Skip to main content

வந்தாங்க அடிச்சாங்க சூப்பர் ஓவர்.. ரிபீட்டு... த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

Published on 17/01/2024 | Edited on 19/01/2024
Vandanga Adichanga super over.. repeat... India won the thrill!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெய்ஸ்வால் 4, விராட் 0, சிவம் துபே 1, சாம்சன் 0 என் அடுத்தடுத்து வெளியேறினர். இந்திய அணி 22-4 என்று திணறி வந்தது. பிறகு வந்த ரிங்கு சிங், ரோஹித்துடன் இணைந்து பொறுமையாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் விளாசத் தொடங்கினர். பழைய ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் பந்துகளை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டபடி இருந்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங்கும் சிக்சர் மழை பொழிந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் டி20 போட்டிகளில் தனது 5 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இது உலக டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாகும். ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. அஹமது 3 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 213 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க இணை சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜத்ரானும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஒமர்ஜாய் ரன் எட்தும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நபியும், குலாபதினும் அதிரடி காட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒருவழியாக நபியை வாஷிங்டன் 34 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜனத் 2 ரன்னிலும், ஜத்ரான் 5 ரன்களிலும் வெளியேறினாலும் மறுபக்கம் குலாப்தின் தனது அதிரடியை குறைக்கவில்லை. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை முகேஷ் வீச வந்தார். கடைசி பந்து வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட 2 ரன்கள் எடுத்து சமன் செய்தனர். இதன் மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய வைத்தார் ரோஹித். குலாபதின் 1 ரன்னில் ரன் அவுட் ஆக நபி சிக்சர் உதவியுடன் ஒரு ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. பின்னர் 17 ரன்கள் எடுத்தால் வெற்றை என்ற இலக்குடன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 1, ஜெய்ஸ்வால் 1, அடுத்த  இரண்டு பந்தில் ரோஹித் சிக்சர் அடிக்க கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததால் மீண்டும் சமன் ஆனது. 

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில் இந்திய அணிக்கு ரோஹித் மற்றும் ரிங்கு களமிறங்கினர். ரோஹித் முதல் பந்தில் 6, அடுத்த பந்தில் 4 என அதிரடி காட்டினார். அடுத்து சிங்கிள் எடுக்க , அடுத்த பந்தில் ரிங்கு ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் ரோஹித் ரன் அவுட் ஆக 11 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க மு்டிந்தது. பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த முறை ஸ்பின்னர் பிஷ்னோய் வீச வந்தார். முதல் பந்தில் நபியை ஆட்டமிழக்க செய்தார். அடுத்த பந்தில் ஜனத் 1 ரன் எடுக்க, 3 ஆவது பந்தில் குர்பாஸ் ஆட்டமிழக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

-வெ.அருண்குமார்