Skip to main content

மோசமாக தோற்ற செரீனா.. பின்னணியில் சோக நிகழ்வு!

Published on 17/08/2018 | Edited on 17/08/2018

சர்வதேச மகளிர் டென்னிஸ் உலகை ஆட்டிப் படைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ். சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான செரீனா நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வந்தார். அவரது ஓய்வுக் காலத்தில் விடுபட்டுப்போன தரவரிசையை ஈடுசெய்வதிலும் முனைப்பு காட்டிய செரீனா, விம்பிள்டனின் இறுதிப்போட்டிக்கு வந்ததையடுத்து, முதல் 30 ரேங்குகளில் இடம்பிடித்தார். 
 

Serena

 

 

 

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய டென்னிஸ் போட்டியில், ஜோஹன்னா கோண்டாவை எதிர்கொண்ட செரீனா மிகமோசமாக தோற்றார். 6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் அவர் தோற்க, செரீனாவின் வரலாற்றுத் தோல்வி என ஊடகங்கள் விமர்சித்தன. செரீனாவின் இந்தத் தோல்விக்கு அவரது மகப்பேறுதான் காரணம் என சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
 

இதுகுறித்து பேட்டியொன்றில் கேட்கப்பட்ட போது, ‘போட்டி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும்போது, நான் இன்ஸ்டாகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, என் சகோதரி ஏடுண்டே ப்ரைஸைக் கொலைசெய்த ராபர்ட் மேக்ஸ்ஃபீல்டு விடுதலை பெற்ற செய்தியைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். என்னால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மண்டைக்குள் அந்த செய்தி புகுந்து வாட்டிவதைக்க, அதே வலியுடன் களத்திற்கு சென்று போராடினேன்; தோல்விதான் மிஞ்சியது’ என தெரிவித்துள்ளார்.
 

 

 

31 வயதான ஏடுண்டே ப்ரைஸ் மூன்று குழந்தைகளின் அம்மா. அவரை 2003-ஆம் மேக்ஸ்ஃபீல்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தான். அதன்பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கட்டிருந்த அவன், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டதுதான் செரீனாவின் மனதை வாட்டியிருக்கிறது. 
 

என் எண்ணமெல்லாம் சகோதரி ப்ரைஸ் விட்டுச்சென்ற குழந்தைகள் மீதுதான் இருந்தன என கண்ணீர் மல்க அந்தப் பேட்டியில் செரீனா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.