Skip to main content

உன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை! - ஆட்டோசங்கர் #16  

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

auto sankar 16 title



"எனக்கென்ன வந்துச்சு? அவரு ஏதோ ஒரு நடிகையைத்தான் கேட்டாரு... ஏழாயிரம் கொடுத்தேன்னா... சரிதான்னு அந்த கருப்பாயி   வந்துட்டுப் போறா...! சாந்தின்னு ஒருத்தி இருக்கவே இருக்கிறா! எனக்கொன்னும் நஷ்டமில்லை...'' - கார் நோக்கிப் புறப்பட்ட என்னைத் தடுத்தாள் அம்மா!

"இருப்பா!'' என்றவள் உள்ளேயிருந்து பணம் கொண்டு வந்து நீட்டினாள். வாங்கி பையில் வைக்க "நீ உருப்படவே மாட்டே!'' என சபித்தாள். மீண்டும் சிரித்தேன் .

"தேங்க்யூ'' என்றபடி தலைவரின் ராயப்பேட்டை ஸ்டார் ஹோட்டலின் அறை எண் சொன்னேன்.

 

 

 


பெண் அம்மாவை முறைத்தது "வல்லிய இடம் தன்னே இது! அது கொண்டாக்கும் ஞான்...!? நீ போய்க்கோ மோளே! உனக்கு ஒந்நும் தெரியாது...!'' என சமாளித்தார்.

"அம்மா எங்களுக்கு வகுப்பு எடுத்தே நீ... உனக்கு வகுப்பு நடத்திட்டார் பாரு இந்த ஆளு...''

"சரி... சரி... டயமாகுது! சீக்கிரம் புறப்படுங்க; அதான் எல்லாத்தையும் சேர்த்து வச்சு அவர்கிட்டே கறக்கப்போறீங்களே   அப்புறம் என்ன?'' என்றேன் நான்.

கார் அரை மணியில் ஹோட்டலை அடைந்தது. நடிகை பின் தொடர லிஃப்டில் மாடி ஏறி அறை கதவைத் தட்டினேன். "ஐயா! ஐயா!''

கதவு மெல்ல திறக்க தூக்கக் கலக்கத்துடன் வெளிப்பட்டார் அந்த கதர் உடைத் தலைவர். தலையில் ஏகமாய் வெள்ளை ரோமங்கள்! 

"வாம்மா'' என்றார்.

 

அதன் பின் அங்கு நமக்கென்ன வேலை...? 

 

book Ad



பின்னொரு நாள்...

தேவியைப் பார்த்ததும் என்னை ஆச்சர்யம் அப்பிக்கொண்டது. திருநீர்மலையிலிருந்து நான் ஆட்டோவில் சாராயம்   கடத்த உதவி செய்தாளே... அதே பெண்... அவளை அவ்வப்போது சாராயக் கடத்தலுக்கு உபயோகித்துக்கொண்டது உண்மை. ஆனால்... அவளிடம் விலாசம் எதுவும் சொல்லிவிட்டு வரவில்லை நான். பின்னே எப்படி...?

"ரொம்ப சுலபம்'' சிரித்தாள் தேவி.
 

"உங்க ஆட்டோவில் ரெண்டு மூணு தடவை வர்றப்ப, உங்ககிட்டே மாமூல் வாங்கற போலீஸ்காரங்க என்னைப்   பார்த்தாங்களா...?! அதுக்கப்புறம் ரொம்ப நாளா நீங்க வரலைன்னதும் கவலையோட என்னை விசாரிக்க   ஆரம்பிச்சிட்டானுக, நமக்குள்ள அதிக பழக்கம்  கிடையாதுன்னு சொன்னால் நம்பினாதானே? அப்புறம்   அவங்ககிட்டேயேதான் விலாசம் வாங்கிட்டு வந்தேன்!''

"இங்கே எதுக்கு வந்தே?''

 

 

 


தேவி தரையை வெறித்தாள். வாழ்க்கை வறுமையின் ராட்சதப் பிடியில் இருப்பதை வருத்தக் குரலில் சொன்னாள். தானும் தனது தம்பி வெங்கடேசனும் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டுமென்றாள்.

"ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல் எனக்கு உதவியவள்… பாவம்” என்று இரக்கமாயிருந்தது.

"சரி... உன் தம்பியை என்கிட்டே அனுப்பு! அவன் வருமானத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீ தொடர்ந்து தையல் படி... ஒரு   நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கிறேன்... சந்தோஷம்தானே?''

"ஓ...'' என்றாள் சந்தோஷம் இல்லாமலே.

 

 

auto sankar 16 devi



அப்புறம் ஒரு நாள்... பராமரிப்பில் மெள்ள மெள்ள தேவி தலையெடுக்க ஆரம்பித்த சமீபம். திடீரென ஒருநாள் அவள் கையில் "கௌரிசங்கர்” என்ற பெயரை தேதியுடன் சேர்த்து அவள் பச்சைக் குத்திக்கொண்டு வந்தாள். ஆத்திரத்தில் அவளைக் கூப்பிட்டு வேகத்துடன் உறுமினேன்.

"யாரைக் கேட்டு கையிலே பச்சை குத்திகிட்டே...?''

"இ... இல்லைங்க. சுமதியெல்லாம் குத்தியிருக்குதில்ல... அதனாலதான்...'' -குரல் தழுதழுத்தது.

"இதென்ன அண்ணா தி.மு.க.ன்னு நினைச்சியா... இயக்கத்திலே இருக்கிற எல்லாரையும் பச்சை குத்தச் சொல்றதுக்கு... அறிவுகெட்ட முண்டம்...'' என ஆரம்பித்து வார்த்தைகளில் பச்சைமிளகாய் சேர்த்துத்திட்ட அவளுக்குக் கண்கள்   அலம்பிற்று. தவிர, சுற்றிலும் இருந்த ஜனங்களின் பார்வையில் தென்பட்ட கேலி மனசை காயப்படுத்திற்று.
என்னிடம் சொல்லாமற் கூட கோபித்துக் கொண்டு போய்விட்டாள் தேவி.

கோடம்பாக்கத்தில் கேசவன் என்பவனைக் கல்யாணம் செய்துகொண்டு அவள் வசித்து வருவதாக ஓரிரு நண்பர்கள் சொன்னபோது அலட்சியப்படுத்தினேன்.
 

"ஓடுகாலி...! சொல்லிக்காம ஓடிப்போனவதானே!'' -மனசுள் முனகிப் பார்க்க... செல்லாமலே இருந்துவிட்டேன். ரெண்டுபேரும் சென்னாரெட்டியும்- ஜெ.யும் மாதிரி வெட்டி வீம்பில் சந்தித்துக் கொள்ளவில்லை.

சில வருஷங்கள் கழித்து மிக தற்செயலாக மறுபடி தேவியை மவுண்ட் ரோட்டில் சந்தித்தேன். இதயத்தை ஒரு டஜன் இடி ஒரே சமயம் தாக்கியது. ஆடிப்போனேன்.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

முந்தைய பகுதி:

இரவு இரண்டு மணிக்கு 'பெண்' கேட்ட தேசிய தலைவர்! - ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் #15