தடைவிதிக்கப்பட்டுள்ள வீரர்களின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பான கேள்விக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தின் தன்மையை மாற்றியதாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, குற்றத்தில் ஈடுபட்ட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டது.
தற்போது தடைக்காலத்தில் இருக்கும் வீரர்களில் ஸ்மித் மற்றும் வார்னர் கனடாவில் நடந்துவரும் குளோபல் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தடைவிதிக்கப்பட்டுள்ள வீரர்களில் தண்டனை தளர்த்தப்படுமா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது நடந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரர்களின் தண்டனையைக் குறைக்கும் எண்ணம் இல்லை. ஒரு வீரர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தத் தண்டனையை குறைக்கும் நடைமுறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தைவிதிகளில் கிடையாது’ என விளக்கமளித்துள்ளது.