Skip to main content

யுவராஜ் சிங்கை கைது செய்த ஹரியானா காவல்துறை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

yuvraj singh

 

கடந்த வருடம் ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, குறிப்பிட்ட ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் குறித்துப் பேசினார். யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

 

அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து சர்ச்சைக்கு விளக்கமளித்த யுவராஜ் சிங், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலினப் பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" என தெரிவித்திருந்தார்.

 

இருப்பினும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் யுவராஜ் சிங் மீது புகாரளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்தநிலையில், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், யுவராஜ் சிங் நேற்று (17.10.2021) இரவு ஹரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சில மணிநேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்