Skip to main content

"ஆனா அவரு இன்னும் ஐபிஎல் கோப்பையே ஜெயிக்கல" - விராட் கேப்டன்சி குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

raina virat

 

இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக தொடர்வது குறித்து விவாதங்கள் வலுத்துவருகின்றன. இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்கு கேப்டனாக அவகாசம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 

விராட் கேப்டன்சி தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சுரேஷ் ரெய்னா, "அவர் (விராட்) நம்பர் 1 கேப்டனாக இருந்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது புள்ளிவிவரங்களே நிரூபிக்கிறது. அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு ஐ.சி.சி கோப்பையைப் (வெல்வதை) பற்றி பேசுகிறீர்கள், ஆனால் அவர் இதுவரை ஒரு ஐ.பி.எல் கோப்பையைக் கூட வெல்லவில்லை. அவருக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 2 - 3 உலகக் கோப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறவுள்ளன. இரண்டு டி20 உலகக் கோப்பைகள், பின்னர் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியை அடைவதென்பது எளிதல்ல. சில நேரங்களில் சில விஷயங்களில் கோட்டை விடுவீர்கள்" என கூறியுள்ளார்.

 

தொடர்ந்து அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இதற்கு ஒரு உதாரணம். (தோல்விக்கு) அந்தச் சூழல்தான் (condition) காரணம் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பேட்டிங்கில் ஏதோ குறைபாடு இருப்பதாக நான் உணர்கிறேன். பெரிய பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

 

மேலும் ஐசிசி தொடர்களில் தொடர் தோல்வியைச் சந்திப்பதால் இந்திய அணி, ஜோக்கர் என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து பதிலளித்த சுரேஷ் ரெய்னா. "நாம் ஜோக்கர்ஸ் அல்ல. ஏனென்றால் நம்மிடம் ஏற்கனவே 1983 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பைகள் உள்ளன. வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று உலகக் கோப்பைகள் நெருங்கிவருவதால், யாரும் அவர்களை ஜோக்கர்ஸ் என்று அழைப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நாம் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். விராட்டிடம் ஆட்டத்தை மாற்றும் திறன் உள்ளது. இந்த அணியின் புதிய பாணியை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அடுத்த 12 முதல் 16 மாதங்களில் ஐ.சி.சி கோப்பை இந்தியாவுக்கு வரப்போகிறது என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.