|
|
பாளையங்கோட்டை சித்த மருத்துவ மாணவர்களின் பிரச்சனை, தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது...பல நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திய அந்த மாணவர்கள், கடைசியாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள்... ஏன்?அவர்களது இந்த நிலைக்கு யார் காரணம்?மாநில அரசா...? மத்திய அரசா...?இரண்டும் இல்லை என்பதுதான் உண்மை.பின்னர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் அதிகாரம் யாரிடம்தான் உள்ளது?CCIM என்று அழைக்கப்படும் இந்திய முறை மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பிற்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.அந்த அமைப்பிற்குள் புரையோடியிருக்கும் உலகமகா ஊழல் பற்றித்தான் கடந்த பல இதழ்களில் தொடர்ச்சியாகப் பார்த்தோம்.பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரி மாணவர்களை இத்தகைய போராட்ட விளிம்புக்குத் தள்ளி இருப்பதும் அந்த அமைப்பில் புரையோடி இருக்கும் அந்த மெகா ஊழல்தான்.அந்த ஊழலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னர், CCIM என்ற அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதற்கான காரணத்தையும், அதன் தற்போதைய சீரழிவான நிலையையும் முதலில் பார்ப்போம்.சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் உலகின் மிகப்புராதனமான சிகிச்சை முறைகளாகும். நமது மண்ணில் இருந்து உருவாகி, அதனடியில் புதைந்து கிடக்கும் வளத்தையும், வீரியத்தையும் உள்வாங்கி, செழித்து வளர்ந்த மூலிகைகளில் இருந்து உருவாக்கப்படும் உன்னத மருந்துகளே சித்த, ஆயுர்வேத மருந்துகள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன்தோன்றிய மூத்த குடிகளாகிய நமது முன்னோர்கள், கண்டறிந்த மெய்யினும், மெய்யான அரிய தத்துவமே சித்தமருத்துவம்.பாரதகண்டமாக இருந்து, இன்று இந்தியத் துணைக்கண்டமாகப் பரிணமித்திருக்கும் நமது நாட்டின் மறுக்க முடியாத அறிவுசார் சொத்துதான் சித்த மருத்துவம்.யோகியரும், ஞானிகளும் மேற்கொண்ட அரிய தவத்தின் விளைவே சித்தவைத்திய சாஸ்திரம்.வெறும் நரம்புக்கும், சதைக்கும் மட்டும் நமது முன்னோர்கள் மருந்து கண்டு கூறவில்லை.அதனுள் உயிர்த்திருக்கும் ஆன்மாவின் வலிக்கும் தேடலுக்குமாக சேர்த்து அவர்கள் கண்டறிந்ததுதான் சித்த மருத்துவம் என்ற மெய்ஞ்ஞானம். இத்தகைய மெய்ஞ்ஞானப் பெருஞ் சொத்தைப் பேணிக் காப்பதற்குத்தான், சென்ட்ரல் கவுன்சில் ஆப் இந்தியன் மெடிசின் (Central Council Of Indian Medicine - CCIM) என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. மத்திய அரசின் எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாத, தன்னதிகாரம் மிக்க அமைப்பாக தொடங்கப்பட்ட அமைப்பு இது.ஆயுர்வேதா,யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி (ayush)ஆகிய ஐந்து இந்திய மருத்துவங்களுக்கும், மாநில வாரியாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சேர்ந்து CCIM அமைப்புக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாக வேண்டும் என்பது விதிமுறை.ஆனால், சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாக பல மாநிலங்களில் தேர்தல் நடத்தாமல், அதிலும் குறிப்பாக ஒருசில உறுப்பினர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்துள்ளனர். ஊழலில் திளைத்த பழம்பெருச்சாளிகளான உறுப்பினர்களும், அவர்களுக்கு வசதியான தலைவரும்தான் அதிகாரத்தில் நீடித்து வருகின்றனர். CCIM - ன் அத்தகைய நிர்வாகிகள் தங்களது சுயநலத்திற்காகவும், சொந்த லாபத்திற்காகவும், தேசத்தின் உயிர் நாடியாக விளங்க வேண்டிய ஓர் அமைப்பை, உயிரற்ற ஜடமாக சீரழித்து வருகிறார்கள்.தமிழகத்தில், இந்திய முறை மருத்துவக்கல்வி எந்த வகையிலும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் தந்திரங்களும், சூழ்ச்சியும் கொஞ்ச நஞ்சமல்ல.அதன் அடுத்தகட்டப் பரிணாமம்தான் 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சென்னை வெங்கட்ரமணா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் அனுமதியையும், 50 ஆண்டுகள் பழமையான கோவை ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் அனுமதியையும், திருச்சி சங்கரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் அனுமதியையும் அவர்கள் ரத்து செய்து மகிழ்ந்திருப்பது. தற்போது தமிழக அரசின் கீழ் இயங்கும் சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதுவும், தமிழகத்தில் உள்ள சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளிலேயே படித்துவிட்டு, CCIM - ல் நிர்வாகிகளாக அமர்ந்திருப்பவர்கள் இதற்குத் துணை போயிருப்பதுதான் சோகம்.குறிப்பாக, CCIM-ன் தலைவராக இருக்கும் ரகுநந்தசர்மா, அந்த அமைப்புக்கு நடத்தப்பட வேண்டிய தேர்தலையே நடத்த விடாமல் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து வந்தார். அதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதன் விளைவாகக் கிடைந்த தீர்ப்பை அடுத்து, தேர்தல் நடத்தப்பட்டது நாடறிந்த உண்மை.அதன் பின்னரோ நிலைமை மேலும் மோசமாகி விட்டது.CCIM அமைப்புக்கு தேர்தல் நடத்தக் கோரி வழக்குத் தொடர்பவர்களின் கல்லூரிக்கான அனுமதியை ரத்து செய்வதில் ரகுநந்தசர்மா கவனமாக இருந்து வருகிறார்.அது மட்டுமல்ல. தற்போது போராட்டத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள பாளையங் கோட்டைக் கல்லூரியில் படித்து உயர்ந்து, CCIM-ல் உறுப்பினராக இருக்கும் நபர்கள்தான் அந்தக் கல்லூரியின் அனுமதி ரத்தாவதற்கே காரணமாக இருந்துள்ளார்கள்.உறுப்பினர்களின் ஒப்புதலோ, சித்தா CCIM-ன் துணைத்தலைவர் அனுமதியோ இல்லாமல் எந்த ஒரு கல்லூரியின் உரிமத்தையும் ரத்து செய்ய முடியாது.அப்படியானால், தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க பாளையங்கோட்டைச் சித்தமருத்துவக் கல்லூரி முடங்குவதற்கு, CCIM அமைப்பில் அதிகாரம் பெற்ற பதவியில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த நபர்களே காரணமாக இருக்கின்றனர் என்பதும் உறுதியாகிறது. இது எத்தனை பெரிய கொடுமை?பொதுவாக, தாங்கள் படித்து முன்னேறி கல்லூரி மேலும் முன்னேற வேண்டும், புகழ் பெற வேண்டும் எனத்தான் எந்த ஒரு நல்ல மனிதரும் நினைப்பார்.ஆனால் இவர்களோ அதனை அழித் தொழிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்.அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழர்களின் பாரம்பரியச் சிகிச்சை முறையான சித்த மருத்துவமுறையை, முறையான கல்வி அமைப்பில் இருந்து முற்றாக அழித்தொழித்து விடத் துடிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, ஆயுர்வேத மருத்துவம் தமிழகத்தில் வேரூன்றித் தழைத்துவிடக் கூடாது என்பதிலும், அந்தக் குள்ளநரிக் கூட்டத்தினர் கவனமாக இருந்து வருகின்றனர்.இதற்கு தமிழகத்தில் உள்ள ஒருசில ஆயுர்வேத மருத்துவர்களும் ஒத்துழைக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. தான் மட்டும் பிற மாநிலங் களுக்குச் சென்று ஆயுர்வேத மேற்படிப்பு படித்துவிட வேண்டும், மற்றவர்கள் யாரும் தன்னைப்போல் மேற்படிப்பு படித்துவிடக் கூடாது என்ற தீய குணத்தால் இங்குள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் வளர விடாமல் தடுத்தும் வருகின்றனர்.இப்படிப்பட்ட குள்ள நரிக் கூட்டமும் CCIM-ல் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களும் சேர்ந்துதான் தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா கல்லூரிகளுக்கும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதிலேயே குறியாக உள்ளார்கள். மொத்தத்தில், இந்திய மருத்துவ முறைகளை அழித்தொழித்து, இந்தியாவையும், அதன் மக்களையும் தனது பிரம்மாண்ட சந்தைப் பசிக்கு இரையாக்கத் துடிக்கும் பன்னாட்டு ஆங்கில மருத்துவ நிறுவனங்களுக்கு, இஇஐM அமைப்பு துணை போகிறதோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.இதனை CCIM உறுப்பினர்களால் மறுக்க முடியுமா? இந்த CCIM உறுப்பினர்கள் செய்யும் மோசடிகள்தான் என்ன?அதற்குக் கண்கண்ட உதாரணம், பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியின் இன்றைய சோகமான நிலைதான்.ஆங்கில மருத்துவக் கல்லூரிகளை ஒரு முறை ஆய்வு செய்து அங்கீகரிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில், அதற்குப் பின்னர் 5 ஆண்டுகளுக்கு அந்தப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.ஆனால், ஆயுர்வேத சித்தமருத்துவக் கல்லூரிகளுக்கோ, இஇஐM உறுப்பினர்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போ தெல்லாம் ஆய்வுதான்.அவ்வப்போது விதிமுறைகளை வேறு இவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுவார்கள்.பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் திடீரென கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனப் புதிய நிபந்தனை விதித்ததே தற்போதைய சிக்கலுக்கு அடிப்படைக் காரணம்.அதிக ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், பழைய முறைப்படி படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லாம் அரைகுறையாகப் படித்து பட்டம் பெற்றவர்களா என்ற எண்ணம் இப்போது நமக்குத் தோன்றுகிறது.இப்படி தமிழகத்தில் உள்ள பல ஆயுர்வேத, சித்தமருத்துவக் கல்லூரிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டு, அதன் மாணவர்களின் எதிர்காலமும், CCIM உறுப்பினர்களால் பாழடிக்கப் பட்டு வருகிறது.சித்தமருத்துவக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்து, அவர்கள் கல்வி அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களாக வருவார்கள் என்ற கணவோடு காத்திருக்கும் அப்பாவிப் பெற்றோர் பலருக்கும், இந்தச் சிக்கலின் பின்னணி புரியவில்லை.ஏன்? தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் கூட சித்தமருத்துவத்துக்கு இந்தச் சிக்கல் ஏற்படுவதற்கான பின்னணி குறித்து, தெளிவான புரிதல் இல்லை. மத்திய அரசின் இந்திய மருத்துவத்துக்கான CCIM அமைப்பும், அதற்கு அடுத்தபடியான அதிகாரமுள்ள ஆயுஷ் அமைப்பும் சேர்ந்தடிக்கும் கூத்துகளின் குரூர விளைவே நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும், தொடர்ச்சியான துன்பங்கள்.நாட்டின் அறிவுசார் சொத்துரிமையைக் காக்க ஏற்படுத்தப்பட்ட ஓர் உன்னத அமைப்பு, இப்படி நயவஞ்சக நரிகள் கூட்டத்திடம் சிக்கியிருப்பதை மத்திய அரசு எப்போது கவனத்தில் கொள்ளப் போகிறது? தமிழகத்தில் இந்திய மருத்துவக் கல்விக்கான இடங்கள் சிதைக்கப்பட்டு வருவதை, தமிழக அரசும்தான் எத்தனைகாலம் வேடிக்கை பார்க்கப் போகிறது? மக்களுக்கு இந்த உண்மை புரிந்து, மத்திய மாநில அரசுகளை நோக்கி அவர்கள் கேள்வி எழுப்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது, இப்படி துரோகம் செய்யும் CCIM உறுப்பினர்களும், அதன் தலைவர் ரகுநந்த சர்மாவும், திஹார் சிறையில் கம்பி எண்ணவேண்டிய நெருக்கடி ஏற்படுவது மட்டும் நிச்சயம்.சித்தமருத்துவம் என்பது தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் சார்ந்த மருத்துவ முறை. கண்முன்னே அதற்கு நேரும் அழிவைத் தடுத்த நிறுத்த தமிழகத்தின் மீதும், தமிழ் மக்களின் மீதும், தமிழின் மீதும் பற்றுக் கொண்ட அனைவரும் இணைந்து போராட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.தமிழர்களின் தனிப்பெருஞ் சொத்தான சித்தமருத்துவத்தைக் காக்க, அணிதிரள்வோம். ஆர்த்தெழுவோம். வாரீர்... வாரீர்....
|
|
|
Name |
: |
subramani |
Date & Time |
: |
7/2/2012 6:21:27 PM |
-----------------------------------------------------------------------------------------------------
சித்தமருத்தவ மாணவர்கள் என்றும் கண்ணீர்விட வேண்டியதில்லை.சித்த,ஆயுர்வேத,யுனானி,இயற்கை மருத்துவத்தை மதிக்காத ஊழல்வாதிகள் வீனாகப்போவர்கள். -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
tamil |
Date & Time |
: |
5/19/2012 4:31:06 PM |
-----------------------------------------------------------------------------------------------------
அவன சுட்டு தள்ளனும் -----------------------------------------------------------------------------------------------------
|
|
Name |
: |
Kumar |
Date & Time |
: |
3/23/2012 6:43:20 PM |
-----------------------------------------------------------------------------------------------------
ஹாய் ஒன்னும் பண்ண முடியாது -----------------------------------------------------------------------------------------------------
|
|
|