Skip to main content

இஷாந்த் சர்மாவை உதைத்து அதைச் சொல்லவேண்டியிருந்தது - நினைவுகளைப் பகிர்ந்த விராட் கோலி!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

ishant sharma virat

 

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி நாளை (24.02.2021) தொடங்கவுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக, உலகின் மிகப்பெரிய மைதானமான மோட்டேரா மைதானத்தில் நடக்கவுள்ளது.

 

வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். நாளை நூறாவது போட்டியில் விளையாடப்போகும் இஷாந்த், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைக்கப் போகிறார்.

 

இந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, இஷாந்த் சர்மாவிற்குப் புகழாரம் சூட்டியதோடு, பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். இஷாந்த் குறித்து விராட் கோலி, "இஷாந்த் என்னுடன் மாநில அளவிலான கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். மாநில கிரிக்கெட், ரஞ்சி கிரிக்கெட்டின்போது, நீண்ட காலமாக நாங்கள் ரூம்-மேட்ஸாக இருந்தோம். அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபோது ஒரு மதிய நேரத்தில்,  அவர் தூங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை உதைத்து எழுப்பி, அந்தச் செய்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்தளவிற்கு நாங்கள் இருவரும் இருந்தோம்.

 

இந்த நாட்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், இவ்வளவு நாள் விளையாடுவது அரிது. உடலைப் பராமரிப்பதும், 100 டெஸ்ட்களில் விளையாடுவதும் நவீன கால கிரிக்கெட்டில் ஒரு சாதனை. லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு இஷாந்த் எளிதில் முன்னுரிமை அளித்திருக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை என்பதற்குப் பாராட்டுகள். அவர் தனது 100 ஆவது டெஸ்ட் விளையாடுவதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், பல ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.