வீரர்களுக்கான தேர்வு சமயத்தில் விராட் கோலியை அணியில் சேர்க்க மகேந்திர சிங் தோனி தயங்கியதாக தேர்வுக்குழு அதிகாரியாக இருந்த திலீப் வெங்சர்க்கார் தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான தேர்வுக்குழுவில் இருந்தவர் திலீப் வெங்சர்க்கார். இவர் 2008ஆம் ஆண்டு அணித்தேர்வுக்கான குழுவில் இருந்தபோது சந்தித்த சில தடைகள் குறித்து தற்போது பேசியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர்,
‘இந்தியா உட்பட நான்கு நாடுகளுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்ட எமெர்ஜிங் வீரர்கள் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை தேர்வுசெய்தோம். அவர் அப்போது உலகக்கோப்பை வென்று தந்திருந்தார். அதேபோல், பிரிஸ்பைனில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தொடக்க வீரராக இறங்கி, 123 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான் விராட் கோலியைத் தேர்வு செய்யலாம் என்றபோது, தோனியும், அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டெனும் அதை மறுத்தனர். நாங்கள் அந்தப் பையன் விளையாடுவதைப் பார்க்கவில்லை. எனவே, முழுமையான கண்காணிப்பிற்குப் பின் அணியில் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம் என்றனர். ஆனால், நான் கோலியை அணியில் சேர்த்துக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத்தை கோலிக்கு பதிலாக சேர்க்க நினைத்த ஸ்ரீனிவாசனின் எண்ணத்தை பொய்யாக்கியதால், தனது உயர்பதவியையே இழக்க நேர்ந்ததாகவும் திலீப் கூறியுள்ளார்.