அண்மைச் செய்திகள்
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது || காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்) ||
Logo





                   றவையின் சிறகொன்று உதிர்ந்து விழுவது போன்ற கனவு அதிகாலை தூக்கத்தைக் கலைத்தது.

கட்டிலை விட்டு இறங்க முயன்றபோதுதான் அதை கவனித்தேன். என் அறை முத்தங்களால் நிறைந்திருந்தது. இதுவரை நான் கொடுத்த முத்தங்களும், பெற்ற முத்தங்களும் ஒரு கூட்டமாய் அறையின் மூலையில் அணிவகுத்திருந்தன. கண்ணீர்த் துளியைப்போல சுருங்கிப் போயிருந்த வயோதிக முத்தமொன்று தலைமையேற்பது போல முன்னால் நிற்க, மற்ற எல்லா முத்தங்களும் அதன்பின் ஒரு பேரணியைப் போல வரிசையாக நின்றன.

     
                       www.haihoi.com               
அசுத்தம் நிறைந்து அழுக்குத் துணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைந்து கிடக்கும் அறையில், புகைத்துப் போட்ட சிகரெட் துண்டுகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கில் முத்தங்கள் அணிவகுத்து நின்றது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சமீபநாட்களாக நான் முத்தங்களால் நிராகரிக்கப்பட்டவனாக இருக்கிறேன். எல்லா உறவுகளும் ஒரு தனித்த அறையில் என்னை அடைத்துவைத்துவிட்டு என்னைக் கடந்து போய்விட்டன.


வயோதிக முத்தம் சன்னமான குரலிலில் பேசத்துவங்கியது. நான் உற்றுக் கவனித்தேன். ""யாரும் வன்முறையைக் கையில எடுக்கக்கூடாது. நம்ம கோரிக்கை களை அமைதியான முறையில எடுத்துச் சொல்லணும். அவனுக்கு நாம யாருன்னு புரியவைக்கறதுதான் நம்ம நோக்கம்.'' வயோதிக முத்தத்தின் கருத்துக்கு செவிசாய்ப்பது போல எல்லா முத்தங்களும் அமைதி காத்தன. முத்தங்கள் என்னை நோக்கி தங்கள் அணிவகுப்பைத் துவங்கின. நான் அமைதியாக சுதந்திர தின அணிவகுப்பைப் பார்வையிடும் ஜனாதிபதி போல பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பேரணியில் ரகசிய முத்தம், திருட்டு முத்தம், வன்முறை முத்தம், பொய் முத்தம், புணர் முத்தம், காதல் முத்தம், துரோக முத்தம், தோழமை முத்தம், பிரிவு முத்தம், தாய்மை முத்தம், தவிப்பு முத்தம் என முத்தங்களின் எல்லாசாதியும் இருந்தது.

முதல் வரிசையில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த முத்தம் எனக்கு சுவையான பழைய நினைவுகளைக் கொடுத்தது.

அது என் பால்யம் கடந்து நான் கொடுத்த முதல் காதல் முத்தம். அதற்காக நான் நிறைய பொய் சொல்லிலி இருக்கிறேன். "உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது; உன்னைத்தவிர யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை; நீ இன்றி நானில்லை' என்பது போன்ற எத்தனையோ பொய்கள். மற்ற எல்லா முத்தங்களுக்குமான பொய்களுக்கு அந்தப் பொய்தான் பயிற்சிக்களமாக இருந்தது.

அந்த முத்த மனுஷி மெட்ராஸிலிலிருந்து வந்திருந்தாள். ஹரியின் வீட்டில் கொலுவைத்திருந்த நாள். கொலுவை வேடிக்கை பார்க்கப்போனபோதுதான் அவள் பாடிக்கொண்டிருந்தாள்.

""பண்டூரீத்தி.. கொலுவ... வியவைய்ய... ராமா
பண்டூரீத்தி... கொலுவ.... வியவைய்ய.... ராமா
துண்டவிண்டிவாணீ.... முதலைன..... மாதா
குலகோடினேலு குல செய்யு நீவு..''

ஒரு பாவாடை, சட்டை போட்டபடி அவள் பாடியபோது காதில் கிடந்த வளையம் தாளத்திற்கேற்ப ஆடியது. பதினைந்து வயது மனதிற்குள் அவள் புரிந்த வேதிவினை மாற்றம் இன்றளவிலும் புரியாத புதிர்.

அன்றுமுதல் தினமும் ஹரி வீட்டுக் கொலுவில் ஆஜரானேன். மறுநாள் அவள் "எந்தரோ மகானுபாவுலு' பாடியபோது நான் கொலுக் கூட்டத்தில் கடைசி ரோவில் அமர்ந்திருந்தேன். தினமும் அவள் பாடுவதை மணிமுத்தாறு கரையில் பாடி பயிற்சி எடுத்துக்கொண்டேன்.



கொலுவின் கடைசி நாள்.

ஹரி, ""இது திவ்யாடா'' என அவளை அறிமுகம் செய்து வைத்தான். அவள் பாடிய பாடலை அவளுக்கே திருப்பி பாடிக் காட்டியபோது வியந்தாள். ""அய்... சுதி சுத்தமா பாடறே... கத்துட்டியா?'' என்றாள். ""ஆமா, நீதான் என் குரு. பத்து நாளா கொலுவுக்கு வந்து கத்துக்கிட்டேன்'' என்றேன்.

அன்றுமுதல் அவள் என் பொருட்டு பாடத் துவங்கினாள். அவள் மீண்டும் மெட்ராஸ் போகப் போகிறாள் என்கிற பிரிவுத்துயர் பற்றி நான் பேசத் துவங்கி னேன். அவளுக்குள் பிரிவு பற்றிய ஒரு தவிப்பை ஏற்படுத்தினேன்.

ஒரு நாள் காலையில் கோலம்போட வந்தபோது எதிர்த் திண்ணையில் அமர்ந் திருந்த என்னைப் பார்த்து அதிர்ந்தாள். இருவரும் முடுக்கு வழியாக தொழுவத்திற்குள் சென்றோம். பொழுது மெல்ல விடிந்து கொண்டிருந்தது. தண்ணீர்த் தொட்டியின்மீது அமர்ந்தோம். வழக்கமாக நாங்கள் பாடும் இடம்.

தண்ணீரைக் கையால் அளைந்தபடி, ""ஏன் இவ்வளவு அன்பு செலுத்தறே'' என்றாள். ""இது அன்பில்லை காதல்'' என்றேன். ""நீ ஊருக்குப் போற வரை உன்னை பாத்துட்டே இருக்கணும்போல இருக்கு'' என்றேன். அவள் கண்கலங்க,  ""எனக்கும் உன்னைப் பிரிய கஷ்டமா இருக்கு'' என்றாள். அவள் விரல்களில் ஒட்டியிருந்த கோலமாவு என் விரல்களில் கோலமிட்டது.

""நீயில்லாத பொழுதுகள் எப்படி இருக்கும்னு யோசிச்சே பாக்கமுடியல'' என்றேன். அவள் அமைதியாக இருந்தாள். அந்த அமைதி என்ன சொன்னாலும் தலையசைக்கிற அமைதி. அவள் இளமைக் கூட்டிற்குள் கல்லெறிகிற அமைதி. கல்லெறிவதற்கு முன் அவளை இன்னும் நெகிழ்த்தும் விதமாக நான் பாடத் துவங்கினேன். "மானஸசஞ்சரரே..ப்ரம்ஹரி மானஸ சஞ்சரரே'. ஒருவிதமான தவிப்போடு பாடலைக் கேட்டபடி இருந்தாள் திவ்யா.

""இந்தப் பாட்டு மட்டும்தான் உன் ஞாபகமா எங்கிட்ட இருக்கும்.'' அவள் அமைதியாக இருந்தாள். இதுதான் தருணம். அவள் கைகளைக் கோர்த்துக் கொண்டேன். ""சென்னை போயிட்டேன்னா என் ஞாபகம் உனக்கு வருமா?''

அவள் அமைதியாக இருந்தாள். ஊர் விழித்துக் கொள்வதற்கு முன் அவளை முத்தமிட்டுவிட வேண்டுமென்கிற தவிப்பு என்னுள் பரபரவென இருந்தது.

நான் அவளை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

""இப்படியே பாத்துட்டிருந்தேன்னா எனக்கு அழுகை வந்துரும்'' என்றாள். நான் சட்டென அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டேன். ஒரு சிறு எதிர்ப்போ, அதிர்ச்சியோ அவளிடம் இல்லை. ஒரு கணம் தாமதித்திருந்தால் அவளேகூட முத்த மிட்டிருப்பாள் போல. அத்தனை ரசனையோடு முத்தம் அனுபவித்தாள். முத்தத்தின் ருசி அவள் கண்களில் வழிய, ""தேங்க்ஸ்டா'' என்றவள் வெட்கத்தோடு விலகினாள்.

நான் சிரித்தபடியே, ""பொய் வெட்கமே ஆகாது; முத்தத்தில் ஓர் விளக்கேற்று'' என்றேன். பெருமகிழ்வோடு அவள் அழுத்தமாகக் கொடுத்த முத்தத்தில் அந்தப் பொழுது விடிந்தது.


அந்த இளஞ்சிவப்பு முத்தம்தான் முதல் வரிசையில் வந்து கொண்டிருந்தது. அதையொட்டி நிமிர்ந்த நடையோடு வந்த முரட்டு முத்தத்தைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். அது ஒரு திருட்டு முத்தம். அந்த முத்தம் ஒருவேளை பேசத் துவங்கினால் இன்றைக்கு என்மீது இந்த சமூகத்தில் இருக்கும் மரியாதையை கிழித்து எறிந்துவிடும். இப்போது நான் நுட்பமாக முத்தங்களைக் கவனிக்கத் துவங்கியிருந்தேன்.

அது ஒரு அமைதிப் பேரணியைப்போல தெரிந்தாலும் என்னை அச்சுறுத்தும் நோக்கம் நிறைந்த ஊர்வலமாகவே இருந்தது. நான் சந்திக்க விரும்பாத பல முத்தங்கள் கூட்டத்திற்குள் இருந்தன.

"பெருந்தீயாய் எனை எரிக்கிறது நான் பெறத் தவிக்கும் முத்தம்.' இது நான் முத்தங்கள் குறித்து கடைசியாக எழுதிய கவிதை. முத்தங்களுக்கும் எனக்குமான கடைசி உறவும் அதுதான். என்னைக் கேள்வி கேட்கும் அளவிற்கோ, என்மீது குற்றம் சுமத்தும் அளவிற்கோ, நான் முத்தங்களை அவமானப் படுத்தியவன் இல்லை.

வாழ்க்கையில் முதல்முறையாக முத்தங்கள் குறித்த பயம் என்னுள் எழுந்தது. ஆண்டவனே முத்தத்தால்தான் காட்டிக் கொடுக்கப்பட்டான். முத்தத்தின் துரோகம்தான் அவனை சிலுவை சுமக்க வைத்தது.

சில விஷ முத்தங்கள் இன்றளவிலும் காமத்தின் துரோகங்களை பதிவு செய்து கொண்டுதான் இருக் கின்றன. சரி, என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்கிற மனநிலைக்கு வந்தேன் நான். முத்தங்கள் என் காலடியில் தங்கள் பேரணியை முடித்துக் கொண்டன.

வயோதிக முத்தம் தொண்டையைச் செருமிய படி என் அருகில் வந்தது. ""நான்தான் உன் ஆதி முத்தம். ஒரு செவிலிலிப் பெண் பனிக் குடத்தின் ஈரப் பிசுபிசுப் போடு என்னை உனக்கு அளித்தாள்'' என்றது. நான் அமைதியாக இருந்தேன்.

""முத்தத்தில் துவங்கி முத்தத்தில் அடங்குவது தான் வாழ்க்கை. உன்னைப்போல போலிலி மனிதர்கள் இதை மறுப்பவர்களாக இருக்கிறீர்கள். எங்களை மறுப்பதும் மறப்பதும் உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் பூட்டும் விலங்கு'' என்றது.

முத்தமிட்ட கணங்களுக்குப் பிறகு எழும் பேரமைதியைப்போல முத்தங்களுக்கும் எனக்கு மிடையே ஒரு நீண்ட அமைதி நிலவியது.

முன் வரிசையில் நின்ற முரட்டு முத்தமொன்று வயோதிக முத்தத்தைத் தாண்டி என் முன்னே வந்து நின்று. ""என்னைத் தெரிகிறதா?'' என்றது. குசும்புத் தனம் மிக்கதாக இருந்தது அந்தக் கேள்வி.

நான் மறக்க இயலாத முத்தம்தான் அது. அந்த முத்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் உடலெங்கும் ஒரு குற்றப்பெருக்கு பரவும். நான் அந்த முத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு சிறிய முத்த மொன்று ஆதரவாக என் தலைகோதியது. நான் மெல்ல தலைதிருப்பி அந்த முத்தத்தைப் பார்த்தேன். அது ஸ்நேகமாக சிரித்தது.

முரட்டு முத்தம் விடுவதாகயில்லை, மீண்டும் தன் கேள்வியைத் துவங்கியது. ""நான் உனக்கு எப்படிக் கிடைத்தேன் என்று யோசித்துப் பார்'' என்றது. என் முகத்தில் ஒரு பேரச்சம் பரவியது. வெகு காலத்திற்கு முன் என்மீது காறி உமிழப்பட்ட எச்சில் இப்போதும் உறைந்திருப்பதாகப்பட்டது.

முத்தங்களுக்கு முன்னால் நான் மண்டியிட்டுக் கிடப்பதாக உணர்ந்தேன். இந்தச் சூழ்நிலை இறுக் கத்திலிலிருந்து ஏதாவது ஒன்று என்னை மீட்டெடுத்தால் பரவாயில்லை எனத் தோன்றியது. என் தலையை வருடிக் கொடுத்த அந்த சிறிய முத்தத்தைத் தேடினேன். அது தூரத்தில் விளையாடியபடி இருந்தது.

வயோதிக முத்தத்திற்கு என்மேல் இரக்கம் பிறந் திருக்க வேண்டும் அல்லது அது என் நிலையை அறிந்ததாக இருக்க வேண்டும். அது என்னைக் காப்பதன் பொருட்டு மீண்டும் பேசத்துவங்கியது.

""நீ முத்தங்களை என்னவாக பார்க்கிறாய்?'' என்றது.

வயோதிக முத்தத்திற்கு பதில் சொல்வதன் மூலம் முரட்டு முத்தத்திடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் என் பார்வையை அதனை விட்டு விலக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வயோதிக முத்தத்திற்கு பதில் சொல்லத் துவங்கினேன்.

""முத்தம் அன்பின் வெளிப்பாடு.''

""இல்லை. நீங்கள் அப்படிப் பார்க்கவில்லை. உங்களைப் பொருத்தவரை முத்தம் காமத்தின் திறவு கோல்.''

நான் மூர்க்கமாக வயோதிக முத்தத்தின் கருத்தை மறுத்தேன். ""அன்பின் வெளிப்பாடுதான் முத்தம்.''
""முத்தம் அன்பின் வெளிப்பாடு எனில் முத்தங் களை ஏன் யாசகம் பெறுகிறீர்கள். முத்தங்களுக்காக சுயமரியாதையை விட்டுத்தருகிறீர்களே.. அது எதற்காக?''

இப்போது எனக்கு முத்தத்துடனான விவாதத் தில் ஒரு சுவாரசியம் வந்திருந்தது. நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

வயோதிக முத்தம் நிதானமான குரலிலில் மீண்டும் பேசத்துவங்கியது.

""மனிதர்கள் முத்தம் குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள்.''

""இல்லை. மனிதர்கள் எப்போதும் முத்தங்களை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.''

     
வயோதிக முத்தத்திற்கு நான் குறுக்கே பேசியதில் கோபம் வந்தது. ""என்னைப் பேசவிடு. கேள்விகள் கேட்கும்போதுமட்டும் பதில் சொன்னால் போதும்'' என்றது. எல்லா முத்தங்களும் அமைதியாக இருக்க, தூரத்தில் விளையாடியபடி இருந்த சிறு முத்தம் மட்டும் சிரித்தபடி, ""சண்டை போடாதீங்க, சண்டைன்னா எனக்கு பயம்'' என்றது.


வயோதிக முத்தம் சிரித்தது. ""நன்றாகப் பார், நாங்கள் அனைவரும் உன்னால் தரப்பட்டதும் பெறப் பட்டதுமான முத்தங்கள்தான். இங்கு அன்னிய முத்தங்கள் எதுவுமில்லை. இதில் காமம் இல்லாமல் அன்பாய் நீ கொடுத்த முத்தங்களை எண்ணிச் சொல் பார்ப்போம்.''

நான் ஒரு பரந்த பார்வையோடு முத்தங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு முத்தத்திற்குப் பின்னாலும் ஒரு பெண்ணின் பிம்பம் ஒளிந்திருந்தது. தந்தை கொடுத்தது, தாய் கொடுத்தது, குழந்தை கொடுத்தது என ஒன்றிரண்டு முத்தங்கள்தான் விதிவிலக்காக இருந்தன. தோல்வியை ஒப்புக் கொள்ளும் ஒரு அமைதியோடு நான் எதுவும் பேசாமல் இருந்தேன்.

""ஆகச்சிறந்த உன் ஆண் நண்பர்கள் யாரையா வது நீ முத்தமிட்டிருக்கிறாயா?''

""இல்லை. ஆண்கள் மீதான அன்பை முத்தங் களால் வெளிப்படுத்தும் மரபு எங்களிடம் இல்லை. மரபுகளைக் கட்டுடைக்கும் சிலர் வேண்டுமானால் அது போன்ற முத்த ஆர்வலராக இருக்கலாம். முத்தங் கள் குறித்த புரிதல் உள்ள என் போன்றவர்கள் அந்தத் தவறைச் செய்வதில்லை.'' நான் இதைச் சொன்னபோது என்னுள் ஒரு கம்பீரம் இருந்தது. குற்றமற்ற ஒரு மனோபாவத்திலிலிருந்து அந்த வார்த்தை கள் வெளிப்பட்டதாக உணர்ந்தேன்.

வயோதிக முத்தம் என் அருகே வந்தது. இப்போது அதன் பார்வையில் இதுவரை இல்லாத கனிவு இருந்தது. ""என் வயதை ஒப்பிடுகையில் நீ ஒரு பச்சிளம் குழந்தை. நீ என்றில்லை- முத்தங்களுக்கு முன்னால் எல்லா மானுடங்களும் குழந்தைகள்தான். மானிடத் தவறுகளை மன்னிக்கும் கடவுளின் மனது எப்போதுமே முத்தங்களுக்கு உண்டு.''

""உண்மையைச் சொல்வதானால் தவறு உங்களிடம் இல்லை. இந்த உலகின் முதல் முத்தமே ஒரு தவறால் வழங்கப்பட்டதுதான். விலக்கப்பட்ட கனியை புசித்த தால் கொடுக்கப்பட்ட ஆதிமுத்தம் ஒரு அறியாமையின் வெளிப்பாடு. அந்தத் தவறுகளின் நிழல்தான் உலகெங் கும் வழங்கப்படும் ஒவ்வொரு முத்தமும்.'' வயோதிக முத்தம் மூச்சுவாங்க இதைச் சொல்லிலிமுடித்தபோது

எனக்கு ஆசுவாசமாக இருந்தது. என் மீதான தனிப்பட்ட கோபம் முத்தங்களுக்கு இல்லை. அவை பொதுவான ஆவலாதிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ள வந்திருக் கின்றன என்று நினைத்தேன்.

போர் நிறுத்த அறிவிப்பு செய்துவிட்டு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் நடத்தும் பேச்சு வார்த்தையைப் போலத்தான் இருந்தது- வயோதிக முத்தத்திற்கும் எனக்குமான பேச்சுவார்த்தை.

""பொதுவாக நீங்கள் மனிதர்கள்மீது வைக்கும் குற்றச்சாட்டு என்ன?'' ஒரு நேர்காணலைப்போல நான் முத்தங்களைக் கேள்வி கேட்கத் துவங்கினேன்.

""எங்களைத் தருவதற்கும் பெறுவதற்கும் பொய் களை மூலதனமாக்காதீர்கள்.'' இதைச் சொல்லிலியபடியே சிறு முத்தத்தை எடுத்து, ""இது நீ உன் குழந்தைக்குக் கொடுத்த முத்தம். இது எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது பார்.. எல்லா முத்தங்களும் இதுபோலவே இருக்க ஆசைப்படுகிறோம். ஆனால் மனிதர்கள் கண நேர கிளுகிளுப்பிற்காக எங்களைக் களங்கப்படுத்தி விடுகிறார்கள்.''

""முத்தங்கள் களங்கப்பட்டதாகச் சொல்வது எனக்குப் புதிய செய்தியாக இருக்கிறது. தவிரவும் முத்தங்கள் மனிதர்களுக்கு ஒரு குற்றவுணர்ச்சியை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். மனிதர்களை முத்தங்கள் ஒருபோதும் ஆளுமை செலுத்தக்கூடாது.''

""இது ஆளுமையல்ல; கோரிக்கை.. உங்கள் துரோகத்தின் துர்வாடையால் சீழ்பிடித்துக் கிடக்கிறோம்.. அதை எங்களால் தாங்க இயலவில்லை. கடற் கரையில் சிறுகுழந்தைகளின் பார்வையில் படும்படியாக முத்தமிட்டுக் கொள்வது காதலர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமானதாக இருக்கலாம். அது முத்தங்களுக்கு தர்மசங்கடமான தருணம்.''

""நீங்கள் குற்றப்படுத்தும் நோக்கத்தோடு வந்திருக்கிறீர்கள். உங்களைப் பெற்ற கணங்களெல்லாம் அற்புதமானவை. அவற்றை நினைத்தபடிதான் எல்லோ ரும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கோரிக்கையோ குற்றச்சாட்டோ உங்கள் வாதங்களில் எந்த அர்த்தமும் இல்லை. தயவுசெய்து போய்விடுங்கள். நேர விரயத்தை நான் வெறுக்கிறேன்'' என்றேன்.

முரட்டு முத்தத்திற்கு சட்டென கோபம் வந்தது. ""நடுத்தெருவில் சிறுநீர் கழிக்கும் மனிதர்களிடம் நாம் பேச வந்தது தவறு'' என வயோதிக முத்தத்திடம் சொன்னது. எல்லா முத்தங்களும் புறப்படுவதற்கு ஆயத்தமாகின. எனக்கு அது ஒரு விடுதலை எண்ணத் தைக் கொடுத்தபோதும் வயோதிக முத்தத்தின் துயரம் செறிந்த முகம் காண வருத்தமாக இருந்தது.

நான் அமைதியாக இருந்தேன்.

முத்தங்கள் திரும்பிச் செல்கையில் வரும்போது இருந்த ஒழுங்கு இல்லை. எல்லாம் கலைந்து சென்றன. சிறிய முத்தம் என் கன்னத்தில் அழுத்தமாக தன்னைப் பதிய வைத்துவிட்டுச் சென்றது.

வயோதிக முத்தம் ஒரு தடுமாற்றத்தோடு என் அருகே வந்து, ""கடைசியாக ஒன்று சொல்கிறேன்.

அதை மட்டுமாவது புரிந்துகொள். மனிதர்கள் முத்தங் களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ராஜபக்சே தன் மண்ணை முத்தமிட்டபோது அந்த முத்தத்தில் லட்சம் உயிர்களின் ரத்தம் கலந்திருந்தது. அதுதான் இந்த உலகில் முத்தங்களுக்கு நேர்ந்த பேரவமானம்.'' இதைச் சொல்லிலிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வேகமாக என்னைக் கடந்து மறைந்தது வயோதிக முத்தம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : subramani Date & Time : 7/24/2012 4:08:32 PM
-----------------------------------------------------------------------------------------------------
ராஜபக்சே தன் மண்ணை முத்தமிட்டபோது அந்த முத்தத்தில் லட்சம் உயிர்களின் ரத்தம் கலந்திருந்தது. அதுதான் இந்த உலகில் முத்தங்களுக்கு நேர்ந்த பேரவமானம்.'' என்ற கருத்து உண்மை.அதைவிட தமிழ் இனத்துக்கு நேர்ந்த பேரவமானம் என்பதுதான் பேருண்மை.
-----------------------------------------------------------------------------------------------------