இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரமானதால், அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர், பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் எந்த கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்றது.
அதன்பிறகு இந்தியாவில் உள்ளூர் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அதன்பிறகு நடந்த போட்டிகளில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் தொடரிலும் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இந்தியா முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குஜராத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா - இங்கிலாந்து இடையேயான மீதமுள்ள இருபது ஓவர் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்துள்ளனர்.