Skip to main content

”இது எங்க விளையாட்டு, நீ ஏன் விளையாடுற?” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து! மேரி கோம் | வென்றோர் சொல் #18

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

mary kom

 

"நம்மால் இதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகமோ, குழப்பமோ எனக்குள் வந்ததில்லை. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். இலக்கை குறிவைத்து நான் திட்டமிட்டபடி பயிற்சி செய்வேன். கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். நான் முறையாகப் பயிற்சி எடுத்தால் அவரது பங்கிற்கு எனக்கு கொஞ்சம் உதவ முடியும். இதுதான் என் நம்பிக்கை...." என்கிறார் மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரி கோம். தாய்மை என்பது அனைத்து பெண்களிடமும் உள்ளதுதானே??? இவருக்கு மட்டும் எதற்கு இப்படியொரு அறிமுகம் என மேரி கோமை அறியாத வெகுசிலரில் ஒருவராக நீங்கள் இருந்தால் நினைக்கக் கூடும். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் இதுவரை 6 முறை குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்று அசத்தியுள்ளார். குத்துச்சண்டை வீரர் என்றாலே விகாரமான ஒரு முகம், மிரட்டும் கண்கள், மூர்க்கத்தனமான வேகம் என்ற வரைமுறையை உடைத்து எறிந்தவர் மேரி கோம். 'உனக்கு பிஞ்சு முகம்' என்ற வரியினை பிறரைக் கேலி செய்ய நாம் பயன்படுத்துவதுண்டு. மேரி கோமிற்கும் அது போன்ற ஒரு பிஞ்சு முகம்தான். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால்? எதிராளி அசைவுகளை கணித்து ஆடும் அவரது ஆட்டத்திற்கு உலகக் குத்துச்சண்டை ஆர்வலர்கள் பலர் தீவிர ரசிகர்கள்.

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்தவர் மேரி கோம். சிறிய கிராமம், கடுமையான உடல் உழைப்பைச் செலுத்த வேண்டிய விவசாய குடும்பப் பின்னணி, வறுமை இவைதான் மேரி கோமின் இளமைக்கால வாழ்க்கை. பெற்றோருடன் நிலத்தில் வேலை செய்வது, விறகு வெட்டுவது, மீன் பிடிப்பது, வீட்டில் உள்ள அவரது உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்வது ஆகியவைதான் அவருக்கான வேலைகளாக இருந்தன. பள்ளிக் காலங்களில் தடகள விளையாட்டுகள் மீது சற்று ஆர்வம் ஏற்படுகிறது. போட்டிகளில் வெல்லும் போது பரிசுத்தொகையாகப் பணம் கிடைக்கும் என்ற சேதி தெரிய வந்ததும், அது நம் குடும்பச் சூழ்நிலையை சமாளிக்க சிறிது உதவும் என முடிவெடுத்து தடகள விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதும், அதனால் அவருக்குக் கிடைத்த அங்கீகாரமும் மேரி கோமின் கவனத்தை குத்துச்சண்டை மீது திருப்பியது.

 

மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பும், இன்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு திரியும் மேரி கோமின் கனவுகள் அவ்வளவு எளிதில் தொடக்க காலங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் குத்துச்சண்டைக் களத்தில் எதிராளிகளுடன் போராடுவதற்கு முன்னரே, தன் ஆசையைக் கிள்ளி எறிந்துவிட நினைத்த தன் பெற்றோருடனும், சுற்றத்தாருடனும் கடுமையாகப் போராடியிருக்கிறார். அந்த விடாப்பிடித்தன்மையும், அது தந்த அனுபவமும்தான் பின்நாட்களில் வலிமையானவர்களை எதிர்கொள்வதற்கு அவருக்கு உத்வேகம் தந்திருக்கக் கூடும். 

 

"15 வயதில் பாக்ஸிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. இரண்டு வாரங்களிலேயே பாக்ஸிங்கில் உள்ள அடிப்படையான விஷயங்கள் அனைத்தையும் கற்றுவிட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பாக்ஸிங் பிறக்கும் போதே எனக்கு கடவுள் கொடுத்த திறமை என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின்பு என் வாழ்க்கையில் எல்லாமே பாக்ஸிங்தான். நான் குத்துச்சண்டையில் ஈடுபடுவது என்னுடைய குடும்பத்தினருக்குத் தெரியாது. என் அப்பாவின் புரிதல் படி பாக்ஸிங் என்பது ஒரு விளையாட்டே கிடையாது. விஷயம் தெரிந்தால் நிச்சயம் என்னை அனுமதிக்க மாட்டார். பின் மாநில அளவிலான ஒரு குத்துச்சண்டை போட்டியில் நான் வெற்றி பெற்றதற்காக என்னுடைய புகைப்படம் பத்திரிகையில் வந்திருந்தது. அதை என் அப்பா எப்படியோ பார்த்துவிட்டார். இனி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என என்னைக் கண்டித்தார். என்னால் என் கனவை விட்டுத்தரமுடியாது. அவரிடம் பேசி ஒரு வழியாக அவர் மனதை மாற்றினேன். எங்கள் பகுதியில் வசித்தவர்களைப் பொறுத்தவரை பாக்ஸிங் என்பது ஆண்களுக்கான விளையாட்டு. சில இளைஞர்கள் என்னிடமே வந்து இது எங்களுக்கான விளையாட்டு, இதை நீ ஏன் விளையாடுகிறாய் என்பார்கள். உங்களால் முடியும் போது என்னால் முடியாது என ஏன் நினைக்கிறீர்கள். ஒரு நாள் நிருபித்துக் காட்டுகிறேன் என்பேன். அப்போது அவர்கள் சிரித்தார்கள். இன்று நான் நினைத்ததை விட அதிகமாக நிரூபித்துக் காட்டியுள்ளேன்." - ஆம், இன்று மேரி கோம் உலக அளவில் பெறும் வெற்றிகள், பத்ம விருதுகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அனைத்தும் அப்படி கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்துகள்தானே?  

 

"நான் ஏழை குடும்பத்துப் பெண்ணாக இருந்ததால் என்னால் முடியாது என்று நினைத்தார்கள். அதுதான் என்னுடைய பலமே. குத்துச்சண்டையில் ஈடுபட மன வலிமை அதிகம் தேவை. அந்த மனவலிமையை என்னைப் பார்த்து இவர்கள் பேசிய கேலியும், எனது சிறுவயது வறுமையும்தான் எனக்குக் கொடுத்தன. ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால் என்னால் இவ்வளவு சாதித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் எனக்கு இரட்டைக்குழந்தை பிறந்தவுடன் என்னுடைய குத்துச்சண்டை வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். சில பத்திரிகைகள் கூட அவ்வாறு எழுதின. அவர்களுக்கு என்னுடைய வலிமையைப் பற்றியோ, என் லட்சியத்தின் வலிமையைப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை....."

 

இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவரது குத்துச்சண்டை வாழ்க்கை முடிந்துவிட்டதென அன்று எழுதிய பத்திரிகைகள், இன்று அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின்பும் இந்தாண்டு மேரி கோம் வெல்வாரா, மேரி கோம் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார் என மாறிமாறி எழுதிக்கொண்டிருக்கின்றன. விடாப்பிடித்தன்மை, எதிர்த்து போராடும் குணம், சுற்றி உள்ள ஏற்பில்லாத சமூகக் கட்டமைப்பை உடைத்து எறிதல் இம்மூன்று குணங்களும் இருந்தால் நினைத்த உயரத்தை அடையலாம் என்பதே மேரி கோம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்...