Skip to main content

"தீர்மானிக்கும் காரணியாக அது இருக்காது" - ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் பேச்சு!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

Pat Cummins

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டியையடுத்து 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் நடைபெறவுள்ளது. இறுதியாக இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

 

ஒருநாள், இருபது  ஓவர் போட்டித் தொடரில் முழுமையாக விளையாடவுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு இந்தியா திரும்பவுள்ளார். தன்னுடைய மனைவியின் பிரசவகாலத்தின் போது உடன் இருக்கவேண்டும் என்று விராட் கோலி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, பி.சி.சி.ஐ அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத டெஸ்ட் தொடர்கள் குறித்து நாதன் லியான் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். 

 

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் இது குறித்துப் பேசுகையில், "ஒரு கேப்டனாக அவரது இருப்பை தவறவிடுவோம். ஆனால், இந்திய அணியில் வாய்ப்புக்காக வெளியே காத்திருக்கும் பல அற்புதமான வீரர்கள் உள்ளனர். எனவே புது வீரரது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்க இது வாய்ப்பாக இருக்கும். ஆட்டத்தில் சில மாற்றங்கள் தெரியலாம். அதே நேரத்தில் விராட் கோலி இல்லாதது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்காது.

 

வெளிப்படையாகக் கூறவேண்டுமென்றால், எங்கள் வீரர்களுக்குள் இதைப்பற்றி நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இரு அணிகளுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசையில் முன்னணியில் உள்ளோம். எனவே நல்ல தரமான கிரிக்கெட் தொடராக இது இருக்கப்போகிறது" எனக் கூறினார்.

 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 17-ஆம் தேதி அடிலெய்டில் துவங்கி, பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.