இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. அதேவேளையில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, அவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெளியே எங்கும் செல்ல ஐபிஎல்லில் விளையாடும் வீரர்களுக்கு அனுமதியில்லை.
இந்தநிலையில், ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருந்தன. ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி, வேறு ஒருநாளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தநிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியினர் மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும், பேருந்து கிளீனர் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ (espn cricinfo) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.