசனோ மன்னர் பரம்பரையையே வரலாற்றில் வாழவைத்துவிட்டான்.
|
|