Skip to main content

எனக்கு ஆரஞ்சு தொப்பி வேண்டாம்! - விராட் கோலி ஆவேசம்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான  ஆட்டத்தில் விராட் கோலி இரண்டு முக்கியமான சாதனைகளைப் படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனை மற்றும் நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டையுமே பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கடந்திருக்கிறார்.

 

virat

 

ஆனால், அது அத்தனை கொண்டாட்டங்களை அவருக்குத் தந்திருக்காது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்திருந்த 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை, வெற்றிகரமாக சேஷிங் செய்யமுடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். ஒருபுறம் பெங்களூரு அணியின் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மறுபுறம் விராட் கோலி மட்டும் கடைசிவரை ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவர் 46 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசிவரை நின்றார். 

 

இந்தப் போட்டியில் விராட் கோலி 32 ரன்களைக் கடந்தபோது, ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் அதிகபட்ச ரன்களான 4,558ஐக் கடந்தார். மேலும், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் அடித்திருக்கும் 174 ரன்களையும் (மூன்று போட்டிகள்) கடந்தார். இதன்மூலம், வரும் போட்டிகளில் அவர் ஆரஞ்சு தொப்பி அணிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நான்கு போட்டிகளில் 201ரன்கள் அடித்து விராட் கோலி அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 

ஆட்டம் முடிந்த பின் பேசிய விராட் கோலி, ‘எனக்கு இப்போது ஆரஞ்சு தொப்பி வேண்டாம். மிக நெருக்கடியான சூழலில் இருக்கும்போது, மும்பை அணி ஆக்ரோஷமாக விளையாடியதைப் போல எங்களால் அந்தளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. முதலில் கிடைத்த இரண்டு விக்கெட்டுகளைத் தவிர, எவ்வளவோ முயற்சித்தும் எங்களால் எதையும் அசைக்க முடியவில்லை. ஒரு சிறந்த இணை விளையாட்டை நாங்கள் நிலைநிறுத்தியிருந்தால், நிச்சயம் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.