Skip to main content

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி; இரண்டு வீரர்கள் குறித்து விவாதிக்கவுள்ள தேர்வுக்குழு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

team india

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், இந்திய இருபது ஓவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் சிலர் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

 

அதேநேரத்தில், இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்ய கிரிக்கெட் வாரியங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் இந்திய இருபது ஓவர் அணி தொடர்பாக முக்கிய முடிவெடுக்க தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில், பிசிசிஐ அதிகாரிகளும், அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களான விராட், ரோகித் ஆகியோரும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், ஹர்திக் பாண்டியா பந்து வீசுவாரா என்பது குறித்தும், ராகுல் சாஹர் அல்லது சாஹல் இருவரில் யாரை அணியில் இடம்பெறச் செய்வது என்பது குறித்தும் மட்டுமே விவாதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.