Skip to main content

ஐதராபாத் பவுலிங் பாய்ச்சல்.. தப்புமா ராஜஸ்தான்? - ஐ.பி.எல். போட்டி #28

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

இந்தத் தொடர் தொடங்கியதில் இருந்து பவுலிங் மூலமாக மட்டுமே வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று நிரூபித்து வலுவான நிலையில் உள்ளது சன்ரைசர்ச் ஐதராபாத் அணி. மிகச்சிறிய இலக்கை நிர்ணயித்துவிட்டு, கூலாக அதை டிஃபண்ட் செய்யும் அந்த அணியின் திறன் இந்த சீசனின் தனித்துவம் என்றே சொல்லலாம். 

 

 

இந்தத் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் இரண்டாவது போட்டி, இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக இந்த இரண்டு அணிகளும் ஐதராபாத் மைதானத்தில் மோதிய போட்டியில், ஐதராபாத் அணி 9 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயதேவ் உனத்கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இன்னமும் ஜொலிக்கவே இல்லை. ஆனால், எதிர்பாராத விதமாக கவுதம் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரின் ஆட்டம் அதிகம் கவனம் பெற்றிருக்கிறது. வலுவான அணியாக இருந்தாலும், யாரை எங்கு இறக்குவது என்ற கணிப்பில் முற்றிலும் சொதப்பல். ஜோஃப்ரா ஆர்சர் சரியான நேரத்தில் களமிறக்கப்பட்டிருப்பது வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தலாம். 

 

ஐதராபாத் அணியில் இன்றைய போட்டியிலும் புவனேஷ்வர் குமார் இல்லை. ஆனாலும், அந்த அணியால் இன்னமும் சிறப்பாக பயணிக்கக் கூடிய அளவிற்கு போதியளவு பவுலர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதிய 8 போட்டிகளில் தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. அதேசமயம், ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் அணி ஆடிய கடைசி 11 போட்டிகளில் பத்தில் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரகாசமான வாய்ப்பு இருந்தாலும், ஐதராபாத் அணியின் பாய்ச்சல் மிகுந்த பவுலிங்கை ராஜஸ்தான் எதிர்கொள்ள வேண்டும்.