Skip to main content

வார்னர் தகராறு.. ரபாடா நீக்கம்.. கேப்டன் ஸ்மித் விலகல்! - சர்ச்சைகளின் தொடர்

Published on 25/03/2018 | Edited on 25/03/2018

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஏற்கெனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. மூன்றாவது போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

 

Aussie

 

ஜெண்டில்மேன் கேம் என்று சொல்லப்பட்டாலும், ஸ்லெட்ஜிங் என்று சொல்லப்படும் வம்புக்கிழுக்கும் முறை கிரிக்கெட்டில் இன்றும் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்தத் தொடரின் தொடக்கமே அதற்குப் பஞ்சமில்லாமல்தான் ஆரம்பித்தது. முதல் டெஸ்ட்டில் ஏபி டிவில்லியர்ஸ் மீது நாதன் லயன் பந்தைப் போட்டுவிட்டு ஓடும்போது, டேவிட் வார்னர் கடுமையான வார்த்தைகளால் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வார்னரும் டீகாக்கும் ட்ரெஸ்ஸிங் ரூம் செல்லும் வழியில் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த சண்டையில் டீகாக்கின் மீது அனுதாப அலைகள் வீசியபொழுது, தன்னை தனிப்பட்ட முறையில் டீகாக் விமர்சித்தார் என்ற உண்மையை ஊரறிய உடைத்தார் வார்னர்.

 

Aussie

 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனல்பறக்கும் தன் பந்துவீச்சால் ஆஸி வீரர்களை துவம்சம் செய்த ககீசோ ரபாடா, அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர் விக்கெட்டுகளை கைப்பற்றியபோது தோளுக்கு தோளாக சென்று உரசியதாக சர்ச்சைகள் கிளம்பின. ரபாடாவின் இந்த நடத்தை குறித்து கேள்வியெழுப்பிய ஐசிசி, இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க முடிவு செய்தது. ஆனால், பின்னர் அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டு, ரபாடா மன்னிக்கப்பட்டார். இந்த மன்னிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸி கேப்டன் ஸ்மித் கருத்து தெரிவித்தார்.

 

Aussie

 

தற்போது, மூன்றாவது டெஸ்ட் நடந்துகொண்டிருக்கும் சூழலில், மூன்றாவது நாளான நேற்று ஆஸி. அணியைச் சேர்ந்த கேமரூன் பான்கிராஃப்ட், தன் கையில் இருந்த பந்தை உப்புத்தாள் போன்ற பொருளால் தேய்த்து சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டி, ஆஸி. கிரிக்கெட் வாரியமே தலையிடும் நிலைக்கு போய்விட்டது. இதனால், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் இனி வரும் போட்டிகளில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஸ்டீவன் ஸ்மித்துக்கு தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்மித், இந்த சீசனில் கலந்துகொள்வாரா என்ற கேள்வியும் இப்போதே எழத் தொடங்கியுள்ளது.

 

Aussie

 

இந்தத் தொடர் முடிவதற்கு முன்பாகவே இத்தனை பிரச்சனைகளைக் கடந்துவர வேண்டியதாகிவிட்டது இரு அணி வீரர்களுக்கும். இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், யார்யார் தலையெல்லாம் பிரச்சனையில் சிக்கப்போகிறதோ. 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.