|
|
தந்திர யோகத்தின் ஐந்து மகாரங்களில் முதல் இரண்டு மகாரங்களான மது, மாமிசம் ஆகியவற்றின் சூட்சுமப் பொருள் குறித்து விரிவாகக் கண்டோம். இனி, மூன்றாவது மகாரமான "மச்சம்' என்பதன் விளக்கத்தைக் காணலாம்.மச்சம்மச்சம் என்பதன் நேரடியான பொருள் மீன் என்பதுதான். வாமாசார தந்திர யோகிகள் அந்த நேரடியான பொருளை எடுத்துக்கொண்டு, தங்களது பூஜைகளில் தேவிக்குப் படையலிடும்போது மீனையும் சேர்த்துப் படையலிடுகிறார் கள். பூஜை முடிந்த பின்னர் மது, மாமிசம் இவற்றோடு இந்த மீனையும் உண்கிறார்கள்.தட்சிணாசாரத்தின் வழிமுறை வேறு. இதில் நேரடியான பொருளை எடுத்துக் கொள்வதில்லை. "மச்சம்' என்ற சொல்லின் சூட்சுமப் பொருளைப் (அர்த்தத்தை) புரிந்து கொண்டு, அதன்படி நடப்பதே தட்சிணாசார வழிமுறையாகும்.இங்கே "மச்சம்' என்பது இடநாடி, பிங்கலை நாடி ஆகிய இரு நாடிகளையும்; அவற்றில் ஓடும் உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரு மூச்சுகளையும் சூட்சுமமாக உணர்த்துகிறது.ஒரு கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களை சற்று நேரம் உற்று கவனியுங்கள். அவை சாதாரணமாக ஒரு இடத்தில் நிலையாக நிற்பதில்லை.முன்பக்கமாக நீந்தி ஓடும்- உடனே திரும்பி பின்பக்கமாக ஓடும். மீண்டும் முன் பக்கம்- பின்பக்கம் என அவை முன்னும் பின்னுமாக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.நமது மூச்சும் அவ்வாறே, முன்னும் பின்னுமாக நிற்காது ஓடிக்கொண்டே இருப்பதால்தான், அதற்கு உவமையாக மச்சத்தைக் கூறுகிறார்கள்.மீனின் பின்பக்க ஓட்டம் நமது உள்மூச்சு; முன்பக்க ஓட்டம் வெளிமூச்சு. இந்த ஓட்டம், நில்லாது தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது.ஒரு மீனின் ஓட்டத்திற்கு எப்படி கட்டுப்பாடு இல்லையோ, அதுபோன்றே நமது மூச்சும் கட்டுப்பாடுகளின்றி உள்ளே வெளியே என்று அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.நமது மனதையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்துவது மூச்சேயாகும். மூச்சின் ஓட்டம் நமது கட்டுப்பாட்டிற்குள் வராத வரையில் மனமும் நமது கட்டுக்குள் வராது. ஒரு மீனைப் போன்று நமது மனமும் சிந்தனைகளும் ஒரு இடத்தில் நில்லாமல் தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டேயிருக்கும்.இந்த அமைதியற்ற மனநிலையே நமது அகங்காரம், ஆணவம், மனக்குழப்பங்கள், தடுமாற்றமான சிந்தனைகள் ஆகிய அனைத் திற்கும் காரணமாக உள்ளது.இந்த நிலையிலுள்ள மூச்சையும் மனதையும் கடிவாளம் இல்லாத முரட்டுக் குதிரைக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். இந்தக் குதிரையை அடக்கும் கடிவாளமே மூச்சுப் பயிற்சிகளாகும்.திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள "வாசி யோகம்' முழுக்க முழுக்க மூச்சை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மூச்சுப் பயிற்சிகளே.யோகக் கலையில் கற்றுத் தரப்படும் "பிராணாயாமம்' மனதை அடக்கும் ஒரு வழி முறையே. தந்திர யோகத்திலும் பலவிதமான மூச்சுப் பயிற்சி முறைகள் உள்ளன.வாமாசாரம், தட்சிணாசாரம் இரண்டு முறைகளிலுமே, அடிப்படையான நோக்கமும் குறிக்கோளாகவும் இருப்பது குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்புவதேயாகும்.குண்டலினி சக்தியானது மூலாதாரச் சக்கரத்திற்கு அருகில் ஒரு பாம்பு போன்று சுருண்டு, அரைத்தூக்க நிலையில் உள்ளது. மூச்சுப் பயிற்சிகளின் மூலம் அதைத் தட்டி எழுப்பி, சுழுமுனை நாடி வழியே மேலே கொண்டு செல்ல வேண்டும். மூச்சுப் பயிற்சிகளால் இது சாத்தியமாகும். எப்படி?மூச்சும் குண்டலினியும்நமது மூச்சானது ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் மச்சத்தைப் போன்று, இடகலை நாடி, பிங்கலை நாடி ஆகிய இருநாடிகளில் மாறி மாறி ஓடிக் கொண்டே இருக்கிறது.உள்மூச்சு, வெளிமூச்சு என இடை வெளி இல்லாத ஓட்டமாக இது உள்ள வரையில் குண்டலினி எழும்பாது.மூச்சை உள்ளே இழுத்து சற்று நேரம் அதை உள்ளேயே நிறுத்துவதையே "கும்பகம்' என்கிறோம். இந்த கும்பக நேரத்தில்தான் அடைபட்டுக் கிடக்கும் சுழுமுனை நாடி திறந்துகொள்ளும். தூங்கிக் கிடக்கும் குண்டலினி சுழுமுனையில் நுழைந்து, மேலேறும்.ஒரு கண்ணாடித் தொட்டி யில் இருக்கும் மீனுக்குத் தேவையான அளவு பிராண வாயு (ஆக்சிஜன்) கிடைக்காத நிலையில் அது என்ன செய்யும் என்பதைக் கவனித் திருக்கிறீர்களா?அந்த நிலையில் அது முன் பின்னான தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு கண்ணாடித் தொட்டியின் சுவர் களை தனது வாயால் மீண்டும் மீண்டும் முட்டிக் கொண்டி ருக்கும்."கும்பகம்' செய்யும் போதும் நமது உடலில் அதுவே நிகழுகிறது. உள்ளே சென்ற மூச்சை உடனே வெளியே விடாமல் உள்ளுக்குள் ளேயே அடக்கி கும்பகம் செய்யும்போது, மூச்சு எனும் மச்சம் வெளியேற வழியின்றி, சுழுமுனை நாடியைத் தட்டத் துவங்கும்.மூச்சு (மச்சம்) சுழுமுனையில் மீண்டும் மீண்டும் சென்று மோதும்போது, அடைந்து கிடக்கும் சுழுமுனை நாடி திறந்துகொள்கிறது.மூச்சுப் பயிற்சிகளாலும் மந்திரம், யந்திரம் போன்ற பிற தந்திர யோகப் பயிற்சிகளாலும் தூண்டப்பட்டு விழித்தெழும் குண்டலினி சக்தி, திறந்த நிலையில் இருக்கும் சுழுமுனை நாடியினுள் நுழைந்து கபாலம் வரையில் ஒரு மீனைப் போன்று (அல்லது ஒரு பாம்பைப் போன்று) சரசரவென மேல் நோக்கி எழும்பும்!இவ்வாறு மேலே எழுகின்ற குண்டலினி சக்தியையே மச்ச பட்சணம் (மீன் உணவு) என தட்சிணாசார தந்திர யோக நூல்கள் விளக்கு கின்றன. இந்த குண்டலினி எனும் மச்சத்தையே தட்சிணாசார தந்திர யோகிகள் உண்ண வேண்டும்.இவ்வாறு மூச்சு எனும் மச்சத்தால் குண்டலினியை சுழுமுனையில் ஏற்றுகின்ற திறமை படைத்த தந்திர யோகிகளை சில தந்திர யோக நூல்கள் "மச்ச சாதகர்கள்' என அழைக்கின்றன."தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற விவி லிய வசனமும் இங்கே பொருத்திப் பார்க்கத் தக்கது.ஆக, வாமாசார முறையில் "மச்சம்' என்பது "மீன்' என்ற நேரடி அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, வழிபாடு களில் பயன்படுத்தப்படு கிறது.தட்சிணாசாரத்தில் அதன் சூட்சும அர்த் தங்களான நாடிகள், மூச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தி குண்ட லினி சக்தியை சுழுமுனையில் ஏற்ற உபயோகப் படுத்தப் படுகிறது.நான்காவது மகாரம்- முத்திரை"முத்திரை' என்ற சொல்லுக்கு பல அர்த்தங் கள் உண்டு.✷ தானிய மணிகள்✷ கை விரல்களால் செய்யப்படும் சைகைகள் ✷ தீய குணங்களை அகற்றுதல்✷ கர்ம வினைகளை அழித்தல்✷ உண்மையான இன்பத்தை உணருதல்என பல அர்த்தங்கள் இந்த ஒரு சொல்லுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.இவற்றுள் தானிய மணிகள் என்பதும், கைகளால் செய்யப்படும் முத்திரைகள் என்பதும் நேரடி அர்த்தங்களாகும். வாமாசார தந்திர யோகத்தில் இந்த இரண்டுமே பயன்படுத்தப் படுகின்றன.வாமாசார பூஜைகளிலும், வழிபாடுகளிலும் பலவிதமான தானியங்கள் பயன்படுத்தப்படு கின்றன. வாமாசார தந்திர யோக யாகங்களி லும்கூட தானிய மணிகள் ஆகுதியாக யாக குண்டத்தில் வீசப்படுகின்றன.எந்த விதமான பூஜை அல்லது யாகம் நடத்தப்படுகிறதோ, அதற்கு ஏற்ப தானிய மணிகளும் தேர்ந்தெடுக்கப்படும். கோதுமை, எள், அரிசி ஆகிய மூன்று தானியங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிற தானி யங்களும் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன.தட்சிணாசார தந்திர யோகத்தில்கூட, சில வழிபாடுகளின்போது யாக குண்டத்தைச் சுற்றி யந்திரம் அமைக்க தானியங்கள் பயன்படுத்தப் படுகின்றன.கைகளால் செய்யப்படும் முத்திரைகளும்கூட இரண்டு வகை தந்திர யோகத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும் அல்லது சக்திக்கும் உபயோகப்படுத்த வேண்டிய முத்திரைகள் எது என்ற குறிப்புகள் தந்திர யோக நூல்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.கடவுள்களை அல்லது சக்திகளை வசீகரம் செய்து தனக்கு சாதகமாகப் பயன்படுத்த- தன்வசப் படுத்த முத்திரைகள் மிக மிக முக்கியமானவை.மந்திர உச்சாடனம் செய்யும்போதும், அந்த மந்திரத்திற்குரிய முத்திரையையும் சேர்த்துச் செய்யும்போதுதான் மந்திர சக்தியின் பலன் பூரணமாகக் கிடைக்கும். இரண்டு வகை தந்திர யோகத்திற்கும் இது பொதுவானது.தட்சிணாசாரத்தில் மேலும் நுட்பமான, சூட்சுமமான அர்த்தங்களை எடுத்துக்கொள்கி றோம். "தீய குணங்களை அகற்றுதல்' என்பதுவும் "முத்திரைகள்' என்ற சொல்லின் சூட்சும அர்த்த மாகக் கொள்ளப்படுகிறது.ஒரே ஒரு தானிய மணியால் யாருக்கு என்ன லாபம்? ஒரு கோதுமை மணியை அரைத்து உணவு சமைக்க முடியுமா?நமது மனதில் ஆசை, அவா, வெகுளி, அழுக் காறு, ஆணவம் என பல தானிய மணிகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த தனித்தனி மணிகளால் சாதகருக்கும் பலனில்லை; பிறருக்கும் பலனில்லை.ஒரு கோதுமை மணியை மண்ணில் விதைக் கும்போது, அது தன்னை அழித்துக்கொண்டு ஒரு செடியாக புது உருவம் பெறுகிறது. அதன் கதிர்களிலிருந்து பலநூறு கோதுமை மணிகள் உருவாகி, பிறரது பசியைத் தீர்க்கிறது.ஆனால் அந்த கோதுமை மணி விதைக்கப் படும் இடம் பண்பட்ட நிலமாக இருக்க வேண்டும். பாறையில் விதைத்தால் முளைக்காது. உழுது, பண்படுத்தப்பட்ட நிலத்தில் விதைத்தால் மட்டுமே அது முளைத்து வளரும்.தந்திர யோகப் பயிற்சிகளின் மூலமாக மனதைப் பண்படுத்தி, பக்குவப்படுத்திய பின்னரே நமது தீய குணங்கள் என்ற தானிய மணிகளை அதில் புதைக்க முடியும்.இவ்வாறு புதைக்கப்படும் தானிய மணிகள் (முத்திரைகள்) மடிந்து, செடியாக உருமாறும். இங்கே செடி என்பது நல்ல குணங்களைக் குறிக்கிறது. அந்தச் செடியிலிருந்து அறுவடை செய்யப்படும் தானியங்கள் பலருக்குப் பயன்படும்.தனக்கென வாழாது, பிறருக்காக வாழும் உயர்ந்த நிலையையும் இது சூட்சுமமாக உணர்த்துகிறது."கோதுமை மணி, மண்ணில் விழுந்து மடிந்தால் அன்றி பலன் தராது' என்ற விவிலிய வசனத்தையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.தானியங்கள் என்ற பொருள் தவிர "கர்ம வினைகள்' என்ற பொருளும் "முத்திரை' என்ற மகாரத்தால் சுட்டிக்காட்டப்படுவதாக தட் சிணாசார தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.தந்திர யோக வழிமுறைகளால் மனதைப் படிப்படியாகப் பண்படுத்தி பக்குவப்படுத்தும் போது, நமது கர்மவினைகள் என்ற தானியங்கள் (முத்திரைகள்) அதில் விழுந்து மக்கிப் போகும்- மடிந்து போகும். கர்மவினைகளிலிருந்து விடுதலை பெறும் போதுதான் "ஆன்மா' உண்மையான சுதந்திரத் தைப் பெற முடியும்.கர்ம வினைகளின் கட்டுகள் அறுந்த நிலையில் ஆன்மா தூய்மையடைகிறது. தனது தளைகளிலிருந்தும், மாயையின் கட்டுகளிலிருந்தும் விடுபட்டு, சுதந்திரமான ஆன்மாவாக உருமாற்றம் பெறுகிறது. படிப்படியாக ஜீவாத்மா, பரமாத்மாவின் நிலையை அடைகிறது.ஆக, முக்தி என்ற நிலையை அடைய "கர்ம வினைகள்' என்ற தானியங்கள் (முத்திரைகள்) அழிய வேண்டும்.யாக குண்டங்களில் தானியங்களை ஆகுதி யாகப் போட்டு எரிப்பதும் (சூட்சுமமாக) கர்ம வினைகளை அழிப்பதையே உணர்த்துகிறது."உண்மையான இன்பத்தை உணருதல்' என்ற பொருளும் தட்சிணாசாரத்தில் "முத்திரை' என்ற சொல்லுக்குக் கற்பிக்கப்படுகிறது. கர்ம வினைகளிலிருந்து விடுபடும்போதுதான் ஆன்மா உண்மையான இன்பத்தை உணர முடியும் அல்லவா?அடுத்த இதழில் "மைதுனம்' எனும் கடைசி மகாரம் குறித்து விரிவாகக் காணலாம்.(தொடரும்)
|
|
|
Name |
: |
kai.elango |
Date & Time |
: |
1/29/2013 4:02:36 PM |
-----------------------------------------------------------------------------------------------------
மிகவும் அருமையான தொடர் அடுத்த இதழை ஆவலுடன்
படிக்க விரும்புகின்றேன்
நன்றியுடன் -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
subramani |
Date & Time |
: |
6/30/2012 11:29:25 AM |
-----------------------------------------------------------------------------------------------------
சிவ தரிசனம் பெற்ற ஞானி தவதோகி ஞானதேவபாரதி சுவாமிகளின் ஆன்மீக கட்டுரைகளை ஓம் இதலில் தொடராக மீண்டும் வெளியிட்டு ஆன்மீக அன்பர்களின் ஆவலை தீர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .நன்றி. -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
subramani |
Date & Time |
: |
6/13/2012 6:02:27 PM |
-----------------------------------------------------------------------------------------------------
தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகளின் ஞானக்கட்டுரைகளை
ஓம் சரவணபவ இதழில் தொடர்ந்து வெளியிட்டு ஆன்மீக அன்பர்களை ஆனந்தப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி. -----------------------------------------------------------------------------------------------------
|
|
|