Skip to main content

"தோனி இந்திய அணிக்கான தன்னுடைய கடைசிப் போட்டியை விளையாடிவிட்டார்...." - ஆஷிஸ் நெக்ரா 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

Dhoni

 

தோனி இந்திய அணிக்கான தன்னுடைய கடைசிப் போட்டியை விளையாடிவிட்டார் என ஆஷிஸ் நெக்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த தோனி ஓய்வு முடிவையும் அறிவிக்காமல் இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை தோனியின் ஓய்வு குறித்தான சர்ச்சை ஓயவில்லை. முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என யார் ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனாலும் அவர்களிடம் தோனி ஓய்வு குறித்தான கேள்வி எழுப்பப்பட்டு வந்தன. அந்தக் கேள்வி தற்போது இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெக்ராவிடமும் கேட்கப்பட்டது.

 

அது குறித்து பதிலளித்த நெக்ரா. "தோனி தன்னுடைய கடைசிப் போட்டியை விளையாடிவிட்டார் என்று தான் நினைக்கிறேன். அவர் மனதில் இருப்பதை இனி அவர்தான் சொல்ல வேண்டும். அவர் திறமையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. உலகக்கோப்பை அரையிறுதியில் அவர் களத்தில் நின்றவரை நான் உட்பட அனைவரும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று தான் நினைத்தோம். இளம் வீரர்களை எப்படிக் கையாள வேண்டும், அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர்.

 

செப்டம்பரில் நடைபெற இருக்கிற ஐ.பி.எல். போட்டிகளில் தோனி அதிரடி ஆட்டம் மூலம் தன்னுடைய திறமையை நிருபித்து மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.