Skip to main content

தன் முதல் டெஸ்ட் சதத்தை இப்போது ரசிக்கும் கங்குலி!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

தான் அடித்த முதல் சதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கண்டுகளிக்கிறார் சவுரவ் கங்குலி.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்திய அணியை பல உச்சங்களுக்குக் கூட்டிச்சென்றவர், எதற்கும் அஞ்சாதவர், அந்நிய மண்ணில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தவர், இமாலய சிக்ஸர்களுக்குச் சொந்தக்காரர், கிரிக்கெட் தாதா என பல விதங்களில் புகழப்பட்டவர் இவர்.

 

1996ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு முதல் போட்டி. மிகக்கடுமையான இந்தப் போட்டியில் கங்குலி சதமடித்தார். 301 பந்துகளை எதிர்கொண்ட அவர் 131 ரன்கள் எடுத்து, முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பத்தாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 95 ரன்கள் எடுத்திருந்த ராகுல் டிராவிட் கிறிஸ் லூயிஸ் வீசிய பந்தில் அந்த சாதனையைத் தவறவிட்டார். இதுவரை 14 இந்தியர்களே அந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், இன்று அந்த கிரிக்கெட் போட்டியை தனது அலுவலகத்தில் வைத்து பார்த்ததாக சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘அலுவலகத்தில் இருக்கிறேன்.. நான் முதல் சதம் அடித்த போட்டி ஸ்டார் சேனலில் ஒளிபரப்பாகிறது.. இதைவிட ஒரு நல்ல நினைவு கிடையாது’ என பதிவிட்டுள்ளார். 

ஒரே நேரத்தில் மூன்று ஸ்டார்களைப் பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்தீர்கள் என ஒரு ரசிகர் பதிலளித்துள்ளார். இந்திய அணியின் வீரர் ஹர்தீக் பாண்டியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

முன்னணி நடிகரின் நடிப்பில் திரைப்படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

GANGULY

 

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகவுள்ளது.

 

இதனை கங்குலியே உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நான் பயோபிக்-கிற்கு ஒப்புக்கொண்டுள்ளேன். அது இந்தியில் எடுக்கப்படும். ஆனால் இயக்குநர் யார் என்பதை தற்போது கூற முடியாது. அனைத்தையும் தயார் செய்ய மேலும் சில நாட்கள் ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், கங்குலியின் பயோபிக் திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கங்குலி ஏற்கனவே தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? - பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

GANGULY

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனா உறுதியானது.

 

இதையடுத்து, பாதுகாப்பு வளையத்தை மீறி, வீரர்களுக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரிடம் பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் மீறினார்களா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்குலி, "நான் அப்படி நினைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த அறிக்கைப்படி வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறவில்லை. இது (வீரர்களுக்கு கரோனா ஏற்பட்டது) எப்படி நடந்தது என்பதைக் கூறுவது கடினமான ஒன்று. நாட்டில் எப்படி இத்தனை அதிகமான மக்கள், கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கூறுவது கடினமானது" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து, உலகம் முழுவதுமுள்ள பாதுக்காப்பு வளையத்தை உருவாக்கும் தொழில் வல்லுநர்களால் கூட, பாதுகாப்பு வளையத்திற்குள் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிய கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் (இங்கிலாந்தின் கால்பந்தாட்ட தொடர்) நடைபெற்றபோது, சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகள் ஆறு மாத காலம் நடைபெறும் என்பதால், அவர்களால் அப்படி செய்ய முடிந்தது. ஆனால், நமக்கான கால அவகாசம் குறைவானது. நாம் வீரர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் மீண்டும் போட்டிகளை நடத்துவது கடினமானது" என கூறியுள்ளார்.

 

மேலும் கங்குலி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் (கடந்த ஆண்டை போலவே) நடத்த ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போது இந்தியாவில் இந்தளவிற்கு கரோனா பரவல் இல்லை என்பதால் இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.