|
|
குரு பகவானின் சிறப்புகளும் அவர் பெயர்ச்சியால் ஏற்படும் பலனும் பரிகாரமும்...
நவகிரகங்களில் குரு பகவான் வானவர்க்கு அரசராகவும், பிரகஸ்பதியாகவும் செயல்பட்டு உலக ஜீவராசிகள் அனைவரையும் நடத்திச் செல்லுகின்றார்.
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இவர் ஆசிரியன்.
மூவுலகங்களின் புத்தியாகவும் சக்தியாகவும் விளங்குபவர். தெய்வீக
அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் மூலப்
பொருளாக உள்ளவர் குரு பகவான்.
ஒளி படைத்த மேதைகளை உருவாக்குகின்றவர் இவரே. பிரும்மத்தை
உணர்ந்த ஞானிகளையும் பக்தர்களையும் உருவாக்குகின்றவரும் இவரே. இவர்
சேமிக்கும் எண்ணத்தை உருவாக்கி, அனைத்தையும் சேமிக்க வைக்கும் மூலகர்த்தா.
16 ஆண்டுகள் நடைபெறும் குரு மகா தசை இவரது தசை ஆகும்.
இந்த குரு மகா தசை நமது வாழ்க்கையில் எந்த எந்த காலகட்டத்தில் வந்தால்
எந்தவிதமான பலன்களை வழங்குவார் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
பலம் பொருந்திய குரு மகா தசை இளமையில் வந்தால், அந்த
ஜாதகரை கல்வியில் முதல்நிலைக்கு உயர்த்துவார். நடுவயதில் வந்தால் சகல
பாக்கியத்தோடும் வாழவைப்பார். வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் வந்தால்
அவரது சந்ததிகள் செழிப்பாக வாழ்வார்கள்.
அந்தணர்களுக்கும், பசுகளுக்கும் ஆதிமூலவர் இவரே. ரதங்கள்,
குதிரைகள், யானைகள் ஆகியவற்றை சித்தரிப்பவர் இவரே. தலைவணங்காத தலைமைப்
பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து, மனிதகுல
மாணிக்கமாகத் திகழவைப்பார். நாட்டை ஆள வைப்பார். நல்லவர்களுடன்
சேரவைப்பார். புதுப்புது யோசனைகளைக் காண வைப்பார். மேன்மைக்கும்
தன்மைக்கும் வித்தாவார். விவேகத்தை அளிப்பார். வித்தைகளில் வல்லவர்
ஆக்குவார். அந்தஸ்தையும் ஆற்றலையும் வாரி வழங்குவார். சிம்மக் குரலைத்
தந்து பலரையும் பணிய வைக்கும் ஆற்றலைத் தருவார்.
மஞ்சள் நிறத்தவர். மந்தகாச முகத்தவர். இனிப்புப் பிரியர்.
சாத்வீக குணத்தவர். “"பொன்னன்' என்று பெயர் படைத்த இவரது உலோகமே
பொன்தான். புஷ்பராக கல்லுக்குரியவர். கஜானாவை (வங்கியை) வளர்ச்சி அடைய
வைப்பவர்.
உடலில் சதைக்குரியவர். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் கபத்திற்குரியவர்.
ஆண் கிரகம். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர். எனவேதான்
இவருக்கு வானவர்க்கு அரசர் என்று பெயர். எட்டு திசைகளில் வடகிழக்கு திசை
இவருக்கு சொந்தம். நவகிரகங்களில் மேலானவர் இவர். தனுசு, மீனம் இவரது ஆட்சி
வீடு. கடகம் இவரது உச்ச வீடு. மகரம் நீச வீடு. பகலில் பலம் அதிகமாகி, தனது
பார்வையால் இதர கிரகங்களுக்கும் பலத்தைத் தருபவர். சந்திரன், செவ்வாய்,
சூரியன் ஆகியோர் இவரது நட்பு கிரகங்கள். புதன், சுக்கிரன் பகை கிரகங்கள்.
புனர்பூசம், பூசம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன்
இவர். ஒருவரது ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும்
இவர் ஒருவர் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமானது. நாம் வாழ்க்கையில்
உயர்வதற்கு ஞானத் தலைவராக இருப்பவரும் இவரே. தேவகுருவான இவர் சாந்த குணம்
உள்ளவர். சாந்தமான உருவமும் கொண்டவர். வடமொழியில் லோக பூஜ்யர் என்றும்
அழைப்பார்கள்.
குரு பகவான் சுழற்சியில், சந்திரன் நின்ற ராசிக்கு ஏற்படும் பலன் பற்றிய விருத்தம்:
"ஜென்ம ராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்
ஈசனாரொசூ பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்
சத்திய மாமுனி யாறிலே யிருகாலிலே தலை பூண்டதும்
வன்மையற்றிட ராவணன் முடி பன்னிரண்டினில் வீழ்ந்ததும்
மன்னுமா குருசாரி மாமனே வாழ்விலா துனதுமென்பவே.'
இது முற்றும் உணர்ந்த அந்தக்கால முனிவர்களுக்கு மட்டுமே.
தற்போது உலகிலுள்ள மனித ஜீவனுக்கு ஜென்மத்தில் குரு நிற்பதால்-
சிறைப்படுதல்; மூன்றில்- தன் குடும்பம் நாசம்; நான்கில்- இடம் மாறுதல்;
ஆறில்- கை- கால்களில் பந்தனம் உண்டாகுதல்; எட்டில்- தன்னுடைய புகழ் மறைதல்;
பத்தில்- தரித்திரம் அதிகமாகி கடன் வாங்குதல்; பன்னிரண்டில்- தனக்கு கண்ட
தோஷம் ஏற்படுதல் என்று கொள்ளலாம்.
இந்த குருப்பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப்
பெறப்போகிறவர்கள்- மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ஐந்து
ராசிக்காரர்கள். இவர்கள் குரு பகவானைத் தரிசித்து, அவர் அள்ளித் தரும் நல்ல
பலன்களை அடைய வேண்டும்.
ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம்
ஆகிய ஏழு ராசிக்காரர்களுக்கும் குரு பகவான் அருள் மத்திமமாக உள்ளது. எனவே
இந்த ராசிக்காரர்கள் குரு பகவானைத் தரிசித்து வருவதோடு, அடுத்த
பக்கத்திலுள்ள எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ள வேண்டும்.
பொதுவாக, நல்ல எண்ணத்தோடும், பிறருக்குத் தீங்கு
செய்யாமலும் உள்ளவர்களை கிரகங்கள் எப்போதும் பாதிப்பதில்லை. தான் உண்டு-
தன் வேலை உண்டு, என்று இருப்போருக்கு குரு பகவானால் எந்தத் தீமையும் வராது;
மாறாக நன்மையே நடக்கும்.
ஒருவர் செய்யும் தவறை நவகிரகங்களும் கண்காணிப்பார்கள்.
ஜாதகருக்கு கிரக நிலை கெட்டு வரும்போது, அதற்கான கிரகங்கள் சிரமத்தைக்
கொடுப்பார்கள். இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.
ஊரிலே மிகவும் பெரிய மனிதர். போலி வேடதாரி. கடவுள்
சொத்துகளையும், மற்றவர்களையும் மோசடி செய்து மகிழ்ச்சிக் கடலில் சிறப்பாக
வாழ்ந்து வந்தார்.
தினசரி மதிய உணவை உண்டு விட்டு, கோவிலுக்குப்
பக்கத்திலுள்ள ஆலமரத்தின் வேரில் படுத்து உறங்குவார். ஊர் மக்கள்
இறைவனிடம், "எங்கள் சொத்தையும், உன் சொத்தையும் கொள்ளையடித்து வாழும் அவர்,
உன் வாசலிலுள்ள ஆலமரத்தடியிலேயே உறங்கி வருகிறார். சர்வ சக்தியும் உள்ள
இறைவா! நீயாவது அவன் செய்த தீய செயல்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாதா?'
என்று வேண்டினர்.
இறைவன் ஊர் மக்களுக்கு அருள்பாலித்து, "அவனுக்கு ஜாதக
நேரம் நன்றாக உள்ளது. அவனுக்கு நேரம் கெட்டு வரும்போது நான் உணர்த்துவேன்'
என்று சமாதானம் சொல்லி அனுப்பினார்.
ஓராண்டுக்குப் பிறகு ஜாதகரீதியாக அவருக்கு நேரம் கெட்டு
விட்டது. அன்றைய தினம் மதியம் வழக்கம்போல போலி வேடதாரி மரத்தின் கீழ்வேரில்
தலை வைத்து உறங்கினார். அத்தனை காலமாக சாதுவாக எதுவும் செய்யாமல் வேரின்
அடியில் இருந்த கருநாகம், "நேரம் கெட்டுவிட்டது. எனவே நாம் தண்டனை
கொடுப்போம்' என்று வெளியே வந்து, உறங்கிக் கொண்டிருந்த அந்த போலி
வேடதாரியைத் தீண்டி,. ஏமாற்றி சேகரித்த பொருட்களையெல்லாம் வைத்த இடம்கூட
பிள்ளைகளுக்குச் சொல்லாமல், அவரை அகால மரணம் அடையச் செய்தது.
இறைவன் எப்போதும் உறங்காமல் அனைத்தையும் கவனித்துக்
கொண்டுதான் உள்ளார் என்பதை நாம் உணர்ந்து, நவகிரகங்களிடமும் முறையிட்டு
வணங்குவோம். நாம் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்போம். குரு பகவானும்
நமக்கு தீய பலன்களை விலக்கி, நல்ல பலன்களையே எப்போதும் வழங்குவார்.
என்றும் அன்புடன்,
ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்
|
|