Skip to main content

கைநழுவிய கோப்பை... எதிரணி ரசிகர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட இங்கிலாந்து ரசிகர்கள்!

Published on 12/07/2021 | Edited on 13/07/2021

 

 

euro cup 2021 italy win england team fans london police

 

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடந்த 2020- ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ கால்பந்து தொடர் கரோனா பெருந்தொற்று காரணமாக, நடப்பாண்டுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இத்தாலி, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள், பங்கேற்ற இந்த தொடர் கடந்த ஜூன் மாதம் 11- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டில் தொடங்கியது.

 

கால்பந்து போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், யூரோ இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் நுழைந்தன. அதைத் தொடர்ந்து, யூரோ கால்பந்து இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்தும், 67- வது நிமிடத்தில் இத்தாலியும் கோல் அடித்தனர். கூடுதல் நேரத்துக்குப் பிறகும் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. இறுதியில் பெனால்டி ஷூட் முறையில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

 

london football

 

இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியதையடுத்து, அந்த அணியின் ரசிகர்கள் லண்டனில் உள்ள முக்கிய சாலைகளில் திரண்டு பேருந்துகள் மீது ஏறி பாட்டில்களை வீசியும், தெரு விளக்குகளை உடைத்தும்  வன்முறையில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் தீ வைப்பு சம்பவமமும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்தனர். மேலும், லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

london football england fans

 

இதேபோல இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றபோதும் டென்மார்க் அணி ரசிகர்கள் மீது இங்கிலாந்து அணி ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர்.

 

கடந்த 1966- ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே இங்கிலாந்து அணி இறுதியாக வெற்றிபெற்ற உலகக்கோப்பை ஆகும். அதேபோல், இதுவரை இங்கிலாந்து அணி யூரோ கோப்பையை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.