இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில், கடந்த 24 ஆம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் முடிந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்தநிலையில் இரு அணிகளுக்குமிடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (04.03.2021) தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே செய்தியாளர்களிடம் பேசினார். ஏற்கனவே கடந்த இரு டெஸ்ட் போட்டிகளின் பிட்ச்கள் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது போட்டிக்கான பிட்ச் எவ்வாறு இருக்கும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்த பிட்ச் போலவே, நான்காவது போட்டியிலும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "விக்கெட் (பிட்ச்) மூன்றாவது டெஸ்ட் பிட்ச்சுக்கும், சென்னையில் நாங்கள் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் பிட்ச்சுக்கும் ஒத்ததாக இருக்கும். பிங்க் பந்து வித்தியாசத்தை ஏற்படுத்தியது. சிவப்பு பந்தை ஒப்பிடும்போது அது விக்கெட்டிலிருந்து மிக விரைவாக வந்தது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "பிட்ச் எப்படி செயல்பட போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாங்கள் இங்கிலாந்து அணியை மதிக்கிறோம். அவர்கள் ஒரு நல்ல அணி. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து நன்றாக விளையாடியது. நாங்கள் அவர்களை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை" எனக் கூறினார்.
மேலும் பிட்ச் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரஹானே, "நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விக்கெட்டுகள் எவ்வளவு சீம் (seam) ஆகிறது என்று யாரும் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்ட நுட்பத்தைப் பற்றி பேசுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பிட்ச்களில் புற்கள் இருந்து, பந்து மேலாகவும், கீழாகவும் செல்லும்போது, அது ஆபத்தானதாக மாறி விடுகிறது. ஆனால் நாங்கள் அதைப் பற்றி புகார் செய்வதுமில்லை. அதைப்பற்றி ஒருபோதும் பேசியதுமில்லை" எனத் தெரிவித்தார்.
"அழுகிற மாதிரியே இருக்கு... ஏன்னுதான் புரியல" - அகமதாபாத் பிட்ச்சிற்கு ஆஸி. வீரர் ஆதரவு!