பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தடையில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றியதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மூளையாக செயல்பட்ட டேவிட் வார்னருக்கு ஓராண்டும் கேமரூன் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 கிரிக்கெட் போட்டியில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கும், வின்னிபெக் ஹாக்ஸ் அணியில் டேவிட் வார்னரும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், வின்னிபெக் அணியின் கேப்டனாக மூன்று போட்டிகளில் நீடித்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டுவெய்ன் ப்ராவோ, திடீரென்று தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மூன்று போட்டிகளில் கேப்டனாக இருந்த அவர், இரண்டு வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். அவர் விலகியதற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், கேப்டன் பதவியில் நீடித்த அனுபவம் கொண்ட டேவிட் வார்னரை வின்னிபெக் அணி கேப்டனாக நியமித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் மட்டுமே கேப்டனாக நீடிப்பதற்கு வார்னருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதால், இந்த நடவடிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே ஆஸி. கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது. வார்னருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளதாக பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.