Skip to main content

டிரம்ப்புடன் போட்டியிட்ட தோனி! - இணையத்தை கலக்கும் வீடியோ! 

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Dhoni competed with Trump!  viral video

 

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கால் இறுதி ஆட்டம் உலகின் நம்பர் 1 வீரர் அல்கரேஸ் - ஸ்வேரேவ் இடையே நேற்று (07-09-2023) ஆர்தர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாகச் சென்றது. தொடர்ந்து போட்டியின் ஓய்வு நேரத்தில் அல்கரேஸ் உட்கார்ந்திருந்த திசை நோக்கி கேமரா திரும்பியது. அந்த ஃபிரேமில், திடீரென முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தென்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 

 

இதனைத் தொடர்ந்து, யு.எஸ். ஓபனின் ஒளிபரப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, “நம்மைப் போலவே தோனியும் டென்னிஸ் ரசிகர் தான். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, அல்கரேஸ் - ஸ்வேரேவ் இடையேயான கால் இறுதி ஆட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டார்” எனப் பதிவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸும் தனது ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த ஆட்டத்தின் இறுதியில் அல்கரேஸ் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

 

Dhoni competed with Trump!  viral video

 

தோனி ஐ.பி.எல் 2023ஐ வென்றுவிட்டு, பின்னர் போட்டியின் போது ஏற்பட்ட காயங்களால் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓய்வில் இருந்த தோனி நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நேற்றைய யுஎஸ் ஓப்பன் அரையிறுதி ஆட்டத்தைக் காணச் சென்றுள்ளார். தோனி, யுஎஸ் ஓப்பனை நேரில் பார்ப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பாக, அல்கரேஸ் - ஜனிக் சின்னர் இடையே நடந்த 2022 யுஎஸ் ஓப்பன் டென்னிஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுடன் தோனி பார்த்துள்ளார். அப்போதும், யுஎஸ் ஒப்பன் ஒளிபரப்பாளர் ட்விட்டரில் இது குறித்து நெகிழ்ந்து பதிவிட்டிருந்தார். அந்த போட்டியிலும் அல்கரேஸ் தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யுஎஸ் ஓப்பனை கண்டுகளித்த தோனி, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் அழைப்பால், டிரம்ப் தேசிய கோல்ஃப் கிளப் பெட்மின்ஸ்டருக்கு சென்று கோல்ப் விளையாடினார். இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் பரவத் தொடங்கியது. தோனியுடன் சென்ற நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டு, “தோனியுடன் கோல்ஃப். எங்களுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி மிஸ்டர். ஜனாதிபதி” எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி இறுதியாக அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா 2020 தேர்தல் தோல்வி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு. சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.