|
|
கழுதைக்குத் தெரியாத கற்பூர வாசனை!
அருப்புக்கோட்டையில் இருந்த காலங்களில் நூலகம் மட்டும்தான் எனக்கும் எனது நண்பர்களுக்குமான ஒரே பொழுதுபோக்கு.ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரில் ஆரம்பித்து நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்', "கல்கியின் பொன்னியின் செல்வன்' அவரின் மற்ற பிற நூல்கள், காண்டேகரின் "கிரௌஞ்ச வதம்' மற்றும் கண்ணதாசன், கோவி. மணிசேகரன், இந்திரா பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், எண்டமூரி வீரேந்திரநாத், ருத்ரன், பாலகுமாரன், கவிதையில் மு.மேத்தா, வைரமுத்து இவர்களின் வரிசையில் நான் படித்தது "இதயம் பேசுகிறது' மணியனின் பயணக் கட்டுரைகளும்....இவற்றோடு வார மாத இதழ்களையும் ஒரு வரிவிடாமல் வாசிக்கும் பழக்கம் அப்போதிருந்தது. வாசித்த புத்தகத்தில் ஒன்று "இதயம் பேசுகிறது.' அப்படி வாசிக்கின்ற போது இயற்கையாகவே சில பெயர்கள் மனதில் பதிந்து விட்டிருக்கும். அப்படிப் பதிகின்ற வேளையில் தானாகவே அவர்களுக்கு கம்பீரமான ஒரு உருவத் தையும் மனது வரைந்து வைத்திருக்கும். அவ்வாறு பதிந்து வைத்திருந்த, மனது வரைந்து வைத்திருந்த ஒரு பெயர் மா. முருகன்.அப்போதெல்லாம் ஒரு பெயர் பத்திரிகை யில் வந்திருந்தால், அந்தப் பெயருக்குரியவரை ஒரு திரைப்படத்தின் கதாநாயகனைப்போல் ஆராதிக்கும் ஒரு பார்வை எனக்குள் இருந்தது.அவ்வாறு நான் கதாநாயகனாகப் பார்த்த பல்வேறு பத்திரிகையாளர்களில் ஒருவர் மா. முருகன். அப்போதெல்லாம் தெரியாது நானும் அவருக்குக் கீழ் பணிபுரிவேன் என்று.நக்கீரனில் நான் முதன் முதலாய் அவரைப் பார்க்கிறேன். எனக்குள் பயங்கர ஷாக். இவர்தான் மா. முருகனா?ஏனெனில் நான் மனதில் வரைந்து வைத்திருந்த உருவத்திற்கும், நேரில் நான் கண்ட உருவத்திற்கும் சம்பந்தமே இன்றி அவர் இருந்தார்.அவரிடம் நன்றாகப் பேசிப் பழகிய பிறகு ஒருநாள் அவரிடம் கேட்டேன்.""சார், மணியனின் பெயர் சொல்வதற்காக மா. முருகன் என்ற ஒருவர் இருக்கிறார். மா. முருகனின் பெயர் சொல்வதற்கு யாரை நீங்கள் உருவாக்குகிறீர்கள்'' என்றேன். அவருக்கே உரித்தான ஸ்டைலில் சிரித்தார். ஆனால் பதிலில்லை. இப்போது வரை அந்தக் கேள்வி விடையற்ற கேள்வியாக மட்டுமே இருக்கிறது.அவர் எந்த ஒரு விஷயத்தையும், பிரம்மாண்டத்தையும் மிகச் சாதாரணமாக விவரிப்பார். அவரின் வாழ்க்கை முறைகூட எனக்கெல்லாம் ஒரு பயங்கர வியப்பைத் தந்தது.பல்வேறு பெரிய மனிதர்களைப் பற்றிய அவர்களது நினைவுகளை விலாவாரியாகச் சொல்லி ரசிப்பார். அவரிடம் யாராவது ஒருவர் இடைவிடாமல் உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.""சார், நான் அப்ப கிளம்பட்டுமா'' என்று உரையாடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூறினால், "இரிங்க' என்று அவருக்கே உரித்தான நெல்லைத் தமிழில் கூறுவார். இப்போதும்கூட அவர் பேசிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு அசரீரி மனதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.பத்திரிகைப் பணியிலும் அவர் பாணி முற்றிலும் வித்தியாசமானதே. அவர் ஒரு மேட்டரை முற்றிலும் படித்திருந்தால், அதில் இருக்கும் ஒரு பிழைகூட அவர் கண்களுக்குத் தப்ப முடியாது. அத்தனை பர்ஃபெக்ஷனிஸ்ட்.அவர் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் முன் கடைசியாய் என்னிடம் செல்பேசியிலிருந்து பேசினார். ""சரவணன், நான் சிகிச்சைக் காக மருத்துவமனை செல்கிறேன், அதுவரை மலரோனுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள், நான் விரைவில் திரும்ப வருவேன்'' என்றார்.""சரி ஸார், உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றேன்.கடைசிவரை அவர் திரும்பாதது இப்போது வரைக்கும் இதயத்தை என்னவோ செய்கிறது.இத்தனை ஆண்டுகள் அவரிடம் நான் பணிபுரிந்திருந்தும் நான் அவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லையே என இப்போது வருந்துகிறேன்.எனது அம்மா அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார்: "கெட்ட பிறகுதான் எட்டுப் புத்தி வரும்' என்று.என்ன செய்ய... இந்தக் கழுதைக்குத் தெரியவில்லை கற்பூர வாசனை...-சரவணப்பெருமாள்
|
|