Skip to main content

மெதுவாக பந்து வீசினால் இனி போட்டியின்போதே தண்டனை - புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

icc

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பந்து வீசி முடிக்காவிட்டால், அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தநிலையில் இருபது ஓவர் போட்டிகளில் மெதுவாக பந்து வீசும் அணிக்கு (slow over rate) போட்டியின் போதே தண்டனை விதிக்கும் புதிய விதியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

அந்த விதியின்படி பந்து வீசும் அணி, இன்னிங்ஸ் முடிய வேண்டிய நேரத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசும் நிலையில் இருக்க வேண்டும். இல்லையெனில் கடைசி ஓவர் 30 யார்டு வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்கு பதிலாக ஐந்து வீரர்கள் நிற்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஹண்ட்ரட் தொடரில் அறிமுகப்படுத்திய இந்த விதிமுறை, போட்டியின் வேகத்தை அதிகப்படுத்தியதால்  தற்போது சர்வதேச இருபது ஓவர் போட்டியிலும் அறிமுகமாகவுள்ளது.

 

மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், விருப்பத்தின் பேரிலான இரண்டரை நிமிட ட்ரிங்ஸ் பிரேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.