அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
Logo





              ரசியல் இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் காலத்தின் போக்கிற்கேற்ப அந்த இயக்கத்தின் கட்டமைப்பும் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அன்றைய சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் பெருமளவில் இருந்த பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களுக்கானத் திட்டங்களைத்தான் நீதிக் கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது. என்றாலும், பெரும்பான்மை மக்களிடம் அந்தக் கட்சிக்கெனத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. படித்தவர்கள்-பணக்காரர்கள்-வரிசெலுத்துவோர் இவர்களுக்கு மட்டுமே அன்று வாக்குரிமை இருந்ததால் அவர்களிடம்தான் நீதிக்கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. பின்னர் அதிலும் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.

நீதிக்கட்சியின் மூன்று முக்கியத் தலைவர்களில்  ஒருவரான டி.எம் நாயர், 1919-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் நாள் லண்டனில்  மரணமடைந்தது அந்த இயக்கத்திற்குப் பேரிழப்பாகும். பார்ப்பனரல்லாத வர்களுக்குத் தனி தொகுதி ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பெறுவதற்காகத்தான் அவர் லண்டன் சென்றார். ஆனால், உடல்நலக்குறைவால் அந்தக் கோரிக்கையை இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் வலியுறுத்துவதற்கு முன் பாகவே லண்டன் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது மறைவிற்குப்பிறகே, மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான முதல் பொதுத்தேர்தல் 1920-இல் நடைபெற்றது.

தேர்தல்களில் நீதிக்கட்சி வெற்றிபெற்று 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒற்றுமையான செயல்பாடுகள் இல்லை. நீதிக் கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த டாக்டர் நடேசனை, அமைச்சரவையில் சேர்க்காமல்  புறக்கணித்தனர். அதில் அவருக்கு மனவருத்தம் இருந்தது. நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில் தமிழர்களில் ஒருவருக்கும் இடமில்லை என்பது கட்சியிலிருந்த தமிழ்த்தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

கட்சியின் தலைவரான சர் பிட்டி  தியாகராயருக்கும் நடேசனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மனக் கசப்புகளும் இருந்தன. இரண்டாவது (1923) தேர்தலில் நடேசனுக்கு நீதிக்கட்சி சீட் தரவில்லை. அவர் சுயேச்சை யாகவே போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் நடேசனார் தோற்கடிக்கப்படவேண்டும் என பிட்டி தியாகராயரும், பிட்டி தியாகராயர் தோற்கடிக்கப்படவேண்டும்  என நடேசனாரும் விரும்பிச்  செயல்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்குக் கட்சித் தலைவர்களிடையே கசப்பான போக்குகள் இருந்துள்ளன. ஆனால், இருவருமே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.


தனி மனிதர்களிடையிலானக் கசப்புகள் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் தடையாக அமைந்தன. இது உட்கட்சிப் பூசலையும் வளர்த்தது. டாக்டர் நடேசனைப் போலவே ஓ.கந்தசாமி செட்டி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்துத் தலைவரான எம்.சி.ராஜா போன்றோரும் அதிருப்தியுற்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகம்,சென்னை மாகாண மக்களை பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரித்திருந்தனர். இவர்களில் நீதிக்கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனரல்லாதார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர் களின் கோரிக்கை என்பது பார்ப்பனர்களைப் போல தங்களுக்கும் வேலைவாய்ப்பு-பதவி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு வேண்டும் என்பதே. தாழ்த்தப்பட்ட சமுதாயத்துத் தலைவர்கள் பலரும் நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாத தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினர். நீதிக்கட்சியின் சார்பில் ஆதிதிராவிடர்களுக்கென்று சிறப்பு மாநாடுகள் நடைபெற்றன. எனினும், கட்சியில் தங்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், தங்களின் கோரிக்கைகளை நீதிக்கட்சி ஆட்சி நிறைவேற்றவில்லை என்றும் கூறி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்து  தலைவர்கள்  அக்கட்சியிலிருந்து விலகும் சூழலும் ஏற்பட்டது. 

1925-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-இல் சர்.பிட்டி தியாகராயர் மறைந்தார். நீதிக்கட்சிக்குப் பல வகைகளிலும் அவரது மறைவு பெரும் இழப்பாகும். 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி டாக்டர் நடேசன் காலமானார். தனது  முயற்சியால் உருவான நீதிக்கட்சியில் தனக்கு உரிய அந்தஸ்து கிடைக்கவில்லை என்ற மனவருத்தத்தி னுடனேயே அவர் மறைந்தார். இவையனைத்தும் நீதிக்கட்சிக் குள்ளேயே நடந்த பின்னடைவுகளாகும்.



அதே நேரத்தில், இந்தியாவில் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்தி வந்தது. அக்கட்சிக்கான ஆதரவு பல தரப்பு மக்களிடமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தியத் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு சமுதாயத்தினர் காந்தியை மகாத்மா என்று அழைத்தனர். காந்தி என்ற சொல் மந்திர சக்திபோல் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், நீதிக்கட்சி தோன்றக் காரணமாக இருந்த பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் விவகாரம் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பலமாக எதிரொலித்தது.

வகுப்புவாரி உரிமைக்காகக் காங்கிரஸ் கட்சியில் பெரியார் ஈ.வெ.ரா குரல் கொடுத்து வந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரசின்  தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவர். 1924-ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள ஒரு தெருவில் ஈழவர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்கு உயர்சாதியினர் அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்துப் பல கட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டும் அனுமதி கிடைக்காத நிலையில், வைக்கத்திற்குச் சென்ற பெரியார், அப்போராட்டத்தை  முன்னின்று நடத்தி சிறை சென்றார். அவரது உறுதியானப் போராட்டத்தின் காரணமாக, அந்தத் தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்துசெல்லும் உரிமையைப் பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் சேரன்மா தேவியில் வ.வே.சு அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்குத் தனிப் பந்தியும் மற்ற மாணவர்களுக்குத் தனிப் பந்தியும் எனப் பிரித்து  சாப்பாடு போடுவதை அறிந்து, அதனை எதிர்த்தும் கட்சிக்குள் போராடினார் பெரியார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் பலரும் பெரியாரை ஆதரித்தனர். நீதிக்கட்சியின் கொள்கைக் குரல் காங்கிரசுக்குள்ளும் கேட்கும் காலமாக அது இருந்தது. நீதிக்கட்சியைவிட காங்கிரஸ் கட்சிக்கு பொது மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வந்த நிலையில், இத்தகையப் போராட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கவனத்தைப் பெற்றன.

www.haihoi.com 
பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த சர், ராவ் பகதூர், திவான் பகதூர் பட்டங்களை நீதிக்கட்சித் தலைவர்கள் ஏற்றிருந்தனர். அந்தக் காலத்தில் அவை ஒரு கௌரவமாக இருந்தன. பெரும் பணக்காரர்களாகவும் பட்டாடை-ஜரிகை குல்லாய் அணிந்து ஆடம்பர வாழ்க்கைக் குரியவர்களாகவும் நீதிக்கட்சி தலைவர்கள் இருந்ததைக் காங்கிரஸ் கட்சியினர் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கி வந்தனர். நீதிக் கட்சியினர், வெள்ளைக்காரர்களின் துதிபாடுபவர்களாக இருப்பதாக அவர்கள் விமர்சித்தனர்.


காங்கிரஸ் என்பதே வெள்ளைக்காரரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்புதான். கால வளர்ச்சியில் அது சுதந்திரப் போராட்ட இயக்கமாகப் பெயர் பெற்றது. காந்தியின் தலைமை அதற்கு பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நீதிக்கட்சிக்காரர்கள் போலவே பணக் காரர்கள். ஆடம்பரமானவர்கள். வெள்ளைக்காரர்கள் கொடுத்த பட்டங்களைப் பெற்றவர்கள். மேலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள். எனினும்,காந்தி முன்னிறுத்திய கைராட்டை, கதராடை ஆகியவற்றை அவர்கள் ஏற்றதுடன், வெள்ளைக்காரர்கள் கொடுத்த பட்டங்களையும் திருப்பிக் கொடுத்தனர். இதனால் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்ற அடையாளத்துடன் அவர்கள் நீதிக்கட்சியினரைக் கடுமையாக விமர்சித்தார்கள். இவையும் நீதிக்கட்சியின் செல்வாக்கைச் சரித்தன.

தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவைக் காங்கிரஸ் கட்சி தாமதமாக எடுத்தது. இதன் காரணமாக  1937-இல் நடந்த பொதுத்தேர்தலில், சென்னை மாகாணத்தில் மொத்த மிருந்த 215 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 159 இடங் களில் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி 21 இடங்களை மட்டுமே பிடித்தது. நீதிக்கட்சியின் பெருந்தலைவர்களான பொப்பிலி அரசர், பி.டி.ராஜன், ஏ.பி.பாத்ரோ போன்ற பலரும் பெருந் தோல்வி அடைந்திருந்தனர். அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் காமராஜர், ராஜாஜி, பத்தவத்சலம், வி.வி.கிரி, டி.பிரகாசம் போன்றவர்கள் வெற்றி பெற்றது, தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படையாகக் காட்டியது.

நீதிக்கட்சியின் செல்வாக்கு சரிந்திருந்த நேரத்தில், அக்கட்சியின் சார்பில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர் சர். ஏ.டி.பன்னீர்செல்வம். அமைச்சரவை அமைப்பது குறித்து  காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கத் தாமதமானதால், மூன்று மாதகாலத்திற்கு நீதிக்கட்சியின் இடைக்கால ஆட்சி அமைந்தது. அதில் ஏ.டி.பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்து உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனித்தார். பின்னர், அமைச்சரவை அமைப்பது என காங்கிரஸ் மேலிடம் முடிவு  செய்ய, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை சென்னை மாகாணத்தில் அமைந்தது.

காங்கிரஸ் அரசு அமைந்த நேரத்தில், செல்வாக்கு சரிவு பெற்றிருந்த நீதிக்கட்சியில் மெல்ல ஒரு மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புவாரி உரிமைக்கானத் தீர்மானம் திட்ட மிட்டுத் தோற்கடிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த மாநாட்டி லிருந்து வெளியேறினார் பெரியார். காங்கிரசை எதிர்ப்பதே தன் இலட்சியம் எனக் கூறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் வகுப்புவாரி உரிமை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றில் இணைந்து செயல்பட்டன. பெரியாரும் தேர்தல் களத்தில் நீதிக்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ததோடு, அந்தக் கட்சியின் தலைவர்களிடம் உள்ள குறைகளையும் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டினார். நீதிக் கட்சி மாநாடுகளில் பெரியார் பங்கேற்றுப் பேசினார். தேர்தலில் நீதிக்கட்சி பெற்ற தோல்வியை, இதுவும் நன்மைக்கே என்றும், இந்தத் தோல்வியால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும்  வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார். தோல்வியின் மூலம் கிடைக்கும் பாடம்தான், நீதிக்கட்சி யினர் கடைப்பிடித்த மக்களுக்கு அந்நியமான ஆடம்பரப் போக்கிற்கும், உள்கட்சிப்பூசல்களுக்கும் முடிவு கட்டும் என்பதும், பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்வதற்கு, தோல்வி ஒரு சாதனமாகும் என்பது பெரியாரின் எண்ணம்.

ஒரு கிளப் போல  செயல்பட்டு வந்த நீதிக்கட்சிக்கு, சுயமரியாதை இயக்கத்தினரின் தொடர்பு புது ரத்தம் பாய்ச்சியது. பெரியார் மீது பற்றுகொண்ட ஏ.டி.பன்னீர்செல்வம் இந்தத் தொடர்புக்குத் துணையாக நின்றார். ராஜாஜி தலைமையிலான ஆட்சியில் பள்ளிகளில் இந்திப் பாடம் கட்டாயமாக்கப்பட்டது. இதனை நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தமிழ் அமைப்புகளும் எதிர்த்துப் போராட்டம் நடத்தின. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கைதாகி பெல்லாரி சிறையில் இருந்தபோது, 1938-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  சென்னையில் நீதிக்கட்சி மாநாடு நடை பெற்றது.  அந்த மாநாட்டில், பெரியாரையே நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அப்போது, ஏ.டி.பன்னீர் செல்வம் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, பெரியார் படத்தின் கீழ் மரியாதையுடன் வைத்தார். இதன்காரணமாக, தன் தோளுக்கு இட்ட மாலையைப்  பெரியாரின் தாளுக்கு இட்ட சர் ஏ.டி.பன்னீர்செல்வம்  எனப் பெருமை பெற்றார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவுக்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்திய அமைச்சராக பிரிட்டிஷ் எம்.பி. ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அவருடைய ஆலோசகராக இந்தியர் ஒருவர் இருப்பார். பெரும்பாலும் வடநாட்டவர்களும் பிராமணர்களுமே ஆலோசகர் பதவியில் இருந்து வந்தனர். 1940-இல் இந்திய அமைச்சரின் ஆலோசகராகத் தமிழரான சர். ஏ.டி.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை மாகாணத்தை தனி நாடாக ஆக்கவேண்டும் என நீதிக் கட்சி வலியுறுத்தியது. முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு இங்கிலாந்து  அரசு ஆதரவளித்து வந்ததால், தங்களின் தனி நாடு கோரிக்கையையும் இங்கிலாந்தில் பன்னீர்செல்வம் வலியுறுத்துவார் என்ற நம்பிக்கைக் கொண்டனர் நீதிக்கட்சியினர். அவருக்குப் பாராட்டுவிழா நடத்தி, வழியனுப்பினர். ஆனால், 1940-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள், பன்னீர்செல்வம் பயணம் செய்த  ஹனிபால்  விமானம், ஓமன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கட்சியின் கடைசித் தூணும் சாய்ந்த நிலையில், இனி அந்த  இயக்கம் கரைந்து மறைந்துவிடும் என்பதே அரசியல் களத்தின் கணிப்பாக இருந்தது. ஆனால், திராவிட இயக்கத்தின் மிகப்பெரும் எழுச்சியும், மக்களின் ஆதரவும் அதன்பிறகுதான் பேரலையாய் எழுந்தது என்பது வரலாறு.

அதற்குக் காரணமாக அமைந்தவர் அவர்தான்.. அவர்தான்.. அவரேதான்..

அவர்தான் பெரியார்!

(வரும் இதழில்- பெரியார் உருவாக்கிய சமூகப்புரட்சி)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : GOUTHAM Date & Time : 7/6/2012 11:07:53 AM
-----------------------------------------------------------------------------------------------------
திராவிடர் இயக்க நூற்றாண்டில் தலைவர்கள் ஒற்றுமையின்மையால் சிதறும் இயக்கத்தின் தலைவர்கள் கண்களுக்கு தெரியுமா?
-----------------------------------------------------------------------------------------------------
Name : ngn Date & Time : 7/4/2012 10:37:41 AM
-----------------------------------------------------------------------------------------------------
தெரியாத பல செய்திகளை வெளியிட்டு அறிய புகைப் படத்துடன் எழுதியதற்கு நன்றி.மென்மேலும் இந்த பணி தொடரட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------