பதிவுகள்
சின்னக்குத்தூசியார் நினைவு அறக் கட்டளையின் முதலாம் பரிசளிப்பு விழா, சின்னக்குத்தூசியாரின் 78-ஆவது பிறந்த நாளான ஜூன் 15-ஆம் தேதி சென்னை நூலகத் துறை கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் விசித்திரச் சூழலிலில் நடந்தது. முறைப்படி தேவநேயப் பாவாணர் அரங்கில் விழா நடத்த அனுமதி பெற்றும் விழாநாளில் திடீரென அனுமதியை ரத்து செய்துவிட்டனர். அனுமதி பெற்ற இடத்திலேயே விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் சின்னக்குத்தூசி அறக்கட்டளையினர் அவசர முறையீடு செய்ய, நீதிமான் சந்துருவோ, "சின்னக்குத்தூசி என்ற பத்திரிகையாளர் தன் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ளாமல், சுமார் 65 ஆண்டு களுக்கும் மேலாக திருவல்லிலிக்கேணியில் ஒரு மேன்சன் அறையில் புத்தகங்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தவர். அவர் கடந்த 50 ஆண்டு களாக இளம் பத்திரிகையாளர்களின் என்சைக்ளோபீடியாவாகவே இருந்துள்ளார் என்றெல்லாம் சின்னக்குத்தூசியாரை பூஞ்சொற் களால் புகழ்ந்துவிட்டு, அப்படிப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரது பெயரில் இளம் பத்திரிகையாளர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து விழா நடத்தி உதவிகள் செய்வதைத் தடுப்பது சரியல்ல. அரங்கத்தில் விழா நடத்த மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டார். இருந்தும் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் பாவாணர் அரங்கைப் பூட்டிவிட்டுச் சென்றனர். எனவேதான் அங்குள்ள வாகன நிறுத்து மிடத்தில் மைக்குகளும் விளக்குகளும் இல்லாமல் அந்த வெளிச்ச விழா இருட்டில் நடத்தப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் நக்கீரன் கோபால் வரவேற்புரை நிகழ்த்த, சங்கொலிலி க. திருநாவுக்கரசு தலைமையில் விழா இனிதே தொடங்கியது. இந்த விழாவில், 50 ஆயிரம் ரூபாயுடன் கூடிய வாழ்நாள் சாதனையாளர் விருதை புலவர் வெற்றியழகனுக்கும், 10 ஆயிரம் ரூபாயுடன் கூடிய சிறந்த கட்டுரைகளுக்கான பரிசுகளை பழ. அதியமான், சி. இலக்குவன், இரா. உமா ஆகியோருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் தலைவர் இரா. நல்லகண்ணு வழங்கி சிறப்பித்தார். பரிசு பெற்றவர்களைப் பாராட்டி திருச்சி செல்வேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி போன்றோர் உரையாற்றினர். அ.நா. பாலகிருஷ்ணன் நன்றி நவில, சோதனைகளுக்கு மத்தியிலும் அந்த சாதனை விழா சிறப்புற நடந்தேறியது.