Skip to main content

இந்திய அணியும் கடைசி ஓவரும்... இது ஒரு காதல் கதை!

Published on 19/03/2018 | Edited on 20/03/2018

காதல் கதை என்றாலே ஒருவரை ஒருவரை விடாமல் அன்பு செலுத்திக்கொண்டிருப்பதே... சிலர் அதை ஏழரை நாட்டு சனி என்றும் செல்லமாக கலாய்ப்பர். அப்படிப்பட்ட நிலை எப்போதும் இந்திய அணிக்கு உண்டு, என்னதான் தடாலடியாக அடிக்கும் பேட்ஸ்மேன்களும், பல சுவிங் வித்தைகளை அலட்டிக்கொள்ளாமல் போடும் பவுலர்களும் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணி என்னவோ கடைசி ஓவரில், பார்க்கும் ரசிகர்களுக்கு பீபி, சுகர் என்று அத்தனையும் அளித்துக் கடைசியில் தான் வெற்றிவாகை சூடிக்கொண்டு என்று அடம் பிடிக்கிறார்கள். நேற்று இரவு நடந்த போட்டியில் கூட இந்திய ரசிகர்களின் இதயம் லப்டப் லப்டப் என்று மீதம் இருக்கும் ஓவர்களையும், அடிக்கவேண்டிய ரன்களையும் பார்த்து ஓவராக துடிக்க போட்டியை  பார்த்துக்கொண்டிருந்தனர். 

 

dinesh karthick


கடந்த ஞாயிறு... யாரோட மேட்ச், நம்ப பங்களாதேஷ் கூட தான். 'அவய்ங்க ஜெயிச்சா, நாகினி ஆட்டம்லா போடுவாய்ங்க' என்று ரசிகர்கள் புலம்ப, மேட்ச் ஆரம்பித்து நன்றாக சூடாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இருந்தாலும் தவான் பத்துக்கு வெளியில போய்ட்டாரு, கேப்டன் ரோஹித்து அடி அடி என்று மட்டையை வைத்து விலாச, மற்றோரு வீரர் ராகுல் மெதுவாகவும், அடிக்க முடிந்த பந்துகளை மைதானத்துக்கு வெளியிலும் விளாசினார். திடீரென இவர்கள் விக்கெட்டுகள் சரிய, விஜய் சங்கரும் மனிஷ் பாண்டேவும் ஆடி வந்தனர். விஜய் சங்கர் தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவதால் பதற்றம் அவரின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது. மனிஷோ நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார். பந்துகள் கம்மியாக ஆக, மேட்ச் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இதயத்தின் துடிப்பு அதிகமானது. மனிஷ் விக்கெட்டை இழக்க, ஆட்டத்தின் நிலை இரண்டு ஓவர்களுக்கு, முப்பத்தி நான்கு ரன்கள் அடிக்கவேண்டி இருந்தது. தோனி இருந்திருந்தால் யாரும் பயந்திருக்க மாட்டார்கள். அவர் இல்லையே என்று பயந்துகொண்டிருக்க, தினேஷ் வந்த முதல் பந்திலேயே யார்கர் பந்தை உள்ளே வாங்கி மைதானத்தின் வெளியே தள்ளினார், ஆறு ரன்கள். நான்கு பக்கமும் பந்துகள் விலாசப்பட்டது. இருபத்தி இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவர், பன்னிரெண்டு ரன்கள் தேவை. களத்தில் விஜய் சங்கர் ஆட, தினேஷ்க்கு பேட்டிங் செய்ய ஒரு ரன் எடுத்து கொடு என்று ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த தெய்வங்களையெல்லாம்  வேண்டிக்கொண்டு இருக்கையில், பவுலர் சவுமியா வைட் போட்டு வயிற்றில் பாலை வார்த்தார். அடுத்த பந்து வலது பக்கம் போடப்பட, அதை அடிக்காமல் சுற்றினார் விஜய். அடுத்த பந்தை பவுண்டரிக்கு கட் செய்து, அடுத்த பந்தில் தூக்கி அடித்து அவுட் ஆகினார். கடைசி பந்து ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை, பந்தை வலது பக்கம் போட பளார் என்று ஓங்கி பந்தை அடிக்க பந்து கீழோட்டமாகவே பவுண்டரிக்கு சென்று ஆறு ரன்னை தந்தது. இந்திய வீரர்களும், இலங்கை வீரர்களும் கொண்டாட பங்களாதேஷ் வீரர்கள் திண்டாட இந்த கடைசி ஓவர் காதல் கதை முடிந்தது. 
 

sachin



1999ஆம்  ஆண்டு நடந்த ஷார்ஜா கோப்பை இறுதி ஆட்டம். சச்சினை உலகமே போற்றி, கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்க ஆரம்பித்த காலகட்டம். இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் ஃபிக்சிங்கில் இருந்தது போன்ற வதந்திகளுக்கு ஏற்ப பெரிய ஆட்டக்காரர்கள் எல்லோரும் தொடக்கத்திலேயே அவுட்டாகி வெளியேறினர். ஆனால், சச்சின் மட்டும் தனி ஒருவனாக மெக்ராத்தையும், ஷேன் வார்னேவையும் பவுண்டரிகளாக விளாசினார். ரசிகர்கள் கூட்டம் சச்சினை ஆரவாரமாகக் கொண்டாட, ஆஸ்திரேலியாவின் இலக்கு 272 ஆக இருந்தது. அப்போதிருந்த சூழ்நிலையில் அது 350 போன்ற கடினமான இலக்கு. இருந்தாலும் சச்சின் 143 ரன்கள் வரை தனி ஒருவராக அடிக்க அவருடன் ஆடியவர்கள் சிறிது சிறிதாக அடிக்க கடைசியில் வெற்றி நாற்பத்தி ஒன்பதாவது  ஓவரிலேயே வென்றிருந்தாலும் இந்த மேட்ச் அன்றைய இந்திய ரசிகர்களுக்கும், தற்போதைய யூ-ட்யூப் ரசிகர்களுக்கும் எப்போது பார்த்தாலும் ஒரு கிக்காகவே இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

 

bajji



இதை போன்று இந்திய அணி ஆடியதில் பல ஆட்டங்கள் இப்படித்தான் இருந்திருக்கிறது. அதிலும் 'தல' தோனி கேப்டன்ஷிப்  காலகட்டத்தில் சொல்லவே தேவையில்லை. ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஓவரில் பதினாறு ரன்கள் எடுக்க வேண்டும். தோனி அசால்ட்டாக ஹெலிகாப்ட்டர் ஷாட்டை அடித்து சிக்ஸ் மழைகளை பொழியச் செய்து முடித்தார். அதே போன்று ஒரு முறை இலங்கையுடன் கடைசி பந்தில் நான்கு அடிக்கவேண்டும். தோனியோ 'இந்தா சிக்ஸ் வச்சுக்கோ' என்பதை போல் அடித்து வெற்றிக் கனியை ரசிகர்களுக்கு தந்தார். ஒரு முறை எதிர்பார்த்த பேட்ஸ்மேன்கள் எவரும் ஆடாமல், இந்திய அணிக்கு பரம எதிரியாக விளங்கிய பாகிஸ்தானுடன் தோற்கும் தருவாயில் இருந்த போது, பவுலர்களான பஜ்ஜியும் பிரவின் குமாரும் ஜோடி சேர்ந்து நாலா பக்கமும் அடித்து வெற்றியைப் பெற்று தந்தனர். ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை சீரியசான கடைசி ஓவர் மேட்ச்கள் இருக்கின்றன, இதில் சில தோல்விகளும் அடங்கும் அதுவும் ஜாம்பவான்களான சச்சின், தோனி களத்தில் இருந்தும் நடந்திருக்கிறது. எப்போதும் தொடர்ந்து வெற்றிகண்டால் அந்த வெற்றிக்கு என்ன சுவை இருக்கிறது?

 

dhoni run out



இந்த கடைசி ஓவர் காதல், கபில் தேவ் காலத்திலிருந்தே இருக்கிறதாம், ரிட்டையர்ட் ரசிகர்கள் சொல்கிறார்கள். கடைசி ஓவர் வெற்றி என்று பார்த்தால் இந்திய அணியின் பல வெற்றிகள் இப்படித்தான் இருக்கும். இந்திய அணிக்கு கேப்டனாக கங்குலி இருந்த போதும் சரி, தோனி தற்போதைய கேப்டன் விராத், ஆக்டிங் கேப்டனாக இருக்கும் ரோஹித் வரைக்கும் இந்த கடைசி ஓவர் காதல் கதை விடவே மாட்டேங்கிறது. என்ன செய்வது, காதல் என்றால் சும்மாவா அதை அனுபவிப்பவரையும், பார்ப்பவரையும் படுத்தி எடுத்துவிடாதா... இதே போன்று தோனி தலைமையில் இதே பங்களாதேஷ் அணியிடம்  கடைசி ஓவரில் கண்ட வெற்றியெல்லாம் உச்சக்கட்டம். அந்த மேட்சை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பாதிப் பேர் பங்களாதேஷுடன் தோற்பதை எல்லாம் பார்க்க முடியாது என்று டிவியை ஆப் செய்து, அந்த ரணகள கிளுகிளு மொமெண்ட்டுகளை மிஸ் செய்து இருக்கின்றனர். அப்படி மிஸ் செய்தவர்களுக்கு இந்த மேட்ச், ஒரு ரீவைண்ட் ஆப்ஷன் என்றுதான் சொல்லவேண்டும். இது வரை வந்த இந்திய அணிதான் கடைசி ஓவர் வரை கொண்டுவந்து வெற்றி அடைவார்கள் என்றால், வருங்கால புலிக்குட்டிகளும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், என்ன நடந்தாலும் சரி இந்தியா கடைசி பந்தில் தோற்கும் என்று தெரிந்தால் கூட, இந்த கடைசி ஓவர் காதல் கதையை நம்பி மனசை கைவிடமாட்டர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். 'ஈசியா வின் பண்ண வேண்டிய மேட்ச்ச, கடைசி வர இந்தியாமாதிரி கொண்டுபோய்தான் ஜெயிப்பீங்களாடா?' என்று ஏரியா கிரிக்கெட்களில் பேசிக்கொள்ள இன்னொரு மேட்ச்,  நமக்கு கிடைத்துவிட்டது.                      

Next Story

அவமதிப்பு வழக்கு; எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Supreme Court orders MS Dhoni for Contempt case

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது. 

Next Story

தோனி பக்கம் திரும்பிய ராம பக்தர்கள்; இன்ஸ்டாவில் பனிப்போர்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.2000 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில், கடந்த ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கோயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்காக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பொது விடுமுறையும் சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு முழுநாள் விடுமுறையும், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, ஒடிஷா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

ad

இப்படி மாநிலங்களில் பொது விடுமுறை, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கி திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பிரபல சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று சிலர் பங்கேற்றனர், சிலர் பங்கேற்கவில்லை. 

அந்தவகையில், கோலிவுட்டிலிருந்து  நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், டோலிவுட்டிலிருந்து நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோரும், பாலிவுட்டிலிருந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜடேஜா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பலர் கலந்துகொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. இதனால், ராம பக்தர்கள் தோனியை விமர்சித்து வருகின்றனர். 

devotees are criticizing dhoni for not attending the opening ceremony of the Ram temple

தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக தனது பிறந்தநாளான ஜூலை 7 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கமெண்டில், ராம பக்தர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், தோனியின் ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ‘கோயிலுக்குச் செல்வது தோனியின் தனிப்பட்ட சொந்த முடிவு’ என பதிவிட்டுள்ளார்.