|
|
உலகம் தாராளமயமான பிறகு, பெரும்பாலான மக்கள் பணம் சேர்ப்பதை மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாய் எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். முகநூல்களிலும், டுவிட்டர்களிலும் சில வாசகங்களைப் பதிவு செய்வதே பலருக்கு இலக்கிய சாதனையாகிவிடுகிறது. பொழுதுபோக்குக்காக புத்தகம் வாசிப்பவர்கள்கூட குறைந்துவரும் சூழலில், புத்தகம் எழுதுவது எத்தனை அரிய பணி என்பது உணர இயலாததல்ல. ஆனால் இந்தச் சூழலிலும் ஒருவர் தன் வரலாறு, நாவல், கட்டுரைகள், குறள் ஆராய்ச்சி என வெவ்வேறு தளத்தில் ஐந்து நூல்களை எழுதி, அவற்றை ஒரே சமயத்தில் வெளியிடுவது ஆச்சரியமான ஒன்றுதான். இதனை நிகழ்த்தியிருப்பவர் சுப. வீரபாண்டியன்.சென்னை காமராஜர் அரங்கத்தில் மே-15 அன்று சுப.வீரபாண்டியனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. திராவிடத்தின் பெருமிதங்களை வெளிப் படுத்தும் "திராவிடத்தால் எழுந்தோம்', குறளுக்கான பல்வேறு உரைகளை ஒப்பீட்டு நோக்குடன் விவரிக்கும் "குறள்வானம்', "கவிதா' என்னும் தலைப்பிலான நாவல், "வந்ததும் வாழ்வதும்' என்ற சுயசரிதை நூல், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' எனும் ஐந்து நூல்கள் இவ்விழாவில் வெளியிடப்பட்டன. விழாவுக்கு வருகை தந்தவர்களை "வானவில்' புத்தகாலய உரிமையாளர் சுப. புகழேந்தி வரவேற்றுப் பேசினார். முத்தமிழறிஞர் கலைஞர் விழாவுக்குத் தலைமையேற்று, நூல்களை வெளியிட்டார். மத்திய இணை அமைச்சர் செகத்ரட்சகன் கலைஞரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முன்னிலை வகிக்க, அவ்வை நடராஜன், பேராசிரியர் அப்துல் காதர், கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, ""சுப. வீரபாண்டியன் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு மூத்த மாணவர். அப்போதே தமிழ்த் தேசியம், திராவிடம், தமிழ் உணர்வு பற்றிய தெளிவைக் கொண்டிருந்தார். அவருடைய ஐந்து நூல்களில் திருக்குறள் குறித்து "குறள்வானம்' எனும் நூலையும் எழுதியிருக்கிறார்."ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து'என்பது வள்ளுவர் கூற்று. இதற்கு, "ஒருவர் கற்ற கல்வி யானது அவரது ஏழு பிறவி களுக்கும் உற்ற பலனைக் கொடுக்கும்' என்று பலர் பல்வேறு விதமாக பொருள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பகுத்தறிவுப் பகலவனான கலைஞரோ, "ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு தலைமுறைக்கும் பலன் தரும்' என்று பகுத்தறிவுக்கு உட்பட்டு பொருள் சொல்லியிருக்கிறார். அதுபோன்று குறளுக்கு உரையெழுதிய பல்வேறு உரையாசிரியர்களின் பார்வைகளை ஒப்பிட்டு ஒரு புதுநோக்கை சுப.வீரபாண்டியன் காணமுயன்றிருக்கிறார்'' என்று குறிப்பிட்டார். சுப. வீரபாண்டியனின் நூல்களைப் பற்றி கருத்துரை ஆற்றவந்த முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், ""திருக்குறளில், குறிப்பாக அறத்துப்பாலில் இருபதுக்கு மேற்பட்ட உரையாசிரியர்களை எடுத்துக்கொண்டு, மேடையில் உரையாற்றுவது போல் குறளின் வெவ்வேறு அர்த்தங்களைத் தொகுத்துத் தந்துள்ளார் சுபவீ. அறத்துப் பாலின் எல்லாக் குறளையும் எடுத்துக்காட்டாவிட்டாலும் ஒவ்வொரு அதிகாரத்தின் நுட்பங்களையும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது'' என்றார்.நிகழ்வுக்குத் தலைமை வகித்த கலைஞர் தனது உரையில், ""ஏதோ இங்கே நிகழ்ச்சி நடைபெற்றது, வந்தோம், கேட்டோம், சென்றோம் என்ற அளவில் இந்த விழா முடிந்து போவதால் பயன் இல்லை. இங்கே கேட்டவற்றை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.அமைதி வழியில், அறவழியில் எங்களை நாங்களே பலிகொடுத்தேனும் ஈழத்தைப் பெற்று, அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவோம். அதுதான் இந்த ஐந்து புத்தகங் கள் வெளியிடப்படுவதற்குப் பின்னுள்ள கருப்பொருள். நான் வீரபாண்டியனின் புத்தகங்களை வெளியிடு வதற்காக மட்டும் வரவில்லை. ஈழம் அமைவது உறுதி என்னும் உறுதிமொழியை அளிப்பதற்காகவும்தான் வந்தேன்!'' என்றார்.- சுப்பிரமணியன்படங்கள்: எஸ்.பி. சுந்தர்
|
|
|
Name |
: |
.babu.s |
Date & Time |
: |
7/6/2012 11:07:53 AM |
-----------------------------------------------------------------------------------------------------
சார் நான் அன்மீகன் அனால் பேசுக்கள் கேட்ட பின்பு
சற்று திரும்பி பார்க்றேன் உங்கள் பேச்சில் ஒரு எழுச்சி
நான் கண்டேன் நீர் இருக்கும் வரை தமிழ் சாகாது
நன்றி நீர் வாழ்க .
-----------------------------------------------------------------------------------------------------
|
|
|