Skip to main content

இந்திய அணியில் சிறிய பிரச்சனை இருக்கிறது - சவுரவ் கங்குலி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

GANGULY

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றிபெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

 

இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஒருதரப்பினர் சமூகவலைதளங்களில் கடுமையாக வசைபாடினர்.

 

இந்தநிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ள கங்குலி, இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி மற்றும் முகமது ஷமி மீதான விமர்சனங்கள் குறித்து அவர் கூறும்போது, "இது ஒரு மிகையான எதிர்வினை. பாகிஸ்தானோடு தோற்றதால் நிறைய விஷயங்கள் எழுப்பப்படுகின்றன. எனக்கு இது பெரிய விஷயமில்லை. விளையாட்டில் இது நடக்கும். நீங்கள் தோல்வியடைவீர்கள்; எல்லோரும் தோல்வியடைவார்கள். அவர்களால் (இந்திய அணி) திரும்பி வந்து நாக் அவுட்களுக்குச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் முக்கியமானது என்றும், அதில் இந்தியா வெல்லும் என நம்புவதாகவும் தெரிவித்த கங்குலி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைய போதுமான ரன்களை சேர்க்காததே காரணம் என கூறியுள்ளார்.

 

மேலும், ஆறாவது பந்து வீச்சாளராக யாரும் செயல்படாதது தற்போதைய இந்திய அணிக்கு கொஞ்சம் பிரச்சனை எனவும் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "எங்கள் அணியில் நான் பந்து வீசினேன். சேவாக் பந்து வீசினார். அதுபோல் பந்து வீச யாரும் இல்லாததுதான் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் சிறிய பிரச்சனை. அவர்கள் அதை மாற்றி சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன். அவர்கள் (இந்தியா) நல்ல அணி. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் நன்றாக விளையாடிவருகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.