இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது குறித்து பதிலளித்த கங்குலி, "இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட்டை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை" என தெரிவித்தார்.
ஆனால் விராட் கோலியோ, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விலக வேண்டாம் என யாரும் கூறவில்லை எனக் கூறினார். இது சர்ச்சையை அதிகப்படுத்தியது. இதற்கிடையே இந்த சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, "நாங்கள் இதைக் கையாள்வோம். இதைப் பிசிசிஐயிடம் விட்டுவிடுங்கள்" என தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலியிடம், எந்த வீரரின் மனப்பாங்கு மிகவும் பிடிக்கும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "விராட் கோலியின் மனப்பாங்கு எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் அதிகம் சண்டையிடுகிறார்" என கூறியுள்ளார்.