Skip to main content

தோனியைக் கிண்டலடித்த ஆர்.பி.சிங்...!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

Dhoni

 

நான் ஓய்வு பெற்றவுடன் முதல் அழைப்பிலேயே உங்கள் செல்போன் அழைப்புகளை எடுப்பேன் எனத் தோனி முன்னர் கூறியிருந்தார். இப்போது அதை சோதித்துப் பார்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மூத்த மற்றும் சமகாலத்து வீரர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தோனியிடம் நெருங்கிப் பழகிய சில வீரர்கள் அவருடனான தங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் தோனி உடனான தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசும் போது, "தோனி எப்போதும் மிக அமைதியாகவே இருப்பார். நாங்கள் எப்போது செல்போனில் அழைத்தாலும் அவர் எடுக்கவே மாட்டார். இது குறித்து அவரிடம் ஒரு முறை கூறினேன். அதற்கு அவர் நான் ஓய்வு பெற்றதும் முதல் அழைப்பிலேயே எடுத்துவிடுகிறேன் என்றார். அப்போது முனாப் படேலும் என்னுடன் இருந்தார். இப்போது முதல் அழைப்பிலேயே எடுக்கிறாரா என்பதை ஒரு முறை சோதித்துப் பார்க்க வேண்டும். இரு கிரிக்கெட் வீரர்கள் பேசிக்கொள்வது என்பது களத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. எதைப் பற்றி பேசினாலும் இறுதியில் பேச்சு கிரிக்கெட் பற்றி தான் வந்து நிற்கும். கிரிக்கெட் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் அதில் தோனி போன்ற ஒரு வீரரை நம்மால் பார்க்க முடியாது" என்றார்.

 

தோனி தற்போது 13வது ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.